சிறுவயதில் படிக்கும் போது திருக்குறளில் துறவு பற்றி ஒரு அதிகாரம் வந்திருந்தது. என் அப்பாவிடம் துறவி என்றால் என்ன என்று கேட்டேன்.
ஏன் என் அப்பாவிடம் கேட்டேன் என்றால், அவரிடம் எந்த கேள்வி கேட்டாலும் கோபித்துக் கொள்ள மாட்டார். பள்ளிக்கூடத்தில் சில நேரங்களில் மதம் அல்லது சாமி பற்றி ஆசிரியர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டால் சிலர் நன்றாக பதில் அளிப்பார்கள். சிலர் உதை கொடுப்பார்கள்.
அதனால்தான் அப்பாவிடம் துறவி பற்றி கேட்டேன்.
"துறவி என்றால் சாமியார்" என்றார்.
"சாமியார் என்றால்" என்று கேட்டேன்
வேடிக்கையாக ஒரு பாட்டை சொன்னார்..
"பெண்டு பிள்ளை இல்லாதவன்
பிழைக்க வழி காணாதவன்
சண்டையினால் வீட்டை விட்டோன்
சாமியாராய் போனாரடி" என்றார்.
"அப்பா சரியா சொல்லுங்கப்பா" என்று கேட்டேன்.
"சாமியார் என்றால் உலக பந்தங்களை எல்லாம் துறந்தவர். எளிய வாழ்க்கை வாழ்பவர். ஆசைகளை துறந்தவர். சுக, துக்கங்களுக்கு ஆட்படாதவர்" என்றார்..
"ஆசைகளை துறந்தவர் என்றால் சாப்பாடு எல்லாம் எப்படி சாப்பிடுவார்? நம்மள மாதிரி கஞ்சி எல்லாம் குடிப்பாரா" என்று கேட்டேன்.
அவருடைய நண்பர் சொன்ன ஒரு விஷயத்தை சொன்னார்.
ஏன் சாப்பாட்டைப் பற்றி கேட்டேன் என்றால் அன்றைக்கு இருந்த மக்களின் பெரும்பாலான பிரச்சனை சாப்பாடு, குடியிருக்க இடம், துணி இது மூன்றும் தானே. இதைத் தாண்டி பெரிதாக யோசிப்பதற்கு ஒன்றும் இருந்ததில்லை.
அவரது நண்பர் ஒரு ஆதீனத்தோடு தொடர்புடையவர். ஆதீன தலைவருடைய ஒரே ஒரு நாள் சாப்பாட்டை மட்டும் சொன்னாலே போதுமானது என்பார்.
இதைக் கேட்கையில் நமக்கு தலை சுற்றி விடும். அப்ப மற்ற நாளைக்குள்ள சாப்பாடு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை என்பார்.
இதைச் சொன்னார் அந்த நண்பர் பிற்காலத்தில் அவரே ஒரு ஆதினம் தலைவர் ஆகிவிட்டார் என கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக இருந்தது.
விரதம் என்றால் அன்றைக்கு சாமியார் அன்ன ஆகாரம் சாப்பிட மாட்டார். அதாவது அரிசியால் ஆன எந்த உணவையும் சாப்பிட மாட்டார். காலையில் சுண்ட சுண்ட காயவைத்த பாலில் நல்ல கல்கண்டு போட்டு ஒரே ஒரு செம்பு மட்டும் தான் குடிப்பார். அப்புறம் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்.
மதியம் 16 வகை காய்கறிகளோடு சுவையான உணவருந்துவார் இரவில் அண்ணாஹாரம் சாப்பிட மாட்டார் பல வகை கனி வர்க்கங்கள் மட்டுமே. சீசனில் கிடைக்காத பழங்கள் கூட அவருக்கு எப்படித்தான் கிடைக்குமோ தெரியாது. ஆனால் பல வகை பழங்களும், சுண்ட சுண்ட காயவைத்த பால் ஒரு செம்பு மட்டும்தான் அருந்துவார்.
நான் இதைக் கேட்டவுடன் என் அப்பாவிடம் மற்ற மத சாமியார்கள் பரவாயில்லையாப்பா... அவர்கள் எப்படி என்று கேட்டேன்.
இதைக் கேட்டவுடன் அப்பா சொன்னார். எல்லா சாமியார்களும் இப்படித்தான் என்றார்.
அப்பா பர்மா மற்றும் இலங்கையில் சிலகாலம் வசித்தவர்.
அங்குள்ள பௌத்த சாமியார்கள் உணவு வகையில் மிகவும் எளிமையானவர்கள். அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பக்தன் ஆசையோடு கன்றின் கறியை சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தவுடன் வளைத்து சாப்பிட்டு விடுவார்களாம். ஏனெனில் கறி சாப்பிடுவது பாவம் என்றாலும் அதை வேண்டாம் என்று சொன்னால் பக்தனுடைய மனது புண்பட்டு விடும். அந்தப் பாவத்தை மட்டும் செய்து விடக்கூடாது என்று வந்த கறியை விடாமல் சாப்பிட்டு விடுவார்களாம்.
பிறகு ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் கதையை சொன்னார். பாதிரியார் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது சமையல்காரர் மெல்லமாக மற்றவர்கள் காதில் படாதவாறு சைகை காட்டியவாறு மீன் வாங்கி வந்தேன். என்று கேட்டாராம். அதற்கு பாதிரியார் மெல்லிய குரலில் வேகமாக இரண்டு மீன் வருவல் இரண்டு மீன் குழம்பு என்று சொல்லிவிட்டு, சத்தமாக எல்லோரும் காதிலும் கேட்கிற மாதிரி ஆமென் என்று சொன்னாராம்.
அவர் மொனமொணன்னு சொன்ன விஷயம் வெளியில் உள்ளவர்களுக்கு ஏதோ மந்திரம் ஜெபிப்பது போலத்தான் தெரியும். ஆனால் சமையல்காரருக்கு மட்டும்தான் தனக்கிடப்பட்ட உத்தரவு என்ன என்று தெரியும் என்று சொன்னார்.
முஸ்லிம் குருமார்களுக்கு இப்படியெல்லாம் ஒரு தண்டனை இல்லை. உணவு கட்டுப்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது ஆகவே அவர்கள் எளிமையாக இருப்பதைப் போல வேஷம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வார்.
சாப்பாட்டை விட்டுத்தள்ளுங்கள். மற்ற விஷயங்களை பார்ப்போம். சாமியார்களுடைய வாழ்விடங்கள், மடங்கள், ஆதீனங்கள், அங்குள்ள பிரம்மாண்டங்கள், ஆடம்பரங்கள்.... எங்காவது எளிமை தெரிகிறதா என்று பார்த்தால் எங்குமே கிடையாது எல்லாம் செல்வக்குவியல்கள் தான்.
இங்குள்ள... ஆனந்தாக்களின் மடங்களில் இருந்து, பல்வேறு சாமியார்களின் மடங்கள், ஆதீனங்கள், பௌத்த மடங்கள், கிறிஸ்தவ மடாலயங்கள் என போப் ஆண்டவர் வரை எல்லா இடங்களிலும் செல்வ குவியல்களுக்கும், சொத்துக்களுக்கும், ஆடம்பரங்களுக்கும் பஞ்சமே இல்லை.
முன்னொரு காலத்தில் புகார் பட்டினத்திலே பெரும் செல்வந்தராக இருந்த வணிகர் திருவெண்காடர் சன்னியாசியாக மாறி பட்டினத்தார் என்ற பெயரோடு உலா வந்து கொண்டிருந்தார்.
அவர் ஊர் ஊராக சுற்றி திரிகையிலே ஒரு முறை ஒரு கட்டாந்தரையிலே தலைக்கு கை வைத்தவரே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்து இரு பெண்கள் இவரைப் பார்த்து பேசலாயினர்.
"அடடா எவ்வளவு பெரிய ஞானி இவர் வெறுந்தரையிலே விரிப்பு கூட இல்லாமல் படுத்து உறங்குகிறாரே"
"ஞானிக்கு கைச்சுகம் தேடுதே"
இவ்வாறு கூறிவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பட்டினத்தார், ஆமாம் நமக்கு எதற்கு கை சுகம் என்று கூறிவிட்டு மடக்கி இருந்த கையை தலையில் இருந்து அகற்றிவிட்டு மல்லாக்க படுத்து உறங்கினார்.
திரும்பி வந்த அந்த பெண்கள் இவரை பார்த்தனர்.
முதலில் கூறியவள் சொன்னாள்.
"அடடா கை சுகத்தை கூட நீக்கிவிட்டாரே இவரல்லவா ஞானி" என்றாள்.
அடுத்தவள் சொன்னாள் "போகிறவர் வருகிறவர்கள் பேச்சை எல்லாம் கேட்கிறாரே இவர் என்ன ஞானி" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
இதையும் கேட்ட பட்டினத்தார் "ஆமாம் நமக்கு இன்னும் பக்குவம் வரவில்லை" என்று கூறிவிட்டு இவ்விடத்திலிருந்து அகன்றார்.
கௌதம புத்தர் தனது மார்க்கத்தை ஆரம்பித்தபோது அவருடைய சீடர் ஆனந்தன், அவரிடம் துறவிகளுக்கு சொத்து வைத்துக் கொள்ள உரிமை உண்டா என்று கேட்டார்.
கௌதம புத்தர் அமைதியாகச் சொன்னார்.
தாராளமாய் கீழ்க்கண்டவற்றை தங்கள் சொத்துக்களாக வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
உடுத்திக் கொள்ள ஒரு கந்தலாடை, கிழிந்து போனால் தைத்துக் கொள்வதற்கு ஊசி நூல், ஒரு மாற்று ஆடை மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய கொஞ்சம் மருந்துகளை பௌத்த துறவி தனது சொத்துக்களாக வைத்துக் கொள்ளலாம் என்றார்.
துறவிகள் எங்கு தங்கலாம் என்று கேட்டதற்கு, ஏதேனும் ஒரு மரத்தடி நிழல் அல்லது மழை வந்தால் நனையாதிருக்க ஒரு கூரையின் கீழ் இருக்கலாம். அதுவும் சேர்ந்தார் போல மூன்று இரவுகள் ஒரு மரத்தடியில் தங்கினான் என்றால் அது என்னுடைய இடம் என்ற எண்ணம் வந்துவிடும். ஆகவே மூன்று இரவுகளுக்கு மேல் ஒரு மரத்தடியில் கூட தங்கக்கூடாது என்று கூறினார்.
இது பௌத்த துறவிகளுக்கு அவர் கூறிய வழி.
துறவிகளைப் பற்றி வள்ளுவர் ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அதில் குறிப்பாக ஒன்றைச் சொல்லுவார், நீட்டலும் மழித்தலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின்.
இங்கு சனாதனம் மதத்தை போதித்த ஆதிசங்கர் கூறியது
"ஸுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜினம் வாசஹ |
ஸர்வப்ரக்ரஹமோগத்யாகஹ
கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ ||"
திறந்தவெளி அரங்குகளில் வாழும் ஒரு மனிதனால் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், யாரால் அவனது மகிழ்ச்சியைக் கெடுக்க முடியும்?
கோயில்கள் அல்லது மரங்களுக்கு அடியில் வெற்று தரையில் கிடந்து தோல்களால் மூடப்பட்டிருக்கும்
ஒவ்வொரு உடைமையையும் இன்பத்தையும் துறப்பது ?(சி.ராஜகோபாலாச்சாரி)
உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;
உடலை மூடுவதோ தோலாடை ;
இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?
ஆனால் அப்படி கூறிய ஆதிசங்கரரின் பெயரால் அவர் ஸ்தாபித்த சங்கர மடங்கள் இன்று ஏராளமாய் சொத்துக்களோடு வலம் வந்து கொண்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஆதீனத்தில் பெரிய ஆதீனத்தை கொல்வதற்கு சிறிய ஆதீனம் கூலிப்படை ஏவிய கதை நமக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது.
ஆக துறவிகள் என்றால் உலக ஆசைகளை வெறுத்து, ஆசாபாசங்கள், பந்தங்களையெல்லாம் துறந்து, எளிய வாழ்க்கை, இறைவழிபாடு, போதனைகள் என்று இருக்க வேண்டும். வேண்டும். வேண்டிய நிலை மாறி, மிகப்பெரிய சொத்து சேர்க்கும் நிறுவனங்களாக மாறி இருப்பது உண்மையில் வேதனைக்குரியது தான்..
நன்றாக எடுத்துரைத்தார்
ReplyDelete