அந்த காலத்தில் மன்னருடைய பிறந்தநாள் காலங்களில் குருமார்களும் புலவர்களும் மந்திரி மார்களும் மன்னருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கி கௌரவிப்பார்கள். இந்திரன், சந்திரன், மூவுலகும் ஆளும் சக்கரவர்த்தி என்று வாய்க்கு வந்தபடி அளந்துவிடுவார்கள்.
மன்னரும் மனமகிழ்ந்து மந்திரிமார், குருமார்கள் மற்றும் தங்களுக்கு வேண்டிய ஆட்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்குவார்.
அதுவே ஆங்கிலேயர் காலத்திலும் தொடர்ந்து சர் பட்டம், ராவ் பகதூர்.... மாதிரி ஏராளமான பட்டங்கள், விருதுகள் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி வந்தார்கள்.
நமக்கு சுதந்திரம் கிடைத்து குடியரசு ஆனாலும் அந்த பழக்கவழக்கங்கள் சம்பிரதாயங்கள் விட்டு விடக்கூடாது அல்லவா.
நம் குடியரசில், ஒன்றிய அரசும், மாநில அரசும் அரசு நிர்வாகங்களும் சாதனையாளர்கள் கலைஞர்கள் ஆசிரியர்கள் ராணுவம், காவல்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோருக்கு பட்டங்களையும் விருதுகளும் வழங்குவதை தொடர்ந்தார்கள்.
எல்லையில் பணிபுரிந்து உயிர்த்தியாகம் செய்த படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றிய காவல் படை வீரர்கள், வீர தீர செயல் புரிந்தோர் மக்கள் நல பணியில் சிறப்பாக பணியாற்றிய கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆசிரியர்கள் பலருக்கு விருதுகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டிருக்கிறது
நல்ல சாதனையாளர்களும், மக்கள் பணியாற்றி பெயர் பெற்றவர்களும் திறமை மிக்கவர்களும் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிற விசயமே. திறமைக்கு அங்கீகாரமும், இன்னும் பணியாற்றிட உற்சாகம் அளிக்கும்.
பொருத்தமே இல்லாவிட்டாலும், தகுதிகள் இல்லாவிட்டாலும் எப்படியோ விருதுகள் பெறுவாரும் உண்டு. இது தொடர்பாக பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நல்ல திறமைசாலிகளும், சாதனையாளர்களும், உண்மையில் மக்கள் பணியாற்றுபவர்கள் புறக்கணிக்கபடுவது வேதனைக்குரியதே.
உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திறமையை உலகமே பாராட்டி சர்வதேச விருதுகள் அளித்தாலும், தேச விருதுகள் பெரிதாக அளிக்கப்படவில்லை. அவரும் அலட்டிக் கொள்ளவில்லை.
இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்
அரசு, மற்றும் அரசு நிறுவனம் சார்ந்த விருது மட்டும் இல்லை, மற்ற நிறுவனங்கள் சார்ந்த விசயமும் அப்படியே..
தமக்கு தாமே விருதுகள் வழங்கும் கூத்துக்களும் நிறைய உள்ளன. அகத்தியர் காலத்து கதை ஒன்று உண்டு. வாதாபி, இல்வளன் என்று இரண்டு அரக்கர்கள் இருந்தார்களாம். வாதாபி ஆடாக மாறிவிடுவானாம். இல்வளன் என்று அந்த அரக்கன் வாதாபியை சமையல் செய்து வருபவர்களுக்கு விருந்தளிப்பான். மனிதர்கள் அதை சாப்பிட்டவுடன் இல்வளன் வாதாபி வெளியே வா என்பானாம். உடனே வாதாபி சாப்பிட்டவர்களின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்து விடுவான். சாப்பிட்டவர்கள் இறந்தவுடன் அவர்களை வாதாபியும் இல்வளனும் சாப்பிடுவார்கள்.
அகத்தியர் அந்த வழியே வந்த போது அதே வித்தையை கையாண்டார்களாம். வாதாபியை சமையல் செய்து, இல்வளன் அகத்தியருக்கு விருந்தாக படைத்தானாம். இவர்கள் கதையை உணர்ந்த அகத்தியர் சாப்பிட்டு முடித்தவுடன் வயிற்றை தடவி செரித்துவிடு, செரித்து விடு என்றாராம். வழக்கம் போல இல்வளன் வாதாபி வெளியே வா என்று அழைத்திருக்கிறான். அகத்தியரின் வயிற்றுக்குள்ளேயே வாதாபி மரித்து, செரித்துவிட்டபடியால் வர முடியவில்லை. இல்வளன் இதை உணர்ந்து அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வாதாபியை திரும்ப உயிர்பிக்க பெற்றானாம். இவ்வாறு போகிறது கதை. இது உண்மையா பொய்யா என்று நமக்கு தெரியாது.
ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்று இருந்தபோது ஒரு பெரிய படம் மாட்டப்பட்டு இருந்தது. அதில் அந்த நண்பருக்கு மலர் கிரீடம் சூட்டி, மலர் மாலை சூட்டி ஒரு பெரிய வரவேற்பு பத்திரம் விருது வழங்கி அளிக்கப்பட்டிருந்தது. அந்த நண்பரிடம் அந்த விருது குறித்து பாராட்டிய போது" அட போங்க சார் மொத்த செலவும் நம்ம தலையிலேயே வச்சுட்டாங்க" என்றார்.
எனக்கு அகத்தியர் வாதாபி கதை தான் ஞாபகம் வந்தது. மக்களின் விருது பாராட்டு மோகத்தை பயன்படுத்தி இந்த அமைப்புகள் அளிக்கும் விருதுதான் நினைவுக்கு வருகிறது.
என்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் எங்கள் நிறுவனத்தில் சுதந்திர தின விழா விருதுக்காக தன்னுடைய பெயரை பரிந்துரைக்க என்னை நச்சரித்துக் கொண்டிருந்தார். மேலதிகாரிகளும் அவருக்கு ஆதரவாக இருந்ததால் நான் பரிந்துரைத்தவுடன் அந்த ஆண்டுக்கான சிறந்த ஊழியருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவர் நன்றாக பணியாற்றியவர் தான், அதனால எனக்கு அதில் ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் இன்னொரு நண்பர் பணிக்கு ஒழுங்காக வரமாட்டார் சங்கத் தலைவர் என்ற பெயர் போர்வையில் ஊர் சுற்றிக் கொண்டிருப்பார் அவருக்கும் ஒரு ஆண்டு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கப்பட்டது.
தொழிற்சங்கத்தில் எங்களுக்கெல்லாம் ஆசானாக இருந்த தோழர் எம் ஆர் அப்பன் அடிக்கடி கூறுவார் "தனது பணியில் சிறப்பாக பணியாற்றாமல் சமூகப் பணியில் செய்பவராக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவரும் சமூக விரோதியே".
என் அப்பா வேறு விதமாக சொல்லுவார். "திங்கிற சத்துக்களும், வாங்குற சம்பளத்திற்கும் வேலைசெய்யலன்னா மனுசனே இல்ல. சமுதாயத்துக்கு குறைந்தபட்ச பணி கூட செய்யலேன்னா அவன் எல்லாம் பூமிக்கு பாரம்"
இன்னொரு நண்பருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அந்த ஊரில் உள்ள ஒரு நன்பரை பார்த்து நல்லாசிரியரை பற்றி விசாரித்தேன். அந்த நண்பர் சொன்னார்.
"அவர் பாடம் எல்லாம் ஒன்னும் நடத்த வேண்டாங்க, பள்ளிக்கூடத்துக்கு மட்டும் வந்து போக சொல்லுங்க, இந்த பள்ளிக்கூடமே வேண்டாம் என்று டிசி வாங்கலாம்னு போனா கூட அவர பாக்க முடியல" என்றார்.
கேட்கவே வேதனையாக இருந்தது.
இப்படி நான் சொல்வதால் விருது பெற்ற எல்லோரையும் குறை சொல்கிறேன் என்று நினைத்து விட வேண்டாம்.
சில வேண்டாத உதாரணங்களை தான் கூறினேன்.
பாரதி கூறுவான்
"வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே- பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர்...
உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் -இதில்
நல்ல தவம் யாதொன்றும் இல்லை
பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னை
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி:
ஒக்கத் திருந்தி உலகோர் -நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி .
ஊருக்கு ழைத்திடல் யாகம்......
என்னைப் பொறுத்தமட்டிலும் உண்மையான விருது என்பது, ஏழை எளியவர்கள், கஷ்டப்படுகிறாரகள் ,உதவி தேவைப்படுகிறவர்களுக்கு இயன்றவரை பணியாற்றி, அவர்கள் மனதார ஓரிரு வார்த்தைகள் மகிழ்ந்து பாராட்டினாலே ஆயிரம் விருதுகளுக்கு சமம்............
விருதாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.
ReplyDeleteஇது பொதுவாக எழுதப்பட்ட கருத்து தான். விருது பெற்ற அனைவரையும் குறிப்பிட்டு எழுதப்பட்ட கருத்து அல்ல
ReplyDelete