சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 21 February 2025

உலக தாய்மொழி தினம்

உலகமெங்கும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாடு மதத்தின் பெயரால் மட்டும் ஒற்றுமை அடைந்து விட முடியாது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, இந்த உலக தாய் மொழி தினம் தான்.

மதத்தின் பெயராலே அமைந்த பாகிஸ்தான், உண்மையில் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக தான் இருந்தது.

1947 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்காளதேசம்), மேற்கு பாகிஸ்தான்  (தற்போது பாகிஸ்தான் ) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு பாகிஸ்தான் எனும் நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு இடையில் மேற்கிலும் கிழக்கிலும் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் மொழியிலும் பண்பாட்டிலும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டிருந்தன.

 மேற்கு பாகிஸ்தானில் உருது மொழி பேசுபவர்களும், கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசுபவர்களுமாக மக்கள் இருந்தார்கள். ஆனால் பாகிஸ்தானில் ஆட்சி மொழி உருது மட்டுமே இருந்தது. கிழக்கு பாகிஸ்தானால், இன்றைய வங்கதேசத்து மக்களுக்கு வங்க மொழி மட்டுமே தெரியும். உருது மொழி தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டதால் உருது தெரியாத வங்க மக்கள் தங்களது வங்க மொழியையும், தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராடினார்கள்.இந்தக் கோரிக்கை முதலில் தேரேந்திரநாத் தத்தா அவர்களால் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாளன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.  மொழி பிரச்சனையை மக்கள் சார்ந்த பிரச்சனையாக கருதி அரசியல் தீர்வு காண்பதற்கு பதிலாக, அரசு தனது வழக்கமான அதிகாரத் திமிரினையே காட்டியது.

இதற்காக டாக்கா மாநகரில் மாணவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அரசு ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் தடை செய்தது.

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி நடைப்பெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் அப்துசு சலாம், அப்துல் பார்கத், இரபீக் அகமது, அப்துல் ஜபார், சபியூர் இரகுமான் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தாய்மொழி காக்க போராடி அவர்களுடைய நினைவாக இந்த நாளை வங்க மக்கள் தேசிய நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்ற வங்கதேசமானது, இந்த நாளை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவிக்க யுனெஸ்கோ நிறுவனத்துடன் கோரிக்கை வைத்தது

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொதுமன்ற மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது..

இனம் காக்கப்பட வேண்டும் என்றால் அதனுடைய பண்பாடு காக்கப்பட வேண்டும். அதனுடைய பண்பாடு காக்கப்பட வேண்டும் என்றால் அதனுடைய மொழி காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய தாய் மொழியை காப்பாற்றுவது அவர்களது தலையாக கடமையாகும். மொழி அழிந்தால் வாழ்வு இல்லை என்பதை உணர வேண்டும்.

ஒரே தேசம் ஒரே மொழி என்று கூறுவது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல மக்கள் விரோத கொள்கை. எனவே இந்த சர்வதேச தாய்மொழி தினத்தில், நமது தமிழ் மொழியை காக்க போராட உறுதி ஏற்க வேண்டும். 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...