1965ஆம் ஆண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய கவிதை இன்றும் பொருந்துமாறு உள்ளது வெட்கக்கேடானது.......
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கொலை...
'எழுதுவ தெல்லாம் இலக்கியம்' என்னும்
பழுதுறுங் கருத்தைப் பல்கலைக் கழக
மொழியா சிறியன் முத்துச் சண்முகம்
கழிசடை வாயால் கக்கித் தொலைத்தான்!
அண்ணா மலையார் தமிழ்க்கென அமைத்தார்
பண்ணார்ந் திசைத்த பல்கலைக் கழகம்
கொட்டிக் கொடுக்கும் ஊதியம் பெறுவோன்
தட்டிக் கேட்க ஆளிலாத் தன்மையால்
இப்படிப் பற்பல இழிந்த கருத்தெல்லாம்
தப்பி யாக அடித்துத் தள்ளினான்! 10
இத்தனை நாட்களாய் இலக்கியம் என்னும்
முத்தமிழ்ச் சொற்கு முழுப்பொருள் அறியோம்!
முத்துச் சண்முகம் மொழிவதைக் கேண்மின்!
ஏத்துப் புரட்டென எண்ணிட வேண்டா!
'அவாள்' 'இவாள்' என்னும் 'ஆனந்த விகடன்'
கவர்ச்சி ஓவியக் கழிசடைக் 'குமுதம்'
ஓட்டைவாய்ப் பார்ப்பான் உளறும் மொழிகளைக்
கோட்டைமே லேற்றிடுங் 'கல்கி' 'மித்திரன்'
படித்த வாயைப் பன்முறை கழுவும்,
அடித்ததீ நாற்றம் அடிவயிறு கலக்கிடத் 20
தீது பரப்பும் 'தினத்தந்தி' முதலிய
பொல்லாத் தாள்கள் பொழிந்தன பொழிவன
எல்லா எழுத்தும் இலக்கியம் ஆகுமாம்!
அச்சுப் பிழையதும் அகற்றிடல் வேண்டா!
அச்சுப் பிழையுமோர் இலக்கிய அழகே!
முத்துச் சண்முக மொழியா சிறியநின்
சொத்தைக் கருத்தைக் கேட்டபின், நாட்டில்
விளையும் விளைவைக் கேட்கவும் வேண்டுமோ?
களையும் பயிர்தான்! காக்கையும் கிளிதான்!
தத்துப் பித்தென எழுதித் தள்ளலாம்! 30
எத்திப் பிழைத்திட எவரும் முன் வரலாம்!
குடியன் உளறலும் கோணையன் மொழிவதும்
தடியர் பிதற்றலும் தவளைக் கூச்சலும்
அழகு மங்கை ஆடை களைவதும்
பழகு தமிழில் பக்கம் பக்கமாய்
எழுதித் தள்ளலாம்? இழிவென்ன இழிவு?
புழுதிக் கருத்துகள் பொல பொல வென்று
நந்தமி ழகத்தின் எழுதுவார் நாவில்
வந்து மொழிவதும் இலக்கிய வளர்ச்சியே!
'பிடித்த'தைப் 'பிடிச்ச'தென் றெழுதலாம் இனிமேல்! 40
'பெற்ற'தைப் 'பெத்த'தென் றெழுதலாம் இனிமேல்!
'போன'தைப் 'போச்'செனப் புகலலாம் இனியே !
'வேண்டு' மென்பதை 'வேணு'மென் றெழுதலாம்!
மொத்தமாய்க் கூட்டிக் கழித்து மொழிந்தாள்
முத்துச் சண்முகம் கருத்துப் படியினி
அத்திம்பேர் அம்மாமித் தமிழே இலக்கியம்!
முத்தமிழ் வளர்ச்சியைப் பாருங்கள் தமிழரே!
முத்துச் சண்முகம் மூதறி வாளன் (!)
திக்குவாய்த் தமிழன் தெ.பொ.மீ.யின் 50
தக்கநல் லடியான்; அவன் தாள் பிடிப்பவன்!
படித்தவன்; படித்துப் பட்டம் பெற்றவன்;
நடிப்பவன் தமிழ் நலம் நாடுவான் போல;
மொழிநலம் பேணும் மொழியா சிறியன்!
இழிவு அவனுக்கா? தமிழர்க்கே என்க!
மெய்யாய்ச் சொல்லுவேன் முத்துச் சண்முகம்
வையா புரியின் வகையிலோர் புது ஆள்!
கழிசடை நாயும் கண்டதை உணாதே!
இழிவுற அவனோ எதையும் உண்பவன்!
இத்தகை யான இழிந்த பிறவிகள் 60
முத்தமிழ் நலத்தை முழுவதும் அழிக்கப்
புறப்பட் டனர்காண்! தமிழனே! பாரடா!
இறப்பத் தூங்கினை! எழடா இனிமேல்!
யாழிசைப் போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
பாழாய் இசைப்போன் பழிக்கப் படுவான்;
நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!
பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!
ஆனாலும்,
முத்துச் சண்முகம் எனும் முழு மகனின்
முத்துக் கருத்து யாதெனில், தாளெடுத் 70
தெழுதுவ தெல்லாம் இலக்கியம்! அதனை
எழுதுவோர் யாவரும் இலக்கியப் புலவரே!
கல்லார் உளறும் மொழியே உயிர்மொழி!
எல்லா ரும் அதை எழுதிடல் சாலும்!
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இல்லையா!
மொழியா சிறியனின் முழுமைக் கருத்திது!
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இன்றால்
மொழியா சிறியனுக் கிங்கென்ன வேலை?
பாண்டியன் பேணிய பண்பார் தமிழைத்
தோண்டிப் புதைத்திட இவனுந் தோன்றினான்! 80
முப்பழங் கழகத்து முகிழ்த்த தமிழைத்
தப்புந் தவறுமாய்த் தாழ்த்துகின் றானே!
ஏடா, தமிழனே! எடுத்தெறி எழுதுகோல்!
நீடார் பழம்புகழ் நினை! வாள் தூக்கு!
அன்றிலும் மானும் அலைந்த சோலையுள்
பன்றியும் கழுதையும் தமிழைக் கலக்குவ!
மொழியென் பெயரால் முள்ளங்கிப் பற்றைபோல்
கொழிக்கின் றனரே கொள்ளை ஊதியம்!
அத்தனைப் பணமும் தமிழர் அளித்ததே!
இத்தனை நாட்களும் தமிழரை ஏய்த்தனர்! 90
அணிதமிழ் கற்க அண்ணா மலைவரும்
மணியெனும் அமெரிக்க மாணவ ரிடத்துத்
தமிழ்மொழி ஈதெனத் தகவிலா மொழி
உமிழ்ந்து கொள்ளை ஊதியம் பெறுவான்!
ஒன்றை 'ஒன்னாய்' இரண்டை 'ரெண்டா'ய்
மூன்றை 'மூனா'ய் அவரிடை மொழிவான்!
பேச்சுத் தமிழெனக் கல்லார் பிதற்றலைக்
காச்சு மூச்செனக் கற்பிக் கின்றான்!
அரைவேக் காட்டின் ஆசிரி யன்மார்
விரைவாய்க் கற்றுக் கொடுத்திடும் இழிவை 100
நேரிலே காணில் நெஞ்சு கொதித்திடும்!
அரசினர் கேளார்! அண்ணா மலையின்
கரிசனக் காரர் கவனியார் இதனை!
தெ.பொ.மீ.யின் தலைமையில்
காப்பா றின்றிக் குலைந்தது நாளும்!
பன்மொழிக் குரிசில் பாவா ணர்தம்
வன்மொழி யறிவு வாடிக் குலைந்திட
ஒலிமுறை சொன்முறை மொழிவர லாறு
துளியும் அறிகிலாப் பேதையர் யாவரும்
அண்ணா மலையுள் அமர்ந்து கொண்டே 110
உண்ணா உணவுக்குத் தமிழ் உலை வைப்பார்!
விழியிலார் விழிமருத் துவம்பார்ப் பதுபோல்
மொழியறி யாதார் மொழித்துறைத் தலைவராய்
இற்றை அமர்ந்தனர்; இழிவடா இழிவு!
அற்றை நாளினும் தமிழ்மொழி இக்கால்
பல்லாற் றானும் பரவிய தென்று
புல்லிய வாயால் புகல்கின் றானே!
ஐயகோ தமிழே! நினக்கிவ் விழிவோ!
உய்யுமோ தமிழும்? தமிழனும் உய்வனோ?
சிரைத்திடு வானிடம் தமிழைத் தந்தால் 120
நரைத்தது தமிழெனத் தமிழினைச் சிரைப்பான்!
ஆளத் தெரியா அமைச்சர்; அவரடி
மீளத் தெரியா மேலதி காரி!
அரைப்புதுக் காசும் அவர்தரும் பணத்தில்
குறைந்திட விரும்பக் கல்வித் தலைமையர்!
சொல்விற் றுண்ணும் சோம்பலா சிரியர்!
அவர்வயின் கற்கும் அரைகுறைப் படிப்பும்!
உவர்நிலத் தூற்றாய் என்றும் உவர்ப்பதே!
இத்தகைப் படிப்பிற் கிடிபிடி என்னும்
குத்தகை மாணவக் கொள்கையில் கூட்டமே
பல்கலைக் கழகத்துப் பார்க்கும் ஓவியம்
தமிழனை வடவன் தாழ்த்தினான் அல்லன்! தமிழனைத் தாழ்த்துவோன் தமிழனே!
இமையும் மூடாது எழுக இளைஞரே!
---1965
No comments:
Post a Comment