சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 22 February 2025

அப்பா சொன்ன கதைகள்

என் அப்பா சிறுவயதில் எங்களுக்காக நிறைய கதைகள் சொல்லுவார்கள். அதில் பேராசைக்கார சாப்பாட்டு பிரியர்களைப்பற்றி கதைகள் சொல்லிருக்கிறார். ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அந்த பெரியவருக்கு உளுந்து வடை சாப்பிட வேண்டுமென்று ரொம்ப ஆசை. தன் மனைவியிடம் கூப்பிட்டு அடியே, உளுந்தவடை சுட்டுக் கொடுடி என்று கேட்டார்

 அந்த அம்மா எவ்வளவு வடை சுடுவது என்று கேட்டிருக்கிறார். 100 வடை சுட்டுக் குடுடி என்று இருக்கிறார்.

அந்த அம்மாவும் உளுந்த வடை பிரியர் தான்.வீட்டுக்காரர் ஆசைப்படுகிறார் என்று உளுந்து ஊறப்பட்டு அரைத்து வடை சுட ஆரம்பித்தாள். வடை சுடும் போது அவளுக்கு வாய் ஊற ஆரம்பித்தது. வடை உப்பு காரம் சுவை நன்றாக இருக்கிறதா என்று ஒரு வடையை விட்டு தின்று பார்த்தாள். நன்றாக இருந்தது. அப்படியே ஒன்று ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே வடையை சுட்டு முடித்தாள்.

சுட்டு வைத்திருந்த சட்டியை பார்த்தால் ஒரே ஒரு வடை தான் மிச்சம் இருந்தது. சுவை பார்க்கிறேன், சுவைபார்க்கிறேன் என்று எல்லாவற்றையும் தின்று முடித்து விட்டாள். சரி ஐயா வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று மிச்சமிருந்த ஒரு வடையை எடுத்து வைத்தாள்.

பெரியவர் வெளித்தோற்றத்தில் பார்க்கத்தான் மகாவீரர். ஆனால் வீட்டுக்காரம்மாவிடம் உள்ளூர பயம் கொண்டவர்தான். வெளியே சென்று இருந்த பெரியவர் வீட்டுக்கு வந்து, முகம் கைகள் அலம்பி விட்டு வந்து உட்கார்ந்து வடையை கொண்டு வரச் சொன்னார். வீட்டுக்காரம்மா மிச்சம் இருந்த ஒரு வடையை தட்டில் கொண்டு வந்து வைத்தாள்.

என்னடி ஒரே ஒரு வடை தான் இருக்கு எவ்வளவு வடை சுட்டாய் என்று கேட்டார். நீங்கள் சொன்னபடி 100 வடை தான் சுட்டேன் என்று சொன்னாள்.

ஏண்டி ஒன்னு தான் இருக்கு. பாக்கியெல்லாம் எங்கேடி என்றார்.

உப்பு, காரம் சரியா இருக்கா என்று பார்க்கையில் தின்று விட்டேன் என்று வீட்டுக்காரம்மா சொன்னாள்.

பெரியவருக்கு சண்டாளமாய் கோபம் வந்தது.

எப்படிடி வடையை தின்றாய் என்று கோபமாய் கேட்டார். இப்படித்தான் தின்றேன் என்று மிச்சம் இருந்த ஒருவடையையும் அந்தம்மா சாப்பிட்டு விட்டாள்.

பெரியவருக்கு மகா கோபமும், துக்கமும் பீறிட்டது.

படு கோபமாய் எழுந்து வெளியே சென்று விட்டார். வேற என்ன செய்ய முடியும்....

வெளியே சென்று கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்த பெரியவரை ஒருவர் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்கிறார். சாப்பிட கூப்பிட்டவர் மகாபரமசாது. அவருடைய அம்மா செத்ததுக்கு வருடாந்திர திவசம். யாரையாவது சாப்பிட கூப்பிட வேண்டுமே என்று இந்த பெரியவரை கூப்பிட்டு சென்றார். அந்த வீட்டிலும் சாப்பாடு நன்றாகவே சமைத்திருந்தார்கள். வைத்திருந்த பட்சனங்களகளை எல்லாம் பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். இவர் ஆசைப்பட்ட உளுந்த வடையும் இருந்தது.

பெரியவருக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும் வைத்துவிட்டு, வடையை வைத்தார்கள், வேகமாக உளுந்து வடை எடுத்துக் தின்றார். சாப்பிட சாப்பிட வைத்துக் கொண்டே இருந்தார்கள். அவரும் உளுந்த வடை தின்று கொண்டே இருந்தார். வந்திருக்கும் அதிதியை திருப்திப்படுத்துவது முன்னோரை திருப்திப்படுத்துவதற்காக சமம் என்பது ஐதீகம். சரி இவ்வளவு பிரியமாய் இருக்கிறாரே என்று வடை தட்டை நீட்டி இன்னும் வைக்கவா என்று கேட்டார்.

இவர் எச்சில் கையை நீட்டி தட்டில் இருந்த நடுவடையைத் தொட்டு இந்த வடையை வையுங்கள் என்றார்.

எச்சில் கையால் தட்டில் இருந்த வடையை தொட்டுவிட்டால் மொத்தமும் எச்சில் பட்டதாகத்தானே அர்த்தம் என்று மொத்த உளுந்த வடையையும் அவர் இலையில் கொட்டி விட்டார்கள். இவர் வீட்டில் வீட்டுக்காரம்மா இவரை ஏமாற்றி உளுந்த வடையை தின்றதற்கு, இந்த வீட்டில் எல்லா வடையும் தின்று தனது ஆசையை தீர்த்துக் கொண்டார். 



பொதுவாக இப்படிப்பட்ட ஆட்களை தான்தின்னி என்று அப்பா சொல்லுவார். பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணாமல் தானாக தின்று தீர்க்கும் மனிதர்கள் உலகில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...