வைராக்கியம் என்றால் எல்லோருக்கும் தெரியும். ஒரு முடிவு எடுத்து விட்டால் என்ன நடந்தாலும் அதை கைவிடாமல் அந்த.
முடிவின் படி நிற்பது தான். ஒரு படத்தில் கூட விஜய் சொல்லுவார். நான் முடிவு எடுத்துவிட்டால், என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று. அதுபோல என்று கூட வைத்துக் கொள்ளலாம்?. காந்தியார் கூட சிறுவயதில் அரிச்சந்திரா நாடகம் பார்த்த பிறகு பொய் சொல்வதில்லை என்று வைராக்கியம் எடுத்துக் கொண்டாராம் . அரிச்சந்திரன் பொய் சொன்னாரா, இல்லையா என்பது நமக்கு தெரியாது. கதைப்படி அரிச்சந்திரன் விசுவாமித்திரன் என்ற முனிவரிடம் கொடுத்த வாக்கில் இருந்து மீற மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்து, நிறைய கஷ்டங்களை எல்லாம் சந்தித்து, இறுதியில் சாதித்து காட்டினார் என்று சொல்லுவார்கள். விசுவாமித்திரரிடம் சொன்ன வாக்கை காப்பாற்றினாரோ, இல்லையோ எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன் என்று திருமணம் செய்த மனைவியையும், பிள்ளையையும் தெருவிலே ஏலம் போட்டு விற்றுவிட்டு, அம்போ என்று விட்டுவிட்டு வாக்கை காப்பாற்றுவது என்ன வைராக்கியமோ தெரியவில்லை. அரிச்சந்திரன் கதை கிடக்கட்டும். என் அப்பா வைராக்கியம் பற்றி சில கதைகள் கூறுவார். அதுதான் ஞாபகம் வந்தது.
நம் மக்களிடம் பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்றெல்லாம் வார்த்தைகள் அடிக்கடி புழங்கும்.
. மனைவி பிரசவ காலத்தில் வலி எடுக்கும் போது கணவனை கண்டபடி ஏசுவாளாம். அந்த ஆள் முகத்தில் முழிக்க கூடாது, இனிமேல் பிள்ளையே பெற்றுக்கொள்ளமாட்டேன், என்றெல்லாம் சொல்வாளாம். ஆனால் குழந்தை பிறந்து, குழந்தை முகத்தை பார்த்தவுடன் எங்கே அவர் வரவில்லையா என்று கேட்பாளாம். இதுதான் பிரசவ வைராக்கியம்.
இதைவிட சிறப்பானது மயான வைராக்கியம் யாராவது தீய பழக்கங்களால்கடுமையான நோய் வாய் பட்டு இறந்து போனால், மயானத்திற்கு கொண்டு செல்லும் உறவினர்கள், நண்பர்கள் இதைப் பற்றி அதிகம் பேசுவார்கள். இனிமேல் இது மாதிரி எந்த கெட்ட பழக்கமும் வைத்துக் கொள்ளக் கூடாது. இதை அவர் அவருக்கு இருக்கக்கூடிய பழக்க வழக்கங்களையும் சேர்த்து சொல்லி கொள்வார்கள் வெத்தலை, பாக்கு, சிகரெட் தண்ணி எதுவும் தொடக்கூடாதுப்பா என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டு வருவார்கள். வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, சாப்பிட்டு வெளியே வந்தவுடன், எதை தொடக்கூடாது எதை விட்டு விட வேண்டும் என்று சொன்னார்களோ அடுத்த நொடியே ஆரம்பித்து விடுவார்கள்.. மயான வைராக்கியத்தின் லட்சனம் அவ்வளவுதான்.
எனது நண்பர் ஒருவர் இருந்தார் அவர் ஒரு மதுப்ரியர். கூடவே சீட்டு ஆட்டமும் உண்டு. அவருடைய மனைவியார் அவரை குடி, சீட்டை விட சொல்லி சத்தியம் செய்து சொல்வார். இவரும் கூசாமல் சத்தியம் செய்துவிட்டு குடிக்க சென்று விடுவார். ஏன் இப்படி சத்தியம் செய்துவிட்டு குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் மனதிற்குள் ஒரு அணாவை சேர்த்து தானே சத்தியம் செய்தேன். அதாவது அசத்தியம் அவருடைய மனைவிக்கு பயப்படுகிறாரோ இல்லையோ மனசாட்சிக்கு பயப்படுவார். அதனால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பொய் சத்தியம் செய்துவிட்டு சீட்டாட சென்று விடுவார் அல்லது குடிக்க சென்று விடுவார்.
சரி ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டாலாவது திருந்து விடுவார் என்று அவரது மனைவி ஒரு வருடம் அவருக்கு ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விட்டார். யாரோ அந்த அம்மாவிடம் கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு மதுக்கடைகளில் தனி கிளாஸ் உண்டு என்று போர்டு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார் கள். அந்தம்மா நொந்து போய் ஐயப்பன் கோவிலுக்கு போனாலாவது திருந்துவார் என்று பார்த்தேன். அங்கு போனாலும் வழியில்லை என்றால் எதற்காக இங்கிருந்து அங்கு அனுப்ப வேண்டும் என்று அடுத்த வருடத்தில் இருந்து மாலை போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இனிமேல் குடிப்பதில்லை சீட்டு ஆடுவது இல்லை என்று வைராக்கியம் எடுத்துக் கொள்வது தானே என்று கேட்டேன். எனக்கு அந்த எழவெல்லாம் தெரியாது ஆள விடுங்க சாமி என்று சொல்லிப் போய்விட்டார்.
அரசியல்வாதிகளும் வித்தியாசமாக வைராக்கியம் எடுத்துக் கொள்வார்கள். இனி உயிரே போனாலும் அந்த கட்சி அலுவலகத்திற்கு போக மாட்டேன். கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன். நானோ எனது வாரிசுகளோ தேர்தலில் நிற்க மாட்டோம் என்றெல்லாம் வைராக்கியம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும். அது என்ன வைராக்கியம் என்று தெரியவில்லை.
.. அது போகட்டும் அப்பா சொன்ன கதைக்கு வருவோம். அவர் சின்ன வயதில் பிழைப்பு தேடி சிலோனுக்கு போயிருந்தாள். சிலோன் நம்மளை விட வசதியான நாடு என்று கருதி விடாதீர்கள். வடக்கே இருந்தது பானிபூரி, பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் இங்கு வருவது இல்லையா, அதுபோலத்தான், அந்த காலத்தில் ஓரளவு நன்றாக இருந்த சிலோனுக்கு தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி செல்வார்கள். அப்படி இவர் போயிருக்கையில் கணக்கு பிள்ளை வேலைக்கு சொல்லி இருந்தார்கள். அதுவரைக்கும் இருக்கட்டும் என்று ஒரு பெட்டி கடையில் வேலை பார்த்திருக்கிறார்.
வேலைக்கு போன போது யாரிடமும் அதிகம் பழக்கம் இல்லை. முதலாளியை மட்டும் தான் தெரியும். ஒரு நாள் மாலை ஒருவர் நன்கு நாகரீகமாக உடைய அணிந்து வந்தவர் சோடா கேட்டு இருக்கிறார். இவரும் சோடா உடைத்து கொடுத்தவுடன் வந்த நபர் ஒரு மடக்கு குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி எறிந்து இருக்கிறார். அப்பாவுக்கு கோவம் வந்து விட்டது. ஏன் எறிந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். வந்த நபர் இன்னொரு சோடா கொடு என்று கேட்டிருக்கிறார். அப்பாவும் மீண்டும் சோடா உடைத்துக் கொடுத்தவுடன் ஒரு மடக்கு குடித்துவிட்டு இந்த பாட்டிலையும் எறிந்து விட்டார். அப்பாவுக்கு பயமும் கோபமும் வந்துவிட்டது. சத்தம் போட ஆரம்பித்தவுடன் வந்த நபரும் ஆங்கிலத்தில் கண்ணா பின்னால் என்று திட்டி மீண்டும் சோடா கேட்டு இருக்கிறார். சத்தம் கேட்டு உள்ளிருந்த முதலாளி வேகமாய் ஓடி வந்து அப்பாவை அமைதிப்படுத்தி விட்டு அவருக்கு சோடா கொடுத்திருக்கிறார். அந்த சோடாவையும் ஒரு மடக்கு குடித்துவிட்டு தூக்கி எறிந்து விட்டு, தின்பண்டங்கள்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டார். அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. முதலாளி உனக்கென்ன என்று சொல்லிவிட்டு கடன்நோட்டை எடுத்து, வந்தவருடைய பக்கத்தில் செலவு கணக்கு எழுதி வைத்தார். அந்த நபரைப் பற்றி கேட்டவுடன், முதலாளி நம்ம கஸ்டமர் தான் ஒன்னும் பிரச்சனை இல்லை. காசு கொடுத்து விடுவார் நீ பேசாம இரு, நாளை காலை அவர் வரும்போது எப்படி இருக்கிறார் என்று பார் என்று சொல்லிவிட்டார்.
அடுத்த நாள் காலை அந்த நபர் வந்த கோலமே வேறு. சுத்தமான தும்பை பூ வேஷ்டி, நெற்றி நிறைய பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டை, சட்டை போடாமல் மேல் ஒரு துண்டு என்று வந்திருக்கிறார். வந்தவர் பூஜைக்கான சாமான்கள் நிறைய வாங்கிக் கொண்டு கோவிலுக்கு சென்று விட்டார். அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலாளியிடம் கேட்டிருக்கிறார். அவர் அப்படித்தான் சற்று வித்தியாசமான நபர் என்று சொல்லியிருக்கிறார்
வந்தவர் பெயர் சிவபிரகாசம் பெரிய சவுண்ட் இன்ஜினியர். திறமைசாலி. இன்ஜினியரிங் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் தீர்த்து வைக்க கூடியவர். ராணுவத்தில் கொஞ்ச காலம் வேலை பார்த்திருக்கிறார். எந்த ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கும் உட் படாதவர். அதனால் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் எந்த பிரச்சனை என்றாலும் கூப்பிட்டு அனுப்புவார்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் செய்து கொடுப்பார். அவருடைய திறமைக்கு அவ்வளவு மரியாதை. . ஒரு முறை புதிதாக கட்டப்பட்ட திரையரங்கில் எதிரொலி பிரச்சனை இருந்ததாம். இவரை கூப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு நாள் பூராவும் உள்ளேயே திரையரங்கில் அடைந்து கிடந்தவர், எப்படியோ அந்த பிரச்சினையை தீர்த்து விட்டாராம். அதற்குப் பிறகு எக்கோ பிரச்சனையே இல்லையாம். அப்பேர்ப்பட்ட திறமைசாலி. சரியான பக்திமான். சிவப்பழமாகவே காட்சி அளிப்பார். கோயிலுக்கு சென்றால் எல்லா சம்பிரதாயங்களையும் முறையாக கடைபிடித்து சாமி கும்பிட்டு வருவார். ஆனால் அவருக்கு வேறொரு முகம் இருந்தது.
மாதக் கடைசியில் பற்றுக்கணக்கை பார்த்து அவர் செலுத்த வேண்டிய பாக்கித்தொகையை எழுதி அப்பாவிடம் கொடுத்து பணம் வாங்கி வரும்படி முதலாளி அனுப்பினார். அப்பாவின் தயக்கத்தோடு பயந்துகொண்டேதான் போனார். அவரும் மறு பேச்சு பேசாமல் பட்டியலை கூட வாங்கி செக் பண்ணாமல் பணத்தை எண்ணி கொடுத்து அனுப்பினாராம்.
சாதாரணமாக மது குடிக்க மாட்டார். மது குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். ஒரு வாரம், பத்து நாளோ அவராக பார்த்து நிறுத்தினால் தான் உண்டு. குடிக்காமல் இருந்தால் மிகவும் வைராக்கியமாக இருப்பார். யாராவது பிறந்தநாள் பார்ட்டி , திருமணநாள், அது இது என்று என்று அழைத்துச் சென்று ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு தான் சொல்ல வேண்டியது இல்லை.
இவரும் சிவனே என்று தான் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார். இவருடைய பிரிட்டிஷ் நண்பர் ஒருவர் பிறந்தநாள் பார்ட்டிக்கு இவரை அழைத்து இருக்கிறார். இவருடைய பாரியாள் அதாங்க இவரது மனைவி " ஐயா நீர் போய் நல்ல வழியாக பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வாருங்கோ, தண்ணி அடிச்சு அசிங்கப்படுத்திராதிங்கோ பிள்ளைங்க பார்த்து கேட்டு போறதுகள்" என்று குனமாத்தான் சொல்லி அனுப்பினார். இவரும் குடிக்கிறதில்லன்னு சத்தியம் செய்து விட்டுத்தான் போனார்.
இவரும் அங்கு போய் நான் குடிக்கிறதா இல்லை என்னோட பாரியாளிடம் குடிக்கிறதில்லன்னு என்று சத்தியம் செஞ்சிருக்கேன். அதனால் நீங்க ஆரம்பிங்கோ என்று மறுத்திருக்கிறார். அவருடைய நண்பர்களும் பிரிட்டிஷ் நண்பரும் அது எப்படி ஐயா நீர் தொடாமல் நாங்கள் எப்படி குடிப்பது என்று சொல்லி இருக்கிறார்கள். அவரும் தட்ட மாட்டாமல் பாட்டிலை திறந்து இருக்கிறார்....
........
...
அப்புறம் என்ன பழைய குருடி கதவைத் திருடி கதை தான்... வைராக்கியம் காற்றோடு போயிட்டது...
இதைப் படித்துவிட்டு டாஸ்மார்க் வைராக்கியவாதிகள் சண்டைக்கு வந்து விடக்கூடாது
No comments:
Post a Comment