நான் அரசிளங்குமரி படத்தை தொடர்ச்சியாக 26 தடவை பார்த்தேன் என்றால் என்ன நினைப்பீர்கள், இவன் ஒரு எம்ஜிஆர் வெறியன் என்றுதானே, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆயிரம் காலத்துப் பயிர் என்ற படத்தையும் தொடர்ச்சியாக அப்படித்தான் பார்த்தேன் .இவ்வளவு ஏன் பட்டினத்தார் படத்தை கூட 24 தடவை தொடர்ச்சியாக பார்த்தேன். என்ன சிரிப்பாக இருக்கிறதா?. ஏன் பைத்தியக்காரன் என்று கூட நினைப்பீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சில காலம் டூரிங் டாக்கீஸில் பகுதி நேர பணி பார்த்தேன். பொழுது போகாத போது, எத்தனை நாள் ஓடுகிறதோ எத்தனை தடவை ஓடுகிறதோ, அத்தனை தடவையும் பார்ப்பேன். சினிமா எடுக்கக்கூடிய முறை, காட்சி அமைப்பு, நடிப்பு, நடனம் ஆகியவற்றை பார்த்து ரசிப்பேன். அவ்வளவுதான், அது கிடைக்கட்டும். எனது சினிமா ரசனை என்பது டூரிங் டாக்கீஸில் தான் ஆரம்பித்ததாக ஞாபகம்
.
முதன்முதலாக வெள்ளலூரில் உள்ள டூரிங் டாக்கிசிற்கு எங்கள் ஐயா (அப்பாவின் அப்பா) சரஸ்வதி சபதம் என்ற படத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவர் நான், என் அண்ணன் உள்ளிட்ட நான்கைந்து சுள்ளான்களை அழைத்துச் சென்றார். கவுண்டரில் ஒரு டிக்கெட் மட்டுமே வாங்கி வந்தார். எங்களை உள்ளே அழைத்துச் செல்லும்போது டிக்கெட் கிழிப்பவரிடம் கொஞ்சம் சில்லறையை கொடுத்துவிட்டு டிக்கெட் இல்லாமல் எங்களை உள்ளே விரட்டிவிட்டார். டிக்கெட் கிழிப்பவர் சில்லரை வாங்கி அவருடைய டவுசர் பையில் போட்டு விட்டு எங்களை கண்டுகொள்ளாமல் உள்ளே விட்டு விட்டார். கிராமத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம். நான் டிக்கெட் கேட்டு அவரிடம் அடம்பிடித்த போது தலையில் ஒரு குட்டுப்போட்டு உள்ளே போடா என்றார்.
வருடா வருடம் முழு பரிட்சை லீவு விட்டவுடன் மதுரையில் இருந்து எங்கள் வெள்ளலூர் கிராமத்திற்கு சென்று விடுவேன். பகலெல்லாம் குளம் குட்டை, பொட்டல் என்று எல்லா இடங்களும் விளையாடித்திரிவோம். சாயங்காலம் ஆனவுடன், என் அண்ணன் டூரிங் டாக்கீஸ் பக்கத்தில் அரிசி, மாவு மில் நெல் காயப்படும் பொட்டலுக்கு அழைத்துச் செல்வார்.
எங்கள் வீட்டிற்கு அருகிலேயே டூரிங் டாக்கீஸ் இருந்தது.
அங்கு நிறைய பேர் அந்த கருங்கல்தளத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். டூரிங் டாக்கீஸ் கூரையில் உச்சியில் இரு கூம்பு ஒலிப்பான்கள் (ஸ்பீக்கர்கள்) கட்டப்பட்டிருந்தன.
படம் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பாடல்கள் போட ஆரம்பித்து விடுவார்கள். பிறகு தான் டிக்கெட் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.டூரிங் டாக்கீஸ் முன்னாள் உள்ள திடலில் தள்ளுவண்டி மிக்சர் கடை நிற்கும். பகல் நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் நிற்க்கும் மிக்சர் கடை சாயங்காலம் திரையரங்கில் முன்னால் நிற்கும். டூரிங் டாக்கீஸில் கூட்டம் நிறைய இருந்தால் மிக்சர் கடை வியாபாரம் நன்றாக நடைபெறும். இல்லை என்றால் ஈ ஓட்டும். அந்த மிக்சர் தள்ளு வண்டியை பார்க்க வேடிக்கையாக இருக்கும். சுற்றிவர கண்ணாடி வைத்து உள்ளுக்குள் தின்பண்டங்கள் மிக்சர் எல்லாம் அடுக்கப்பட்டிருக்கும். சுற்றிவர திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் ஓட்டப்பட்டு இருக்கும். பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருப்பார்கள்.
அந்தக் காலத்து மக்களுக்கு டூரிங் டாக்கீஸ் மட்டுமே பொழுதுபோக்கு. படம் போடுவதற்கு முன்பு மேலே இருக்கும் குழாய் ஸ்பீக்கரை நிறுத்தி விட்டு உள்ளே திரைக்கு பின்னால் உள்ள ஸ்பீக்கரில் பாட்டு போடுவார்கள. அது தான் படம் போடப் போகிறார்கள் என்பதற்கான முன் அறிவிப்பு. படம் பார்ப்பவர்கள் டிக்கெட் எடுத்து டூரிங் டாக்கீஸிற்கு சென்று விடுவார்கள். இருந்தாலும் வெளியே உள்ள கல் தளத்தில் ஒரு குழு அல்லது குழுக்கள் அமர்ந்து கொண்டு ஊர்க்கதை உலக கதை எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ் எல்லாம் கிராம பகுதிகளிலும் நகரங்களுக்கு வெளியே அமைந்திருக்கும். டூரிங் டாக்கீஸ் என்றாலே தற்காலிக அனுமதி பெற்று இயங்குபவை தான். தொடர்ந்து இயங்க நீட்டிப்பு அனுமதி பெற்று தொடர்ந்து இயங்கும். எங்கள் வெள்ளலூர் டூரிங் டாக்கீஸ் அனுமதி முடிந்துவிட்டால் கிராமத்திற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள உறங்கான்பட்டி, தனியாமங்கலம், கோட்டநத்தம்பட்டி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்து விடுவார்கள். சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரைப்படம் பார்க்க பொடிநடையாக செல்வார்கள் . சைக்கிள்கள், சில நேரங்களில் மாட்டு வண்டி கட்டிக்கிட்டு படம் பார்க்க வருவார்கள்.
டூரிங் டாக்கீஸ் கூரைக்கொட்டகளாக தான் இருக்கும். சுற்றிவர கீற்று தட்டிகளைக்கொண்டு அடைப்பு அடைந்திருப்பார்கள். சிலசமயம் தட்டிகளைப்பொத்துக் கொண்டு திருட்டுத்தனமாக ஆட்கள் உள்ளே நுழைந்து வந்து விடுவார்கள். அதனால் சீமைக்கருவேல் முள் வேலி அமைத்திருப்பார்கள். சில நேரங்களில் பாம்புகள் உள்ளே நுழைந்து விடும். அவைகள் என்ன டிக்கெட்டை வாங்கி உள்ளே வரப்போகின்றன. பிடிக்காத சில சில்லறைகள் தண்ணீர் பாம்பு பிடித்து உள்ளே விட்டு விடுவதுண்டு....
இது போன்ற நிறைய கூத்துக்களை சொல்லிக் கொண்டே போகலாம். திரையரங்குகளை ஏ, பி, சி என்று 3 சென்டர்களாக பிரிப்பார்கள். மாநகரங்களில் நகரங்களில் உள்ள திரையரங்குகள் 'ஏ' சென்டர், நடுத்தர நகரங்களில் உள்ள திரையரங்குகள்'பி' சென்டர், கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகள் 'சி' என்று திரைப்பட ரசிகர்களையும் திரையரங்குகளையும் பிரிப்பார்கள். பொதுவாக புது படங்கள் வெளி வருவதெல்லாம் 'ஏ'சென்டரில் தான். ஓடி பிறகு 'பி' சென்டரில் அப்படங்களை வெளியிடுவார்கள். இறுதியாக தான் 'சி' சென்டருக்கு வரும். ஒரு படம் எடுத்த எடுப்பிலேயே பி சென்டருக்கு அல்லது சி சென்டருக்கு வந்து விட்டால் அந்த படம் தோல்வி படம் என்று கொள்ளலாம். சி சென்டர் என்பது டூரிங் டாக்கீஸ் தான்.
நான் டூரிங் டாக்கீஸில் பகுதி நேர வேலையாக சென்றது ஒரு வித்தியாசமான அனுபவம். மதுரையில் இருந்து எனது நண்பன் சோமசுந்தரம் மன வருத்தத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி புதுக்கோட்டையில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த திருவரங்குளத்திற்கு வந்திருந்தார். வந்த இடத்தில் சிறிது நாட்களில் குளத்தில் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக மூழ்கி இறந்து விட்டார். அது என்னை மிகவும் பாதித்துவிட்டது.
சிறிது காலத்தில் எனது அக்காவின் மூத்த குழந்தை சசிரேகா சென்னையில் இதய அறுவை சிகிச்சை செய்து தனது ஐந்தாவது வயதில் இறந்துவிட்டது. நான் மிகவும் மன வருத்தத்தோடு இருந்ததை பார்த்த எனது மருத்துவஅதிகாரி மருத்துவர் கோபன்னா அவர்கள் அங்குள்ள பணியாளர்களை என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அங்கு சுகாதார பார்வையாளராக பணியாற்றிய திரு அண்ணாமலை தனது உறவினர் திரு தமிழ் மணி என்பவருடன் இணைந்து வம்பன் நால் ரோட்டில் ராஜா என்று ஒரு டூரிங் டாக்கீஸ் வைத்திருந்தார். திரு அண்ணாமலை அவர்களை சித்தப்பா என்று தான் அழைப்பேன். அவர் நான் கொஞ்சம் மனம் மாறுவதற்காகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் தனது டூரிங் டாக்கீஸில் பகுதி நேர வேலைக்காக என்று அழைத்துச் சென்றார். எனக்கும் பொழுதுபோன மாதிரி ஆயிற்று என்று அங்கு தினமும் மாலையில் சென்று வந்தேன்.
டிக்கெட் கொடுக்கிறதுல இருந்து, டெய்லி கலெக்சன் ரிப்போர்ட், வீக்லி ரிப்போர்ட் தயார் செய்வது போன்ற வேலைகளை செய்து கொண்டு, ஆபரேட்டருக்கு உதவி செய்யப் போனேன்.
பட கம்பெனியிலிருந்து ரீல் பெட்டிகள் வட்ட வட்ட டப்பாக்களில் சுற்றி வைக்கப்பட்டு ரீல் நம்பர் இடப்பட்டிருக்கும். பொதுவாக நகரத்தில் உள்ள தியேட்டர்களில் இரண்டு மிஷன் இருப்பதால் படத்தை இடைவேளை வரை இரு மிஷின்களிலும் மாறி மாறி படம் போடுவார்கள். டூரிங் டாக்கீஸ் படம் ஓட்டுவதற்கு ஒரு மிஷின் தான் இருக்கும்.ஒரே மிஷின் என்பதால் இடைவேளை வரை கூடிய அத்தனை ரீல்களையும் ஏற்ற முடியாது. ஆகவே இடைவேளைக்கு ஒரு இடைவேளை வரும். படம் ஓடி முடித்தவுடன் அதை ரிவர்சில் சுற்ற வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் படம் போட முடியும். அதை சுற்றுவது என்பது சற்று கடினமான நிலை கை வலிக்கும். அதேபோல மிஷினில் ரீல் ஏற்றி பல் சக்கரங்கள் இடையே கொண்டு வந்து கீழே உள்ள சக்கரத்தில் மாட்டுவார்கள். இருபக்கம் இருக்கக்கூடிய ஓட்டைகள் பல் சக்கரத்தில் சரியாக பொருந்தி இருக்குமாறு மாற்ற வேண்டும் சற்று மாறினாலும் ஃபிலிம் கிழிந்து விடும். படம் பார்த்துக் கொண்டிருக்கவில்லையே பிலிம் கிழிந்து ரசிகர்கள் விசில் அடிப்பதெல்லாம் சர்வசாதாரணம். அதே போல படம் ஓட்டுவதற்கு வெளிச்சத்திற்கு இரண்டு கார்பன் கம்பிகளை பொறுத்தி இருப்பார்கள். பாசிட்டிவ் நெகட்டிவ் என்று, அதை சரியான இடைவெளி இருக்குமாறு சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். இரண்டு கம்பிகளும் தொட்டு விடக்கூடாது. மிகவும் விலகினால் வெளிச்சம் வராது. ரசிகர்கள் விசில் அடிப்பார்கள். படம் ஓட்டுகிறவர் கவனமாக பார்த்துக் கொண்டே இருப்பார்.பெரும்பகுதி ஏ பி சென்டர்களில் பிலிம் நன்றாக ஓடி அடிபட்டிருக்கும். ஆதலால் 'சீ' சென்டரில் வரக்கூடிய படங்களில் பெரும் பகுதி, கோடு கோடாவும் புள்ளிகளும் மழைக்கோடு விழுவது போல தெரியும். அதை வைத்து ஃபிலிம் எந்த அளவுக்கு அடி வாங்கி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல பிலிம்களின் ஓரத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகள் அடி வாங்கி இருப்பதால், அடிக்கடி பிலிம் கிழிந்து ந படம் ஓட்ட கஷ்டப்படுவார்கள். ஜனங்கள் விசில் அடித்து ஊளையிடுவார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டால் தான் டூரிங் டாக்கீஸ் படம் ஓட்ட முடியும். நல்ல பிரிண்டுகளை விநியோகஸ்தர்கள் 'சி'சென்டருக்கு தரமாட்டார்கள். நான் ஜாலியாக எடுத்துக் கொண்டு, படம் ஓட்டுகிற கலையை ஓரளவு கற்றுக்கொண்டதால், சில நேரங்களில் ஆபரேட்டர் இல்லாவிட்டாலும் படத்தை ஓட்டி இருக்கிறேன்.
அதேபோல இடைவேளையின் போது ஸ்லைடு போடுவோம். கண்ணாடி தகட்டின் மீது சாக் பீஸை நன்றாக கரைத்து, தடவி, காய விட்டு விளக்கமாற்று குச்சியை கூர்மையாக சீவிக் கொண்டு அதில் எழுதி சிலைடாக பயன்படுத்துவோம்.
வணக்கம்
இடைவேளை
புகை பிடிக்காதீர்கள்
நாளை இப்படம் கடைசி
நன்றி
இதுபோன்ற செய்திகளை சிலைடாக தயாரித்து போடுவோம்.
டூரிங் டாக்கீஸ் விளம்பரங்கள் மிகவும் வேடிக்கையானது. காதல், மோதல், சண்டை, பாடல், திகில், சஸ்பென்ஸ், நிறைந்த குடும்பச்சித்திரம் என்று விளம்பரம் போடுவார்கள். சிரிப்பாக இருக்கும். ஒன்றுக்கொன்று முரணான வார்த்தைகளை போட்டு எல்லாவற்றையும் இணைத்து குடும்ப சித்திரம் என்று போடும்போது சிரிப்பு வரத்தானே செய்யும்.
அதேபோல டூரிங் டாக்கீஸ் ரசிகர்களை புரிந்து கொள்ளவே முடியாது. எப்படிப்பட்ட படம் ஓடும் என்றும் தெரியாது. நான் ஒரு பாலச்சந்தர் படத்தை மிக நன்றாக இருக்கிறது போடுவோம் என்று சொன்னேன்.
தமிழ்மணி சொன்னார் எல்லாம் ஓடாது சார் என்றார்.
சரி ஒரு மாற்றாக இருக்கட்டும் என்று இடையிலே ஒரு முறை பாலச்சந்தர் படத்தை போட்டு ஒரே நாள்தான்... காற்றாடியது.
ஒரு குப்பை கௌபாய் படம் போட்டோம். சூப்பராக நான்கு நாட்கள் கூட்டம் பிய்த்துக் கொண்டு ஓடியது.
ஆண்பாவம் படத்தில் விகே ராமசாமி சினிமாக்கொட்டகை ஆரம்பிப்பார். ஊரே அவருக்கு மாலை மரியாதை செய்து வரவேற்பு கொடுப்பார்கள்.
அவர் வேடிக்கையாக சொல்வார் "நான் பள்ளிக்கூடம் கட்டினேன், படிக்க பசங்க வரல, கோயிலை கட்டினேன், சாமி கும்பிட பெருசா யாரும் வரல, பாருங்க, சினிமாக்கொட்டகை கட்டினேன் ஒரே வந்து நிக்குது"!!
கிராமப்புறங்களில் டூரிங் டாக்கீஸ் என்பது கிட்டத்தட்ட சமுதாயக்கூடத்தை போல எல்லாரையும் இணைத்துக் கொள்ளக்கூடிய ஒரு இடமாக இருந்தது.
தூத்துக்குடியில் இருந்த ஒரு டூரிங் டாக்கீஸில் 1979 ல்பாவமன்னிப்பு படம் திரையிடப்பட்டிருந்தது. அப்படத்தில் எம் ஆர் ராதா வீடு ஒன்றிற்கு தீ வைக்கும் காட்சியின் போது டூரிங் டாக்கீஸ் திரை தீப்பிடித்து பரவி மொத்த கூரையும் தீப்பிடித்து அமுங்கியதில் நூறுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மிகப்பெரிய சோக ததில் மக்களை ஆழ்த்தியது. அந்த காலத்தில் மிகப்பெரிய பேசு பொருள் ஆனது. டூரிங் டாக்கீஸூக்காண கட்டுப்பாடுகள் அதிகமாகின. எம்ஜிஆர் வீடியோ திரையரங்குகளை கொண்டு வரப் போகிறேன் என்றார்.
டிவிகள் வந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறியது
தொலைக்காட்சிகள் வந்த பிறகு டூரிங் டாக்கீஸ் மவுஸ் கிராமங்களில் குறைய ஆரம்பித்தது. முதலில் பஞ்சாயத்து டிவிகள் இருந்தவரையாவது எல்லோரும் சேர்ந்து பார்த்தார்கள். அப்புறம் வீடு வீடுக்கு டிவி வந்த பிறகு, டிஷ் ஆண்டனா, கேபிள் என்று வந்த பிறகு அனைவரும் வீட்டுக்குள்ளே அடைந்து போயினர். கிராமங்களில் டூரிங் டாக்கீஸ் என்பதே இல்லாமல் போய்விட்டது. 60 ஆண்டுகள் மேலாக கிராம மக்களை கட்டி போட்டிருந்த டூரிங் டாக்கீஸ் கனவு போல ஆனது.....
No comments:
Post a Comment