அழகான புதுக்கோட்டை
நான் பார்த்த தமிழக நகர்களிலேயே புதுக்கோட்டை தான் மிக அழகான நகரம்.இயற்கையிலேயே எல்லோருக்கும் தாங்கள் வசிக்கும் இடம் தான் உசத்தியாக தெரியும்,என்றாலும் நான் நிறைய ஊர் சுற்றியவன்,பல இடங்களில் வசித்தவன்,என்பதால் அனுபவித்து சொல்லுகிறேன்.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை தான்.எங்களுக்கு எப்பவுமே மதுரைக்காரன் என்ற கர்வம் உண்டு,மீனாட்சியம்மன் கோவில் ,சுற்றி அழகன் சித்திரை வீதி,ஆடி வீதி,ஆவணி மூலவீதி,மாரட் வீதி,வெளிவீதி,என்று நான்கு திசைகளிலும் வீதிகள்,மஹால்,தெப்பக்குளம் என்றெல்லாம் பெருமையும் கர்வமும் உண்டு.
எனது பதினெட்டு வயது வரை புதுக்கோட்டை என்றொரு நகர் உண்டு என்று கூட தெரியாது.முதன்முதலில் வேலைக்காகத்தான் புதுக்கோட்டையில் உள்ள எனது திரு ராமநாதன் மாமா வீட்டிற்கு வந்தேன்.அவர் அப்போது கிராமசேவக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.அவரது முகவரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்காக புதுக்கோட்டை வந்தேன்.
அப்போது எனது மருந்தியல் பட்டயபடிப்பிற்கு தமிழகத்தின் எந்த மாவட்டத்துக்கு போனாலும்,உடனே வேலை கிடைத்துவிடும்,மதுரை ராமநாதபுரம் மாவட்டம் நீங்கலாக.ஏனென்றால் எங்கள் படிப்பு அப்போது மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டுமே இருந்தது.அப்படிப்பு படித்தவர்கள் பெரும்பகுதி மதுரை அதையொட்டிய மாவட்டங்களில் இருந்து மட்டுமே ... அதனால் வேலைவாய்ப்பு மதுரை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் கிடைக்க வாய்ப்பில்லை.எனவே தான் புதுக்கோட்டை வர நேர்ந்தது.
புதுக்கோட்டை நகரத்திற்கு வந்ததுமே பிரமித்து போனேன்.நான் சிறுவயதில் நிறைய கதைகள் படிப்பதுண்டு.அதிலும் சரித்திர கதைகளென்றால் அலாதி பிரியம்.அதே போல சிறுவயதில் நிறைய ராஜா ராணிகதைகளான சரித்திர படங்கள் பார்த்திருக்கிறோம்.புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் தான் அப்போது பேருந்து நிலையமே.அரசு பொது அலுவலக வளாகம்,அரசு மருத்துவமனை ,நெடுஞசாலை துறை அலுவலகம்,மாவட்ட ஆட்சியகம்,என அரசு கட்டிடங்கள்,எல்லாமே சரித்திர படங்களிலும் கதைகளிலும் கண்ட காட்சிகளைப்போலவே இருந்தது.
பழைய அரண்மனை ,கோட்டை சுவர்கள்,பெரிய ஆர்ச்,அழகான நேரானவீதிகள். கீழ ராஜவீதி,கீழ 2.கீழ3,கீழ4 என அதேபோல சுற்றியுள்ள வீதிகள் நான்கு திசைகளையும் கொண்டு அழகாக அமைந்திருந்தன,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இருபது நாட்களிலேயே வேலைகிடைத்து புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தேன்.புதுக்கோட்டை சிறிய நகரமாக இருந்தாலும் மிக அழகாக நேர்த்தியாக திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது,அனைத்து தேவைகளையும் நூறு ஆண்டுகளாகவே பூர்த்தி செய்த நகரமாக இருந்தது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து ஓராண்டு வரையிலும் புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்து புதுக்கோட்டை அதன் தலைநகராக இருந்திருக்கிறது.
புதுக்கோட்டையின் பழைய அரண்மனை ,அழகான கோட்டை சுவர்கள் ,மேலராஜவீதியில் நகர் மன்ற கட்டிடம் ,தெற்கு ராஜ வீதியில் நகராட்சி அலுவலகம் என எல்லாமே நூறாண்டுகளுக்கு மேல் தாண்டியவை.
நான் புதுக்கோட்டைக்கு வந்த காலத்தில் அதிக மக்கள் நெருக்கடியெல்லாம் கிடையாது.புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை தமிழகத்தின் இரண்டாவது பழைய மருத்துவமனை.1857ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.அருங்காட்சியகமும் மிக பழமையான ஒன்று. 1910
நான் வந்த காலத்தில் கண்ட காட்சிகளெல்லாம் மிகவும் வேடிக்கையானது.அப்போது நான் வந்த புதிதில் பிருந்தாவன் என்ற இடத்தின் பெயரை கேட்டவுடன் பார்க்கவேண்டும் என ஆசை வந்தது.அப்போது அண்ணா சில அருகில் பெரிய ஆர்ச் ஒன்று,காந்தி பார்க்,மணிக்கூண்டெல்லாம் இருந்தது.
இந்த இடங்களையெல்லாம் சுற்றிவிட்டு அருகில் இருந்தவரிடம் பிருந்தாவனம் எங்கிருக்கிறது என்று கேட்டேன்.அவர் கீழ ராஜவீதியில் கையை காட்டி வீதி கடைசியில் உள்ளது என்றார்.நானும் நடந்து சென்று வீதி முடிவில் அங்கிருந்தவரிடம் பிருந்தாவனம் எங்கிருக்கிறது என்று கேட்டேன்.இது தான் என்றார்,பூங்கா எங்கிருக்கிறது என்று கேட்டேன்.அவர் அண்ணா சிலைஅருகில் கீழ ராஜவீதியின் கடைசியில் உள்ளது என்றார்.அங்கிருந்து தான் வருகிறேன்,பிருந்தாவனம் பூங்கா எங்கிருக்கிறது என்று கேட்டேன்.அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னார்,பிருந்தாவனம் என்று பூங்காவெல்லாம் கிடையாது.ஒருகாலத்தில் இங்கு பிருந்தாவனம் என்று ஒரு ஹோட்டல் இருந்தது.இப்போது அதுவுமில்லையென்றார்.நான் மைசூரில் இருப்பது மாதிரி பெரிய பூங்கா பிருந்தாவனம் போல இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு கேட்டு பைத்தியக்காரப்பட்டம் வாங்கினேன்.கூட வேலை பார்ப்பவர்களிடம் சொல்ல ஒரே வேடிக்கையாக விட்டது.
.அதேபோல புதுக்கோட்டையில் ஏதாவது ஒரு இலக்கிய கூட்டல் என்பது அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். கம்பன் கழகம், தமிழ் சங்கம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம், இது மாதிரி ஏதாவது ஒரு அமைப்பு கூட்டங்கள் நடத்திக் கொண்டே இருப்பார்கள், டவுன்ஹால் குலபதி பாலையா பள்ளி சுப்புராமய்யர் பள்ளி போன்ற ஏதாவது ஒரு இடத்தில் கூட்டம் நடைபெறும்.
புது குளத்து கரையில் சாயங்காலம் குளத்தை சுற்றி ஆட்கள் நடைப்பயிற்சி செய்வதும், ஆங்காங்கே அமர்ந்து கொண்டு ஏதாவது பேசிக் கொண்டும் இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
45 ஆண்டுகள் கடந்து இதுவே எனது சொந்த ஊராகிவிட்டது. என்ன, ஒரு சமஸ்தானத்தின் தலைநகராக இருந்து, நீண்டகால பாராளுமன்ற தொகுதியாக இருந்தும், தற்பொழுது புதுக்கோட்டைக்கென்று ஒரு தொகுதியே இல்லாமல் போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.....
இன்று 4.3.1948புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாள்....
அருமை.... அருமை... புதுக்கோட்டை பற்றிய செய்திகளை சொல்லியவிதம் மிக அருமை.. என்னை 45 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது.. அருமை.. பசுமையான நினைவுகளை கொண்டுவந்தமைக்கு நன்றி நண்பா
ReplyDelete