சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 9 March 2025

மறக்க முடியாத தோழர்கள்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத சில தோழர்களை,ஆசான்களை எப்போதும் நினைத்துக்கொள்வேன்.அவ்வாறு மறக்க முடியாத தோழர்களில் வேலாயுதம் ஒருவர்.

நான் படிக்கின்ற காலத்தில்,இந்திய மாணவர் சங்கம்,சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயல்பட முயற்சித்துக்கொண்டிருந்தேன்.பெரிதாக செயல்பட்டேன் என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. மதுரை மஹால் அருகில் நடைபெற்றமார்க்சிஸ்ட் கட்சி நடத்திய  பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் நானும் எனது பள்ளி நண்பர்களான அப்துல் ரசாக்,தாமரை செல்வனோடு கலந்துகொண்டபோது நன்மாறன் அவர்களது பேச்சை கேட்க நேர்ந்தது.அவரது பேச்சால் கவரப்பட்ட நாங்கள் அவர் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கியபோது சந்தித்து பாராட்டினோம்.அவர் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டே இருந்தவர் எங்களை பற்றியும் எங்கள் வசிப்பிடம் பற்றியும் விசாரித்தார்.பிறகு விடைபெற்று சென்றுவிட்டோம்.இரண்டொரு நாட்கள் கழித்து இஸ்மாயில்புரத்தில் உள்ளநண்பன் ரசாக் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது,எங்களை தேடி சிலர்   வந்திருந்தனர்.  வெளியில் வந்து பார்த்தபோது எங்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.நன்மாறன்,அனந்தன் மற்றும் இருவர் வந்திருந்தனர்.அவர்கள் வந்து பல்வேறு விஷயங்கள்,நாட்டு நடப்புகள், அரசியலில் வாலிபர்களின் பங்கு ஆகியன பற்றியெல்லாம் கலந்துரையாடினர் .

 தொடர்ந்து சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப்போடு இணைந்து பணியாற்ற கேட்டுக்கொண்டனர்.அப்போது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி இந்தியா முழுமைக்கான ,ஏன் தமிழக முழுமைக்கான அமைப்போ கூட இல்லை.மதுரை முகவை மாவட்ட சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி ,கோவை நீலகிரி வாலிபர் முன்னணி என்று அங்கங்கே இருந்ததையெல்லாம் ஒருங்கிணைத்து தமிழகம் தழுவிய சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்ற அமைப்பாக மாற்றுகின்ற வேலை நடந்து கொண்டிருந்தது.நான் அனுப்பானடியில் ஒத்த கருத்துடைய இளைஞர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை உதவியோடு திரட்டுகிற முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்.நண்பர்கள் சோமசுந்தரம்,சந்திரன் ,ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன்.

உள்ளூர் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு மனு தயாரித்து கையெழுத்து இயக்கங்கள் நடத்துவது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தோம்.அப்போது மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக அரசியல் வகுப்புகள் மதுரையில் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துவந்தன. நாங்களும் அதில் அதி உற்சாகமாக கலந்து கொள்வோம் .அப்போது அறிமுகமான ஏராளமான தோழர்களில் வேலாயுதமும் ஒருவர்.

தோழர் வேலாயுதத்தை முன்பே தெரியும் என்றாலும் அறிமுகம் என்னவோ 1977க்கு பின் தான்.அவர் பார்ப்பதற்கு குட்டையாய்,குண்டாய் இருப்பார்.மூக்கு கண்ணாடி போட்டிருப்பார்.பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்க மாட்டார் .சற்று கரகரத்த குரல்.ஆனால் கணீரென்று பேசுவார்.  அவர் முனிச்சாலை ,நெல்பேட்டை சந்திப்பில் போட்டோ கண்ணாடி கடை ஒன்றை வைத்திருந்தார்.அந்த காலத்தில் போட்டோ கண்ணாடி கடைக்கென்று மவுசு உண்டு.எப்போதும் யாராவது நின்றுகொண்டிருப்பர்.அதன் விபரமெல்லாம் அப்போது தெரியாது.எனக்கு 12 வயதிருந்தபோது 1972 மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றபோது அவர் கடைக்கு வெளியே பந்தல் போட்டு மைக் செட் போட்டு பாடல்கள் ஒளிபரப்ப பட்டது எனக்கு நினைவில் உள்ளது.நாங்களெல்லாம் அந்த கடைக்கருகே நின்று ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தோம். 

அரசியல் வகுப்புகளுக்கு செல்லும்போது அனந்தன் அறிமுகம் செய்து வைத்ததாக  ஞாபகம்.சற்று நேரம் உற்று பார்த்தவர் என்னை கடைக்கு அழைத்தார்.எனக்கு அப்போது பதினாறு வயது தானிருக்கும் மிகவும் பொடியனாக இருப்பேன்.அவர் கடைக்கு போன போது அவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.என்னை பார்த்தவுடன் சிரித்தவாறு வரவேற்று அருகில் இருந்தவரிடம் தேநீர் வாங்கி வரச்சொல்லி கொடுத்தார்.பின்பு வந்தவருடன் தர்க்கத்தை ஆரம்பித்தார். பேசிக்கொண்டிருந்தவர் ஏதோ ஒரு தத்துவத்தை பற்றி தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.பிருகு இருவரும் சுமுகமாக விடை பெற்றுக்கொண்டார்.அவரை தேடி பலர் அங்கு வரக்காரணம் பல தலைப்புகளில் அவர் வல்லவராக இருந்தார்.தர்க்கவியலில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.  

அவரைப்பற்றி எவ்வளவோ கூறமுடியும் என்றாலும் அவரது சில அனுபவங்களை மட்டுமாவது கூறுவது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒருமுறை கவிதைகளைப்பற்றி பேச்சுவந்தபோது எனக்கு தமிழ் இலக்கியங்களை பற்றி ஒன்றுமே தெரியாது ,எனக்கு தமிழில் அதிக ஆர்வமில்லையென்று பட்டென்று சொல்லிவிட்டேன்.உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது,இப்படி சொல்ல உனக்கு வெட்கமாய் இல்லையா என்று கடிந்துகொண்டார்.பொதுவாக அவர் கடிந்து பேசி நான் பார்த்ததில்லை.அவரை சமாதான படுத்த நினைத்து பதில் கூற ஆரம்பித்தேன்.

மனச்சோர்வாய் இருக்கிறது என்று விளக்கம் கூற ஆரம்பித்தேன் உடனே அவர் பாரதியின் "உயிர் பெற்ற தமிழர் பாட்டில்" இருந்து வரிகளை படபடவென்று சொல்ல ஆரம்பித்தார். 

ஐந்து புலனை அடக்கி-அரசு
ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து,
நொந்து சலிக்கும் மனதை-மதி
நோக்கத்திற் செல்ல விடும்பகை கண்டோம்.

நான் பாரதியை பற்றி அவர் என்ன சாமி பாட்டு பாடியவர் தானே என்று சொன்னேன். ஆமாம் அவர் எவ்வளவோ பாடியிருக்கிறார். நாம் நல்ல விஷயங்களை முற்போக்கான விஷயங்களை தேடி தான் பார்க்க வேண்டும். பரிணாம வளர்ச்சி என்று ஒன்று இருக்கிறது அல்லவா. 

ஒரு காலத்தில் இவ்வாறு பாடிய பாரதி தான் கடைசி பாட்டில் இப்படி பாடி இருக்கிறார் என்று கூறினார். 


உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்
.

மேலும்

 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்  அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பதறிவு.

என்று படிக்கவில்லையா என்று வினவினார்.. 

நல்ல கவிதையை படிக்கும்போது எழுதியவரை மனதிற்கொண்டு படிக்காதே என்பார்.

மோசமான கவிஞன் கூட நல்ல கவிதை படைப்பான்.நல்ல கவிஞனும் மோசமான கவிதையை படைப்பான் என்பார்.

நல்ல கவிதையை ரசிக்கும் ஆசை அவரிடமிருந்து வந்ததென்றால் மிகையில்லை.சிலப்பதிகாரத்தின் சாரத்தை பட்டுக்கோட்டையார் இரத்தின சுருக்கமாக எப்படி பாடியிருக்கிறார் என்று தங்கப்பதுமை படப்பாடலை சொல்லுவார் 

மதுரைத் திருநகரமதிர

சிகரத்தோடு குரலும் உயர

மறைகற்றவர் பதறப்

பொறி சிதறிய நாவெங்கே?

மகரக் கொடியும் கொற்றவன்

மணி பொன் முடியும் கட்டொடு

மண்ணில் வீழப்பொங்கிய மனமெங்கே? 

இப்படி இலக்கியத்தை ரசிக்க சொல்லிக்கொடுத்தவர் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கியவரில்லை.அதை விட ஆச்சர்யம் அவரது தாய்மொழி மலையாளம்.இது அவரே என்னிடம் சொல்லியது.மாற்றாந்தாய் கொடுமையினால் வீட்டைவிட்டு ரயிலேறி திக்கு தெரியாமல் மதுரைக்கு வந்து சேர்ந்த பொது அவரது வயது பத்துக்கும் கீழே...மதுரை ரயில்நிலையத்தில் அவர்மேல் பரிதாபப்பட்டு அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஒரு தேநீர்கடைக்காரர்.தேநீர்கடையில் வேலை பார்த்துக்கொண்டே ,தினசரி போடும் வேலை,மிச்சநேரத்தில் எழுத்துக்கூட்டி படித்து,பின்னர் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேறியவர்,

என் வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் வித்தியாசமானவர்,அபூர்வமானவர்,மேதைத்துவம் நிறைந்தவர் ,இப்படி எவ்வளவோ சொல்லலாம்.மதுரையை விட்டு நான் புதுக்கோட்டை வாசியாகவே மாறிப்போய்,மதுரை தொடர்புகள் அற்றுப்போய்,நீண்ட காலத்திற்குப்பின் நண்பர் ஜீவானந்தத்தை சந்தித்தபோது தான் அவர் மறைந்து வெகு காலம் ஆன சேதி தெரிந்தது.... 



5 comments:

  1. மிகமிக அருமையான கட்டுரை.
    தான் கற்றதைப் பெருமையாகச் பேசாமல் கற்பித் த வரின் அருமையும் கற்பித்தலின் செழுமையும் பேசும் நேர்த்தியும் நேர்மையும் பாராட்டுக்குரியது.வாழ்த்துகள் தோழமையே. நிறைய எழுதுங்கள்.நூலாக்குவோம்.

    ReplyDelete
  2. அருமை தோழா... பள்ளி நாட்களை நன்கு நினைவில் கொண்டு வரும் உன் திறமைக்கு ஒரு ஓ போடணும். சூப்பர். அன்று கற்றவைகளை இன்றைக்கும் நினைவில் கொண்டு வந்தது அருமை... அருமை. பொதுவாக எல்லோரும் கடந்த நாட்களையும் கடந்து வந்த பாதையுயும் மறந்துவிடுவதுண்டு. மாறாக நீ இன்றைக்கும் நிவிக்கொண்டு அதை சுவையான கட்டுரையாக தரும் உன் திறமைக்கு ஒரு சொட்டு.... பாராட்டுகிறேன். இன்னும் எதிர்பார்க்கும் உன் பிரியமான தோழன் 👍👌🙂

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. சோசலிச வாதிகள் தொண்டு அளவிடமுடியாதது.

    ReplyDelete
  5. நினைவுகள் அழிவதில்லை தோழா.. அருமை

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...