சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 18 March 2025

யார் பெரிய நாத்திகர்

 உலகில் வாழும்  பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்து இருப்பார்கள். எந்த மதமும் சாராத மத நம்பிக்கை அற்ற நாத்திகர்களும் இருப்பார்கள்.

 கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள் அநேகமாக எல்லா நாடுகளிலும் வசிக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் பல நாடுகளில் வசிக்கிறார்கள். அடுத்தபடியாக இந்து மதம் இந்தியா. நேபாளம்.பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா. சிங்கப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் பிற பகுதிகளிலும் வசிக்கிறார்கள்.

அதேபோல பௌத்த மதம் பல நாடுகளிலும் பெரும்பகுதி மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல எந்த மதமும் சாராத அல்லது மதங்களை நிராகரிக்கிற நாஸ்திகர்களும் இந்த உலகில் கணிசமாக இருக்கிறார்கள்.நாத்திக மக்கள் பெரும் பகுதி வாழ்வது பொதுவுடமை நாடுகள் தான் என்றில்லை, நார்வே, சுவீடன் போன்ற ஐரோப்பியர்களால் நாடுகளும் அடக்கம். 

நாத்திகம் என்பது கடவுள் அல்லது கடவுள்கள் இருப்பதாக நம்பாத ஒரு நிலைப்பாடு, அதாவது கடவுள் பற்றிய எந்த நம்பிக்கையும் இல்லை அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்காத கொள்கை என்று கொள்ளலாம். 

இதில் சில மத நம்பிக்கை உடையவர்கள் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மற்றவர்களை நாத்திகர்கள் என்று கூறுகிறார்கள். உதாரணமாக இஸ்லாமியர்கள், இந்து மதம் மற்றும் சில மதங்களை நம்புகிறவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் காபீர்கள் என்று அழைக்கிறார்கள். ஆக அவரவர் நோக்கத்திற்கு நாத்திகத்திற்கு விளக்கம் அளிக்கிறார்கள். 

உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் பொதுவாக போதிக்கின்ற விஷயங்கள் அன்பு, கருணை, பிறர் பொருள் மீது ஆசை படாதிருத்தல் திருடாதிருத்தல் இன்னும் பிற அறம் சார்ந்த விஷயங்கள்......

 ஆனாலும் எல்லா மதங்களைச்சார்ந்த மக்களின் ஒன்றுபட்ட எண்ணம் தங்கள் மதமே ஒசத்தி தங்கள் கடவுளே உயர்ந்தவர்கள்..... 

ஒரே மதத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினர்களுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையும் இதுதான்.. இதற்காக இதுவரை உலகில் நடந்துள்ள போர்கள், மனித இழப்புகள், பொருள் இழப்புகள், சகல விதமான அக்கிரமங்களுக்கும் எல்லையே கிடையாது. ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிற மதத்தினுடைய வழிபாட்டுத் தலங்களை இடித்து நாசமாக்குதல், ஏன் அதே மதத்தைச் சார்ந்த மற்ற பிரிவினருடைய வழிபாட்டு தலங்களை இடித்து நாசமாக்குதல் என்பது வரலாற்றில் இதுவரை ஏராளமான முறை நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை உலகமெங்கும் நாத்திகர்கள் ஆத்திகர்கள் மோதலில் இந்த அளவுக்கு வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுதல், போர்கள், மனித கொலைகள், நடந்துள்ளனவா என்று பார்த்தால், நாத்திகர்கள் வேண்டுமானால் அதிகம் கொல்லப்பட்டு இருக்கலாம், ஆனால் ஆத்திகர்கள் கொல்லப்பட்டதாகவோ வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதாகவோ பெரிதாக தகவல்கள் வரலாற்றில் இல்லை..

ஒரு கன்னத்தில் அடைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லுகிற இயேசுவின் பக்தர்கள் மற்ற மதத்தினரிடமும், அவர்களுக்குள்ளே உள்ள கத்தோலிக்கர். பிராட்டஸ்டண்ட் உள்ளிட்ட பிரிவினர்களோடும் நடத்திய யுத்தங்கள்,நடத்திய கொலைகள் கொள்ளைகள் மிக அதிகம்... 

அமைதி மார்க்கம் என்று தன்னை அறிவித்துக் கொண்ட இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதத்தினரிடமும், அவர்களுக்குள்ளே உள்ள ஷியா, ஸன்னி பிரிவினர்களோடும் நடத்திய யுத்தங்கள், வழிபாட்டுத்தலங்களை இடித்தல், தாக்குதல்கள், கொள்ளைகள் மிக அதிகம்.

 அமைதியையும் சாந்தத்தையும் போதிக்க கூடிய பௌத்தம், அது மதமே அல்ல பின்னாளில் அது மதமாக மாற்றப்பட்டது. அதைச் சார்ந்த அரசுகளும், மக்களும் மதத்தின் பெயரால் நடத்திய அக்கிரமங்களைப்பற்றி நிறையவே சொல்லலாம்.

 அகம் பிரம்மாஸ்மி, அன்பே சிவம் என்றும், சகல ஜீவ ராசிகளையும் தன்னுயிர் போல் எண்ணுவதாக சொல்லிக் கொண்ட இந்துமதம் ஆதி காலத்தில் இருந்து மதத்தின் பெயரால் அது நடத்திய சண்டைகளுக்கு அளவே கிடையாது. ஆயிரக்கணக்கில் சமணர்களை கழுவில் ஏற்றியதில் இருந்து, சைவ வைணவ சண்டைகள் உள்ளுக்குள்ளே ஏராளமான ஜாதியின் பெயரால் நடத்திய தாக்குதல்களுக்கு அளவே கிடையாது.

எந்த மதம் சிறந்தது, அதனுடைய நிறைகுறைகள் என்ன என்பதை பற்றி ஆராய்ச்சியை நாம் இங்கு செய்யவில்லை. ஆனால் , அரசாங்க மதம் ஆக அறிவிக்கப்பட்டு செயல்படும் அரசுகளிலிருந்து, தனிநபர் வரை மதங்களில் சொல்லப்பட்ட கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்படுவதை நாம் காண முடிகிறது. 

"நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,மலைகளை இடம்பெயரச்செய்யும் அளவுக்குநிறைந்தநம்பிக்கை கொண்டிருப்பினும்என்னிடம் அன்பு இல்லையேல்நான் ஒன்றுமில்லை.

என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கெனஒப்புவித்தாலும்என்னிடம் அன்பு இல்லையேல்எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.

அன்பு இழிவானதைச் செய்யாது;தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.

ஆக,நம்பிக்கை, எதிர்நோக்கு,அன்பு ஆகிய மூன்றுமேநிலையாய் உள்ளன.இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

கொரிந்தியர் அதிகாரம் – 13 – திருவிவிலியம். 

என்கிறது பைபிள்.... 

"புண்ணியம் என்பது உங்கள் முகங்களை கிழக்கிலோ மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை :ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும் இறுதி தீர்ப்பு நாளின் மீதும் மலக்குகளின் மீதும் வேதத்தின் மீதும் நபிமார்கள் மீது ஈமான் கொள்ளுதல், பொருளை இறைவன் மேல் உள்ள நேசத்தின் காரணமாக பந்துகளுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள் கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்:...... 

இவையே புண்ணியமாகும்... "

திருக்குரான் - ருகூஃ 22-177.

என்கிறது இஸ்லாம்.... 

வெறுப்பை அன்பினால் வெல்க. தீமையை நன்மையால் வெல்க. கருமித்தனத்தைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினால் வெல்க. 

என்கிறது பௌத்தம்

இதுபோல அனைத்து மதங்களும் போதிக்கின்ற வேளையில், கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மட்டும் கடைப்பிடிப்பவர்கள் விட பெரிய நாத்திகர்கள் யார் இருக்கிறார்கள்?!..... 

1 comment:

  1. அருமை...மனிதநேயத்தைப் போற்றாமல் கடவுள் வழிபாட்டிலும் சடங்குகளிலுமீ மற்றவர்களோடு எப்போதும் பிணக்கிலிருப்பவர்கள் கடவுள் நம்பிக்கயாளர்களே! நல்ல தெளிவான ஆராய்ச்சிப் பூர்வமான கட்டுரை!! வாழ்த்துகள் கார்த்தி!!

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...