சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 13 March 2025

கிராமத்து திருவிழாக்கள்

 எல்லோருக்குமே அவரவர் சிறு வயதில் பார்த்த  திருவிழாக்கள் என்பது பசுமரத்தாணி போல், மனதில் ஒரு மூலையில் பதிந்து தான் இருக்கும் . அதிலும் கிராமப்புறத்தில் பிறந்தவர்கள் என்றால் நிச்சயமாக மறந்து விட முடியாது. நான் வளர்ந்தது மதுரையில் என்றாலும், பிறந்தது வெள்ளலூர் கிராமத்தில் என்பதால், எங்கள் ஊர் திருவிழாக்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் வெள்ளலூர் கிராமம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தலைநகர் போல இருந்ததால், எங்கள் பகுதியை வெள்ளலூர் நாடு என்றுதான் அழைப்பார்கள், அதில் எங்களுக்கு ஒரு பெருமை, எங்கள் ஊரில் திருவிழாக்களுக்கு பஞ்சம் இல்லை,. ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா, வல்லடிகாரன் கோவில் திருவிழா, மந்தை கோவில் திருவிழா என்று ஏகப்பட்ட திருவிழாக்கள் வருடத்தில் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கும்.

திருவிழா வந்தாலே மதுரையில் இருந்து நான் அக்கா தம்பி தங்கைகள் வெள்ளலூர் வருவோம். எங்களுக்காகவே எங்கள் ஐயா பஸ் ஸ்டாண்டுக்கு வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டு காத்திருப்பார். எங்கள் அப்பா எங்களை கிராமத்து திருவிழாவுக்கு அழைத்து சென்றதாக ஞாபகம் இல்லை. பஸ்ஸில் அனுப்பி வைப்பார்.

ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழாவில் ஏழு பெண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களை அம்மனின் அம்சமாகவே பாவித்து வணங்கி திருவிழா கொண்டாடுவர்.

 மது எடுப்பது, முளைப்பாரி மற்றும் சிலை எடுப்பு என்று பெண்கள்ஏராளமாய் பங்கேற்பார்கள். ஆண்கள் வைக்கோலை உடல் முழுவதும் பிரிசுற்றி முகத்தில் மாறுவேடம் அணிந்து கொண்டும், பூக்கடை எடுத்தல் என்றெல்லாம் ஊர்வலமாக வருவார்கள். சிலை எடுப்பு என்பதும் எனக்கு நினைவுக்கு வருவது எங்கள் சின்னையா தான். அவர் எங்களை கூலிப்பட்டி என்று ஊருக்கு நடையாகவே அழைத்துச் சென்று, மண்ணால் செய்யப்பட்ட சிலை பொம்மைகளை வாங்கி வந்து எங்கள் தெரு பெண்களுக்கு கொடுப்பார். அதை வேண்டுதலுக்காக எடுத்துச் சென்று கோயிலிலே பெண்கள் வைப்பார்கள்.

 வல்லடிக்காரர் கோயில் திருவிழா என்றால், அங்குள்ள பெரிய குதிரை சிலைக்கு மக்கள் பூ மாலைகள், பூச்சரங்கள் வாங்கி சாத்துவது ஞாபகம் இருக்கிறது, அதேபோல இரவு ஆண்கள் கோலாட்டம் ஆடி நிறைய பாடல்கள் எல்லாம் பாடுவார்கள். காலஞ்சென்ற எங்கள் திருநாவுக்கரசு மாமா அந்த பாடல்களை மிகச் சிறப்பாக பாடுவார்.

அந்தக் குதிரையைப் பற்றி நிறைய கதை கதையாக சொல்லுவார்கள். வெள்ளைக்காரன் முன்னால் அந்த குதிரை புல்கட்டை தின்றுவிட்டு கனைத்ததாகவும், அதைக் கேட்டு வெள்ளைக்காரன் அமர்ந்திருந்த குதிரை மிரண்டு போய் ஓடிச் சென்றதில் அந்த வெள்ளைக்காரன் கீழே விழுந்து இறந்து விட்டான் என்று கதை சொல்லுவார்கள்.

நானும் பள்ளிக்குச் சென்று என் சக மாணவர்களிடம் இந்த குதிரை கதையை சொல்லி பீத்தினால், அவர்கள் பங்கிற்கு அவர்களுடைய கிராமத்து கோயில் கதைகளை என்னிடம் பீத்துவார்கள்.

நான் என் அப்பத்தா ஐயாவிடம் இந்த குதிரை ஒரே ஒரு வெள்ளைக்காரனை கொன்றது போல நமக்கு கெடுதல் செய்து, ஆட்சி செய்த எல்லா வெள்ளைக்காரனையும் கொன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று கேட்டதற்கு அப்பன் புத்தி அப்படியே இருக்கிறது என்று என்னை திட்டுவார்கள். யாரைக் கேட்டாலும் அவரவர் கிராமத்து தெய்வம் தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்கிறார்கள், எல்லா கிராமத்து சாமிகளும் அவர்கள் ஊரில் இருந்த வெள்ளைக்காரர்களையெல்லாம் வேண்டாம் என்று துரத்தி இருந்தால் இந்த நாட்டிற்கு எளிதில் சுதந்திரம் கிடைத்திருக்குமே என்று எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் வரும். யாரிடமாவது கேட்டு திட்டி விடுவார்களோ என்று பயந்து யாரிடமும் கேட்பதில்லை. 

என் அப்பாவிடம் மட்டும் இந்த கேள்வி கேட்டதற்கு அவர் சொன்னார். பயப்படுபவர்களை மட்டும் தான் சாமி கொல்லும். இந்த சாமி மீது பயமோ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஒன்றும் செய்யாது. அதனால் சாமி உடைய வேலை எல்லாம் அந்த வெள்ளைக்காரனிடம் செல்லாது என்றார். 

அதுக்கு ஒரு கதையும் சொன்னார். கிராமத்தில் இருந்த காளியம்மன் கோவிலில் சன்னதிக்கு எதிராக ஒரு முஸ்லிம் கால் நீட்டி படுத்திருந்தானாம். அப்போது பூசாரியின் கனவில் காளி தோன்றி அடே பூசாரி, ஒரு துலுக்கன் நான் வருகிற பாதையில் காலை நீட்டி படுத்திருக்கிறான் மரியாதையாக அவனை எந்திரிக்க சொல் இல்லாவிட்டால் உன் கண்ணை தோண்டி விடுவேன் என்று மிரட்டியதாம். அதற்கு, நேரடியாக காலை நீட்டி படுத்திருக்கும் துலுக்கனிடம் காலை மிரட்டி இருக்க வேண்டியதுதானே என்பார் என் அப்பா... 

எங்க ஊரு மந்தை கோவில் திருவிழா என்றால் மூன்று நாட்களுக்கு கூத்து நடைபெறும். நாடகம் பார்ப்பதற்கு பாய் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விரித்து நாடகம் ஆரம்பிக்கும் வரை உட்கார்ந்து இருப்போம். ஆரம்பித்தவுடன் உறக்கம் வந்து படுத்து விடுவோம். விடியும் வரை உறங்கி விட்டு நாடகம் பார்க்காமலே வீட்டிற்கு வந்து சேர்வோம். ஒரு முறை கூட முழு நாடகம் பார்த்ததாக நினைவில் இல்லை.  வருடா வருடம் வள்ளி திருமணம் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் தான் போடுவார்கள்.

அப்பாவிடம் நீங்கள் ஏன் திருவிழாவிற்கு, கோவிலுக்கு எங்களை கூட்டி செல்வதில்லை என்று கேட்பேன்.

அவர் என்னிடம் கேட்பார் ஆஸ்பத்திரிக்கு யார் போவார்கள்.

நோயாளிகள் தான் என்பேன். அதேபோல கோவிலுக்கு யார் போவார்கள் என்று கேட்டுவிட்டு, பாவம் செய்தவர்கள் தான் போவார்கள் என்பார். நேர்மையாக, ஒழுக்கமாக வாழ்ந்தாலே போதும், கோயில் எல்லாம் போய் சாமியிடம் எதுவும் கேட்க வேண்டியதில்லை என்பார். உழைத்தால் தான் சம்பளம் கிடைக்கும். சாப்பிட முடியும். நீ படித்தால் தான், பரீட்சை எழுத முடியும், பாஸ் பண்ணிவிட்டு வேலைக்கு போக முடியும், சும்மா இருந்துவிட்டு சாமியிடம் போய் கேட்டால் சாமி கொடுத்து விடுவாரா என்ன என்பார்.

அப்பா திருவிழாவை பற்றி ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியை சொல்லி சிரிப்பார்.இன்றைக்கு சுமார் 75 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. 

 அப்பா இளமை காலத்தில் எங்கள் ஊரிலேயே சைக்கிள் கடை வைத்திருந்தார். அவரது சைக்கிள் கடை தான் அங்கு உள்ள இளைஞர்களுக்கு சங்கமமாகும் இடம். உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு வருடம் அந்த ஊர் திருவிழாவின் போது ஊர் பிரமுகர் இவர் கடைக்கு வந்தபோது இந்த வருடம் என்ன நாடகம் என்று கேட்டிருக்கிறார்கள். கிராமத்து பிரமுகர் வருடா வருடம் நாடகமாக போட்டு அலுத்து விட்டது. இந்த வருடம் வித்தியாசமாக ஒரு கச்சேரி வைக்கலாம் என்று இருக்கிறோம் என்றார். யாருடைய கச்சேரி ஆரம்பம் என்று கேட்டதற்கு அப்போதைக்கு பிரபலமாக உள்ள ஒரு பாடகருடைய சங்கீத கச்சேரி என்று சொல்லி இருக்கிறார்கள்.

அவரது சங்கீத நிகழ்ச்சிகள் பெரும்பகுதி நகரங்களில் எடுபடும் கிராமத்தில் அவரது நிகழ்ச்சி எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியாது என்று அப்பா கேட்டதற்கு நீ எப்போது பார்த்தாலும் வில்லங்கமாகவே ஏதாவது கூறு இங்கு நன்றாக ரசிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சரி, சரி எதுக்கும் ஒரு பத்து ஐம்பது பேரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காபி டீ ஏதாவது போட்டு வைத்துக் கொண்டால் தூங்காமல் அவர்களாவது இருப்பார்கள். யாருமே இல்லாம கச்சேரி நடத்தினால் நன்றாக இருக்காது என்றிருக்கிறார் அப்பா. 

அட போப்பா உன் கிண்டலுக்கு அளவே இல்லை என்று சொல்லிவிட்டு அந்த பிரமுகர் சென்று விட்டார்.

அந்த ஊரில் ஹோட்டல் நடத்துபவர் பலகாரங்கள், இட்லி, தோசை, வடைக்கென்று நிறைய மாவு எல்லாம் அரைத்து தயார் செய்து இருக்கிறார். அப்பா அவர்கள் எதுக்கு இவ்வளவு தயார் செய்கிறீர்கள் கச்சேரிக்கு நடக்கும் போது ஆளே இருக்காது, கொஞ்சம் பார்த்து தயார் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அவரும் வருடம் வரும் திருவிழாவின் போது கடை போட்டு அனுபவப்பட்டவர் தான். அந்த காலத்தில் நாடகங்களை ஊரே திரண்டு விடிய விடிய பார்ப்பார்கள். அதனால் நல்ல வியாபாரம் நடக்கும். அந்த அனுபவத்தில் அவர் அந்த வருடம் நிறைய தயார் செய்திருக்கிறார். அந்த வருடம் கச்சேரிக்கென்று நன்றாய் விளம்பரம் எல்லாம் செய்திருக்கிறார்கள். சரியான கூட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. ஊர் பிரமுகர்களுக்கு எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. கச்சேரி ஆரம்பித்தது தான் தாமதம். பாடகர் ஆ வென்று ராகம் எடுத்தவுடன், காக்காய் கூட்டத்தில் கல் எறிந்தார் போல மொத்த கூட்டமும் கலைந்து சென்று விட்டது. மேடைக்கு முன்னால் ஏற்பாடு செய்தவர்களை தவிர யாரையுமே காணோம். அவர்களும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள். மைக்செட்டுக்காரர் எடுபிடிகள் என இன்னும் சிலர். 

சாப்பாடு கடை வைத்திருந்தவர் நொந்து போனார். அடுத்த நாளைக்கு எல்லா பலகாரத்தையும் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோருக்கும் கொடுத்து அனுப்பினார். வேறென்ன செய்வது வைத்திருக்கவா முடியும்

 அடுத்த நாளைக்கு அந்த பிரமுகர் அப்பாவிடம் உனக்கு எப்படிப்பா தெரிந்தது என்று கேட்டிருக்கிறார். 

நானே மதுரைக்கு சென்ற இடத்தில் அவரது கச்சேரியை பார்த்திருக்கிறேனே என்று சொல்லியிருக்கிறார் அப்பா 

 ஊர் ரசனை, மக்கள் விருப்பம் என்று என்னவென்று தெரியாமல் நிகழ்ச்சி நடத்தினால் இப்படித்தானே இருக்கும்.... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...