சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 12 March 2025

பாசிசமா... பாயாசமா...

பாசிசமா பாயாசமா

 ஒரு மடத்தில் ஆண்டிகள் கொஞ்சம் பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உலக கவலை எதுவும் கிடையாது. ஏன் அவர்களைப் பற்றிய கவலை கூட கிடையாது. அப்படி இருக்கும்போது அந்த மடம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது மூன்று புறமும் நெருப்பு சூழ ஆரம்பித்துவிட்டது.

அப்போது ஒரு ஆண்டி மெல்லமாய் சொன்னார் திரிபுரம் தெரியுதே.... அதாவது மூன்று பக்கமும் தீப்பற்றி எரிகிறது என்றார். பக்கத்தில் இருந்த ஆண்டி சொன்னார். அட வர வர நகருவோம் என்றார்.

அதற்கு அடுத்து படுத்துக் கொண்டிருந்த ஆண்டி சொன்னார்.

இதுவும் தான் சொல்ல வாயுந்தான் நோகலையோ என்றார்.

கடைசியாக படுத்திருந்த ஆண்டி கோபமாய் கத்தினார். என்னையா சந்டைக்கடை இரைச்சலில் குடியிருந்த பாடாப்போச்சு...

இந்த கதையை கீழே உள்ள பத்தியோடு ஒப்பிட்டு பார்த்தால், நீங்கள் சுதாரிப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பாசிஸம் அதிகாரத்திற்கு வந்தபோது பெரும்பாலானோர் கொள்கைரீதியாகவும் நடைமுறையிலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இவ்வளவு தீங்கு விளைக்கும் தன்மையுடனும், இவ்வளவு பதவி மோகத்துடனும், வலுவற்றவர்களின் உரிமைகளை இவ்வளவு அலட்சியம் செய்பவனாகவும், அல்லது அனைவரும் அடங்கி நடக்க வேண்டுமென்று இவ்வளவு ஏங்குபவனாகவும் மனிதன் இருக்க முடியுமென்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. ஒரு சிலர் மட்டுமே வெடிக்கப்போகும்எரிமலையின் உறுமலை உணர்ந்திருந்தனர்.

- எரிக் ஃப்ராம் (Escape from Freedom என்கிற நூலில்)...

உண்மையில் பாசிசமா பாயாசமா என்ற தலைப்பே கேலிக்குரிய ஒன்றுதான். ஏனென்றால் பாசிசத்தின் கொடுமை என்பதை இன்னும் புரிந்து கொள்ளாத அல்லது புரிய மறுக்கின்ற மக்களாக தான் நாம் இருக்கிறோம் என்பதையே இத்தலைப்பு காட்டுகிறது.

பாசிசத்தின் அடிப்படை தெரியாத அரசியல் தற்குறிகள், அல்லது திடீர் அரசியல் தலைவர்கள், அல்லது அரசியல் பன்னாடைகள் வேண்டுமானால் அடுக்கு மொழிக்காக பாசிசத்தையும் பாயசத்தையும் ஒன்றாக இணைத்து கூறுவார்கள்.

இன்னும் சிலர் பாசிசத்தை பற்றி சில அறிவு ஜீவிகள் அதீதமாக கற்பனை செய்து கொண்டு இதைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள் என்று கூட நினைக்கக்கூடும். பாசிசம் என்பதை வெறும் அரசியல் அதிகாரத்திற்காக செய்யக்கூடிய அரசு பயங்கரவாத நடவடிக்கை என்று கூட சிலர் நினைக்கலாம்.

 உதாரணத்திற்கு இந்தியாவில் இந்திரா காந்தி 1975 இல் அவசரநிலை பிரகடனம் செய்து, அரசியல் நடவடிக்கைகளை முடக்கி, அரசியல் கட்சிகளை செயல்பட விடாமல் செய்தது, அரசியல் தலைவர்களை கைது செய்தது, சில அரசியல் படுகொலைகள் செய்தது, போலீஸ் அராஜகம், பத்திரிகை சுதந்திரத்தை பறித்தது, போன்ற விஷயங்களை இணைத்து அரை பாசிச நடவடிக்கைகள் என்று கூறுவார்கள் அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட அது நூற்றுக்கு நூறு பாசிசத்தின் முழு வடிவமாக கொள்ள முடியாது.

 பொதுவாகவே எல்லா இடங்களிலும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளை ஒரு பட்டியலிட்டு பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் அறுதியிட்டு கூறியிருப்பார்

ஒன்று: ‘ஒரு கடுமையான சமூக நெருக்கடியை நடைமுறையில் இருக்கும் சமூகப் படிநிலைக்கு அச்சுறுத்தலாகக் காண்பது.’

இரண்டு: மிகவும் பரிசுத்தமான உயர்குடி சூப்பர்மேன் பிம்பம் ஒன்றை கற்பனையில் உருவாக்கி, அதன் வழியே தேசிய எழுச்சியை வீரியமாக்குவதற்காக புராண காலத்திய தொன்மங்களை மீட்டெடுப்பது.

மூன்று: ‘தேசிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினரின் ஆதரவோடு மாபெரும் கூட்டு இயக்கம் ஒன்றை நடத்துவது.’

நான்கு: ‘மேலாதிக்கப் போக்கு கொண்ட அராஜக கட்சி ஒன்றின் எழுச்சி.’

ஐந்து: ‘நாட்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக புனைச்சுருட்டுகளைக் கட்டமைப்பது.’ இவை பெரும்பாலும் வகுப்பு, மதம், இனம் சார்ந்ததாகவே இருக்கும்.

ஆறு: ‘முதலாளி வர்க்கத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் கிளர்ச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கி நசுக்கும் அராஜக அரசாங்கம்.’

ஏழு: ‘சுதந்திரமான ஜனநாயகச் சிந்தனை வெளிப்பாடுகளுக்குத் தடை விதிப்பது.’

எட்டு: ‘எதிர்தரப்பினரைப் பொது இடங்களில் வைத்துத் தாக்குவது, ஆயுதங்களோடு வந்து மிரட்டுவது, சில நேரங்களில் கொல்வது.’

ஒன்பது: ‘ஆணாதிக்க மிரட்டல்கள், பெண்ணிய எதிர்ப்பு, ஜாதி வெறித் தாக்குதல்கள் (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவை நிறவெறித் தாக்குதல்கள்) அந்நியர் வெறுப்பு.’

பத்து: ‘மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்வதற்கு எப்போது தயாராக இருப்பதைப் போன்ற பிரமையில் இருப்பது.’

உலகத்தில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற நிலை, அரசில் நிலவும் ஊழல்கள், அரசு தேர்தல் முறைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை, போன்ற கட்டங்களில் பெரும் முதலாளிகள் தூண்டுதலினால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பிற்போக்கு சக்திகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அராஜகம் செய்கின்ற பல நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

இப்பேர்ப்பட்ட சக்திகள் அதீதமான தேசபக்தி என்ற பெயரில் தேசிய வெறியை தூண்டி, அரசு எந்திரங்களான ராணுவம், போலீஸ், நீதிமன்றங்கள், போன்ற அமைப்புகளுக்குள் ஊடுருவி அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றி, ஜனநாயகத்தையும் முற்போக்கு சக்திகளையும் அழித்தொழித்த நடவடிக்கைகள் பல உண்டு.

 உதாரணத்திற்கு ஜெர்மனியை எடுத்துக் கொள்வோம். முதலாம் உலகப்போரில் படுதோல்வி அடைந்த ஜெர்மனிய நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற சூழ்நிலைகளில் தேசிய வெறியை தூண்டிவிட்டு ஹிட்லர் நாசிசம் என்ற பெயரில் பாசிச ஆட்சியை நிறுவினார் என்பது வரலாறு.

அங்கு நாசிஸ்ட்கள் அதிகமாக பேசியது தேசிய வெறி உலகத்தை ஆளப்பிறந்த ஜெர்மனியர்களான ஆரியர்கள் உயர்ந்த இனமென்றும் அங்கிருந்த யூத மக்களுக்கு எதிராக இனவெறியை தூண்டி அதிகாரத்திற்கு வந்தார்கள்.

 அவர்கள் இனத்தின் பெயரால் யூதர்களை அழித்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக தங்களது பிரதான எதிரிகளான கம்யூனிஸ்ட்களை வேட்டையாடினார்கள். அதற்காக அவர்களே ரீஸ்டக் என்றழைக்கப்படும் ஜெர்மனி பாராளுமன்றத்தை தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்த பழியை கம்யூனிஸ்டுகள் மீது சாற்றி கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்து வேட்டையாடினார்கள்.

அங்கு நிகழ்ந்த ஒரு ஊழலுக்கு எதிரான விசாரணையை உடனடியாக நிறுத்திவிட்டு, குற்றம் செய்தவர்களை சுட்டுக்கொன்று, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதிதீவிர நேர்மை பேசிய நாசிஸ்ட்கள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிக அதிகமான ஊழல் செய்து பணத்தை சேர்த்தார்கள் என்பதும் வரலாறு.

அதே முன்னுதாரத்தினை பின்பற்றி இத்தாலியில் முசோலினி பாசிச ஆட்சியை நிறுவி அங்குள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தையும் முடக்கி சர்வாதிகார ஆட்சி நடத்தினார்.. இவர்களின் பொதுவான மூலதனம் வாய் கூசாமல் பொய் சொல்வது. பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, பொய்யை அலங்காரமாக சொல்வது, திரும்பத் திரும்ப பொய் சொல்வதன் மூலம் அதையே உண்மையென எல்லோரையும் நம்ப வைப்பது கடுமையான திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை செய்வது. இன்னும் சொல்வதனால் பைத்தியக்காரத்தனமாக கூட பேசுவார்கள், அதை பற்றி வெட்கப்பட மாட்டார்கள், ஆனாலும் இவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாளர்கள் யார் என்றால் மேல் தட்டு அறிஜீகள். இந்த அறிவு ஜீவிகள் இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்பது போல நியாயப்படுத்தி பேசுவார்கள்.

இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் அபாயம் என்ற பெயரில் சுகர்டாவும், வலதுசாரி முஸ்லிம் தீவிரவாத கும்பலும், ஆட்சியை கைப்பற்றி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர் என்பது வரலாறு. இத்தனைக்கும் உலகில் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாகவும், நிறைய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் இருந்தது. மிகப்பெரிய தொழிற்சங்க அமைப்பும், மகளிர் அமைப்புகளும், வாலிபர் சங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சியால் வழிகாட்டப்பட்டு பொதுமக்களிடையே மிகப்பெரிய சக்தியாக இருந்தது. அந்த கட்சி இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாத அளவிற்கு துடைத்தெரிந்து விட்டனர். இந்த பாசிச தாக்குதலுக்கு வலதுசாரி இஸ்லாமிய தத்துவம் மூளையில் ஏற்றப்பட்ட ராணுவமும் இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும் தான் காரணம். மனித உரிமை பேசும் எந்த சர்வதேச அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நீதிமன்றங்களும் வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிலி நாட்டில் அலண்டே என்றொரு கம்யூனிஸ்ட் தலைவர் பொதுமக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருந்தார். அவரை ஒரு சிஏஏ ஏஜெண்ட் மூலம் கொலை செய்துவிட்டு, பினோசெட் என்ற சர்வாதிகாரி ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தி, சிலி நாட்டில் ஜனநாயகமே இல்லாத அளவுக்கு அழித்துவிட்டு ஒரு பாசிச ஆட்சியை நடத்தினார், அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் துடைத்தெரியப்பட்டன.

அதைப் பற்றி சிலிநாட்டு மக்கள் கவிஞர் பாபுலோ நெருடா எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

"அடடா எங்கள் மண்ணிலே தான் எவ்வளவு ரத்தம்....

எதையெதையோ எழுதுங்கள்.

எப்படியோ எழுதுங்கள்.

இலக்கணத்தை பார்த்திருக்க இப்போது நேரமில்லை.. இருப்பதெல்லாம் ஓர் விதி தான்.

வெற்றுத்தாளெடுத்து விஷயத்தை எழுதுங்கள்..

அடடா எங்கள் மண்ணிலே தான் எவ்வளவு ரத்தம்....

இப்படி உலகில் பல நாடுகளில் பாசிசம் தலையெடுத்து வந்தவை பற்றி பார்த்தோம் இந்தியா மட்டும் விதிவிலக்காக இருந்து விடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் உடைய ஸ்தாபக தலைவர்களாக இருந்த தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர் போன்றவர்கள் மிகப்பெரிய இந்து வகுப்புவாத சனாதனவாதிகளாக இருந்தார்கள். அவருடைய லட்சியம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதை விட, இங்குள்ள வர்ணாசிர சனாதன முறை, ஜாதியை கட்டமைப்பு முறை, வலுவாக இருக்க வேண்டும் என்பதே அதிகமாக வலியுறுத்தி வந்தனர்.

உதாரணமாக மராட்டிய பகுதிகளில் பிளேக் நோய் தாண்டவம் ஆடியபோது, பிளேக் நோய்க்கு காரணமான எலிகளை கொள்ள வேண்டும் என்று அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரி கூறிய போது விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. அதை கொல்லக்கூடாது, இது எங்களுடைய மத நம்பிக்கையில் தலையிடுவதாகும் என்று கடுமையாக எதிர்த்தவர் திலகர். இன்னும் சொல்லப்போனால் விநாயகர் சதுர்த்தி போது பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்து தெருத்தெருவாக ஊர்வலம் நடத்தி இந்து மத வெறியை தூண்டியவர் அவர்தான். அதுவரை இந்தியாவில் இல்லாத விநாயகர் ஊர்வலம் என்பது அப்போதுதான் ஆரம்பித்து, இன்று இந்தியா முழுக்க தெருத்தெருவாக நடந்து கொண்டிருக்கிறது.காங்கிரஸ் கட்சியில் காந்தி, நேதாஜி, நேரு போன்ற படித்தவர்கள் வந்த பிறகு வெகுஜன இயக்கமாக காங்கிரஸ் மாற ஆரம்பித்த பின்னர், சனாதனவாதிகளின் கைப்பிடி காங்கிரஸில் குறைய ஆரம்பித்தது. கம்யூனிஸ்டுகள் நேதாஜி போன்றவர்கள் தீவிரமான மக்கள் இயக்கம் நடத்திய போது அதற்கு எதிராக பிரிட்டிஷார் ரோடு இணக்கம் காட்டியது தான் ஆர்எஸ்எஸ் இயக்கம். ஆர் எஸ் எஸ் இயக்கம் ஆரம்பிக்கும் போது தொண்டர் படை குண்டாந்தடிகள், ராணுவ பயிற்சி, கடுமையான சனாதன சித்தாந்த பயிற்சி இவற்றோடு துவங்கியது தற்செயலான நிகழ்ச்சி அல்ல.

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ராஜேந்திர பிரசாத் வல்லபாய் பட்டேல் போன்ற தீவிரமான சனாதனவாதிகள் செல்வாக்கோடு இருந்த நேரம், காங்கிரஸுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் தனது செல்வாக்கை செலுத்திக்கொண்டிருந்தது என்ற போதிலும், மகாத்மா காந்தி ஹிந்து சனாதனவாதிகளால் கொலை செய்யப்பட்டதால் மக்களிடம் இருந்து வெகுவாக சனாதனவாதிகள் தனிமைப்பட நேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சனாதன வாதிகளின் செல்வாக்கு குறைந்து, நேரு போன்ற மதசார்பற்ற தலைவர்கள் செல்வாக்கு பெற நேர்ந்தது. ஒருவேளை காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால் சனாதனவாதிகளின் கைப்பிடி எப்பொழுதோ மேலோங்கி கதை தலைகீழாக மாறி இருந்திருக்கும்.

1857 ல் சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போரின் போது, இந்துக்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஒன்று சேர்ந்து முகலாய பேரரசரை இந்தியாவின் பேரரசராக அறிவித்துக் கொண்டு ஒற்றுமையோடு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார்கள், இதில் ஏராளமான இந்து ராஜாக்கள் முஸ்லிம் சுல்தான்கள் அடக்கம், அந்த ஒற்றுமையை உடைப்பதற்காக பைராகிகள் என்று அழைக்கப்பட்ட இந்து சாமியார்கள் மூலமாக கிளப்பி விடப்பட்டது தான் பாபர் மசூதி பிரச்சனை, ராமர் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து விட்டு பாபருக்கு மசூதி கட்டினார்கள் என்று புரளியை கிளப்பி விட்டு பார்த்தார்கள், அது மக்களிடம் எடுபடவில்லை. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்த நேரத்தில் சனாதனவாதிகள் கை மேலோங்கியதால் பாபர் மசூதி பிரச்சனை மீண்டும் தலைக்கு ஆரம்பித்தது. அதுபோல இந்தியா முழுக்க இருக்கக்கூடிய பல மசூதிகள் பல வழிபாட்டுத் தலங்கள் மீது பிரச்சினை கிளப்பி விட்டு இந்து முஸ்லீம் மத பூசல்களை உருவாக்க சனாதனவாதிகளால் முடிந்தது.

1905 இல் நிர்வாக வசதிக்கு என்று கர்சன் பிரபு இந்துக்கள் மிகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளை மேற்கு வங்கம் என்றும், முஸ்லிம்கள்மிகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளை கிழக்கு வங்கம் என்று பிரித்தபோது மக்களை மத ரீதியாக பிரிக்காதீர்கள் என்று கடுமையாக மக்கள் போராட்டமாக நடத்தியதனுடைய விளைவு வங்கப் பிரிவினை கைவிடப்பட்டது. அன்றிருந்த ஒற்றுமை, சுதந்திரம் கிடைக்கக்கூடிய காலத்தில் சிதைந்து போனது என்றால் அதற்கு ஆங்கிலேயருடைய நரித்தந்திரமும் இந்து, முஸ்லிம் சனாதன மத அடிப்படைவாதிகளுடைய பேராசை தான் காரணம்.

ஆக இந்தியா மத ரீதியாக பிளவு பட்ட பின் இந்து அடிப்படை சனாதனவாதிகளான ஆர்எஸ்எஸ்னுடைய திட்டம் செயல்பட ஆரம்பித்தது. ஆர் எஸ் எஸ் என்ற பாசிஸ அமைப்பானது நேரடியாக அரசியலுக்குள் போகாமல் சித்தாந்த அமைப்பாக கடுமையாக தன்னை வளர்த்திக் கொண்டது. அதற்கு மக்களிடையே செயல்பட பல முகமூடிகளைக் கொண்ட அமைப்புகளை உருவாக்கினார்கள். அரசியல் கட்சியாக ஜன சங்கம் செயல்பட்ட போதிலும், அவர்கள் விரும்பிய அளவுக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு வளர முடியவில்லை. காங்கிரஸ் கட்சி நேருவின் தலைமையில் பலமாக இருந்ததும், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த செல்வாக்கு பெற்று இருந்த இந்து அடிப்படைவாதிகளான ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்றோர் மறைவுக்கு பின்னர் அவர்களால் அந்த அளவிற்கு ஒரு சக்தி பெற்ற ஒரு மத அடிப்படை வாத தலைவரை காங்கிரஸ் கட்சிக்குள் உருவாக்க முடியவில்லை. எனவே ராஜாஜி போன்ற மத அடிப்படைவாதிகள், வலதுசாரிகள் சுதந்திரக் கட்சி என்ற பெயரில் வெளியேறி விட்டார்கள்.

ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் தனது செல்வாக்கை ஆழமாக ஊடுருவிக் கொண்டே, பிற கட்சிகளுக்குள்ளும் ஊடுருவக் கூடிய வேலையை அவர்கள் செய்து கொண்டே இருந்தார்கள். வெளியிலே ஜனசங்கம், சுதந்திரக் கட்சி போன்ற வலதுசாரி கட்சிகள் எல்லாம் ஒரு பக்கம் ஒன்றிணைந்து தேர்தலில் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். 1975 இல் இந்திரா காந்தி இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்து சகல அரசியல் நடவடிக்கைகளையும் ஒடுக்கிய போது அரசியல் சூழல் மாறியது. எளிதில் தேர்தலில் வென்று விடலாம் என்று கருதி, அவசரநிலை பிரகடகத்தினை தளர்த்திவிட்டு இந்திரா காந்தி 77 இல் தேர்தலை சந்தித்தது, பழைய காங்கிரஸ், பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு கிடந்த சோசியலிஸ்ட் கட்சியினர், ஜன சங்கம், சுதந்திரக் கட்சி போன்றவர்கள் ஒருங்கிணைந்து ஒரே கட்சியாக ஜனதா கட்சி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது.

மக்களின் வெறுப்பை சம்பாதித்த காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, ஜனதா கட்சி எளிதில் ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் தான் ஆர்எஸ்எஸ் தனது சித்து வேலைகளை பிரமாதமாக தொடங்கியது. ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த பல மாநிலங்களில் தனது ஆர்எஸ்எஸ் ஆட்களை முதலமைச்சராகவும் அதிகாரத்திற்குள்ளும் செல்வாக்கு செலுத்தும் வேலையை செய்தது. உதாரணமாக கற்பூர தாகூர் போன்றவர்கள் தூக்கி எறியப்பட்டு பனாரஸ் தாஸ் குப்தா போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் உத்தரப்பிரதேசத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக மாறினார்கள். அப்போது இவருடைய உள்நோக்கத்தை புரிந்து கொண்ட சரண்சிங் போன்ற முன்னாள் சோசியலிஷ்கள் ஜனதா கட்சிக்குள் இரட்டை உறுப்பினர் பதவி இருக்கக் கூடாது. அதாவது ஆர் எஸ் எஸ் சிலும் உறுப்பினராக இருந்து கொண்டு ஜனதா கட்சியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற பிரச்சினையை கொண்டு வந்தார்கள். ஆர் எஸ் எஸ் காரர்கள் மிகத் தெளிவாக அதை மறுத்து நாங்கள் இரண்டிலும் இருப்போம் என்று வாஜ்பாயி அத்வானி போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நின்றார்கள். விளைவு ஜனதா கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது. இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்து, என்பதில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியை கைப்பற்றி செல்வாக்கோடு இருந்தார். ஆர் எஸ் எஸ் காரர்கள் தாங்கள் போதிய அளவு பலம் பெற்று விட்டோம் என்ற நம்பிக்கையோடு, பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியினை துவக்கினார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற பல்வேறு துணை அமைப்புகளை பெரிய அளவிற்கு விரிவுபடுத்திக் கொண்டு சென்றார்கள்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தத்துவ ரீதியாக மதசார்பற்று கொள்கையில் பெரிய அளவிற்கு நம்பிக்கை கொண்ட தலைவர்கள் காங்கிரஸில் இல்லாமல் போனதினுடைய விளைவு மீண்டும் பாபர் மசூதி பிரச்சனை பெரிதாக கிளம்பியது.

மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வந்துவிடுமோவென்ற அச்சம் தலையெடுக்கிறது. உடனே புதிய ஜாதி கட்சிகள் முளைக்கத் தொடங்குகின்றன: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள், முலாயம் யாதவின் சமாஜ்வாடி கட்சி. தெளிவாக காய் நகர்த்திய ஆர்எஸ்எஸ் அத்வானி மூலமாக பாபர் மசூதியை அகற்றிவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் இந்தியா முழுக்க ரத யாத்திரையை துவக்கி நடத்தியது. ஆர் எஸ் எஸ் திட்டம் புரியாத, அரசியல் அனுபவம் அற்ற ராஜீவ் காந்தி சீலிடப்பட்டிருந்த பாபர் மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி கொடுத்தார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் பெரிய அளவுக்கு மக்களை திரட்ட கூடிய அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லாத மிகப்பெரிய வெற்றிடம் காங்கிரசுக்கு ஏற்பட்டது. இதுவரை காங்கிரசிற்குள்ளிருந்து, சகல சுகங்களையும், அனுபவித்துக் கொண்டு செல்வாக்கு பெற்றிருந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் மெல்ல மெல்ல தங்கள் சுயரூபத்தை காட்டிக் கொண்டு வெளிவர ஆரம்பித்தார்கள்.

உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் அரசு கவிழ்க்கப்பட்டவுடன் வேக வேகமாக பறந்தோடி சென்ற மிக பழுத்த காங்கிரஸ்காரரான ஆர் வெங்கட்ராமன் பிஜேபிக்கு ஆதரவாக சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸாலேயே வளர்ந்து ஜனாதிபதி பதவி வரை உயர்ந்த பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் மாநாட்டிற்கு வேக வேகமாக ஓடினார். இதுவரை இழுபறியாகவே இருந்த பாபர் மசூதி பிரச்சனையில் ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு ரகசியமாக உதவி செய்து, அந்த மசூதியே தரைமட்டமாக்குகிற வேலையை காங்கிரஸ் பிரதமராக இருந்த பிவி. நரசிம்மராவ் செய்தார்.

நேற்று வரை காங்கிரஸ்காரர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட பலர்,இன்று பிஜேபியின் மேலிருந்து கீழ் வரை சகல பதவிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.பல மாநில கட்சிகள், தங்களை மிகப் பெரிய சோசியலிஸ்ட் களாக, முற்போக்கு வாதிகளாக, மதசார்பற்ற சக்திகளாக பீற்றிக் கொண்டிருந்த பல கட்சிகள் பிஜேபி உடன் தேர்தல் உடன் பாடு கண்டு ஆட்சி அமைப்பதில் பங்கேற்று மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி எல்லா மாநிலங்களிலும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டே இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து 100 ஆண்டுகளாக செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் துடைத்தெறியப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிபுரா வில் கம்யூனிஸ்ட் கட்சி கானாமல் போயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள் பலர் பிஜேபியில் ஐக்கியமாய் இருக்கிறார்கள் என்றால் தத்துவார்த்த பயிற்சி அந்த கட்சியினர் மத்தியில் எந்த லட்சணத்தில் இருந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க திடீர் காந்தியவாதி அன்னா ஹசாரே, கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் யோகா சாமியார்கள் மற்றும் அறிவுஜீவிகள் மக்கள் இயக்கங்கள் நடத்தி, அதற்கு மீடியாக்கள் அதிக விளம்பரம் கொடுத்து, கார்பரேட்களும் ஆதரவளத்திட அமோகமாய் பிஜேபி ஆட்சியை கைப்பற்றியது. அன்னிய நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து கறுப்புப் பணத்தையும் கைப்பற்றி ஆளுக்கு பதினைந்து லட்சம் கொடுப்போம் என்று அளந்து விட்டனர். ஆனால் பதவியை கைப்பற்றிய பின்னர் வரலாறு காணாத அளவுக்கு ஊழல் செய்து பணத்தை சேர்த்தார்கள் என்பதும் வரலாறு.

அரசாங்க எந்திரங்களான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நிதித்துறை, நீதித்துறை உள்ளிட்ட அத்தனை அரசு எந்திரங்களையும் பயன்படுத்தி அதிகபட்ச ஊழல் செய்து பணம் சம்பாதித்தது பாசிஸ்ட்களின் சாதனைதான்.

இந்த வேடிக்கையும் நாம் ஏற்கனவே ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் பார்த்தது தான்.

இதனை எதிர்த்து கட்சிகள் உறுதியாகப் போராட முடியாததற்கு காரணம், கிட்டத்தட்ட அனைவருமே ஊழலில் திளைத்திருப்பதும் அரசு எந்திரத்தின் பிடியில் சிக்குவோம் என்ற பயம் தான் காரணம்.

சில கட்சிகள் பிஜேபிக்கு எதிராக அரசியல் செய்யும் போது, அவர்கள் மீது வருமானவரித்துறை, ஊழல் தடுப்பு துறை, அமலாக்கத்துறை பாய்ந்து நடவடிக்கை எடுத்தவுடன் அவர்கள் பிஜேபி பக்கம் சாய்ந்து விடுவதும், அந்த வழக்குகள் அப்படியே நீர்த்துப்போவது அல்லது விடுவிக்கப்படுவது என்பது கிட்டத்தட்ட அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன.

ஆர் எஸ் எஸ் அகண்ட பாரதம் என்ற தனது லட்சியத்தை வலுவாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இலங்கை வரை, பாகிஸ்தானில் இருந்து பர்மா வரை எல்லா பகுதிகளையும் ஒன்றிணைத்த ஒரே இந்துராஷ்டம் அமைப்பது தனது லட்சியம் என்று தனது கொள்கையை வலுவாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் ராணுவத்திலும் போலீசிலும் அரசு நிர்வாகங்களிலும் நீதிமன்றங்களிலும் சகலவிதமான அரசு அமைப்புகளிலும் முழுமையாக ஊடுருவி தங்களது செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று ஏக லட்சியத்தின் கீழ் இந்த நாட்டை கொண்டு வர திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு மொழிகளை கொண்ட, பல்வேறு பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை என்ற வகையில் செயல்படக்கூடிய ஒரு ஒன்றிய அரசு என்பதை மறந்து ஒரே நாடு என்று தேசியவெறியை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெறிக்கு அவர்கள் எளிதாய் தூபமிட்டு கொண்டிருப்பது ஹிந்து வெறி. முஸ்லிம்கள் மொகலாயர்கள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை வந்து ஆட்சி செய்து நாசம் செய்து விட்டார்கள். இங்குள்ள சனாதான அமைப்பை சீரழித்து விட்டார்கள் என்று கடவுள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு எல்லாரிடமும் விஷ விதையை விதைத்து அறுவடை செய்யக்கூடிய அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறிய சந்தர்ப்பத்தை கூட அவர்கள் விட்டுவிடுவதில்லை.

முழுக்க இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மசூதிகளை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு அரசு நிறுவனங்கள் ஏன் நீதித்துறை கூட துணை போய்க்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது

இந்தியா முழுக்க இதுவரை மத கலவரங்களால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இடிக்கப்பட்ட கட்டிடங்களும் நாசப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கும் கணக்கு கிடையாது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுக்க நடைபெற்ற கலவரங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது ம், பாதிக்கப்பட்டுருக்கு காவல்துறையும் நீதிமன்றங்களும் பாதுகாப்பளிக்க தவறியதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தை காரணமாக கொண்டு மாநில முழுக்க இந்து மத வெறியர்கள் நடத்திய நரவேட்டை அக்கிரமங்களை நாடு அறியும். மணிப்பூர் மாநிலத்தில் அரசு நிர்வாக இயந்திரமே கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக, அங்குள்ள ஒரு பிரிவு மக்களுக்கு எதிராக நடத்திய மனிதவேட்டை, அக்கிரமங்கள் இன்று வரை ரத்த சாட்சியாகவே உள்ளன.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று சொல்லி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதும் அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் சகஜமான விஷயம் ஆனால் பார்ப்பன முதலாளிகள் பெரிய அளவில் உலக அளவில் மாட்டு கறியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வார்கள் இதுதான் இங்குள்ள முரண்.

உச்சநீதிமன்றமே தலையிட்டும் கூட புல்டேசர்களைக் கொண்டு முஸ்லிம்களுடைய வீடுகளை, ஆக்கிரமிப்புகள் என்று உபி முதல்வர் இடித்து தள்ளுவதும், நாங்களும் அதை செய்வோம் என்று மராட்டிய முதல்வர் கூறுவதும் அன்றாட நடைபெறக்கூடிய செயல்களாக மாறிவிட்டன.

ஒரு ராணுவத்தில் பணியாற்ற கூடிய ஒரு நபர் சொந்த காரணங்களினால் கொலை செய்யப்பட்டால் கூட உடனே முன்னாள் ராணுவத்தினர் ஆர் எஸ் எஸ் அல்லது பிஜேபி என்ற பெயரோடு நாங்கள் நினைத்தால் எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் குண்டு வைப்போம் என்று பகிரங்கமாக தமிழகத்தில் மிரட்டி கொண்டிருக்கிறார்கள் என்றால் அது ஒன்றும் விளையாட்டு கதை அல்ல...

மத நல்லிணக்கம், திராவிட மண் என்று பேசிக் கொண்டிருக்க கூடிய இதே தமிழகத்தில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் உள்ள உணவு வழிபாட்டு முறையை வைத்துக்கொண்டு மதுரையிலேயே பிஜேபி /ஆர் எஸ் எஸ் ஒரு கலகம் செய்ய முடிகிறது என்றால் இது எளிதில் விட்டு விட்டுப் போகிற விஷயம் இல்லை.

அவர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகத்தில் உள்ளோர் நிலை எடுப்பதும் , மதசார்பற்ற சக்திகள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதும் இங்கு நடைபெறுகிறது என்றால், தமிழக அரசு நிர்வாகத்தில் காவல்துறையில் ஆர்எஸ்எஸினுடைய பங்கு செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பூண்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஒரு மாணவி சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அதையே வைத்துக் கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்ய பிஜேபி காரர்களால் முடிகிறது என்றால் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு ஆர் எஸ் எஸ் காரன் பள்ளியில் மாணவர்களை திரட்டி வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் துறை இயக்குனர்கள் அரசு நிர்வாக உதவியோடு கேவலமாக மதப் பிரச்சாரம் செய்ய முடிகிறது என்றால் அரசு எந்திரம் மதச்சார்பற்ற தன்மையை உதிர்த்துக் கொண்டிருக்கிறது அல்லது ஆர் எஸ் எஸ் காரர்கள் நன்றாக ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இவை யாவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொள்ளுகிறது விஷயம் இல்லை. இந்தியா முழுக்க மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் கலவரங்களை நடத்தி ஒரு பாசிச ஆட்சியை நிறுவுகிற லட்சியத்தில் ஆர்எஸ்எஸ் விடாப்பிடியாக முன்னேறி வருகிறது. அவர்கள் அத்தனை துறைகளிலும் ஊடுருவி செல்வாக்கு பெற்று வருகிறார்கள் என்பதை நாம் கண்டு கொள்ளவில்லை என்றால் நம் தலையில் நாமே கொள்ளி வைத்துக் கொள்கிறோம் என்று தான் அர்த்தம்.

ஒரு ஜெர்மானிய கவிஞன் கூறினான்

 அவர்கள் என் எதிர்த்த வீட்டுக்காரனை யூதன் என்று அழைத்துச் சென்றார்கள். நான் ஏன் என்று கேட்கவில்லை ஏனென்றால் நான் யூதன் இல்லை

....

அவர்கள் என் பக்கத்து வீட்டுக்காரனை தொழிற்சங்க வாதி என்று இழுத்துச் சென்றார்கள்.

நான் ஏன் என்று கேட்கவில்லை.

ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.... அவர்கள் எதிர்த்த விட்டு காரனை கம்யூனிஸ்ட் என்று கழுத்தைப் பிடித்து கொண்டு சென்றார்கள்.

நான் ஏன் என்று கேட்கவில்லை.

ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.... ஐயகோ இன்றைக்கு என்னை பிடித்து செல்கிறார்கள். எனக்காக கேட்க யாருமே இல்லையே........ 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...