சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 7 March 2025

சர்வதேச மகளிர் தினம்

 இன்று மார்ச் எட்டாம் தேதி உலகம் எல்லாம் எங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது இந்தியாவிலும் தற்போது மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று போராடக்கூடிய பெண்ணியவாதிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல்வேறு நிறுவனங்கள் எல்லோரும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிக் கண்டிருக்கிறார்கள்.  பெண்களுக்கு சம உரிமை கொடுக்க மறுக்கும் அல்லது ஏமாற்றும் அரசியல் கட்சிகளில் இருந்து சனாதன வாதிகள் வரை இன்னொரு புறம் மகளிர் தினம் கொண்டாடி வருகிறார்கள்.

பல்வேறு நிறுவனங்கள் சிறந்த சாதனையாளர்கள் படைப்பாளிகள் என்று சிறந்த மகளிரை தேர்ந்தெடுத்து விருது கொடுத்து பாராட்டிக் கண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மகளிருக்கென சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி அரசு நிர்வாகங்களுக்கு தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

அதேபோல அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக பணியிடங்களில் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்கள். இவை யாவும் காலம் காலமாக அளிக்கப்பட்ட உரிமைகள் அல்லது திடீரென்று ஒரே நாளில் மகளிருக்கு கிடைத்துவிட்ட உரிமைகள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று கொண்டாடப்படும்
மகளிர் தினம் கடந்து வந்த பாதைகளை நாம் சிறிது பின்னோக்கி பார்த்திடல் வேண்டும். கடந்த கால வரலாற்றில் ஆட்சியில் பெண்ணுக்கு பங்கு என்பது அறவே இருந்ததில்லை. எப்பொழுதாவது அத்திபூத்தார் போல் தங்களது திறமையினால் ஆட்சி பொறுப்பை கையில் எடுத்துக் கொண்ட ரசியா பேகம், ராணி மங்கம்மாள், லட்சுமி பாய், வேலு நாச்சியார் என்று ஒன்றிரண்டு பேரை பார்த்தால் கூட அவர்களையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை அரசிலிருந்து முற்றிலுமாக நீக்கிய அவலம் தான் நிகழ்ந்திருக்கிறதுஒரு போதும் மதவாதிகளும், சனாதனவாதிகளும் அது எந்த மதமாக இருந்தாலும் சரி, எந்த இனமாக இருந்தாலும் சரி, மகளிருக்கு சம உரிமை அளித்து ஆட்சி பொறுப்பேற்க விட்டதில்லை என்பதுதான் உண்மை.


(இந்த சுவரொட்டி ஜெர்மன் அரசால் தடை செய்யப்பட்டது) 

மன்னர் ஆட்சி தொலைந்து போய், மக்களாட்சி மலர்ந்த பிறகும் கூட மகளிருக்கு ஆட்சி பொறுப்பில் பங்கு இல்லை என்பதை விட வாக்களிக்கும் உரிமை கூட இருந்ததில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தொழில் புரட்சி ஏற்பட்டு ஆலைகளிலும், சிறு தொழில் கூடங்களிலும், பெண்களும் வேலைக்கு வந்த பிறகு சம வேலைக்கு சம ஊதியம் இல்லை என்கிற நிலையில் சம ஊதியம் என்பதற்கான போராட்டங்கள் இருபதாம் நூற்றாண்டுகளில் துவங்கி இருக்கிறது.

அதேபோல பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைகளோடு பல தொழிற்சங்க இயக்கங்கள் அரசியல் இயக்கங்கள் மகளிரையும் மக்களையும் திரட்டி வீதிகளில் இறங்கிய நிகழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில் துவக்கத்தில் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நியூயார்க் நகரில் அமெரிக்க சோசலிசக் கட்சி முதன்முதலில் " மகளிர் தினம் " ஏற்பாடு செய்திருந்தது.

 1910 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச சோசலிச மகளிர் மாநாட்டில் ஜெர்மன் பிரதிநிதிகளை ஆண்டுதோறும் "ஒரு சிறப்பு மகளிர் தினம்" ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிந்தது , எனினும் எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை; அடுத்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தின் முதல் ஆர்ப்பாட்டங்களும் நினைவுகூரல்களும் நடந்தன.

1909 ஆம் ஆண்டு நவம்பரில் ரஷ்ய புரட்சி நடைபெற்று பொதுவுடமை கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மாமேதை லெனின் 1922 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சியில் பெண்களுடைய பங்கை சிறப்பிக்கும் வகையில் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தை அறிவித்தார். அதிலிருந்து பொதுவுடமைக் கட்சிகளும் சோசியலிஸ்ட் கட்சிகளும் உலகம் எங்கும் மார்ச் எட்டினை மகளிர் தினமாக கொண்டாடி வந்தனர்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் 1948 இல் ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கான வாக்குரிமையை ஏற்றுக்கொண்டு அதை பிரதிபலித்தது. பின்னரே பெண்கள் ஓரளவிற்கு உலகமெங்கும் வாக்குரிமை பெற்றனர். பின்னர் ஆட்சியிலும் பங்கேற்கும் நிலை ஏற்பட்டதென்றாலும் பெண்கள் அரசியலிலும் தேர்தலிலும் பங்கேற்க இயலாத நிலை இன்னும் உலகின் சில பகுதிகளில் இருக்கத்தான் செய்கிறது.

ஆரம்ப காலத்தில் பொதுவுடமைக் கட்சிகளும் சோசியலிஸ்ட் கட்சிகளுமே கொண்டாடி வந்த மகளிர் தினமானது 1970 களுக்கு பின்னர் பெண்ணியவாதிகளும் இதர அமைப்புகளும் சம ஊதியம், சம பொருளாதார வாய்ப்பு, சம சட்ட உரிமைகள், இனப்பெருக்க உரிமைகள் , மானிய விலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது போன்ற ,பல்வேறு கோரிக்கைகளோடு மகளிர் தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது, இது சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது . 1977 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை உறுப்பு நாடுகளை "அவர்களின் வரலாற்று மற்றும் தேசிய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, ஆண்டின் எந்த நாளையும் பெண்கள் உரிமைகள் மற்றும் சர்வதேச அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் தினமாக அறிவிக்க" அழைத்தது . பெரும்பாலான நாடுகளைப் போலவே, மார்ச் 8 ஆம் தேதி பாரம்பரியமாக பெண்கள் உரிமைகள் மற்றும் உலக அமைதிக்கான ஐ.நா.வால் சர்வதேச மகளிர் தினங்களுக்கான நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . அதன் பின்னர் இது ஐக்கிய நாடுகள் சபையாலும் உலகின் பெரும்பகுதியாலும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் உரிமைகளுக்குள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் அல்லது பிரச்சினையை மையமாகக் கொண்டது.பெரும்பாலும் மதவாதிகள், தீவிரவாதிகள் கை மேலோங்கி இருக்கக்கூடிய பகுதிகளில் பெண்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. மதவாதிகள் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு போர் பதற்றம் ஏற்படும் இடங்களில் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே.

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று இலக்கியம் சொன்னாலும் சரி, ஆதி சிவன் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்த புராண கதை ஆனாலும் சரி, இயேசுவை ஈன்றெடுத்தது புனித மேரி என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் சரி எந்த மதமும் மகளிருக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை. கோயில்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மத விழாக்களிலும், மதசடங்குகளில் அதிகம் பங்கெடுப்பது பெண்களானாலும் அவர்களுக்குரிய தலைமை பங்கு என்பது கிறித்தவம், இஸ்லாம், பௌத்தம், இந்து என எந்த மதமும் கொடுத்ததில்லை. இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி, பெண் ஜனாதிபதிகள் பிரதீபா பட்டீல், திரௌபதை முர்மு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் ஆளுநர்கள் தமிழிசை உள்ளிட்ட யாரும் உயர் பதவிகளுக்கு வந்தது மனுதர்மத்தின் அடிப்படையிலோ இந்து தர்மத்தின் அடிப்படையில் அல்ல.


உலகம் எங்கும் ஏற்பட்ட மாற்றங்கள் போராட்டங்களுடைய தொடர்ச்சியாக, வளர்ச்சியின் விளைவாக வந்தது தானே தவிர தானாக மனமுவந்து எந்த அமைப்பும் கொடுத்ததில்லை. இன்னமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் மக்கள் பிரதிநிதிகள் பின்னால் அவர்களுடைய கணவரும், குடும்பத்தாரும் நிற்கிறார்களே தவிர மகளிரை சுயமாக இயங்க பெரும் பகுதி கட்சிகள் அனுமதிப்பதில்லை.

இன்னமும் மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் தாக்குதல்கள் சம உரிமை மறுக்கப்படுதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதேபோல இந்தியாவில் அனைவருக்கும் கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக தான் இருந்தது. குறிப்பாக மகளிர், தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பதற்கு ஏராளமான தடைகள் இருந்தன. அதை உடைப்பதற்கான போராட்டத்தில் சாவித்திரிபாய் போல போன்ற பலரும் கொடுத்து விலை என்பது மிக அதிகம். கடுமையான மக்கள் இயக்கங்களுக்கு பின்னரே மகளிர் கல்வி, வேலை வாய்ப்பு என்பது ஒரளவு முன்னேற்றங்களை சந்திக்க நேர்ந்தது என்பதை மறந்து விடலாகாது.   

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, தனது தந்தை கல்லூரி முதல்வராக இருந்தும் கூட சனாதனவாதிகள் எதிர்ப்பு காரணமாக திரைக்குப்பின் அமர்ந்து கல்வி கற்று, பெண்கள் முன்னேற்றம் அடைய போராடினார்கள் என்பது வரலாறு. 


இந்தியாவிலேயே பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மகளிருக்கு சொத்துரிமை,சமத்துவம்போன்ற கோரிக்கைகளுக்கு இயக்கங்கள் நடத்தி வெற்றி கண்டதில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்தது.


தமிழகத்தில் மகளிர் முன்னேற்றத்தில் திராவிட இயக்கங்களுடைய பங்கு மகத்தானது. 1928 முதல் மகளிரை ஒன்றிணைத்து அவர்கள் முன்னேற்றத்திற்காக இயக்கங்கள் கண்டவர் தந்தை பெரியார். 

மகளிர் கல்வி கற்றால் தான் சமூகத்தில் முன்னேற முடியும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டு அவர்களை ஒருங்கிணைப்பதில் முன் முயற்சி எடுத்துக் கொண்டார். 

1929-இல் செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் விதவைகள் மறுமணம் செய்வதை ஆதரித்தும், விதவைகள் மொட்டை அடித்தல், வெள்ளை உடை அணிதல் போன்ற சமூக அவலமான பழக்க வழக்கங்களை தூக்கி எறிதல் போன்ற மிகவும் புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மதுவிலக்குப் போரில் நாகம்மையார், சமூகச் சீர்திருத்த எழுச்சிப் போரில் தம் தங்கை மகள்; இந்தி எதிர்ப்பு போரில் தர்மாம்பாள் அம்மையார் - கைம்மை கொடுமை எதிர்ப்பு போரில் மஞ்சுளாபாய், சாதி மறுப்புக் கிளர்ச்சியில் காரைக்குடி விசாலாட்சி, நீலாவதி அம்மையார், மரகதவல்லி இப்படி - எண்ணற்ற பெண் சிங்கங்கள் தங்கை கிளர்ந்தெழுந்தனர்.


இதே போல தாசி முறை ஒழிப்புக்கான இயக்கங்கள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற தலைவர்கள் திராவிட இயக்கங்களின் வழிகாட்டுதலோடு நடத்தப்பட்டு தமிழகத்தில் அடியோடு ஒழிக்கப்பட்டது. 


தமிழ்நாட்டுப் பெண்குலத் தலைவர்களான நீலாம்பிகை அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள், மலர் முத்தம்மாள், உள்ளிட் டோர் இணைந்து 13.11.1938 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்ற பெயரில் நடத்தி, அதில், தோழர் ஈ.வெ. இராமசாமி என அழைக்கப்பட்டவரை - “பெரியார்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தினர்... 


1952-54-இல் அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்பட்ட The Hindu Code Bill - இந்து பெண்களுக்கான - சொத்துரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் பிற்போக்கு வைதிக சக்திகள் வரவிடாமல் தடுத்தன. அதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கம்பீரமாக அம்பேத்கர் வெளியேறினார்.”

அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க “பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்”- 1989-இல் கலைஞர் ஆட்சியில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 


 மகளிர் கல்வி என்பதும் உடல் நல பராமரிப்பு என்பதும் இன்னமும் வடமாநிலங்களில் பின்தங்கி தான் உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன. 

 என்றைக்கு பெண்கள் நடு இரவில் யார் துணையும் இல்லாமல் கழுத்து நிறைய நகையோடு தனது வீட்டிற்கு பயணம் செய்யக்கூடிய நாள் வருகிறதோ அன்றுதான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியதாக சொல்லுவார்கள்

அந்த நன்னாளை அடைவதற்கு, மகளிரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரும், மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதுதான் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுவதாக அர்த்தம். 

அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும்: உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல் என்பதே இந்த ஆண்டுக்கான மகளிர் தின கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...