சினிமாவைப் பற்றி ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. அந்த காலத்தில் ஒரு சிறந்த இயக்குனர் இருந்தாராம். அவர் நல்ல சிந்தனையாளர். மனிதநேய மிக்கவர். மக்களுடைய பிரச்சினைகளை வைத்து மிக அற்புதமான படங்களை எல்லாம் எடுத்தாராம். அவ்வளவும் மிகச்சிறந்த கலை படைப்புகள் .ஆனால் ஒன்று கூட ஓடவில்லையாம்.அவர் மனம் வெறுத்துப் போய் ஒரு மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனை கேட்டிருக்கிறார். நான் நல்ல நல்ல படங்களை தான் எடுத்தேன். ஆனால் எதுவுமே ஓடவில்லை. என்னுடைய சிந்தனையில் தான் ஏதேனும் கோளாறு உள்ளதா என்று தெரியவில்லை என்று சொன்னாராம். அந்த மருத்துவர் அவரை நன்றாக பரிசோதித்து விட்டு உங்கள் மூளையிலே ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும். மக்களுடைய மனோநிலை புரிந்து படம் எடுக்கலாம் என்று சொன்னாராம். இவரும் சரி, என்று ஒப்புக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தார்கள். நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. குணமான பின் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அவ்வளவு படங்களும் பயங்கர ஹிட். ஹிட் என்றால் சாதாரண ஹிட் இல்லை. உலக மகா ஹிட்டு. பூராவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள். துளி கூட நேரம் கிடைக்காத அளவுக்கு பயங்கர பிஸியாக இருந்தார். அப்படி இருக்கும்போது இவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒரு நாள் பதற்றத்துடன் இவரை பார்க்க ஓடி வந்திருக்கிறார். அவர் பிஸியாக இருக்கும் போது யாரையும் அவருடைய உதவியாளர்கள் பார்க்க அனுமதிப்பது இல்லை. இருந்தாலும் வந்தவர் இவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் என்பதால், இவரை பார்க்க அனுமதித்திருக்கிறார்கள். பதற்றத்துடன் வந்து மருத்துவரை பார்த்து இயக்குனர் ஏன் இப்படி பதவி ஓடி வந்திருக்கிறீர்கள், என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். மருத்துவர் தயக்கத்தோடு உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த போது ஒரு சிறு தவறு நிகழ்ந்து விட்டது என்று வார்த்தைகளை மென்றவாறு இழுத்திருக்கிறார். இயக்குனர் மருத்துவரிடம் தயங்காமல் கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். என்ன இருந்தாலும் இவருக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவர் அல்லவா என்பதால் மென்மையாக வினவியிருக்கிறார்.மருத்துவரும் சற்று தயக்கத்தோடு உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த போது மூளையை வெளியில் எடுத்து வைத்தோம். ஆனால் உள்ளே வைத்து தைக்க மறந்து விட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு இயக்குனர் சொன்னாராம்
"பரவாயில்ல அது உள்ளே இருந்தபோது எந்த படமும் ஓடவில்லை. அதை எடுத்ததனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நான் எடுத்த எல்லா படங்களும் ஓடுகின்றன. வெற்றிப்பட இயக்குனராகி விட்டேன். அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்றாராம்.
இந்தக் கதைக்கு லாஜிக் இருக்கிறதா என்று யாரும் கேட்கக்கூடாது. ஏனென்றால் திரைப்படங்கள் பார்க்கும் போது எந்த படங்கள் ஏதாவது லாஜிக் இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறோமா என்ன?!
No comments:
Post a Comment