சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 21 August 2025

ஆயுசுக்கும் கூட வரவா....

 

ஆத்தோரம் போற புள்ள

ஆயுசுக்கும் கூட வரவா.... 


வேலையில்லா வெட்டி பசங்க

வெரட்டி வருவாங்க..


குடிக்க காசுக்காக

கொலைகூடசெய்வாங்க... 


குரங்கு புத்திகாரங்க

குலைத்திட திரிவாங்க..


சாதி வெறி கொண்டு

சழக்கர்கள் திரிவாங்க... 


அழகான பொண்ண பாத்தா

அனுபவிக்க துணிவாங்க... 


அழகான துணையாக 

ஆயுசுக்கும் கூட வரவா....


பார்த்தாலே புரியுமே...

பாசமோ, நேசமோ, 
காதலோ, எல்லாமே 
காசுக்கு பின்னாலே... 


கலையும், திறமையும், கவர்ச்சியின் முன்னே கவிழ்ந்திடும் தன்னாலே.... 
கண்ணுக் கழகாய்
கனவன் வேண்டுமென்று காத்திருந்த கன்னி
கடைசியில் போனாளே.. 

ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியென்றால்


ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியெனில்
அனுமதித்திடவாரோ எளிதில் 


அனைவரும் ஒன்றாய் அன்போடு அளவளாவி அமர்ந்திருந்த காலம் 
அன்று.... 

ஆளுக்கொரு திசையாய் அவரவர் கையில் அலைபேசியோடு அமர்ந்திருப்பது இப்போது.... 
என்னவென்று தெரியாமல் எட்டியிருந்து பார்க்கையில் ஆமாம் என்ற கருத்து 
அருகாமையில் சென்றால் அதுவே இல்லை என்றானது.... 

ஊரில் உள்ளவர் உரைப்பதை கேட்டால் 
ஊர் போய் சேர 
ஒரு நாளும் முடியாது

அவரவர்க்கு ஆயிரம் 
எண்ணம் 
அவரவர் தேவைப்படி
எட்டியிருந்து பார்ப்பவர் 
எண்ணப்படி மட்டுமே 
 எல்லாம் தெரியும்.. 
உள்ளது உள்ளபடி
உண்மையில் நடப்பது
அவரவர்க்கே தெரியும்... 
இதில் சொல்வதற்கு 
என்ன இருக்கிறது... 
அங்கம் குறைந்தாலும் 
சாதிக்க நினைப்பவருக்கு 
அது ஒன்றும் தடையில்லை. உள்ள உறுதியும் ஊக்கமும் திறமுமிருந்தால் சாதிக்க 
தடையேதும் இல்லை
ஒரே காட்சி 
சிந்தனையும் வழிகாட்டலும் அவரவர் எண்ணப்படி... 

அறிவியல் புதுமைகள் இல்லாத காலத்தில் கூட ஆனந்தமாய் இருந்தோம் அன்று.. 
அனைத்தும் கிடைத்தும் பதுமைகளானோம் இன்று...
அன்னையின் அருமை அறிந்த அளவு அப்பனின் அருமை புரிவதில்லை பலருக்கு
சொந்த நாவிருந்து இரவல் நாவினால் இன்னல் தானே வரும்... 
அவசியமான காலத்தில் கூட அமைதியாக இருப்பது சில நேரம்... 
திட்டமிடுகையில் எளிமையானதாம் வாழ்க்கை. 
செயலிலே காணுவாய்
 பெரும் சோதனையாய்.. 
இளமை இருக்கையில் பணம் நீ துரத்தி, 
பணம் சேரும்கால்
முதுமை உனைத்துரத்தும்
பெரு மழையோ புயலோ வெள்ளமோ இடையூறு ஆயிரம் தடைகள் தாண்டி வரும் உணவை நீ தள்ளாதே....
கால வெள்ளத்தில் 
காணாமல் போகும் இளமையும் செல்வமும்
இருக்கிற வரையிலே நேர்மையாய் அனுபவி... 

 

Wednesday, 20 August 2025

என்ன தேசம் இது

 என்ன தேசம் இது..... 

தண்ணீருக்கும், தங்களது உரிமைக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் அமைதியாக, சாலையோரத்திலோ, வீதியோரத்திலோ ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருந்தால், ஊர்வலம் நடத்தினால், காவல்துறையும், நீதிமன்றமும் அனுமதி மறுக்கிறது.

ஆனால் அரசியல் கட்சிகள் சாலைகளை, பேருந்து நிலையங்களை மறித்து மணிக்கணக்கில் ஊர்வலங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நடத்தினால் காவல்துறையும் கண்டு கொள்வதில்லை நீதித்துறையும் கண்டு கொள்வதில்லை. 

ஆபத்துக் காலத்தில் நோயாளிகளை காப்பாற்ற அழைக்க, மருத்துவ மனையில் அனுமதிக்க பயன்படும் ஆம்புலன்ஸ் வண்டியை கூட அனுமதிக்க மறுத்து அடாவடித்தனமாய் முன்னாள் முதல்வரே பேசுகின்றார். ஏன் என்று கேட்க நாதி இல்லை. இதையம் நியாயப்படுத்த சில அறிவாளிகள் இருக்கிறார்கள். 

பொது அமைதி, நல்லிணக்கத்தை, குறைக்கின்ற, குலைக்கின்ற, கூட்டங்கள், மாநாடுகள், போராட்ட நிகழ்வுகள், மதவாதிகளோ, சாதி அமைப்புகளோ நடத்தும் போது காவல்துறையே முன் நின்று பாதுகாப்பு தருகிறது. நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கிறது. 

மத நல்லிணக்கத்தை ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டங்களுக்கு, போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறி, தாறுமாறாக விபத்து ஏற்படுத்த முயலும் சாமியார், அதற்கு மத சாயம் பூசி கலகம் இழுத்தால் அவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்கிறது. நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அரசு அமைதி காக்கிறது...

ஒன்றுமில்லாமல் தெருவில் திரிந்த அரசியல்வாதி பதவிக்கு வந்த பிறகு, அல்லது பதவியில் இல்லாமலேயே, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து அநியாயம் செய்யும்போது, ​​அரசும், காவல் துறையும், அமலாக்கத்துறையும், நீதிமன்றங்களும், அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் எங்காவது அரசு ஊழியன் அஞ்சு பத்து லஞ்சம் வாங்கினால் அவனை கைது செய்து பிரமாதமாக ஊழலை ஒழிப்பதாக படம் காட்டுகிறார்கள். 

நீதித்துறை சீரழிந்து விட்டது, இன்னனார் ஊழல் செய்கிறார்கள் என்று பட்டியல் கொடுத்தால் முன்னாள் நீதிபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர் அடைகிறார்கள். நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் கிடைத்தால் அவரை பாதுகாப்பாக வேறொரு இடத்தில் பதவியில் அமர வைக்கிறார்கள். 

என்ன தேசம் இது... 

Tuesday, 19 August 2025

தபால் பெட்டியின் கதை...

 


2025 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றான சிவப்பு தபால் பெட்டிகள் நடைமுறையில் இருந்து அகற்றப்பட உள்ளனவாம்.

அதேபோல பதிவுத் தபாலும் இனி மேல் இருக்காதாம்... 

இத்தகவலை முகநூலில் ஒரு நண்பர் பதிவிட்டு இருந்தார். சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

 தொலைக்காட்சி தகவல் அதுபோலவே உள்ளது. ஆனால் அது தவறான தகவல் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது... மகிழ்ச்சியே.... 

சற்று பின்னோக்கி தபால்கள் வந்த கதை பற்றி நினைத்துப் பார்த்தேன்...

அந்தக்காலத்தில் தபால் பட்டுவாடா என்பது  நம் நாட்டில் பொதுவாக பெரிதாக இருந்ததில்லை. அரசு முறை செய்திகளை லிகிதங்களாக  தூதர்கள் மூலமாக அரசு அனுப்பி வைக்கும். தொலைதூரத்திற்கு புறாக்கள் மூலமாக செய்திகள் துணுக்குகளாக புறாக்களின் கால்களை கட்டி அனுப்பி வைக்கப்படும் என்று படித்திருக்கிறோம்.

இலக்கியங்களிலே அன்னம் விடு தூது, தோழிகள் மூலமாக தூது விடுதல் என்றெல்லாம் படித்திருக்கிறோம். காதலனுக்கு காதலியும், காதலிக்கு காதலனும், உருகி உருகி காதல் கடிதம் தோழிகள் மூலமாக அனுப்புதலை படித்திருக்கிறோம்.

திருமணம் போன்ற சுபச் செய்திகளையும், சாவு செய்திகளையும் ஆட்கள் மூலமாக அந்த காலத்தில் சொல்லி அனுப்புவார்கள், அல்லது நேரில் சென்று அழைப்பார்கள். ஆக சாதாரண மக்களுக்கு கடிதம் என்பது இல்லாத ஒரு விஷயம்..

அதைவிட முக்கியமான விஷயம் ராஜ்யங்கள் மிகப் பெரிதாகவோ அல்லது மிக சுருக்கமானதாகவோ இருந்தாலும், பொதுமக்களை பொருத்தமட்டில், சாதாரண தகவல் தொடர்புகள் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளே மட்டும் தான்..

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய தேவைக்காகவும், மக்கள் வசதிக்காகவும் தபால் தந்தி முறை கொண்டுவரப்பட்டது. டல்ஹௌசி பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்தியாவில் தபால் தந்தி அறிமுகப்படுத்தப்பட்டது.

தபால்களும் பணப் போக்குவரத்துகளும் தபால் தந்தி துறை மூலமாக நடைபெற்றது. அதனால் ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலைய தபால்களுக்கு பணம் கொண்டு செல்கிறது கட்டிக்கொண்டு கையில் வேல் கம்புடன், தபால் பையை சுமந்து சென்றதாக கூறுவார்கள்..



அந்தக் காலத்தில் முழு நேர தபால் நிலையங்களும் பகுதி நேர தபால் நிலையங்களும் திறக்கபட்டன. பகுதி நேர தபால் நிலையங்களில் வேறு வேலை செய்கிறவரும் தபால் நிலைய அதிகாரிகளாக பணியாற்றி இருக்கிறார்கள். எங்கள் சொந்த ஊரான வெள்ளலூரில் வீரமணி ஐயர் பள்ளி ஆசிரியராகவும், பகுதி நேர தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாகவும் பணியாற்றியதாக என் அப்பா சொல்லுவார். தபால் நிலைய அலுவலர்களும், தபால் காரரும், ஓரளவு படித்தவர்கள் என்பதால் கிராமப்புற மக்களுக்கு தபால் எழுதி தருவதும், வருகின்ற தபால் படித்து காட்டுபவராகவும், மற்ற நல்லது கெட்டது போன்ற விசயங்களுக்கு உதவி செய்யக்கூடிய, வழிகாட்டக் கூடிய ஆட்களாக இருந்திருக்கிறார்கள். 

தபால்காரர் உரிய முகவரிக்கு தபால்கள், மணி ஆர்டர் பணத்தை கொண்டு செலுத்துகின்ற பணியை செய்து வந்தார்.



தபால் நிலையங்கள் சிறுசேமிப்பு திட்டம், தபால்கள், மணி ஆர்டர், போஸ்டல் ஆர்டர், போன்ற பணபரிவர்த்தனைகளோடு, தந்தி, வானொலி பெட்டி வைத்து கொள்ள லைசென்ஸ்  அனுமதி வழங்கும் பணிகளையும் செய்து வந்தது.

மணி ஆர்டர் என்றால் வேறொன்றும் இல்லை, வேண்டியவர்களுக்கு பணத்தை தபால் நிலையத்தின் மூலமாக அனுப்பினால் உரியவருக்கு சென்று சேர்க்கப்படும். அதேபோல போஸ்டல் ஆர்டர் என்றால் அரசுப் பணிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய தபால் நிலையங்களில் பத்திரங்கள் மூலமாக செலுத்துதல் ஆகும்.

நான் படிக்கின்ற காலத்தில் அரசு கல்லூரிகளுக்கு போஸ்ட் ஆர்டர் மூலம் பணம் செலுத்தி தான் விண்ணப்பம் சமர்பித்தேன்.

அதேபோல வேலைக்கு வந்த காலத்தில் வீட்டிற்கு மணி ஆர்டர் மூலமாகத்தான் பணம் அனுப்புவது வழக்கம். அதே போல முதன்முதலாக வானொலி பெட்டி வாங்கிய போது தபால் நிலையத்தில் விண்ணப்பித்து லைசன்ஸ் பெற்றது, வருடா வருடம் பதிவு செய்தது நன்றாக நினைவில் உள்ளது. 

அதையெல்லாம் இப்போது சொன்னால் வேடிக்கையாக இருக்கும், நம்ப மாட்டார்கள். 

நவீன தகவல் தொடர்பு முறை முதலில் பலியானது தந்தி.

தொலைக்காட்சி பெட்டியில் உள்ளிட்ட பல்வேறு நவீன சாதனங்கள் வந்த பிறகு வானொலி பெட்டியே காணாமல் போனது. அதற்கு முன்னரே லைசென்ஸ் கானாமல் போனது. 

இந்தியா தாராள மயம், உலகமயமாக்கல் போன்ற கொள்கை மாற்றங்களை மேற்கொண்ட போது, சேவை துறைகள் அனைத்தும் கலைக்கப்பட்டோ, கைவிடப்பட்டோ, அல்லது நீர்த்துப் போகவோ ஆக்கப்பட்டன. 

அதன் விளைவாக கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தகவல் தொடர்பு எல்லாவற்றிலும் தனியார் மயம் ஊக்குவிக்கப்பட்டு அரசினுடைய சேவை குறைக்கப்பட்டுள்ளது  வருகின்றன.

 அரசு லாப நஷ்ட கணக்கு பார்க்கும் நிலைக்கு வந்து விட்டதால், சேவை துறைகள் செயலிலிழந்து போகின்றன. முதலில் தபால்துறையில் கூரியர் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனங்களை அனுமதித்ததின் விளைவு தபால் துறையையும் பாதித்துவிட்டது. இப்பொழுது லாப நஷ்டம் பார்த்து பதிவு தபாலை நீக்கி உள்ளார்கள். இனிவரும் காலங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படபோகின்றன தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தகவல் தொடர்பு என்பது சேவை துறை என்பதை மறந்து விடக்கூடாது. 



Monday, 18 August 2025

திகிரி

 


ஆதியில் மனிதர்களும், விலங்குகளும் தாவரங்களில் உள்ள கனி, காய்களை புசித்தும், விலங்குகளை வேட்டையாடி புசித்தும் வாழ்ந்து வந்தனர்.


 மனிதன் மட்டுமே விதைகளை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்க முடியும் என்று கண்டறிந்த போது, மற்ற ஜீவராசிகளிடமிருந்து வேறுபட்டு இயற்கையை பயன்படுத்தி வாழும் உயர்நிலைக்கு மாறினான். 


மற்ற எல்லா ஜீவராசிகளும் இயற்கையில் இருப்பதை அப்படியே பயன்படுத்தி வாழ்ந்து வந்தன. 


அடுத்தபடியாக இயற்கையின் அம்சங்களான, காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றால் வரும் நன்மைகளை தீமைகளையும் கண்டு பிரமித்தனர், அஞ்சினர். அதன் விளைவு வழிபாட்டு முறைகளாக மாறின. 


முதன்முதலாக இயற்கையில் உராய்வின் மூலமாக உண்டான தீயினை தானே சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பாகும். 


அதன் அடுத்த நிலை நெருப்பை பயன்படுத்தி உணவை சமைத்து உண்ணும் அடுத்த நிலைக்கு மனிதன் மாறினான். 


அதற்கு அடுத்தபடியாக ஆற்றங்கரை ஓரங்களில் விவசாயம் செய்து குழுக்களாக வாழ ஆரம்பித்தான். 


காணும் பொருட்களின் வடிவங்களை வித்தியாசப்படுத்தி கண்டறிய ஆரம்பித்தான். அதன் விளைவாக அவன் கண்டுபிடித்தது தான் வட்டம் என்ற வடிவம். அதன் மூலமாக உருவாக்கியது தான் சக்கரம் என்பது. அதுதான் முதன் முதலில் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் பயணப்படுவதற்குமான அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு. 


வேறொன்றும் இல்லை...... திகிரி என்ற சொல்லிலிருந்து கிளம்பியது தான் இந்த ஆராய்ச்சி. திகிரி என்ற சொல் அடிப்படையில் வட்ட உருவத்தைக் குறிக்கிறது.


திகிரி என்ற அழகான தமிழ் சொல்லிற்கு வட்டம், வட்ட வடிவம், சக்கரம், தண்டசக்கரம், ஆணை, என பல பொருட்கள் உண்டு. அவற்றைப் பற்றி கீழே காண்போம்

1. சக்கரம்

2. குயவர்கள் மண்பாண்டம் செய்யப் பயன்படும் சக்கரம்

3. சக்கராயுதம்

4. மன்னனின் ஆட்சி

5. கதிரவன்

6. தேர்

7. மூங்கில்

8. மலை


போன்ற பல பொருட்களில் இந்த சொல் பயன்பாட்டில் உள்ளது 



முத்தைத் தரு பத்தித் திருநகை  என்ற திருப்புகழில் 

"பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக"என்று அருணகிரிநாதர் பாடியிருப்பார். 


வட்ட வடிவமானவை திகிரி. இங்கு சூரியனும் திகிரிதான். அதுவும் எப்படி? பட்டப்பகல் வட்டத் திகிரி. திகிரின்னா சக்கரம். பட்டப்பகல்னா பெருவெளிச்சம். பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி என்று பொருள் படும். 


சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தில் ஒன்பது அரசர்கள் சோழன் கிள்ளி வளவனிடம் போர்புரியும் போது அவருடைய மைத்துனன் சேரன் செங்குட்டுவன் உதவிக்கு வந்து அந்த ஒன்பது அரசர்களை ஒரு பகற்பொழுதில் அழித்தார் என உரைக்கிறார் இளங்கோவடிகள்.


"ஒன்பது குடையும் ஒரு பகலொழித்தவன்

பொன்புனை திகிரி ஒருவழிப்படுத்தோய்..." 


"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கொட்டு

மேரு வலம்த்திரி தலான்." 

என சிலப்பதிகாரம் மங்கள வாழ்த்து பாடல் வரிகளை அறிவோம்.. 

வட்டவடிவினை திகிரி என பிங்கலநிகண்டுவில் பிங்கலமுனிவர் எழுதியுள்ளார். 


தண்டசக்கரம் என்பதை திகிரி என்ற சொல்லால் பின்வருமாறு காணலாம். 

" தெரித்த பன்மணி மாடமேல் திகழ்ந்தபொற் குடத்து

விரித்த தண்கதிர்க் கடவுள்நின் றசைதல்வேட் கோவர்

திரித்து விட்டசக் கரமென லாகும்அத் திகிரி

பரித்த பச்சைமண் ணென்னலாம் அதற்பயில் களங்கம்" . 76

     நிலாமணி முற்றத்தில் வைத்த பொன்னாலியன்ற குடத்தின்மேல் கலை நிரம்பிய சந்திரன் நின்றசைதல், குயவர் சுழற்றி விட்ட சக்கரத்தின் அசைவினை ஒக்கும். அச்சந்திரனிடத்துள்ள மறு அச்சக்கரத்தில் ஈரக்களிமண்ணெனல் தகும். எனவே, பொற்குடம் அச்சக்கரத்தினின்றும் அறுத்தெடுத்த குடமொக்கும் என்க  என காஞ்சிப்புராணத்தில்  திருநகரப்படலத்தில் சிவஞான முனிவர் விளக்கியுள்ளார். 


திருமாலின் சக்கராயுதத்தினை திகிரி என ராமாயணத்தில் கம்பர் கூறியுள்ளார். 

 காலநேமி மேலேவிய திகிரிபோல் (கம்பரா. சித்திர. 40).

(எ. கா.) குலால்மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல (கம்பராமாயணம்)

 ராமாயணம் என்று பல இடங்களில் "திகிரி" புழங்குகிறது.

"சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை

ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட் டயோத்தி வந்தான்" என்று கம்பனும் பாடுகிறான்.


அரசாணையினை திகிரி என மணிமேகலையில் சீத்தலைசாத்தனார் விளம்புகிறார்.. 

(எ. கா.) தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16).


தேரினை திகிரி என பின்வருமாறு " ... சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் "ஞானாமிர்தம் எனு‌ம் நூலில் வாகீச முனிவர் கூறுகிறார் . 7, 17).


வண்டியினை திகிரி என்ற சொல்லால் யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியில் சந்திரசேகரபுலவர் குறிப்பிட்டுள்ளார் .


சூரியனை திகிரி எனு‌ம் சொல்லால்  "விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி *அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது . 53)


" ... செருமிகு திகிரி வெல்போர் செல்வ - போரின்கண் மேம்பட்ட

ஆழிப்படையாலே வெல்லாநின்ற போரினையும் உடைய திருவருட்செல்வனே"

என பரிபாடல் கூறுவதை காணலாம். 

மூங்கிலினை திகிரி என பிங்கலநிகண்டிலும், மலையினை திகிரி என திவாகர நிகண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிடுவாரும் உண்டு. 


எப்படி ஆயினும் தமிழர்கள் மறந்து போன திகிரி என்ற சொல்லானது ஏராளமான அர்த்தங்களை கூறியுள்ளது. மறைந்து போன, வழக்கொழிந்து தமிழ் சொற்களை தேடி கொணர்ந்து ஆராய்ந்தால் தமிழ் மொழி மேலும் சிறக்க வாய்ப்பாக அமையும்.. 


ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...