சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 11 March 2025

கணக்கு

 கணக்கு

   மணக்கு

     பிணக்கு

       எனக்கு

        ஆமணக்கு

                          என்றாராம் பாரதி. தனது சிறுவயதில் கணக்கு பாடம் படிப்பது என்றால் வேப்பங்காய் என்று அவரே சொல்லி இருக்கிறார். ஆனால் கணக்கு இல்லை, என்றால் கவிதை இல்லை, மொழி இல்லை.. எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.. சரி நமக்கேன் இந்த மொழி ஆராய்ச்சி.

கணக்கு இல்லை என்றால் அறிவியல் இல்லை வானவியல் இல்லை, வரலாறு இல்லை, ஏன் வாழ்க்கையே இல்லை என்று சொல்லிவிடலாம். வீட்டு வரவு செலவு கணக்கு, நல்லது, கெட்டது எல்லாவற்றிற்கும் கணக்கு தேவைதான். ஏன் சோதிடம் என்ற பெயரில் அள்ளிவிடும் கற்பனை கணக்கு வரை எல்லாவற்றிலும் கணக்கு உள்ளது. அதைவிட அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அள்ளிவிடும் புள்ளிவிவர கணக்குகளும் உண்டு.

நான் அந்த ஆராய்ச்சிக்குள் போக விரும்பவில்லை. நான் பள்ளியில் படித்த காலத்தில் கணக்கு படித்த லட்சணத்தை மட்டும் தான் இங்கு எழுதுகிறேன்.

நாங்கள் படிக்கின்ற காலத்திலேயே கணக்கு என்றாலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், எண்கள், பின்னங்கள், இதைத் தாண்டி வட்டி கணக்கு, நேரம், கணக்கு போன்ற கணக்குகள் தான் பெரும் பகுதி வரும்.

நேரம், வேகம், தூரம், நெருங்கு வேகம், விலகு வேகம் என்றெல்லாம் தூரங்களையும் நேரத்தையும் வைத்து கணக்குகள் வரும்.

கழித்தல் கணக்கு வரும் போதெல்லாம், கழிக்க வேண்டிய எண் மதிப்பு குறைவென்றால் பக்கத்தில் இருக்கும் எண்ணில் இருந்து கடன் பெற்று கழிக்க சொல்லுவார்கள். ஏன் மிகுதியிலிருந்து எடுத்துக் கொள்வது என்றோ, அல்லது மிகுதி எண்ணில் இருந்து உதவி பெறுவதாகவோ ஏன் சொல்லிக் கொடுக்கக் கூடாது. கடன் பெற்று என்று தான் சொல்ல வேண்டுமா என்று நினைப்பதுண்டு. என்ன செய்வது கடன் வாங்கியே பழக்கப்பட்ட நம் மக்களுக்கு கணக்கில் கூட கடன் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

. பரப்பளவு, சுற்றளவு, அதற்கான சூத்திரங்கள் போன்றவை எல்லாம் கணக்கு பாடத்தில் இருந்தன. அவையாவது வாழ்வியலோடும் அறிவியலோடும் தொடர்புடையவை.

அதேபோல வட்டி கணக்கு வரும். அசல், தனி வட்டி, கூட்டு வட்டி போன்ற வாழ்வில் மிக முக்கியமான கணக்குகள் எல்லாம் பாடத் திட்டத்தில் இருந்தன அது ஏன் என்று புரியவில்லை. மாணவர்கள் என்ன வட்டிக்கடை நடத்த வா போகிறார்கள்?!

ஒன்பதாம் வகுப்பு வந்த பிறகுதான் அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, தேற்றங்கள் போன்றவை கணக்கு பாடத்தில் வந்தன. கணக்காசிரியர் திரு லவ மூர்த்தி அவர்கள் பித்தாகோரஸ் தேற்றம், அல்ஜிப்ரா நடத்தும் போது நன்றாக தூக்கம் வந்துவிடும். அவர் கணக்கு பாடம் நடத்துவது ராகம் பாடுவது போல இருந்தது.

 கணக்கு ஆசிரியர்கள் திரு ராமு, ஜோதி ஆகியோர் நடத்தும் போது ஓரளவு கணக்கு புரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் ஒரு கணக்கு ஆசிரியர் வந்தார். அவர் நன்றாகத்தான் கணக்கு பாடம் நடத்தினார். ஏனோ அவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை.

ஒருமுறை அவர் கரும்பலகையில் கணக்கு போட்டு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் சிறிய தவறு செய்து விட்டார். நான் சிறுபிள்ளைத்தனமாக தப்பு சார் என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் வாங்கதுரை நீங்களே போடுங்க என்றார். நானும் விளங்காமல் அவர் தவறாக போட்ட இடத்தில் அழித்துவிட்டு கணக்கை சரியாக போட்டு முடித்தேன். என் வகுப்பு தோழன் குமரேசன் கைதட்டி விட்டான். கனக்காசிரியருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.

அன்று வீட்டுப்பாடம் செய்த கணக்கு நோட்டை டேபிளில் வைத்த போது ஐயா நீங்கள் எல்லாம் பெரிய மேதை உங்களுக்கெல்லாம் பாடம் நடத்துகிற அளவுக்கு எனக்கு தெரியாது என்று சொல்லி நோட்டை திருப்பி தந்து விட்டார். அந்த கல்வியாண்டு முடியும் வரை என்னுடைய நோட்டு எதையுமே அவர் திருத்தவில்லை. அப்படியே திருப்பி தந்து விடுவார் அப்படி ஒரு உயர்ந்த குணம் அவருக்கு இருந்தது.

 நான் செய்தது சிறுபிள்ளைத்தனமாக இருந்திருக்கலாம். அவர் என்னை தனியே கூப்பிட்டு கண்டித்திருக்கலாம். கடைசி வரை, அதுவும் பள்ளி இறுதியாண்டில் கடைசி நாள் வரை அவர் வன்மமாக நடந்து கொண்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இத்தனைக்கும் பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் நான் கணக்கில் தான் அதிக மதிப்பெண் பெற்று இருந்தேன். என் வாழ்விலேயே அப்படி ஒரு ஆசிரியரை நான் சந்தித்ததே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு நல்ல ஆசிரியர் தான். அது என்னமோ எனக்குத்தான் மோசமான அனுபவமாக அமைந்தது. அதன் பிறகு நான் மருந்தியல் பட்டயப்படிப்பு படிக்கச் சென்றதால் அதன் பின்னர் எனக்கு கணக்கு பாடமாக அமையவில்லை....

தற்போதைய மாணவர்களுக்கு வரக்கூடிய கணக்கு இயற்கணிதம், வடிவியல், நிகழ் தகவு, கால்குலஸ் உள்ளிட்ட பாடங்கள் மிக நவீனமானவை. இந்த அளவுக்கு நாங்கள் படித்த காலத்தில் கணக்கு பாடத்திட்டத்தில் இல்லை. இப்போது சிறுவகுப்பில் வரக்கூடிய கணக்குகளை பார்த்தாலே தலை சுற்றுகின்றன. நல்லவேளை நான் தப்பித்துக் கொண்டேன். 




வேற என்ன சொல்வது.... 

1 comment:

  1. ருசிகரமான வாழ்க்கை நகர்வுகள்..தொடர்ந்து பல பல தருக

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...