சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 31 March 2025

உலக முட்டாள்கள் தினம


 

 உலகத்தில் பல்வேறு தினங்கள் அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனேகமாக எல்லா தினங்களிலும் யாருக்காக கொண்டாடப்படுகிறது, அவர்கள் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களும் சந்தோஷமாக எடுத்துக் கொள்வார்கள்

சர்வதேச மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம், சகோதரிகள் தினம், தந்தையர் தினம், அறிவியல் தினம் இவ்வாறு எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம், கொண்டாடப்படுபவர்களுக்கு தெரியாமல் கூட கொண்டாடும் தினங்கள் கூட உண்டு. உதாரணமாக குருவிகள் தினம், சர்வதேச பறவைகள் தினம், தண்ணீர் தினம், விலங்குகள் தினம் இவ்வாறு எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.அதுகளுக்கு தெரியவாபோகிறது.. 

 ஆனால் முட்டாள்கள் தினம் என்பது மட்டும் வித்தியாசமானது கொண்டாடப்படுபவர்கள், நிச்சயமாக சந்தோஷப்பட மாட்டார்கள். கொண்டாடுபவர்கள் தான் அடுத்தவர்களை முட்டாளாக்கி நகைச்சுவையாக கொண்டாடுவார்கள். தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்ந்து கொண்டாடுகிற தினம். ஏன் சில சமயங்களில் எல்லோருமே நகைச்சுவைக்காக கூட சந்தோசமாக கொண்டாடலாம். ஆனால் இதனுடைய வரலாறு என்ன என்பது நமக்கு தெரியாது. எப்பொழுதுமே நாம் அதை பற்றி தான் கவலைப்படுவதில்லையே....

சிறுவயதில் படிக்கின்ற காலத்திலேயே" ஏப்ரல் ஃபூல்" என்றாலே ஒரு பக்கம் ஜாலியாக இருக்கும். ஒரு பக்கம் பயமாக இருக்கும். பையன்கள் எல்லாம் பேனாவில் இருக்கும் மையை அடுத்தவர்கள் சட்டையில் அடித்து விளையாடுவார்கள். இன்னும் சில அதிவாணரங்கள் வேலை மெனக்கெட்டு வாழைப்பட்டை சாறு எடுத்து பேனாவில் ஊற்றி வந்து சட்டைகள் அடித்து விடுவார்கள். கறை போகவே போகாது. வீட்டிற்கு வந்தால் சட்டை பூராவும் மை கறையோடு வரும்போது அம்மாவிடம் திட்டு கிடைக்கும சமயத்தில் அடி கூட கிடைக்கும்.  சில நேரங்களில் நம்ப முடியாத ஏதாவது ஒரு புரளியை கிளப்பி விட்டு, மற்றவர்களை ஏமாற்றி விளையாடுவோம். 

ஒரு முறை எங்கள் தமிழ் ஐயா ஏப்ரல் ஃபூல் தினத்தன்று மிகவும் சோகமாக வந்தார். நான் இந்த பள்ளியை விட்டு மாற்றிப் போகிறேன் என்று சோகமாக சொன்னார். சில மாணவர்கள், அய்யய்யோ என்ன ஐயா அப்படி சொல்றீங்க என்று சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்களை ஏப்ரல் ஃபூல் செய்வதற்காக தான் சொன்னேன், அப்படியெல்லாம் மாற்றிப் போகவில்லை என்றார். கடைசி வரிசையில் இருந்த ஒரு மாணவன் மெல்லமான குரலில் சொன்னான். ஐயையோ தொலைந்து போயிட்டாருன்னு நினைச்சா இன்னும் ஒரு வருஷத்துக்கு அறுப்பார் போல இருக்கே என்றானே பார்க்கலாம். 

இந்த ஏப்ரல் பூல் எனப்படும் முட்டாள்கள் தினம் பற்றி பலவியாக்யானங்கள் செய்யப்பட்டாலும், ஏப்ரல் முட்டாள்கள் தினத்தின் சரியான தோற்றம் சரியாகத் தெரியவில்லை.

1508 ஆம் ஆண்டில், பிரெஞ்சு கவிஞர் எலோய் டி'அமெர்வால் ஒரு பாய்சன் டி'அவ்ரிலை (ஏப்ரல் முட்டாள், அதாவது "ஏப்ரல் மீன்") குறிப்பிட்டார் , இது பிரான்சில் கொண்டாட்டத்திற்கான முதல் குறிப்பாக இருக்கலாம். சில வரலாற்றாசிரியர்கள் ஏப்ரல் முட்டாள்கள் 'மத்தியக்காலத்தில், பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களில் மார்ச் 25 அன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டதால் தோன்றியதாகக் கூறுகின்றனர், பிரான்சின் சில பகுதிகளில், குறிப்பாக, ஏப்ரல் 1 அன்று முடிவடைந்த விடுமுறையுடன், ஜனவரி 1 அன்று புத்தாண்டு தினத்தைக் கொண்டாடியவர்கள் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் மற்ற தேதிகளில் கொண்டாடுபவர்களை கேலி செய்தனர் என்று சொல்லுகிறார்கள்.

இது மாதிரியான விளக்கங்கள் பல நாடுகளில் பலவிதம் சொல்லப்படுகிறது. அதற்குள் நாம்போய் ஆராய்ச்சி செய்தால், தலையே வெடித்து விடும்.

சரி நாம் தான் வரலாற்று பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார்ப்போமே என்று சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு காலத்தில் உலகம் முழுக்க ராஜாக்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். ராஜாக்கள் என்றால் ஜனங்கள் யாரும் அவர்களை ராஜாவாக தேர்ந்தெடுத்ததில்லை. அவர்களே தங்கள் ஆயுத பலத்தால் பல்வேறு பகுதிகளை, பிடித்துக் கொண்டு ஆட்சி செய்வார்கள். பல குட்டி ராஜியங்களை எல்லாம் வெற்றி கொண்டவர் மகாராஜா என்று அழைக்கப்படுவார். சாம்ராஜ்யங்கள் அமைத்துக் கொள்வார்கள்.

எதுவுமே நிரந்தரமாக இருந்ததில்லை. இந்த ராஜாவை விட, அல்லது பேரரசரை விட இன்னும் வலிமையானவர் வந்துவிட்டால் அவர் வெற்றி கொள்வார். இவர் காணாமல் போவார். அவ்வளவுதான்.

அவர்கள் வாயில் வந்ததெல்லாம் சட்டம். நினைத்தபோதெல்லாம் வரிபோட்டு ஜனங்களிடம் பிடுங்கிக் கொள்வார்கள். அவர்கள் சொல்வதுதான் நீதி. இவர்களுக்கு உதவி செய்ய மந்திரிமார், ராஜ குருக்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகளாக இருப்பார்கள். நல்லவர்களாக இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் ராஜா ஆட்சி நடத்துவதற்கு உதவி செய்வார்கள். நீதி, சட்டங்கள், நீதி திரட்டல் போன்றவற்றிற்கு உதவி செய்வார்கள். நிறைய அடியாள் படை வைத்திருப்பவர் ராஜாவுக்கு கீழ் இருப்பார் அவர் தளபதி என்று சொல்வார்கள். இவ்வளவு தான் அரசாங்கம் நடத்திய லட்சணம் எல்லாம்.....உலகில் தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு, ஏராளமான தொழிற்சாலைகளும் முதலாளிகளும் உருவாகின. அதுவரை ஆட்சியில் இருந்த மன்னர்களும் மந்திரிகளும் ராஜகுருமாருமே எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக உருவான முதலாளிமாருக்கு அவருடைய வளர்ச்சிக்கு அரசியல் அதிகாரம் தேவைப்பட்டது. அதற்கு இடையூறாக மன்னராட்சி இருந்ததால் பெரும் பகுதி மக்கள் பங்கேற்க கூடிய மக்களாட்சி முறையை ஆதரித்து செயல்பட ஆரம்பித்தனர்.

 சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் கோஷமிட ஆரம்பித்தனர். மன்னர்களும், தளபதிகளும், ராஜகுருமார்களும், செய்த அக்கிரமங்கள் தாங்க மாட்டாமல் பொதுமக்கள் அவர்கள் பின்னால் திரண்டனர். அதன் விளைவாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக ஆட்சி முறை வந்தது.

மன்னர் ஆட்சி காலத்தில் இஷ்டப்பட்ட போதெல்லாம் வரி வசூலிக்கப்பட்டது. வரவு செலவுக்கென்று பெரிய திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. மக்களாட்சி அமைந்த பிறகு எழுதப்பட்ட சட்டங்களும், திட்டமிட்ட வரவு செலவு கணக்குகளும் உருவாகின.

 என்ன இருந்தாலும் நிர்வாக அமைப்பு என்பது, காலம் காலமாக மக்களை சுரண்டுகிற அமைப்பு தானே. மக்களாட்சி வந்துவிட்டால் மட்டுமே மாறிவிடவா போகிறது. மன்னர்கள் பிரபுக்கள் இருந்த இடத்தில், பெரிய முதலாளிகள் தங்கள் விருப்பப்படி, மக்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை உருவாக்கினர். அரசின் வரவு செலவு கணக்கு பட்ஜெட் மூலமாக நிறைவேற்றப்பட்டது. நிதியாண்டு என்பதை ஏப்ரல் ஒன்றிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை என்று நிர்ணயம் செய்தார்கள். நிம்மி மாதிரி நிதி அமைச்சர் ஆரம்பத்தில் வந்தாரோ என்னவோ தெரியவில்லை. பட்ஜெட் என்பதே மக்களை முட்டாளாக்குகிற வேலை தானே, எனவே ஏப்ரல் ஒன்றையே முட்டாள் தினமாக வைத்தால் என்ன என்று தீர்மானித்து விட்டனர். அதிலிருந்து ஏப்ரல் ஒன்று உலக முட்டாள்கள் தினமாக மாறியது.

உலக முட்டாள்கள் தினம் என்பது பற்றி வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி செய்ததில் எனக்கு தோன்றியது இவ்வளவுதான். யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள். 


1 comment:

  1. நாங்கள் படிக்கும்போது (தஞ்சை) உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் AF என்று செதுக்கி மையை ஒத்தி அதை மற்றவர்கள் சட்டையில் அடிப்பார்கள்.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...