அழியட்டும் ஜாதீய வன்மம்
முன்பெல்லாம் யாரவது குற்றம் செய்துவிட்டு சிறை சென்று வந்தால் யாரையும் சந்திக்க வெட்கப்பட்டு வெளியில் தலைகாட்ட மாட்டார்கள்.நெருங்கிய உறவினர்கள் கூட சற்று ஒதுங்கியே செல்வார்கள்.
ஆனால் இப்பொழுதோ ஜாதிய வன்மத்தோடும் செறுக்கோடும் ஆணவ கொலை செய்துவிட்டு வெட்கம் கூச்சமே இல்லாமல்,பரோலில் வரும்போது கூட ஆரவாரமாக வருகிறார்கள்.அவர்களையும் பெரும் கூட்டம் அமர்க்களமாய் வரவேற்கிறது என்றால்,நவீன ,நாகரீகமான காலத்தில் வாழ்வதாக சொல்லும் தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
சனாதனம் தலையெடுத்த பின்னர் பலநூறு ஆண்டுகளாய் ஆட்டிப்படைத்த சாதீய பேய் மீண்டும் தமிழ் மண்ணில் ஆட்டம் ஆட துவங்கியிருக்கிறது. சாதீயம் என்பது ஏதோ குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் பிடித்திருக்கிறது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்.அது கொடூரமாய்,மேலிருந்து கீழாய் பிரமீடைப்போல அஸ்திவாரமிட்டு உள்ளது.ஒவ்வொரு மனிதனின் டி என் ஏ விலும் மிக ஆழமாய் பதிந்திருக்கிறது என்பது தான் உண்மை,ஒவ்வொரு சாதியும் தனது சாதி தான் உசத்தி என்ற வெறியும், தனக்கு மேலே சாதிகள் இருந்தாலும் தன் சாதிக்கு கீழும் சாதிகள் உள்ளன ,அவர்களுக்கு நாம் மேல்.. ,அவர்கள் தமக்கு அடங்கி இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மிக மிக அதிகமாய் உள்ளது.
நம்பூதிரிக்கு மற்ற பிராமணர்களும் தமக்கு கீழ் ,அய்யருக்கு அய்யங்கார் பெரியவரா..சின்னவரா...,அய்யங்காரில் வடகலை பெரிதா தென்கலை பெரிதா குருக்கள் இவர்களுக்குள் எந்த நிலை ...இப்படி ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் முடிவில்லாத அளவிற்கு போய்க்கொண்டே இருக்கும்.ஆனாய் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமை எல்லா பிற சாதியினரும் இவருக்கு கீழ்...
அப்புறம் நம் ஆண்ட பரம்பரையினர்....முக்குலத்தோரில் யார் பெரியவர்.....தேவரா சேர்வையா,கள்ளரா அப்புறம் அதற்குள்ளே இருக்கிற பிரிவினரா... இப்படி ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் முடிவில்லாத அளவிற்கு போய்க்கொண்டே இருக்கும்.ஆனாய் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமை எல்லா பிற சாதியினரும் இவருக்கு கீழ்...
அப்புறம் யார் பெரிய சாதி முதலியாரா.. பிள்ளைமாரா.. வன்னியர்.. கவுண்டரா..கோனாரா ..உடையாரா..நாயுடுவா.. செட்டியார்... முத்தரையரா...நாடாரா.... இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் இன்னும் சாதிகளுக்கும் பஞ்சம் இருக்காது... அவர்களுக்குள் இருக்கும் உட்பிரிவுகளும் பஞ்சமிருக்காது....பெருமை பீத்தல்களுக்கும் பஞ்சமிருக்காது...
எல்லோருக்கும் பொதுவான ஒரே குரல்... நாங்க ஆண்ட பரம்பரை.நாங்க இத்தனை கோடிப்பேர் இருக்கோம்....ஒவ்வொரு சாதியினரையும் மட்டமாக விமர்சித்து பழமொழிகள் வேறு....
இதில் அத்தனை சாதிகளையும் சொல்லவில்லையென்றால் எண்ணிக்கை தெரியாத குற்றம் அல்லது எண்ணமுடியாத அளவிற்கு சாதிகள் உள்ளதென்ற யதார்த்தம்.ஆனால் எல்லோருக்கும் பொதுவான எண்ணம் அந்தக்காலத்தில் நாங்க அப்படி இருந்தோமாக்கும்..மத்தவங்க எங்களுக்கு கீழே ..எங்களுக்கு மேலே சாதிகள் இருந்தாலும் எங்களுக்கும் சாதிகள் கீழே....
இவர்கள் எல்லோருக்கும் பெரிய ஒற்றுமை என்னவென்றால் இவர்களுக்கு கீழே தாழ்த்தப்பட்ட சாதிகள் ,அவர்கள் நமக்கு அடங்கி தான் நடக்கவேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம்,இந்த எண்ணமானது படித்தவர்கள் படிக்காதவர்கள்,வசதி படைத்தவர்கள்,ஏழைகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,எல்லோர் மத்தியிலும் வெளியே தெரிந்தும் தெரியாமலும் ஆட்டி படைக்கிறது....இது பள்ளியிலிருந்து சுடுகாடுவரை ,ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை எல்லா இடத்திலும் ஆட்டிப்படைக்கிறது.
இந்த வன்மம் தான் பல அக்கிரமங்களுக்கு காரணமாகிறது.சக மனிதனை மனிதனாக நடத்தாதிலிருந்து ,அடிமைப்படுத்தி துன்புறுத்தும் அளவிற்கு வியாபித்திருக்கிறது.
ஆனால் நாம் மிக முக்கியமாக வரலாற்றை மறந்து விடுகிறோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னாள் வரை எல்லோருக்கும் கல்வி மறுக்கப்பட்டு,வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு,அணைத்து பதவிகளிலும் பிராமணர் உள்ளிட்ட சில சாதியினரே ஆக்கிரமித்துக்கொண்டு,தமிழகத்தை ஆட்டிபடைக்கையில் உருவானது தான் தென்னிந்திய நல உரிமை சங்கம்,பின்னர் நீதி கட்சி,திராவிட இயக்கம் பொதுவுடைமை கட்சிகள்.இவர்களது விடாப்பிடியான சட்ட போராட்டங்கள்,மக்கள் இயக்கங்கள் அரசு மாற்றங்கள் இதற்கு பின்னர் தான் ஓரளவிற்காவது எல்லா சாதியினரும் கல்வி வேலைவாய்ப்பில் சில முன்னேற்றங்கள்..
அதே போலத்தான் கோவில்களுக்குள் அனைவரும் செல்ல முடியாத நிலை...விடாப்பிடியான சட்ட போராட்டங்கள்,மக்கள் இயக்கங்கள்,ஆலய நுழைவு போராட்டங்கள் இதற்கு பின்னர் தான் அனைவரும் கோவிலுக்குள் சென்று ஆண்டவனையே வணங்கும் சூழல் ஏற்பட்டது.
இது பல விஷயங்களை கூற முடியும்.
இதைவிட தமிழகம் மிக பெருமைப்படக்கூடிய விஷயம்.. பெயருக்கு பின்னால் சாதி போடுவதை தூக்கி எறிந்த பெருமை தமிழனுக்கு மட்டுமே உண்டு.தந்தை பெரியாரும் திராவிட இயக்கங்களின் விடாமுயற்சியினால் தான இது சாத்தியமானது.இந்த முன்னேற்றங்கள் எதுவும் தானாக வந்துவிடவில்லை. சனாதனம் புகுத்தியதை பகுத்தறிவுவாதிகள் எதிர்த்து போரிட்டதால் தான் என்கிற உண்மையை மறந்துவிடலாகாது. ஆனால் இவ்வளவு முன்னேற்றங்களுக்கு பின்னரும் மீண்டும் சாதி வெறி தலை தூக்கி இருப்பது கேவலமான விஷயம்.
1968ஆம் ஆண்டில் தஞ்சை கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டார்கள் என்பதற்காக விவசாய கூலிகள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை நிலப்பிரபுகள் உயிரோடு தீயிலிட்டு கொளுத்தி, படுகொலை செய்தனர்.
அது வெறும் கூலிஉயர்வுக்கான போராட்டம் என்பதற்காக மட்டும் இல்லை தாழ்ந்த ஜாதியினர் ஒன்றுபட்டு செங்கொடி சங்கத்தின் கீழ் தங்களை எதிர்த்து இயக்கம் நடத்தினார்கள் என்ற வன்மமும் சேர்த்து தான்.
தாழ்ந்த ஜாதி பையன் தங்கள் சாதி பெண்ணை பார்த்தான்,பேசினான், காதலித்தான், என்பதற்காக எத்தனை ஆணவக்கொலைகள் நடந்திருக்கிறது என்பதை பட்டியலே போடலாம்....
தாழ்ந்த ஜாதி பையன் விளையாட்டில் தங்கள் சாதி பையனை ஜெயித்தான்,நன்றாக படித்தான், தங்கள் தெருவில் செருப்பு போட்டு நடந்தான் என்பதற்காக கூட மிருகவெறி தாக்குதல்கள் நடைபெறுவதை இன்றைய பல செய்திகளைதொலைக்காட்சி வாயிலாக செய்தி ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம்..
தங்கள் தெருவில் ஒரு நாடார் பையன் செருப்பு போட்டு நடந்து வந்ததால் தன் தாத்தா கட்டி வைத்து அந்த காலத்தில் அடித்ததாக ஒரு பிராமண உபன்யாசகர் தொலைக்காட்சியில் இன்று பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்.சனாதனம் நன்றாக மீண்டும் தலை தூக்கி விட்டது என்று தானே அர்த்தம்,
இந்த கொடுமை தாழ்ந்த சாதியினருக்குள்ளேயும் காணப்படுகிறது என்பது அதைவிட கேவலமான விஷயம்...அவர்களுக்குளேயே இந்த சாதியை விட நாங்கள் உயர்ந்தவர்கள்,அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஆழமாய் பதிந்திருக்கிறது என்பது தான் இன்னம் கொடூரமான விஷயம்.
துர் வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச
தஸ்ய கர்தாரமாபி மாம் வித்யா கர்தார மவ்யயம்'' (கீதை)
இதில் கிருஷ்ண பரமாத்த்மா என்ன சொல்கிறாரென்றால்...
நான்கு வர்ணங்கள் என்னால்
உருவாக்கப்பட்டவை. அவரவர்க்கு உரிய கர்மங்களை
அவரவர் மீறாமல் செய்ய வேண்டும் ( நீ செருப்பு தைப்பவனாக இருந்தால் செருப்பை மட்டுமே தைத்துக்கொண்டு இருக்க வேண்டும்)
அதனை மீறி செயல்பட வைக்க அந்த வர்ணத்தை உருவாக்கிய என்னால்கூட முடியாது ( நீ மீறி வேறு எதையும் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்)
இதைதான் கிருஷ்ண பகவான் கீதையில் உள்ள
அந்த இரண்டு வரிகளில் சொல்லி இருக்கிறார்
கடவுளே சாதியை உருவாக்குவது முறையானதா?
இல்லையில்லை... ஆளும் சுரண்டும் வர்க்கம் தனது சுயநலத்திற்காக உருவாக்கிய கடவுளும், வர்ண, சாதிய கட்டமைப்புமே காரணம்.அதனால் உருவாக்கப்பட்ட சாதிய வன்மம், ஒவ்வொரு மனிதரின் டி என் ஏ வில் ஊடுருவி உள்ளது என்கிற உண்மையை புறந்தள்ளி விட முடியாது. இந்த சாதீய வன்மத்தை தொலைத்து தலைமுழுகுவதற்கு அணைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைத்து கடுமையான கருத்துப்போர் தொடங்குவது அவசியம் .இல்லையென்றால் மீண்டும் கற்காலத்திற்கே சென்று விடுவோம்.
சாதித் தீ சாதித்த தொன்று மில்லை.
ReplyDeleteசா ! தீ! ...சாகட்டும் தீயினும் அஞ்சப்படும் தீயவையாம் சாதி.