சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 14 March 2025

நீங்கள் யார் பக்கம்.....

 பெண்களின் கடமை எதுவென “காஞ்சிப் பெரியவர்” கூறுவது: 

பெண்களும், சிரமதானமும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

காமகோடி

பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாகப் வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப்போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால் அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான். இதற்கு மிஞ்சிப் பொழுதும் சக்தியும் இருந்தால் பொதுப்பணிகளும் செய்யலாம். இவை ஸ்த்ரீ லக்ஷணத்துக்கு உரியதாக, ‘பெண்மை’ என்று ஒன்றை வார்த்தையாகவாவது இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அதற்கு ஏற்றபடியான தொண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது அடக்கத்துடன் செய்வதாக இருக்க வேண்டும். தேஹ ச்ரமமும் அதிகம் இருக்கக்கூடாது. கோயில்களில் கட்டுக் கட்டாகக் கோலம் போடுவது; பஜனை – ஸந்தர்ப்பணை நடக்கிற இடத்தில் பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து உபகாரம் பண்ணுவது; பிரஸவ ஆஸ்பத்திரி மாதிரியான பெண்களுக்கு மட்டுமே உரிய இடங்களில் பிரஸாதங்கள் விநியோகம் பண்ணுவது; அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கிற இடங்களுக்குப் போய் அதுகளுக்குப் புது வஸ்திரம், பக்ஷணம் கொடுத்து ஏதோ கொஞ்சம் பஜனை, ஸ்தோத்ரம் சொல்லித் தருவது என்று இப்படிப்பட்டப் பணிகளைப் பெண்கள் செய்யலாம்.

ஸமுதாயம் அடங்கலும் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகக் குளம் வெட்டுகிற வேலையில் மட்டும், அது கொஞ்சம் ச்ரமமானதாக இருந்தாலுங்கூட, நானே பெண்களையும் ஈடுபடுத்தியிருக்கிறேன்.

இருந்தாலும் பொதுவாக ‘ச்ரமம்தான்’ என்பதில் கடும் சரீர உழைப்புத் தேவைப்படுகிற தொண்டுகளைப் பெண்களிடம் காட்டாமல் புருஷர்களே பண்ணுவதுதான் உசிதம்.

இது சனாதன வாதிகள் குரல்

*****************************

ஒரு ஆண் படித்தால், அவன் மட்டுமே படிக்கின்றான்; ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே படிக்கின்றது. பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்து விட்டாலே, ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர் பெரியார்.

பெரியார் கூறுகிறார் : வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் போக, போக்கியங்களில் இருவரும் சம உரிமையுடன் வாழுங்கள். கணவன் மனைவி இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். சிறிதாவது வருமானத்தில் மிச்சப்படுத்த வேண்டும். வரவுக்கு மேல் செலவு செய்வது “விபச்சாரம்” செய்வதை ஒத்ததாகும்.

“மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவுக்கேற்ற முறையில் நடக்க வேண்டும். கோயில் திருவிழாக்களுக்குச் செல்லக்கூடாது. எங்காவது போக வேண்டுமானால், அறிவை விசாலமாக்கும் பொருட் காட்சிச் சாலை, இயந்திரத் தொழிற்சாலை போன்றவற்றிற்குச் சென்று பார்க்க வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு பகவான் (கடவுள்) கொடுத்தார் என்று சொல்லக் கூடாது. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஆண்கள், பெண்களுக்கு சம உரிமையும், சம பங்கும் கொடுங்கள். உங்கள் மனைவியை நினைத்துக் கொண்டே - யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்லப் பெண் குழந்தைகளையும், உங்கள் தாய், சகோதரிகளையும் மனதில் வைத்து யோசி யுங்கள். நம் நாட்டுப் பெண்கள், மேல்நாட்டு பெண்களைவிடச் சிறந்த அறிவு, ஆற்றல், வன்மை, ஊக்கம் உடையவர்கள், பெண்களை வீரத்தாய்மார்களாக உருவாக்குங்கள்.

பெண்களே! சட்டை, பேண்ட், லுங்கி கட்டுங்கள். முடியைக் கழுத்தளவுக்கு வெட்டிக் கொள்ளுங்கள். உருவத்தில் ஆண்களா, பெண்களா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வாழுங்கள். கும்மி, கோலாட்டங்களை ஒழித்து, ஓடவும் தாண்டவும் குதிக்கவும் குஸ்தி போடவும் போலீசாக, இராணுவ வீரராக, விமானியாக உருவாகுங்கள்.

மனுநீதி சாஸ்திரப்படி நமக்குத் திருமணம் கிடையாது; நாம் எல்லோரும் தாசி மக்கள்; நாம் திருமணம் செய்வதாக இருந்தால் நம் வீட்டுக்குப் பார்ப்பான் வந்து நமக்கு பூணுல் மாட்டித்தான் திருமணம் செய்வான். கன்னி காதானம், மாங்கல்யதாரணம், பாணிக்கிரகணம், விவாக சுபமுகூர்த்தம், தாராமுகூர்த்தம் என்று வேற்று மொழிச் சொற்கள்தான், தமிழில் சொற்கள் இல்லை. நாங்கள் தான் “வாழ்க்கை ஒப்பந்தம்” - என்ற சொல்லை, திருக்குறளில் இருந்து கண்டு பிடித்தோம். கல்யாணம் என்பதன் பொருளே ஒரு பெண்ணை ஆணுக்கு அடிமைப்படுத்துவது என்றுதான் பொருள் ஆகும்.”

மேலும் பெரியார் கூறுகிறார் : “பெண் என்பவள் ஒரு ஆணுக்கு சமையல்காரி, சம்பளம் வாங்காத வீட்டு வேலைக்காரி - ஆணின் காமக் கிழத்தி, ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு - பிள்ளை உற்பத்தி செய்யும் பண்ணை, “இயந்திரம்”, பிள்ளைக் குட்டி சுமக்கும் தோல்பை என்றும்; பெண்ணின் கழுத்தில், காதில், உடலில் ஆங்காங்கே நகையை மாட்டி உள்ளார்கள். நகை மாட்டும் ஸ்டேண்டா? என்றார், பெரியார். பெண்கள் வைரம் காய்க்கும் மரங்களா? பட்டு போர்த்திய, அலங்கார பொம்மைகள் போன்று உள்ளார்கள்.

இது பகுத்தறிவாளர் குரல்

************************** 

நீங்கள் எந்தப் பக்கம்?! 

மூலையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த, கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த, உரிமை மறுக்கப்பட்டு குரல்வளை நெறிக்கப்பட்டிருந்த மகளிர் இன்று கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற்றிருப்பது சனாதானத்தின் கருணையாலா, அல்லது மக்களை திரட்டி போராடிய, இன்றுவரை மகளிர் முன்னேற்றத்திற்கு கருத்தாலும், கரத்தாலும் நிற்கும் பகுத்தறிவாளர், பொதுவுடமைவாதிகள் இயக்கங்களாலாலா?!


நீங்கள் யார் பக்கம்..... 

யார் உங்கள் பக்கம்... 

2 comments:

  1. நீங்கள் யார் பக்கம்? சிறப்பான பார்வை. சொல்லது என் கடமை.முடிவு நீயே எடு! என்ற குரல் ஈரோட்டின் வாய்மொழியாகவே. யார் யார் வாய்க்கேட்பினும்....அருமை.

    ReplyDelete
  2. இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கருத்துகள்.. தங்களுடன் சேர்ந்து நானும் அழைக்கின்றேன் நண்பா!
    அறிவென்றால் படிப்பென்றே யெண்ணிக் கொண்டாய்!
    ஆகாத சாத்திரங்கள் வாழ்வாய்க் கொண்டாய்!
    புரிநூலோர் சொல்கதையில் நேரம் கொன்று
    போயலைவாய் குளங்கோவில் நாளைத் தின்று!!
    பறிபோகும் உனதுரிமை மெல்ல மெல்ல
    பட்டறிவால் பகுத்தறிவால் வெல்ல வெல்ல
    உரிமைப்போர் களமிறங்கு தோழி! தோழி!
    உள்ளன்பால் வாழ்த்துகிறேன் வாழி! வாழி!!
    - சுப முருகானந்தம்.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...