சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 14 February 2025

குழந்தை தொழிலாளர்




குழந்தை தொழிலாளர்

நேற்று சொந்த வேலையாக கிராமத்துக்கு ஸ்கூட்டரில் செய்து சென்று கொண்டிருந்தேன். அப்போது காற்று குறைவாக இருப்பதை உணர்ந்து அருகில் உள்ள பஞ்சர் கடைக்கு சென்றேன். அங்கு ஒரு சிறுவன் வண்டிக்கு காற்றடிக்க வந்தான். பொறுமையாய் காற்றடித்துக் கொடுத்து விட்டு, கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டான். இவனை ஒத்த சிறுவர்கள் எல்லாம் சினிமா அது இது என்று பயனில்லாத கால வேலைகளைக் கழிக்கும்போது இவன் மட்டும் ஏன் இப்படி, வறுமையாய் இருக்குமோ என்று அவனிடம் விசாரித்தேன் . 

"வீட்ல சும்மா இருக்க நேரத்துல வேலே செஞ்சா நல்லது தானே" என்றான். 


எனக்கு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன .

மதுரை ருக்மணி பாளையத்தில் எங்கள் வீட்டு அருகே குடிசைத் தொழிலாக பத்தி தயாரிக்கும் கடை ஒன்று இருந்தது. நாங்கள் ஏழு, எட்டு வயது இருக்கும் போது பத்தி தயாரிப்பதற்கான பொடியைக் கொட்டி தண்ணீர் தெளித்து எங்களை மிதிக்கச் சொல்லுவார்கள், பிறகு பக்குவமாக்கி அவற்றை உருட்டி போடுவார்கள், பிறகு தான் பத்தி தயாரிப்பார்கள், மிதிப்பதற்கு ஐந்து பைசா பெற்றதாக ஞாபகம்.

 எங்கள் தெருவில் மூன்று பைண்டிங் ஆபீஸ்கள் இருந்தன. பெருமாள் சாமி, கோவிந்தசாமி என்று இரு சகோதரர்கள் இரு பைண்டிங் ஆபீஸ் உரிமையாளர்களாக இருந்தனர். 40 பக்கம், 80 பக்கம் நோட்டுகள் அங்கு தயாரிப்பார்கள். பேப்பரை மடித்து, ராப்பரில் திணிப்பது, தைப்பது போன்ற வேலைகளுக்கு அங்குள்ள வீடுகளுக்கு அனுப்புவார்கள். 100 நோட்டுக்கு இவ்வளவு காசு என்று கணக்கு இருக்கும். வீட்டில் உள்ள பெண்களெல்லாம் குடிசை தொழிலாக இதை செய்து கொடுப்பார்கள்.

 நானும் எனது சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் பெருமாள் சாமி அவர்களின் பைண்டிங் ஆபிஸ்வேலைக்கு செல்வேன். அங்கு கட்டிங் மிஷினில் வெட்ட வேண்டிய பொருள்களை இறுக்கி பிடிப்பதற்காக மேலே ஒரு சக்கரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அதை இறுக சுற்றினால், வெட்ட வேண்டிய நோட்டுகளை டைட்டாக பிடிக்கும். . இதற்கு குண்டு போடுதல் என்று சொல்வார்கள். இன்னொருவர் கரும்பு ஜூஸ் பிழியும் இயந்திரத்தில் இருப்பது போல ஒரு கைப்பிடியோடு சக்கரம் இருக்கும். அதை வேகமாக சுற்றினால், கத்தி மேலிருந்து கீழாக இறங்கி, திரும்ப மேலே செல்லும். ஒருவர் வெட்ட வேண்டிய பொருள்களை அடுக்கி உள்ளே திணித்து வெட்டிய பிறகு எடுப்பார். இது மட்டும் பெரிய செய்கிற வேலை. சற்று கவனக்குறைவாக இருந்தாலும் நோட்களைஅடுக்கி எடுக்கிறவர் கைகள் வெட்டுப்பட நேரிடும். பெருமாள் சாமி அவர்களின் மூத்த மகன் கண்ணன் அந்த வேலையை செய்து வருவார். சில நேரங்களில் அவர் தம்பி ராமச்சந்திரன் அந்த வேலையை செய்வார். மேலே குண்டு சுற்றுகிற வேலை, சக்கரம் சுற்றுகிற வேலை ஆகியவற்றை சிறுவர்கள் செய்வார்கள். பெரும் பகுதி அந்த வேலையை நான் செய்வேன். ராமச்சந்திரன் அன்பாக நடத்துவார். 

கண்ணன் சரியான சிடுமூஞ்சி. அவர் மனைவி மீது கோபம் என்றால், எங்கள் மீது காட்டுவார். ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் வேலை செய்யும் சிறுவர்களை அடித்து விடுவார். என்னை முதன் முதலில் கன்னத்தில் அறைந்த மனிதர் அவர்தான்.

அதேபோல ஒரு முறை சர்பத் தயாரிக்கும் கம்பெனியில் லீவு நாட்களில் வேலைக்கு சென்ற போது பாட்டில்கள் சரிந்து கீழே விழுந்ததற்கு அங்கு வேலை பார்த்து ஒரு ஆள் என்னை அடித்து விட்டார். அதிலிருந்து சர்பத் கம்பெனிக்கு போவதில்லை.

நாங்கள் குடியிருந்த காம்பவுண்ட் வீட்டில் ஒரு விளம்பர பலகை தயார் செய்யும் பெயிண்டர் இருந்தார். அவர் உள்ளூரில் பிரபலமாயிருந்த சோப் கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கும் இதே அனுபவம் தான்.

ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. சிறுவர்கள் வேலைக்கு சென்றால், வேலை பார்க்கும் இடத்தில் மேலே உள்ளவர்கள் யார் மீதாவது கோபம் என்றால் சிறுவர்களை தான் அடித்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்வார்கள். மிகவும் குறைவான கூலியை தந்து கூடுதல் வேலை வாங்குவார்கள்.

வீட்டில் சொல்லவும் கஷ்டமாக இருக்கும். பெற்றோர் வேண்டுமென்றே வேலைக்கு அனுப்புவதில்லை. சரி, லீவு நாளில் வேலை பார்த்தால் கிடைக்கும் பணம் படிப்புக்கு உதவுமே என்று தான் வேலைக்கு செல்வோம். அங்கும் கஷ்டம் என்று வீட்டிற்கு தெரிந்தால் அப்பா அம்மா சங்கடப்படுவார்கள் என்று சொல்வதில்லை.

பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இதே போல விடுமுறை நேரத்தில் பைண்டிங் ஆபிஸில் வேலை செய்கின்றபோது, பைண்டிங் செய்த பில் புக்கு களை புதுமண்டபத்திலிருந்த கடையில் கொடுத்து வர சொன்னார்கள். சைக்கிள் வாடகை பணமும் கொடுத்தார்கள். மிச்சமாக இருக்கட்டும் என்று தலையில் சுமந்து சென்றேன். தற்செயலாக என்னுடன் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் என் எதிரில்  வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. காக்கி டவுசர், அழுக்கு சட்டை, தலையில் சுமைை, வெறும் காலுடன் வருபவன் தன்னுடன்  படிப்பவன் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், லேசாக ஒதுங்கிக் கொண்டேன். யதேச்சையாக பக்கத்தில் இருந்த கோயிலில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததை கேட்டேன்.

அவ்வையார் படத்தில் முருகன் அவ்வையிடம் கொடிது பற்றி கேள்வி கேட்பார்

அவ்வை பாடுவார்

"கொடிது.. கொடிது இளமையில் வறுமை...."

 வறுமையின் கொடுமையை அன்று மிகவும் உணர்ந்தேன்.....  

2 comments:

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...