கொஞ்சம் நாட்களாக எனது நண்பன் கணேசனிடம் தொலைபேசியில் பேசாமல் இருந்தேன் நேற்று மாலை அவனிடம் பேசலாம் என்று அலைபேசியில் அழைத்தேன் எடுத்தது கணேசனின் அருமை மகள்... எடுத்தவுடன் கணேசனின் உடல் நலம் பற்றி விசாரித்தேன். அழுகை சத்தம்... என்னம்மா என்று பதறி கேட்டேன். அப்பா இப்போதுதான் தவறி விட்டார்கள் என்று சொன்னது. சரியாக நான் அலைபேசியில் அழைப்பதற்கு சிறிது நேரம் முன்பாக தான் உயிர் பிரிந்திருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவு ஒன்றை படித்துவிட்டு மிகவும் ரசித்து என்னிடம் பேசினார். பழைய நாட்களுக்கு மீண்டும் அழைத்து சென்று விட்டேன் என்று சிலாகித்துப் பேசினார். அதற்கு பிறகு இருவரும் தொடரபு கொள்ளவில்லை. இவ்வளவு நாள் தொடர்பு கொள்ளாமல் இருந்தது எவ்வளவு தவறு என்று எனக்கு உரைத்தது.
நானும் அவரும் 83 ஆம் ஆண்டிலிருந்து பழக்கம் மறந்தாலும் நான் சங்கத்தில் அடிக்கடி சந்திப்போம் சங்கத்தின் மிகவும் உற்சாகமாய் இருப்பார். 86 ஆம் ஆண்டில் அவர் பணிபுரிந்த திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றலாகி சென்றேன். ஜெகதீசன், கணேசன், சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் அங்கு மருந்தாளுனராக பணிபுரிந்தார்கள் ஜெகதீசன் உடைய இடத்திற்கு நான் மாறுதலாகி சென்றேன். அவருடைய வகுப்புத்தோழரும் நண்பருமான ஜெகதீசன் மாற்றி விட்டு நான் அங்கு சென்றதில் ஒருபுறம் அவருக்கு வருத்தம். இருந்தாலும் என்னோடு பணி புரிவதில் ஒரு மகிழ்ச்சி.
மறந்தாளுநர் முன்னேற்றம், மருந்தாளுனருடைய கௌரவம், வளர்ச்சி அதைப் பற்றி தான் எப்பொழுதுமே பேசிக் கொண்டிருப்பார். அவரோடு பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாதவை. மருந்தாளுனருக்கு ஒரு பிரச்சனை என்றால் கொதித்து எழுந்து விடுவார்.
ஓரிரு ஆண்டுகளிலேயே நான் வேறு இடத்திற்கு பணி மாற்றத்தில் சென்று விட்டாலும் , சங்க தொடர்பு என்பது பணி ஓய்வு பெறும் வரை தொடர்ந்துகொண்டே இருந்தது.
மருந்தாளுனர் சங்கத்தை வளர்ப்பதற்காக இரு சக்கர வாகனங்களில் நானும் நண்பர்கள் சக்திவேலு, கணேசன், கண்ணன், கார்த்திகேயன்,பாஸ்கர், நாகராஜன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்தை பலமுறை சுற்றி வந்து அனைத்து மருந்தாளுநர்களையும் சந்தித்து பணிபுரிந்தது மறக்க இயலாதது.
அதேபோல அரசு ஊழியர் சங்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னோடு இணைந்து பணியாற்றினார்.
மருந்தாளுனருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும், கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். நான் பணி இறுதி காலங்களில், மருந்து கிடங்கு அலுவலராக பொது சுகாதாரத்துறை இயக்ககத்தில் பணிபுரியும் போது ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட தமிழகமெங்கும் செல்ல நேர்ந்தது. அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர் அவரே. நான் பார்வையிடுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றபோது, என்னை வந்து சந்தித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பெருமைப்பட்டார்.
சொந்த வாழ்க்கையில் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். எப்பொழுது பணக்கஷ்டம் ஏற்பட்டாலும் உடனே உதவி செய்வார். ஒரு டேப் ரெக்கார்டர் வாங்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஆசைப்பட்ட போது, உடனே கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு எப்பொழுது முடிகிறதோ அப்போது மாதாமாதம் இயன்றவரை கொடு என்று கொடுக்கிற போது வாங்கிக் கொண்டார். எனது குடும்பத்தினர் மீது அதிகமாக பாசம் கொண்டிருந்தார். எனது மனைவி அண்ணா என்று அன்போடு பாசத்தோடு நடந்து கொள்வார். .
சொந்த வாழ்க்கையில் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
அவரது மகள் திருமணத்திற்கு நான் மட்டுமே சென்று வந்தேன் எனது மனைவியால் வர இயலவில்லை. எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று எனது மனைவி நீண்ட நாட்களாக வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டையாலிசிஸ் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் வருந்தினோம். சென்ற ஜூலை மாதம் நாங்கள் தென் மாவட்டங்களுக்கு குடும்பத்தோடு சென்ற போது, அவரது வீட்டிற்கு சென்று, அவரையும், அவரது தந்தையார், அவரது மகள், மருமகன், பேத்தி மற்றும் சகோதரியை சந்தித்து வந்தோம். மிகவும் உற்சாகமாக எங்களை வரவேற்று, சிறு வயதில் அந்த காலத்தில் எப்படி இருந்தாரோ அதைப்போல ஓடியாடி எங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறையாய் இருந்தார்.
இப்படி திடீரென்று நம்மை விட்டு செல்வார் என்று நினைக்க முடியவில்லை. இன்னும் எழுதுவதற்கு ஏராளமாய் இருக்கிறது.
ஒரு சிறு விபத்தில், என்னால் பயணம் செய்ய இயலாத நிலையில், வீட்டில் சூழ்நிலை கைதியாக இருக்கிறேன். நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று என்னை மிகவும் வருந்துகிறேன். இங்கிருந்தாலும் நண்பா... உன்னை கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்...
சென்று வா நண்பா......
உனது ஆத்மா சாந்தியடையட்டும்
வருத்தப்படாதே நண்பா!! அவர் உடலால் நம்மை பிரிந்தாலும் அவரது ஆன்மா நம்மை சுற்றியே எப்போதும் இருக்கும். அண்ணாருக்கு என் இதயத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் இடத்தில் சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
ReplyDeleteநண்பர் சீனிகார்த்திகேயன் உடலால் மறைந் நண்பர் கணேசனைப்பற்றிஎழுதியதை படித்ததும் கண்களில் நீர்தளும்ப கணேசனுடன் தில்ருவரங்குளம் PHc
ReplyDeleteல் பணிபுரிந்த காலத்தை மறக்க முடியாது.அப்பொழுது பணிநேரம் முடிந்து பெழுதுபோக்கே கணேசன் ஜெகதீசனுடன்தான்.நல்ல நண்பரை இழந்துவிட்டேன் மிகவும் வருந்துகிறேன்
ReplyDelete