சினிமா மொழி
சினிமாவிற்கு என்று மொழி இருக்கிறதா என்ன . சரி மொழி என்பது தான் என்ன. அது ஒரு தகவல் தொடர்பு சாதனம். கம்யூனிகேஷன் மீடியா. மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு ஊடகம்.. அது இனம் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அது எழுத்து , சொல், வாக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது .வெர்பல் லாங்குவேஜ் என்பார்கள். ஒருவருடைய மொழி இன்னொருவருக்கு தெரிந்திருக்க முடியாது அல்லவா. அந்த தகவல்களை பரிமாறுவதற்கு ஓவிய மொழி பயன்பட்டது. (லாங்குவேஜ் ஆப் டிராயிங்). 1745 இல் தற்செயலாக சில்வர் நைட்ரேட் கொட்டப்பட்ட தாளில் விழுந்த படிமத்தை கொண்டு உருவானது புகைப்படம் என்னும் சாதனம். பிலிம் கண்டு பிடிக்கப்பட்டது , புகைப்படங்கள் மூலம் பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்டன. அதுதான் புகைப்பட மொழி. (லாங்குவேஜ் ஆப் போட்டோகிராபி). உள்ளதை உள்ளபடி தத்ரூபமாக கொண்டு வந்ததால் மக்களை மயக்கும் மொழியானது. அசையாதிருக்கும் படங்களை விட அசைவோடு காட்டினால் தத்ரூபமாய் இருக்கும் என்பதற்கான முயற்சியில் பலர் ஈடுபட்டு 1830ல் எட்வர்ட் மைபிரிட்ஷ் என்ற ஆங்கிலேயர் ஓடும் குதிரையை திரைப்படமாக எடுத்து சாதித்துக் காட்டினார். கண்ணில் காணும் காட்சி மறைந்து விட்ட போதிலும்,மாயத் தோற்றமாக நொடியில் 1/48 பங்கு இருப்பதாகவே காட்சி அளிக்கும் ""பெர்ஸிஸ்டன்ஸ் ஆப் வியூ ""என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு படத்தை 24 ஃபிரேம்கள் தொடர்ச்சியாக ஒரு நொடியில் நகரத்தினால் அது அசைவது போல தோன்றும். எனவே பிலிம்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நொடியில் 24 பிரேம்கள் நகருமாறு, தொடர்ச்சியாக ஒளி ஊடகத்தின் மூலமாக ஒரு திரையிலே படத்தை காட்டும் போது அது அசையும் படமாக தோன்றியது. அதுதான் மூவி என்பதன் அடிப்படை. தாமஸ் ஆல்வா எடிசனில் தொடங்கி லூமியர் பிரதர்ஸ் வரை தொடர்ச்சியாக பலருடைய உழைப்பால் திரைப்பட கலை உருவானது. பின்னர் ஒலியினை பிலிமில் சவுண்ட் டிராக் ஆக இணைத்து அசையும் படத்தோடு ஒலியும் சேர்ந்து பேசும் படமானது. 28. 12.1895–ல் பாரீஸ் நகரில் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. 1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர்.
வெறும் பொழுதுபோக்கிற்காகவே ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டது . திரைப்படக்கலை.முதல் திரைப்படமே கொள்ளையைப் பற்றி எடுத்தனாலோ என்னவோ இன்னமும் நம் பட தயாரிப்பாளர்கள் கொலை, கொள்ளை, செக்ஸை விட்டு வர மறுக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..
முதலில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட திரைப்படங்களை நம் நாட்டிலும் வெளியிடப்பட்டு வந்தது. பிறகு நம் நாட்டிலும் பட தயாரிப்புகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
நம் நாட்டில் ஏற்கனவே இருந்த நாட்டியம், தெருக்கூத்துகளுக்கு போட்டியாக இங்கு திரைப்படம் வர ஆரம்பித்தது. ஏற்கனவே இங்கு நம்மிடம் இருந்த புராணக் கதைகளும் நாட்டுப்புற கதைகளுமே திரைப்படங்களாக வந்தன. அரிச்சந்திரா, சீதா கல்யாணம், திரௌபதை அகல்யா.... போன்ற ஏராளமான படங்கள் அனைத்துமே புராணத்தை அடிப்படையாகவே கொண்டு எடுக்கப்பட்டவை. இவை அனைத்துமே இந்திய மக்களுக்கு பொதுவாகவே ஒரே மாதிரியாகவே அமைந்தது.
சினிமாட்டோகிராஃப் சட்டம் 1918 என்ற சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் 1918இல் கொண்டு வந்தது. இச்சட்டமானது ஒரு திரைப்படத்தைத் திரையிடுவதற்கு உள்ளூர் சிவில் அதிகாரிகளிடமிருந்து உரிமத்தைப் பெறுவதையும், இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் எந்தப் படத்திற்கும் முன்னதாக தணிக்கை செய்யப்படுவதையும் கண்காட்சியாளர்கள் கட்டாயமாக்கினர். சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் "பொது கண்காட்சிக்கு ஏற்றது" என்று கருதப்படும்.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்த போது, சில தேச பக்தர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடலாயினர். அவர்கள் புராண படங்களுக்கு ஊடேயே, சுதந்திர கருத்துக்களையோ அல்லது நேரடியாக ஜனங்களின் மனோபாவத்திற்கு ஏற்ற மாதிரி சுதந்திர போராட்ட கருத்துக்களை உடைய நேரடி சமூக படங்களையோ தயாரிக்க ஆரம்பித்தனர். டாக்டர் சாந்தாராம் போன்ற தேசபக்தர்கள் தீண்டாமை வட்டி கொள்ளை, பெண்கள் பிரச்சனை, சமூக பிரச்சனைகள், விவசாயிகள் பிரச்சனைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர். சாந்தாராம் தர்மாத்மா , சவ்காரி பாஷ், அம்ரித் மந்தன், குங்கும, மனோஸ் போன்ற சமூக அவலங்களை சித்தரிக்கும் திரைப்படங்களை இயக்கினார். இதே போல ஹிந்தி, மராட்டி, வங்கம், தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் ஆங்காங்கே இருந்த தேசபக்தர்கள் சமூக சிந்தனையாளர்கள் நல்ல திரைப்படங்களை தயாரித்து தந்தனர். தமிழ்நாட்டில் கே. சுப்பிரமணியம் என்ற இயக்குனர் சேவா சதனம், தியாக பூமி போன்ற மிகச் சிறந்த படங்களை தயாரித்து தந்தார். .
சுதந்திர உணர்ச்சிகளை தூண்டும் படங்கள் வெளிவராத வண்ணம் அல்லது கட்டுப்படுத்தும் வண்ணம் பிரிட்டிஷார் சென்சார் சட்டத்தை பயன்படுத்தினர். .
தியாக பூமி என்ற திரைப்படம் தணிக்கை துறை சட்டத்தின் மூலமாக பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டு கடைசி வரை நீக்கப்படவே இல்லை.
இந்தக் காலத்தில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது ஆதனால் திரைப்படத் துறைக்கு தேவையான ஃபிலிம் போன்ற கச்சா பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பொருளை வாங்கி விற்ற வியாபாரிகள் தாங்களே திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்தனர். பிலிம் வியாபாரம், மற்றும் லேவாதேவி செய்து அதிக லாபம் கண்ட சந்துலால் ஷா, ஏ. வி, மெய்யப்ப செட்டியார் போன்ற முதலாளிகளின் திரைப்படத்துறையில் இறங்கலாயினர்.
போட்ட முதலை எப்படி பன்மடங்காக சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்த வித்தகர்கள், ஆங்கில படங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர். ஹீரோ வொர் ஷிப் சிஸ்டம், (தனிநபர் சாகசம்) நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் விளம்பரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி திரைப்படங்கள் எடுக்கலாயினர்.
படத்தில் வரும் கதாநாயகர்கள் பாடல், ஆடல், சண்டை போன்ற சகல திறமைகளையும் கொண்டவனாகவும் அழகனாகவும், கதாநாயகிகள் அழகிகளாகவும், நாட்டியம் ஆடுபவர்கள் ஆக சித்தரித்து திரைப்படங்கள் வரலாயின. அதுவரை திரைப்படத்துறையில் நடிகர்களுக்கு மாதச் சம்பளம் என்று இருந்தது போய், கதாநாயகன், கதாநாயகிகளுக்கு அதிக சம்பளமும், மற்ற கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் அதிக சம்பள வித்தியாசம் இருக்கும்படியாகவும் அமைந்தது. பிரம்மாண்டமான செட்டுகள், அதீதமான விளம்பரங்களுடன் அவர்கள் தயாரித்த படங்களை வெற்றி படங்களாக்கின. சமூக சிந்தனை உள்ள குறைந்த செலவில் படம் எடுக்கும் பட தயாரிப்பாளர்கள் நலிவடைந்தனர்.
எடுக்கப்பட்ட படங்களிலும் சமூகப் படங்களாக இருந்தால் பெயருக்கு பாரதியார் பாடல்களையோ சமூக சீர்திருத்த கருத்துக்களையோ கூறினாலும், ஒட்டு மொத்தத்தில் வரும் பொழுதுபோக்கு சித்திரங்களாகவே தயாரிக்கப்பட்டன.
பல மொழிகளில் திரு எஸ் எஸ் வாசன் அவர்களால் தயாரிக்கப்பட்ட சந்திரலேகா என்ற திரைப்படம் மிகப்பிரமாண்டமான செட்டுகளுடன் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அதைப் பற்றிய விளம்பரம் இந்தியா முழுக்க இருக்கக்கூடிய மக்களிடம் போய் சேரும் அளவிற்கு இருந்தது.
இது திரைப்படத்துறையை அழிக்கும் செயல் என்று அன்றைய சமூக சிந்தனையாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.
1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு முதலாவது ஃபிலிம் சேம்பர் கூட்டத்தை துவக்கி வைத்த இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி பட தயாரிப்பாளர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். இதுவரை நாம் அந்நியனை எதிர்த்து சுதந்திரப் போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்ததால், படங்களில் அரசியல் கருத்துக்களை சொல்ல வேண்டியிருந்தது. இப்போது நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டபடியால் நீங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்கள் வராமல், ஜனங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு பொழுதுபோக்கு படங்களை எடுத்தால் மட்டும் போதுமானது என்றார்.
பிலிம் சேம்பர் தலைவர் சந்துலால்ஷா ஏற்கனவே வியாபாரி. கவர்னர் ஜெனரலே கூறிவிட்டார் அவர் எப்படிப்பட்ட படங்களை தயாரிப்பார்.
சந்துலால் ஷாவை பற்றி ஒரு குறிப்பு? 50களின் துவக்கத்தில் முதன்முதலாக பகல் காட்சி ஓட்டுவதற்கு அரசு அனுமதி அளித்தது. அப்போது பல பத்திரிக்கையாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் பகல் காட்சி நடத்துவதால் மாணவர்களின் படிப்பு, தொழிலாளர் பங்கேற்பு ஆகியவை பாதிக்கப்படக்கூடும். எனவே அதை அனுமதிக்க கூடாது என்று கட்டுரைகள் எழுதினர். அப்போது சந்துலால் ஷா, மதிய காட்சிகள் மூலம் காலாடிகளை அடைத்து வைப்பதன் மூலம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மேட்னி ஷோ உதவுகிறது என்றார். சினிமா படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் என்ன காலடிகளா அதாவது ரவுடிகளா என்று கல்கி காட்டமாய் கட்டுரை எழுதினார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் புராண படங்கள், சரித்திர படங்கள்..... புராண படங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அதில் கற்பனைகளுக்கு பஞ்சமே இருக்காது. சரித்திர படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ராஜா ,ஒரு மந்திரி ,ராணி இளவரசர்கள், சதி வேலைகள் பக்கத்து நாட்டுடன் போர் காதல், மோதல், கொஞ்சம் பாடல்கள், கொஞ்சமென்ன நிறையவே பாடல்கள். இறுதியில் கிளைமாக்ஸ், சுபம். சுபம்.
ஒரே அரைத்த மாவு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தன. இதற்கிடையில் திரைப்பட அரங்கு உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்பவர்கள் என சினிமாக்களை தீர்மானிக்க ஏராளமான பேர் வந்து விட்டார்கள். நிறைய சமூகப் படங்களும் வர ஆரம்பித்தன
கதாநாயகன், கதாநாயகி, வில்லன், வில்லி, ஜமீன்தார் அல்லது நிலப்பரப்பு, முதலாளி, விவசாயக் கூலி, தொழிலாளி, இவர்களுக்கு உதவும் துனைப்பாத்திரங்கள், நகைச்சுவை கோஷ்டி... என்று கதைகள் நிறைய வந்துவிட்டன. ஆனாலும் எல்லா படங்களிலும் கதாநாயகர் மட்டுமே பிரச்சனைகளை தீர்வு காணக்கூடிய ஆளாகவும் மற்ற அத்தனை பேரும் கதாநாயகனோ அல்லது வில்லனோ சொல்படி ஆடுகிறவர்களாக மட்டுமே கதைகள் வந்தன . காதல் டூயட்டுகள் சைட்டுகள் தேவைப்பட்டால் கிளப் டான்ஸ் என்று எல்லாம் கலந்த கலவையாகவே படங்கள் வந்தன
இறுதியில் முடிவு அநீதி அழிக்கப்பட்டுவிடும், அல்லது கெட்டவர் திருந்தி விடுவார். ஒன்று சுபமாக முடியும் அல்லது எப்பொழுதாவது சோகமாக முடியும் கதைகள்.
மக்களின் பங்களிப்பு இருக்காது. திரைப்படங்களில் பெரும்பாலும் மக்கள் பார்வையாளர்களாகவே இருப்பார்கள்.
படம் பார்க்கிறவர்களுடைய உணர்ச்சிகளை வடிகாலாக, பூராவும் திரையரங்குகளில் கொட்டி தீர்த்துவிட்டு வீட்டிற்கு வழக்கம் போல் உள்ள ஆளாக மாற்றி திருப்பி அனுப்பியது திரைப்படங்கள்.
காதல் காட்சிகள் என்றால் காதல் சொட்ட சொட்ட பாடல்கள்... பூங்காக்கள், பொது இடங்களில் ஆட்டங்கள், வசதிக்கேற்ப வெளிநாடுகளில் காட்சிகள்.. சண்டைகள் என்றால் ஒரு ஆள் 10 பேரை சமாளித்தது போய் 100 பேர் ஏன் ஆயிரம் பேரை கூட அழிக்கக்கூடிய அளவிற்கு மகாவீரர்களாக காட்டியது திரைப்படங்கள்.
நல்ல சமூக சிந்தனையுடன் திராவிட இயக்க படங்கள் திரு அண்ணாதுரை கலைஞர் உள்ளிட்ட பலர் கதை வசனங்களில் ஏராளமான படங்கள் வந்தன. ரசிகர்கள் இடையே ஏராளமான வரவேற்பு பெற்றது இடையிடையே இடதுசாரி சிந்தனை கொண்ட திரைப்படங்களும் வந்தன.
பெண் அடிமைத்தனத்தையும், பிற்போக்கு கருத்துக்களையும், மூடநம்பிக்கைகளையும் விதைத்து வரும் பக்தி படங்களுக்கு இடையே, பெண் விடுதலை, சாதி கொடுமைகள், சமதர்ம கோட்பாடுகள் போன்ற கருத்துக்களை ஆழமான அழுத்தமான கதை வசனங்களை கலைஞரும் திராவிட இயக்க சிந்தனையாளர்களும் தங்கள் திரைப்படங்களில் விதைத்து வந்தனர்.
முற்போக்கு சிந்தனைகள் பொதுவுடமை கருத்துக்களை வலியுறுத்திய பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள் திரைப்படங்களுக்காக எழுதினார்கள். மக்களை கவரும் தத்துவ கருத்துக்களை கொண்ட படங்களில் எம்ஜிஆர் நடித்தார். எஸ் எஸ் ஆர் போன்ற எத்தனையோ பேரை சொல்லலாம்.
தனது வசன உச்சரிப்பும், அசாத்திய நடிப்பாலும் சிவாஜிகணேசன் ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமா உலகம் உருவாக்கிய ஸ்டார் வேல்யூ சிஸ்டம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. ஊதி பெரிசாக்கி நடிகர் நடிகர்களின் படங்களின் பெருமைகளை பேச பத்திரிகைகள் போன்ற மீடியாக்கள் வந்து விட்டன. அப்புறம் என்ன ... விளைவு, பாடலை எழுதியவர் ஒருவராக இருப்பார், இசையமைத்தவர் வேறொருவர், பாடியவர் ஒருவர், வாய் அசைத்தவரின் பாடல் என்று ஊரெல்லாம் கூறும் காலம் வந்துவிட்டது. எம்ஜிஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, கமல் பாட்டு என்று கூறும் நிலை வந்து விட்டது.
சினிமாத்துறை ஊடகத்துறையின் மூலமாக நட்சத்திர போட்டிகளை உருவாக்கி ரசிகர்களிலேயே நிரந்தரமான பரபரப்பை ஏற்படுத்தியது. பாகவதர்- சின்னப்பா, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்று இன்றைய தலைமுறை வரை இடைவிடாத இந்த போட்டியை ஊடகத்துறை ஊதி பெருசாக்கி பரபரப்பாகவே வைத்திருக்கிறது.
அதேபோல திரைப்படத்துறையில் உள்ள மற்ற பிரிவினரிடமும் உள்ள போட்டிகளை தூண்டி விடுவது, நடிகர் நடிகர்களின் சொந்த வாழ்க்கையில் உள்ள விஷயங்களை பெரிது படுத்துவது என்று திரைத்துறையை பரபரப்பாகவே வைத்துள்ளனர்.
சினிமாவில் நடிப்பவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், சகல பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கடவுள்களாகவே தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட இந்தியா முழுக்க இதே நிலைதான்.. வங்கத்திலும் கேரளாவிலும் மராட்டியத்திலும் ஆங்காங்கே சில நல்ல படங்கள் எதார்த்தமான படங்கள் வந்து கொண்டே தான் இருந்தன, சத்தியஜித் ரே, மிருனாள் சென், கிரீஷ்கர்ணாட் போன்ற தலைசிறந்த இயக்குநர்கள் சர்வதேச சினிமாக்களில் தங்கள் முத்திரைகளை பதித்தனர்.
சில சமூக சிந்தனையுள்ள இயக்குனர்களை தவிர்த்து பெரும்பாலான இயக்குனர்கள் ஒரே மாதிரியான பார்முலாக்களையே பயன் படுத்தி ரசிகர்களை கவரும் வண்ணமாக ஆடல் பாடல்கள் சண்டைகள் போன்ற அம்சங்கள் நிறைந்த மசாலா படங்களையும் எடுத்து வந்தனர்.
டூயட் கள், கிளப் டான்ஸ் இல்லாத படங்களை இல்லை என்ற மாதிரி படங்கள் தான் வந்தன. ஒரு நண்பர் வேடிக்கையாக சொல்வார் நம் ஆட்கள் காந்தி படம் எடுத்தால் கூட அதிலும் டூயட்டையும் கிளப் டான்ஸ் செய்யும் புகுத்தி விடுவார்கள். ஒருவேளை இயக்குனர் அம்மாதிரி காட்சி இல்லாமல் எடுத்தால் கூட பைனான்சியர்கள் விநியோகஸ்தர்கள் திரைப்பட உரிமையாளர்கள் இம்மாதிரியான காட்சிகளை வைக்க நிர்ப்பந்தப்படுத்துவார்கள்
எந்த மொழியும் விளக்கல்ல, இந்தி படங்களை பொருத்தமட்டில் பிரம்மாண்டங்கள்... தெலுங்கு படங்களை பொருத்தமற்றிலும் அதிகமான கற்பனைகள் அல்லது புராண படங்கள்.... இது மாதிரி படங்களை வந்தன
கிரைம் செக்ஸ் வயலன்ஸ் குற்றம் காமம் சண்டை இவையே ஹாலிவுட் படங்களின் அடிப்படை அம்சங்கள். இங்கும் அதே குற்றம் காமம் சண்டை என்ற ஃபார்முலா கூட செண்டிமெண்ட் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக திரைப்படங்கள் வரலாயின.
இதற்கிடையில் இடதுசாரி சிந்தனை உடையவர் பாதை தெரியுது பார், தாமரைக் குளம், யாருக்காக அழுதான் மாதிரியான நல்ல படங்களை எடுத்தனர். இது மாதிரியான படங்கள் வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் இன்றி வெளிவருவதில் சிரமப்பட்டனர். ஊருக்கு வெளியில் உள்ள சுமாரான தியேட்டர்களில் வெளிவந்து, போதிய விளம்பரம் இல்லாமலும், மக்களுடைய ஆதரவு இல்லாமல் படுதோல்வி அடைந்தன.
எழுபதுகளில் மசாலா படங்களை தாண்டி சர்வதேச அளவில் நியூவேவ் என்று சொல்லக்கூடிய புதிய அலைகளாக மாறுபட்ட படங்கள் வர ஆரம்பித்தன. தமிழகத்திலும் கே. பாலச்சந்தர் வருகைக்கு பின் ஓரளவு வித்தியாசமான படங்கள் வர ஆரம்பித்தன.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் தண்ணீர் தண்ணீர் குடிசை அக்ரஹாரர்கள் கழுதை கழுதை போன்று எப்பொழுதாவது சமூக சிந்தனை உள்ள படங்கள் வந்தன
இடையிடையே ஓரளவு நல்ல சமூக சிந்தனை உள்ள படங்கள் ஓடினாலும், பெரும்பகுதி மசாலா படங்களே வெற்றியடைந்த. இதனால் திரைப்படத்துறையிலிருந்து பத்திரிக்கையாளர்களும் வரை வெற்றி கண்ட படங்களை வியாபார படங்கள் என்றும், நல்ல கலையம்சமுள்ள படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறாததால் கலைப்படங்கள் என்றும் பிரிக்க ஆரம்பித்தனர்.
பாரதிராஜாவின் வருகைக்கு பின் தமிழ் திரைப்படங்கள் செட்டில் இருந்து கிராமங்களுக்கு குடிபோக ஆரம்பித்தது. கிராமத்தில் உள்ள சாமானிய மனிதனுடைய கதைகளெல்லாம் படங்களாக ஆரம்பித்தன. இது ஒரு பெரும் புரட்சி என்றே சொல்லலாம்.
இதுபோல தமிழில் வந்த மிகச் சிறந்த நல்ல படங்கள், கதைகள் என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
தகவல் தொழில் நுட்ப புரட்சி உலக மாயமாக்கல் எல்லாம்ஆன பிறகு திரைப்படங்களும் முழுமையாக கார்ப்பரேட் வசம் ஆயின.
தொழில்நுட்பத்தில் காட்சி அமைப்பில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து பிரமை பூட்டும் அளவிற்கு திரைப்படத்தை வளர்ந்துள்ளது . ஆனாலும் அடிப்படை அம்சங்கள் பெரிதாக மாறிவிடவில்லை . மனிதனுடைய சிந்தனையை உயர்த்துவதாக, பண்பாட்டை மேம்படுத்துவதாக, மனிதநேய சிந்தனையை வளர்ப்பதாக , மக்களின் உண்மையான வாழ்க்கைப்பிரச்சனைகளை பேசுவதாக திரைப்படங்கள் பெரிதாக வந்துவிடவில்லை அதே மசாலாக்கள் தான் தொடர்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அபூர்வமான, வித்தியாசமான படங்கள் வரத்தான் செய்கின்றனர்.
. ஒருமுறை பொம்மை இதழில் பொது இடங்களில் பூங்காக்களில் காதலர்கள் ஆடிப்பாடி ஓடுவதும் ஒரு ஆள் 10 பேருடன் சண்டை போடுவது சாத்தியமா என்று திரு எம் ஜி ஆரிடம் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த திரு எம் ஜி ஆர் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் ஆடி பாடி காதல் செய்வதோ ஒரு ஆள் பத்து பேரிடம் சண்டை இட்டு பந்தாடுவதோ சாத்தியமே இல்லாத விஷயம் ஆனால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் ஆதலால் இவை இல்லாமல் படம் எடுக்க இயலாது என்று படாதிபதிகள் கூறுகிறார்கள் என்று ரசிகர்கள் இதை வேண்டாம் என்று சொல்லுகிறார்களோ அன்று இவை எல்லாம் நின்று விடும் என்றார்.
எளிதில் பதில் சொல்லி தப்பித்து விட்டார் நடக்கிற கதையா என்ன. ..
ஒருமுறை புதுக்கோட்டைக்கு வந்த ஒரு பிரபல நடிகரிடம், இதே கேள்வி பதிலை பற்றி கூறி எப்பொழுது மாற்றப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவர் அமைதியாக சொன்னார். திரைப்படத்தை தீர்மானிப்பது பட தயாரிப்பாளர்கள், பைனான்ஸ் செய்பவர்கள், பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று நான்கு அரக்கர்கள் வசம் உள்ளது. அதை தாண்டி இதையெல்லாம் மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அத்தி பூத்தார் போல் வரும் நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் பெருமளவில் ஆதரித்தால் மட்டுமே இந்த போக்கு மாறலாம் என்றார்.
ஒருமுறை புரட்சி கவிஞர் பாரதிதாசன் சினிமா துறையில் நுழைந்து தான் பட்ட அவதிகளை வைத்து அருமையாய் ஒரு கவிதை எழுதி இருந்தார்..
"".......
என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!........
.........................
ஆங்கில ப்ரசங்கம்!................
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
.........
. பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!.
நான் இதுவரை வந்த படங்களில் நல்ல படங்கள் இது, கெட்ட படம் இது என்று பட்டியலிட வரவில்லை. பொதுவான அதனுடைய திசைவழிப் போக்கை தான் கூற வந்துள்ளேன்
இலக்கிய துறைக்கே வழக்கமான வாதம் தான் இது. கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்ற கேள்வி தான் அது. சமூக சிந்தனையும் மனிதனையும் மேம்படுத்துகிற கலை தான் மக்களுக்கான கலை. திரைப்படத் துறை துவங்கையிலே புராணம் படக்கதைகளை படமாக்கியவர்கள் கையில் ஒரு சினிமா மொழி இருந்தது. பின்னர் தேசிய உணர்வும் சமூக சிந்தனையும் உள்ளவர்களுடைய மொழி ஒன்று வந்தது. பின்னர் பெரிய பெரிய திரைப்பட முதலாளிகளுடைய சினிமா மொழி வந்தது. இப்போது உலகமயமாக்களின் பின் கார்ப்பரேட்டுகளின் சினிமா மொழி உலவிக் கொண்டிருக்கிறது. உண்மையாக மக்களிடம் வாழ்க்கையை மேம்படுத்தும், சிந்தனையை வளர்க்கும், மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும், பூவுலகை நேசிக்கும், சமாதான சகவாழ்வை நேசிக்கும் சினிமா மொழி எப்பொழுது, எப்படி வரப்போகிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
நல்ல படங்கள் வரவே இல்லை என்று சொல்ல முடியாது. இடையிடையே நிறைய நல்ல படங்கள் எல்லா மொழிகளிலும் வந்திருக்கின்றன.
ReplyDeleteஇந்த பதிப்பின் நோக்கம் நல்ல படம் வரவே இல்லை என்பது அல்ல. ஸ்டார் வேல்யூ சிஸ்டம் உருவாக்கியுள்ள அதீதமான சண்டைக் காட்சிகள், அறிவுக்கு பொருந்தாத காட்சிகள், எதார்த்தம் இல்லாத பாடல்கள் கொண்ட படங்கள் தான் அதிகமாக வெற்றி அடைகின்றன. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய சினிமா மொழி தேவை என்பது மட்டுமே.
Delete