சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 14 February 2025

அக்கா

 

மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடும்பங்களும் உண்டு. ஏழை குடும்பங்களும் உண்டு. 

நாங்கள் நீண்ட காலமாக குடியிருந்த ருக்மணிபாளைய வீட்டினை இடித்து புதிதாக வீடு கட்டவிருப்பதால் எங்களை காலி செய்ய சொல்லி விட்டார்கள். அதனால் கான்பாளையத்தில் இந்த காம்பவுண்டு வீட்டில் கூடியேறினோம்.

அப்போது நான் தியாகராஜர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஓரளவு சுமாராக படிப்பேன். அப்போது அந்த காம்பவுண்ட் வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. சரசுஅக்கா குடும்பம் தான் அது. சரசு அக்கா வீட்டுக்காரர் மணிசார் மாலை முரசு பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் அதிகம் பேசியது இல்லை ஏனென்றால் அவர் பத்திரிகை பணி என்ற முறையிலே எப்பொழுதுமே பரபரப்பாக வேலை நிமித்தமாக அலைந்து கொண்டே இருப்பார். 

சரசு அக்காவிடமும் அவர்கள் பிள்ளைகளிடமும் தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பேன. அப்போது மாலைமுரசு பத்திரிக்கையில், தினசரி எஸ்எஸ்எல்சி கேள்வி பதில் பிரசுரிக்கப்பட்டு இருக்கும். அக்கா தினசரி பத்திரிக்கையை வந்தவுடன் என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று என்னிடம் கொடுத்து கேள்வி பதில்களை படிப்பதற்கு கொடுப்பார். 

பொதுவாகவே நான் வீட்டில் அதிகம் படிப்பதில்லை. நான் படிக்கும் வரை கொஞ்சம் வித்தியாசமானது. வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்பேன. சந்தேகம் ஏற்பட்டால் அப்பொழுதே அதை தெளிவு படுத்திக் கொள்வேன். என்னுடைய சக மாணவர்கள் சிலரை உட்கார வைத்துக் கொண்டு, கேள்வி கேட்டு பதில் சொல்லுதல் என்று கலந்துரையாடலாகவே படித்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்தது. சில நண்பர்கள் என்னுடன் படிப்பதற்கு பிரியப்பட்டு வீட்டில் அழைத்து சென்றல்லாம் பாடங்களைப் பற்றி கேட்டுக் கொள்வார்கள். ஆதலால் அவர்கள் கொடுக்கும் பத்திரிக்கையை வாங்கி கடகடவென்று முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை புரட்டி விட்டு திருப்பி அனுப்பி விடுவேன். சரிதான், படிப்பு லட்சணம் அவ்வளோதான் என்று அவர்களும் முடிவு கட்டி, நன்குபடிக்க புத்திமதி சொல்லுவார்கள். தேர்வு முடிவுகள் அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் தான் வரும். அதுவும் குறிப்பாக மாலை பத்திரிகைகளில் தான் வெளிவரும். ரிசல்ட் பார்ப்பதற்கு மணி சார் என்னை தன்னுடைய மாலைமுரசு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அதிகம் சுவாரஸ்யம் இல்லாமல் தான் சென்றேன். 

சரி பையன் பயத்தோடு இருக்கிறான் என்று நினைத்து தட்டிக் கொடுத்து வா பார்க்கலாம் என்று கூட்டிச்சென்றார். என்னுடைய கவலை எல்லாம் பாஸ் பண்ணுவதில் இல்லை, எவ்வளவு மார்க் வாங்க போகிறேன் என்ன செய்யப் போகிறேன் என்பது தான். 

ரிசல்ட் பாஸ் என்றவுடன் வாழ்த்தி அனுப்பினார். இரண்டு மூன்று நாட்களில், பள்ளியில் மதிப்பெண் பட்டியல் ஒட்டினார்கள். மார்க்கை குறித்து வந்தேன். எனது வகுப்பில் முதல்மதிப்பெண். வீட்டுக்கு வந்தவுடன் சரசக்கா தான் முதலில் எவ்வளவு மார்க் என்று கேட்டார்கள். 450 என்றேன். நல்லது என்று வாழ்த்தி அடுத்து என்ன படிக்கப் போகிறாய் என்று கேட்டார்கள். என்னுடைய குடும்ப சூழ்நிலை மேற்கொண்டு படிக்க முடியுமா என்று தெரியவில்லை என்றேன். 

மணி சார் வீட்டுக்கு வந்தவுடன் சரசக்காவிடம் என்னுடைய மார்க்கைப்பற்றி விசாரித்திருக்கிறார். 450 மார்க் என்றவுடன் சந்தோஷப்பட்டு என்ன படிக்கப் போகிறான் என்று கேட்டிருக்கிறார். 

அக்கா அவன் படிக்க பிரியப்படவில்லை எங்காவது வேலைக்கு செல்லலாம் என்று கூறுகிறான் என்றிருக்கிறார். இவ்வளவு நல்ல மார்க்கை வைத்துக் கொண்டு ஏன் அவன் வேலைக்கு போக வேண்டும் படிக்கச் சொல்ல வேண்டியது தானே என்று சார் கேட்டிருக்கிறார். எனது குடும்ப சூழ்நிலை பற்றி அக்கா சொன்னவுடன் அவன் வேலைக்கு போகிற மாதிரி நல்ல படிப்பாக படிக்க சொல்லலாம் என்று கூறிவிட்டார். 

அடுத்த நாள் காலை என்னை அழைத்து வேலைக்கு போகிற மாதிரி நல்ல படிப்பாக சேர்த்து விடுகிறேன் படி என்று கூறினார். அன்றே என்னை மதுரை அரசினர் பாலிடெக்னிக்கு அழைத்துச் சென்று நேரடியாக முதல்வரிடம் அறிமுகப்படுத்தி பையன் நானூற்றி ஐம்பது மதிப்பெண் பெற்றிருக்கிறார் அவன் என்ன படிக்கலாம் என்று கேட்டவுடன், முதல்வர் 450 மார்க் நிச்சயமாக டிப்ளமோ கிடைக்கும் எந்த டிப்ளமோ படித்தாலும் அவனுக்கு வேலை கிடைத்துவிடும் என்று சொன்னார். 

மதிப்பெண்பட்டியலை வாங்கி பார்த்தவுடன் அவருக்கு முகம் மாறிவிட்டது. ஏனென்றால் நான் எடுத்திருந்தது உயிரியல் பிரிவு. கணக்கு அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும் உயிரியல் படிப்பிற்கு பாலிடெக்னிக்கில் வேலை இல்லை.

பையன் நன்றாக மதிப்பெண் பெற்று இருக்கிறான் ஆனால் உயிரியல் படிப்பிற்கு நமது மதுரை பாலிடெக்னிக்கில் படிப்பு ஏதும் இல்லையே நன்றாக படிக்கிறான் உதவி செய்ய முடியலையேஎன்று வருந்தினார். தூத்துக்குடி பாலிடெக்னிக்கில் கடல்சார்ந்த டிப்ளமா படிப்பு இருக்கிறது. அங்கு அப்ளை செய்தால் நிச்சயமாக இடம் கிடைக்கும் என்றார். வெளியூர் சென்று படிக்கும் அளவிற்கு வசதி இல்லை என்று சொன்னவுடன் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார். 

மறுநாளே மணி சார் என்னை நேரடியாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று எனது மதிப்பெண்ணை கூறி என்ன படிக்கலாம் என்று கேட்டவுடன், மருந்தியல் பட்டய படிப்பு படிக்க சொல்லுங்கள் உடனே வேலை கிடைக்கும் என்றார்.

நானும் மருந்தியல் டிப்ளமோ படிப்பிற்க்கு அப்ளிகேஷன் பட்டவுடன், எனது அப்ளிகேஷன் நம்பரை குறித்து வாங்கிக் கொண்டார். ஞாபகமாக முதல்வரிடம் இந்த அப்ளிகேஷன் நம்பரை கொடுத்துவிட்டு, அவ்வப்போது நினைவுபடுத்தவும் செய்தார். 

அவர் சொன்னபடியே எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, டிப்ளமோ படித்தேன். படித்து முடித்த உடனேயே எனக்கு வேலை கிடைத்தது. எனது குடும்பத்திற்கு பேரு உதவியாக அமைந்தது. நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் நிச்சயமாக சரசு அக்கா, மணி சார் அவர்களுடைய உதவியினால் மட்டும் தான். இந்த உதவிக்கு நான் வாழ்நாள் முழுவதும் சரசுஅக்கா, மணி சார் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.

நானும் புதுக்கோட்டைக்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. மணி சார் சென்னை தேவி பத்திரிக்கைக்கு சென்று விட்டார். திருப்பி சந்திக்கவே முடியவில்லை. முகவரி எதுவும் தெரியவில்லை. யார் யாரிடமோ விசாரித்தேன். எப்படியோ மதுரை பத்திரிக்கைதுறையில் வேலை செய்யும் திரு தியாகராஜன் அவர்கள் உதவியால் தேவிமணி சாரோட பையன் குமாரின் தொலைபேசி எண்ணை பெற்று நீண்ட வருடங்களுக்கு பிறகு சாரிடம் பேசினேன். 

காலத்தினால் செய்த உதவி சிறிதனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்றார் வள்ளுவர். 

அவர்கள் எனக்கு செய்தது சிறிய உதவி அல்ல பேருதவி. 

 என் வாழ்க்கையே உயர்த்திய மாபெரும் உதவி. 

6 comments:

  1. Super brother,at that time ellorumae higher studies kku kastapattu namakkagavae emergency vanthathu naam luck illa

    ReplyDelete
  2. Super memories sir

    ReplyDelete
  3. அக்கா எப்போதும் வழிகாட்டிதான். மணி மணியாய் படிப்பவனுக்கு உடன் மணியே கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்.

    ReplyDelete
  4. இப்பவும் புதுக்கோட்டையில்தான் இருக்கிறீர்களா?  நலம்தானே?

    ReplyDelete
  5. நலமா? அ. குமரன் அறிவோளி

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...