காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”
காதலை வேண்டிக் கரைகின்றேன்
இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”
“காதலோ காதல்
இனிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல்”
என்கிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதி.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகும்.”
என்கிறார் பாவேந்தர். பாரதிதாசன் .
“நீ காதலிக்காவிட்டால் என்ன?
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்புதான்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் வரிகள்...
காதலைப் பற்றி சிந்திக்காத பேசாத ரசிக்காத மனிதர்களே உலகில் இல்லை எனலாம் எத்தனையோ வகையில் காதல் உண்டு. ஆனால் காதலை நிஜ வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தான் கேள்வி.
இலக்கியம் படித்தவர், படைத்தோர் எல்லோருமே காதலைப் பற்றி படிக்காமல், ருசிக்காமல் இருந்ததில்லை. அது எந்த மொழி இலக்கியமாக இருந்தாலும் சரி,. மேலைநாட்டிலிருந்து ரோமியோ ஜூலியட் ஆகட்டும் அல்லது வடக்கே லைலா மஜ்னு ஆகட்டும் இங்கே அம்பிகாவதி அமராவதி காதலாகட்டும், இப்படி நிறைவேறாது காதலில் இருந்து, ஒருதலைக்காதல், வெற்றி பெற்ற காதல்வரை பல காதலைப் பற்றிய கதைகள், கவிதைகள், காவியங்கள், காப்பியங்கள் என ஏராளமாய் உண்டு. தமிழ் இலக்கியத்திலே அக வாழ்க்கையைப் பற்றி நிறைய பாடி இருக்கிறார்கள். அதிலும் காதலை பற்றி தொடாத பகுதிகள் இல்லை எனலாம்.
புராணங்களிலும் ஏராளமான காதல் கதைகள் உண்டு. மத இலக்கியங்களிலும் நிறைய காதல் கதைகள் உண்டு. நாடகங்கள், திரைப்படங்கள் என்று எங்கு பார்த்தாலும் காதலை தொடாமல் கதைகளே இல்லை எனலாம்..அநேகமாக படிக்கிறார்கள், ரசிப்பவர்கள் காதலை எதிர்த்ததே இல்லை எனலாம்.
திரைப்படங்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பெரும்பகுதியான திரைப்படங்களின் கதைகளை காதலை ஒட்டித்தான் அமைந்திருக்கிறது.
உலகில் யாருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ திரைப்பட கதாநாயகர், கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் மிக ஏராளமாய் உண்டு. நான் திரைப்பட காதலைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. எல்லோருமே பார்த்து, பார்த்து, பார்த்து சலித்த விஷயங்கள் தான். அதிலும் திரைப்பட கதாநாயகர்கள் கதாநாயகிகளோடு ஏராளமாய் பாடல்கள் பாடுவார்கள்.
தனியாகவும், டூயட்டுகளாகவும் காடுகளில், மேடுகளில், பொது பூங்காக்களில், வெளிநாடுகளில், இயற்கை காட்சிகளில், ஏன் வறண்ட பாலைவனங்களில் கூட காதல் பாட்டுகளை பாடித் திரிகிற மாதிரி காட்சிகள் நிறைய பார்த்து விட்டோம்.
ரசித்து மயங்கி மீண்டும், மீண்டும் பாடல்களைக் கேட்டு ரசிக்கிறோம், திரைப்படங்களில் அவர்களுடைய காதல் வெற்றி மனதுக்குள்ளேயே உள்ளூர் சாமியிலிருந்து, எல்லா சாமியையும் வேண்டிக் கொள்வோம். அவர்களுடைய காதலுக்கு தடை வரும்போது பரிதவித்து போய் எப்படியாவது அவர்களின் காதல் நிறைவேற வேண்டும் என்று துடிதுடிப்போடு திரைப்படங்களைப் பார்ப்போம்.
திரைப்படங்களில் பள்ளி பருவத்திலேயே ஆரம்பித்து பாடையில் போற வரை எப்போது வேண்டுமானாலும் காதல் வரும். மோதலில் இருந்து வரும் காதல், பார்த்தவுடன் வரும் காதல், பார்க்காமல் வரும் காதல் இப்படி விதவிதமாய் வரும். அப்படி காதல் காட்சிகள் வரும்போது ச்சீ சீ இது தவறு என்று நினைக்க மாட்டோம்.
மதவேறுபாடுகள், ஜாதி பேதங்கள், ஏழை பணக்காரன் வித்தியாசம், நாடு இது போன்ற எல்லா முரண்பாடுகளையும் தூக்கி எறிந்து, ஏராளமான காதல் கதைகளை எல்லாம் பார்த்து பார்த்து ரசிக்காத ரசிகனே இல்லை எனலாம்..
அந்தக் காலம் பாகவதர், சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், விஜய், அஜீத் சூரியா என இன்று வரை எல்லா நடிகர்களுமே காதலை ஆதரித்த வேசத்தில் தான் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ரசிகர்களும் விழுந்து, விழுந்து ரசித்து இருக்கிறார்கள்..
இவர்களின் காதலுக்கு விரோதமாக நடிக்கும் வீரப்பா நம்பியார் போன்ற வில்லன் வேடத்தில் நடிப்பவர்களை திட்டித்தீர்ப்பார்கள்....
ஆனால........
சொந்த வாழ்க்கையில் தம்பியோ, தங்கையோ, மகனோ, மகளோ, உறவினர் காதலித்தார்களென்றால்......
அவ்வளவு தான்... கொலையே விழும். உதாரணமாக ஒரு செய்தி...
ஒரு தமிழ் வெற்றிப்பட இயக்குனர் ஏராளமான படங்களை எடுத்துள்ளார். அதில் அதிகம் காதல் கதைகள் தான். பள்ளி பருவத்திலே காதலித்து வீட்டை விட்டு ஓடுவார்கள். இறுதியில் காதல் புனிதமானது என்று கதை சொல்லுவார். ஆனால் அவர் வீட்டு பையன் ஒரு பெண்ணை காதலித்தபோது, அது வெறும் இளம் பருவக் கோளாறு என்றார். நான் அவரை குறை சொல்லவில்லை. இதுதான் சமூகத்தின் லட்சணம்.. .
சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதற்குப் பின்னரும் காங்கிரஸ்காரர்களிடமிருந்து பொதுவுடைமை வாதிகள், திராவிட இயக்கத்தினர் எல்லோருமே மத பேதங்களை எதிர்த்து, சாதி கொடுமைகளை எதிர்த்து நிறைய பேசி இருக்கிறார்கள். கலப்பு திருமணங்களை ஆதரித்து நடத்தி வருகின்றனர். திராவிட இயக்கத்தினர் நிறைய சுயமரியாதை திருமணங்களையும் நடத்தி வருகின்றனர். திரைப்படத் துறையில் கால் பதித்து சமூக சிந்தனைகளோடு நிறைய படங்கள் எடுத்திருக்கிறார்கள். காதலை நிரம்பவும் ஆதரித்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று நிலைமை என்ன. முன்னெப்போதும் விட அதிகமாக மதவெறியும், ஜாதி வெறியும் தலை விரித்து ஆடுகிறது. யாருக்குமே தெரியாத காதலர் தினம் இன்று ஒரு பக்கம் கொண்டாடப்படுகிறது. மறுபக்கம் அதை எதிர்த்து வன்முறை தாண்டவம் ஆடுகிறது.
காதலை எதிர்த்து லவ் ஜிஹாத், நாடக காதல் என்றெல்லாம் புதிய புதிய வார்த்தைகளெல்லாம் கண்டுபிடித்து கட்சித் தலைவர்களே பேசுகிற நிலைமை.
சாதி மறுத்து திருமணம் செய்து கொள்ளக் கூடிய தம்பதியினரை ஆணவக் கொலை செய்கின்ற அவலங்கள் இப்போது அதிகமாக அரங்கேறுகின்றன. இதில் உயர் சாதி இந்துக்கள் மட்டும் என்றில்லை, பிற்பட்ட சாதியினரும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் அவர்களுக்குள்ளே இருக்கின்ற பிரிவுகளைக் கொண்ட காதல் திருமணம் செய்பவர்களை கடுமையாக தாக்குகின்ற சூழல் எல்லாம் உள்ளது.
இதை நியாயப்படுத்தி பெற்றவர்களுக்கு தெரியாதா திருமணம் செய்து வைக்க என்றெல்லாம் நியாயங்கள் பேசப்படுகின்றன. காதல் என்பது யாருக்கு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. காலம் காலமாக பேசப்படுகிற, நடந்த, நடக்கிற விஷயம்தான்.
ஜாதி பார்த்து, படிப்பு பார்த்து, வசதி பார்த்து, அந்தஸ்து பார்த்து, ஜாதகம் பார்த்து வந்தால் அதற்கு பெயர் காதல் அல்ல, அது வெறும் ஏற்பாடு தான். செட்டப் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
ஏன் பெற்றவர்கள், ஜாதி, படிப்பு, அந்தஸ்து, குலம் கோத்திரம், வசதி எல்லாம் பார்த்து வைத்த திருமணங்கள் படு கேவலமாக தோல்வியில் முடிவதில்லையா... ஏன் காதல் திருமணங்கள் கடைசி வரை வெற்றியில் முடிவது இல்லையா.. அனைவரும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை.
ஆனால் இலக்கியத்தில், நாடகத்தில், சினிமாவில், எல்லாவற்றிலும் காதலை ரசித்து விட்டு, ஆகா ஓஹோ வென்று ரசித்து விட்டு என்று நிஜ வாழ்க்கையில் மிருகத்தனமாய் எதிர்ப்பதை தான் கண்டிக்க வேண்டி உள்ளது..
ஜாதி மதங்களை தாண்டி வெளியில் உள்ள பெண்ணை காதலித்தால் தான் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள் என்று இல்லை. சொந்தத்திற்குள்ளேயே, ஏன் கிட்டத்தட்ட நிச்சயம் செய்த குடும்பத்தில் கூட பெற்றோர்களுக்கு இடையே வரும் பூசலால் காதலையும் திருமணத்தையும் துண்டித்து விட்ட கதைகள் கூட நம் நாட்டில் உண்டு....
.......
சில வருடங்களுக்கு (2006) முன்பு ஜெயா தொலைக்காட்சியில் எதேச்சையாக பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் என்ற காவியம் பொன்முடி என்ற பெயரில் திரைப்படமாக ஒலிபரப்பப்பட்டபோது காணநேர்ந்தது.
அப்படத்தை கண்டு விட்டு நான் கிறுக்கிய சில வரிகள்.....
பட்டினத்து வணிகன் மகன் பொன்முடி அம்மான் மகளை மணப்பதற்கு தடை.. மைத்துனர்களுக்குள் வந்த வம்பு சண்டையால்...
பிரித்திட துடித்தான் அம்மான்.
மகனை காத்திட அனுப்பி வைத்தான் அப்பன், குலத்தொழிலாய் வடக்கு நோக்கி.....
ஆரிய துறவிகள்
யாகத்தின் பெயரால்
அடித்த கொள்ளை
வடித்த கொலையால் அநியாயமாய் மாண்டான் வணிகன் மகன் பொன்முடி..
அத்தானை காண
ஓடிவந்த பூங்கொடியாள் கண்டனள் பிணமாய் ஆங்கே...
எதிர்பாரா முத்தத்துடன்
இனைந்தனர்
இனிய காதலர்
இறப்பின் மூலம்.....
அருமைஅருமை
ReplyDelete