சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 16 April 2025

பாவேந்தரா இப்படி எழுதினார்_ ?

பாவேந்தரா  இப்படி எழுதினார் ? 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
' நித்திரையில் இருக்கும் தமிழா' எனப் பாவேந்தர் பெயரில் ,  உருச்சிதைந்த சில வரிகளைப் புத்தாண்டு குறித்துப் பாவேந்தர் எழுதிய பாடலாகப் பலரும்  உலவ விடுகின்றனர்.
அது  பிழையான செயல்! 
அது  பிழையான பாடல் .

அந்த வரிகளின் முழுமையான வடிவம் 
இந்தப் பாடல் :  _____________________________  
தமிழ்ப்புத்தாண்டு
தை முதல்நாளே
புரட்சிப் பாவேந்தர்
பாரதிதாசன்

( எண்சீர் ஆசிரிய விருத்தம் )

அகத்தியனும் காப்பியனும்
தோன்றும் முன்னர்
அரியதமிழ்த் தலைக்கழகம்
தோன்றும் முன்னர்
மிகுந்தகடல் குமரியினை
மறைக்கும் முன்னர்
விண்ணுயர்ந்த பனிமலைதான்
நிமிரும் முன்னர்ப்
பகுத்தறிவின் துணையாலே
அரசி யற்றிப்
பல்கலையின் ஒளியாலே
உலகம் காத்துத்
திகழ்பழைய தமிழகமே
இடைநாள் தன்னில்
திராவிடநா(டு) எனப்போற்றும்
என்றன் அன்னாய்!

பத்தன்று  நூறன்று
பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாயத் 
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு  தைமுதல்நாள்
பொங்கல் நன்னாள்!
போற்றிவிழா கொண்டாடி
உன்ந லத்தைக்
கத்துகடல் கவர்ந்ததுவோ
பகைவர் கூட்டம்
கவிழ்ப்பதற்கு முனைந்ததுவோ
காக்கும் போரில்
செத்தவர்கள் பலநூறோ
மறவா வண்ணம்
செந்தமிழின் சொற்களிலே
செதுக்கி வைத்தோம்

தெலுங்குமலை யாளம்கன்
னடம்என் கின்றார்
சிரிக்கின்றோம் அன்னாய்நின்
மக்கள் போக்கை !
நலங்கெட்டுப் போவதில்லை
அதனால் என்ன
நான்குபெயர் இட்டாலும்
பொருள்ஒன் றன்றோ
கலங்கரையின் விளக்குக்கு
மறுபேர் இட்டால்
கரைகாணத் தவறுவரோ
மீகா மன்கள் ?
இலங்குதிரு வே! வையம் 
செய்த அன்னாய்
எல்லோரின் பெயராலும்
உனக்கென் வாழ்த்தே

தமிழகமே திராவிடமே
தைம்மு தல்நாள்
தனிலுன்னை வாயார
வாழ்த்து கின்றேன்
அமிழ்தான பாற்பொங்கல்
ஆர உண்டே
அகமகிழ்ந்து தமிழாலே
வாழ்த்து கின்றேன்
எமைஒப்பார் எவருள்ளார்?
எம்மைவெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை
பிறப்ப தில்லை
இமைப்போதும் பழிகொண்டு
வாழ்ந்த தில்லை
எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்
வாய்ப்பேச் சல்ல !

அன்றொருநாள் வடபுலத்தைக்
குட்டு வன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில்
இலையில் இட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான் 
அதைப்போ லத்தான்
இன்றுண்டேன் அன்றுன்னை
வாழ்த்தி னான்போல்
நன்றுண்டேன் வாழ்த்துகின்றேன்
எனைப்பெற் றோயே
நல்லுரிமை உன்மூச்சில்
அகன்ற தில்லை
பொன்னேஎன் பெருவாழ்வே
அன்பின் வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத்தேன் 
நன்று வாழ்க !

சூலூர் பாவேந்தர்பேரவை

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...