டனால்
கோயில் மணி சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் பூவாத்தா. நேற்று இரவு சரியான தூக்கம் இல்லாததால் கண் விழித்து பார்க்க சிரமப்பட்டாள். அசதியில் எழுந்திருக்க சோம்பல் பட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். நேற்று அவளது இளைய மகளை பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவளுக்கும் ஓரளவு பிடித்து தான் போயிருந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் பிடி கொடுக்காமல் சென்றுவிட்டனர். அவளைப் பொருத்த மட்டிலும் வந்த குடும்பத்தார் பெரிய வசதி இல்லை என்றாலும் வறுமையில்லை. சொந்தமாக வீடு இருந்தது. கொஞ்சம் நிலம் , சம்பாதிக்கும் பசங்க அப்பா அம்மா மட்டுமே வேறு பெண் குழந்தைகள் இல்லை அதனால் நாத்தனார் தொல்லை இருக்காது நல்லபடியாக முடிந்தால் தேவலாம் என்று நினைத்தாள்.
மூத்த மகளைக் கட்டிகொடுத்து பாதி நாள் வாழ வெட்டியாய் தாய்வீட்டிலும்,மீதி நாட்களில் சண்டையும் சச்சரவுமாய் புருஷன் வீட்டிலும் கழித்து வந்தாள். கையில் ஒரு போட்ட பிள்ளையும் , வயிற்றில் ஒரு பிள்ளையுமாக தற்போது இருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்கும் போது அஞ்சு பவுன் நகை, சீர் செனத்தி என்று நன்றாக தான் செய்து அனுப்பினாள். இருந்தாலும் அவள் சண்டை சச்சரவோடு வாழ்வது பூவாத்தாவுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. மருமகன் நல்லவன் தான் இருந்தாலும் குடிச்சிட்டான்னா அவன் அட்டகாசத்தை தாங்க முடியாது எப்படியோ மக சமாளிச்சு ஓட்டி பாப்பாள். முடியாத பட்சத்தில் தாய் வீட்டுக்கு வந்துவிடுவாள். எப்படியோ பூவாத்தா சமாதானப்படுத்தி மீண்டும் மக்களை புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். இது எப்பவும் நடக்கிற தொடர்கதை தான்.
பூவாத்தாவின் மருமகன் ஏதோ ஒரு ஜாதி கட்சியில் உள்ளூர் பிரமுகராக இருந்து வந்தான். பெரிதாக ஏதும் வேலைக்கு போக மாட்டான். கட்டை பஞ்சாயத்து அப்படி, இப்படி என்று பணம் சம்பாதிப்பான். வெட்டி பீத்தலுக்கு செலவு செய்து விடுவான். அதில் அவளுக்கும் பெருமை தான். அவளுக்கும் தாங்கள் வீர ஜாதி , ஆண்ட பரம்பரை என்ற பெருமை பீத்தல் உண்டு. அதனால் மருமகனை தான் ஆதரித்து பேசுவாள்.
பூவாத்தா புருஷன் அந்த காலத்தில் பெரிய ஆளாகத்தான் இருந்திருக்கிறான். ஒரு ஜாதி கலவரத்தில் வெட்டுப்பட்டு ஊனமாய் போனதால், பெரிதாக வேலை செய்து ஏதும் பணம் சம்பாதிக்க முடியாத நிலை.
பூவாத்தாவுக்கு ஒரே மகன் மேல்நிலைப்பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறான் இன்னும் சம்பாதிக்கும் வயது வரவில்லை. பூவாத்தா புருஷன் பெயரில் கொஞ்சம் நிலம் இருந்தது. பெரிய விவசாயம் என்றெல்லாம் சொல்ல முடியாது. பலாப்பழ சீசன் வந்தால் பலாப்பழம் வாங்கி விற்று ஏதொ பிழைப்பு நடத்திக் கொள்வாள் . அரசு இலவச அரிசி போடுவதால் வயிற்று பசி பிரச்சினை இல்லை. நூறு நாள் வேலை... மற்ற வகையில் கஷ்டம் தான். பூவாத்தாவின் வீடு குடிசை வீடு தான். வெயில் காலம் பெரிய பிரச்சனை இல்லை. மழைக்காலம் வந்தால் சிரமம் தான். நேற்று மகளை பெண் பார்க்க வந்த போது லேசாக தூறல் வருவது போல் இருந்தது. கொஞ்சம் பயந்து கொண்டுதான் இருந்தாள். நல்ல வேலையாக மழை வரவில்லை. தப்பித்துக் கொண்டாள். இருந்தாலும் சொந்தமாக ஒண்ட குடிசை இருக்கிறது என்று கொஞ்சம் பீத்தல் தான்.
அவள் வீட்டு பக்கத்தில் ஒரு அம்மன் கோவிலில் இருந்தது. அந்த கோவில் பழமையானது என்றாலும், ஒருவருடைய பட்டா இடத்துக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பாழடைந்து இருந்த அந்த கோயிலில் சமீபத்தில் தான் புதுப்பித்து கட்டி இருந்தனர். பெரும்பகுதி அவளது ஜாதிக்காரர்கள் மட்டுமே கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதே ஊரை சார்ந்த சேரி மக்களும் அந்த அம்மனை கும்பிட விரும்பினார்கள்.
அதனால் அந்த கோயிலை புதுப்பித்து கட்டும் போது தாங்களும் பணம் தருகிறோம் என்றார்கள் சேரி மக்கள். சேரி மக்கள் பணம் கொடுத்து அந்த கோயிலை கட்ட முடியாது என்று அவளை சாதிக்காரர்களே முழு செலவு செய்தார்கள். பூவாத்தா தன் பங்கிற்கு வீட்டில் இருந்த ஆட்டை வித்து கோயிலுக்கு பணம் கொடுத்தாள்.
அந்த ஊரில் இருந்து ஒரு பெரியவர் சமரசம் பேசி
பார்த்தார். அவர் இவள் சாதிக்காரர் என்றாலும் பொதுவான மனிதர். எல்லா சாதிக்காரர்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று போராடக் கூடியவர். அதேபோல மக்கள் பிரச்சினைகளுக்காகவும் போராடக் கூடியவர். எப்பொழுதுமே சிவப்பு துண்டு தான் போட்டிருப்பார். அவர் சொன்னால் ஓரளவுக்கு எல்லாருமே கேட்பார்கள். இருந்தாலும் இந்த கோயில் பிரச்சனைகள் அவர் சொல்வதை யாரும் கேட்க தயாராக இல்லை. அம்மன் சாமி என்றால் எல்லாருக்கும் பொதுவானவள் தானே. அவளை வணங்க ஏன் தடை சொல்ல வேண்டும் என்று சொல்லிப் பார்த்தார். யாருமே கேட்கவில்லை. ஏதோ ஒரு பிரச்சனைக்காக முஸ்லிம்களோடு அவர்கள் மோதும் போது, இந்துக்கள் எல்லோரும் ஒன்று தானே வாருங்கள் என்று இதே சேரி மக்களை கூப்பிட்டவர்கள் அம்மன் கோயிலுக்கு மட்டும் விட முடியாது என்று விடாப்பிடியாக இருந்தார்கள். சிவப்பு துண்டுகாரர் சாமி நம்பிக்கை இல்லாதவர். அவர் என்ன கோயில் விஷயத்தில் சொல்வது என்று அவரை புறக்கணித்து விட்டனர். அவர் சேரி ஜனங்களிடம் உங்களை உள்ளே விடாத கோவிலுக்குள் ஏன் போக வேண்டும். விட்டுவிட்டு போங்களப்பா என்று சொல்லிப் பார்த்தால் அவர்களும் கேட்கவில்லை. சேரி ஜனங்களில் படித்து வேலைக்கு சென்று ஓரளவுக்கு வசதியானவர்கள், பிரச்சனையை விடவில்லை. நம்மை இந்து என்று எல்லாவற்றுக்கும் கூப்பிடுகிறார்களே ஏன் கோவிலுக்குள் போக கூடாது என்று, போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று விடாப்பிடியாக மோதிப் பார்த்தார்கள். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து அந்த ஊருக்கு வந்து கோயில் காரர்கள் எல்லாம் பேசி பார்த்தார்கள். கேட்கவில்லை கோர்ட்டும் சேரி சனங்கள் கோவிலுக்கு போவதை யாரும் தடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இந்த பிரச்சனை பெரிய புகைச்சலை ஊருக்குள்ளே உருவாகி இருந்தது. ஒரு வாரமாக போலீசார் வருகை தந்தது..
பூவாத்தா என்று யாரோ கூப்பிடுவது போலிருந்தது.
வெளியே போனபோது பக்கத்து வீட்டுக் கிளவி நின்று சத்தமாய் இந்த ......நாய்ங்க நம்ம ஆத்தா கோயில்ல வந்து இஷ்டத்துக்கு சாமி கும்பிட்டு போயிருக்காங்க என்று கத்தினாள்.
பூவாத்தாவுக்கு ஆத்திரம் வந்தது. வேகமாய் முகத்தை கழுவிக்கொண்டு கிழவியும் அவளும் கோயிலுக்கு ஓடினார்கள். அவளை சாதிக்காரர்களே பெரும் கூட்டமாய் நின்று கத்திக்கொண்டிருந்தார்கள்..
ஆளாளுக்கு வந்து கெட்ட வார்த்தைகளால் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். பூவாத்தா ஆங்காரமாய் கத்தினாள்.
இந்த ........ நாய்ங்க வந்து தீட்டு படுத்தின கோயிலில் முதல் இடிச்சு தள்ளிரணும்..
எல்லாருக்கும் பொதுவான அந்த அம்மன் தன்னைக் கும்பிட வந்த சேரி ஜனங்களையும் அனுமதிக்க முடியாம, கோயிலை கட்டுன சாதிசனங்களையும் சமாதானப்படுத்த முடியாம கல்லாய் நின்று கொண்டிருந்தாள்.
தான் கும்பிட்டு வந்த அம்மனை சேரிக்காரங்க கும்பிட்டதால், சாதி பெருமையை காப்பத்த அம்மனை விட பெரிய ஆளா பூவாத்தா கத்திக்கிட்டு இருந்தாள்........
No comments:
Post a Comment