முன்னொரு காலத்தில் ஒரு பேரரசு இருந்ததாம். அந்தப் பேரரசை ஒரு மகா சக்கரவர்த்தி ஆண்டு வந்தானாம். அவன் படையெடுத்து போகிற திசையெல்லாம், எதிர்த்து போரிட தைரியம் இல்லாமல் எல்லா மன்னர்களும் அவனிடம் சரண் அடைந்து கப்பம் செலுத்தி வந்தார்கள். அவன் மகா சபையிலே ராஜகுரு, திறமை வாய்ந்த மந்திரிமார்கள், பெரிய புலவர்கள், பெரிய அறிஞர்கள் எல்லாரும் இருந்தார்களாம்.
அவனுடைய நாட்டின் பேரரசின் எல்லை என்னவென்று அவனுக்கே தெரியாத அளவுக்கு விரிந்து பரந்து இருந்தது. அவன் நினைத்ததெல்லாம் நடந்தது. அவனுடைய அவையிலே அவன் சொன்னது தான் தீர்ப்பு. அவன் சிந்தனை தான் நாட்டின் சிந்தனையாக இருந்தது. அவனுடைய அவையில் இருந்தோர் எல்லாருமே அவனுடைய ஆமாம் சாமிகளாக இருந்தார்கள். அவனுடைய செயல்பாடுகளை ஆகா ஓகோ என்று புகழ்ந்தார்கள். இவனுக்கு மேல் சிந்திக்க யாருமே இல்லை என்று ஜால்ரா அடித்தார்கள். அவனை கடவுளுக்கு நிகராக, ஏன் கடவுளுக்கு மேலாகவே பெரிய ஆளாக படம் காட்டினார்கள்.
அவனை இந்திரன், சந்திரன், ஏன் மகாவிஷ்ணுவின் அம்சம் அப்படி வாய்க்கு வந்தபடி எல்லாம் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். பாடியவர்களுக்கெல்லாம் பரிசு கிடைத்தது. ஜால்ரா அடித்தவர்களுக்கு எல்லாம் பட்டம் கிடைத்தது. இவர்களும் பதிலுக்கு மகாராஜாவிற்கு ஏகப்பட்ட பாராட்டுகள் பட்டங்கள் வழங்கி சிறப்பித்தனர். திரிபுவன சக்கரவர்த்தி அதாவது மூன்று உலகையும் ஆள்பவன் என்றெல்லாம் கூசாமல் பொய் பேசினார்கள். அவனும் வெட்கமே இல்லாமல் அவருடைய புகழுரைகளை எல்லாம் கேட்டுக் கொண்டான்.
ஒரு வருடம் மகா பஞ்சம் வந்தது. சோத்துக்கே மக்கள் தாளம் போடுகையில் மகாராஜா திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லாமல் கொண்டாடிக் கொண்டிருந்தார் . அவனுடைய பொற்காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிகிறது என்றெல்லாம் புலவர்களும், ஜால்ராக்களும் புருடா விட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த கூத்து களுக்கெல்லாம் பணம் வேண்டும் அல்லவா. மகாராஜா ஜனங்கள் மேல் வரி மேல் வரியாக போட்டார்.
பொறுத்து, பொறுத்து பார்த்து தாங்க முடியாமல், ஒரு புலவர் நேரடியாக மன்னனுடைய அவையிலே சென்று இந்த அவலத்தை எல்லாம் பாடலாக பாடினார். ராஜாவுக்கு பொறுக்க முடியவில்லை. அவரைவிட அவருடைய ஜால்ராக்களுக்கோ கோபம் அதிகமாகி கத்தினார்கள். புலவனுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கூப்பாடு பட்டார்கள். வேறு ஆளாக இருந்தால் மரண தண்டனை கொடுத்திருப்பார். புலவனுக்கு மரண தண்டனை கொடுத்தால் அவன் அறம் பாடி விட்டால் என்ன செய்வது எனவே அவனை நாடு கடத்தலாம் என்று ராஜகுரு ஆலோசனை கூறினார்.
அவனை பக்கத்து நாட்டிற்கு நாடு கடத்தலாம் என்றார் மந்திரி.
அங்கு தான் ராஜாவின் உறவினர் ஆள்கிறாரே என்றான் புலவன்.
செத்துத் தொலை என்று கோபமாய் கத்தினார் ராஜகுரு.
அங்கு தான் ராஜாவின் முன்னோர்கள் இருக்கிறார்களே என்றான் புலவன்..
மகாராஜாவுக்கு பயம்தான். அந்த காலத்தில் புலவன் அறம் பாடினால் கட்டாயம் அழிவு வந்து விடும், என்று ஒரு நம்பிக்கை இருந்ததால் புலவனின் உயிர் பிழைத்தது.
அவனை பேரரசின் எல்லையை தாண்டி விரட்டி விட வீரர்களுக்கு மகாராஜா உத்தரவிட்டான். அதன்படி அவனை கட்டிய வேட்டியோடு, வாங்கி சாப்பிடுவதற்கு ஒரு பாத்திரம் மட்டும் கையில் கொடுத்துவிட்டு நாட்டின் எல்லையை பேரரசின் எல்லையில் கொண்டு போய் அவனை விட்டு விட்டார்கள்.
அந்த அரசின் எல்லையை தாண்டி பெரிய பாலைவனம் இருந்தது. இந்த பாலைவனத்தில் ஒற்றை ஆளாய் இந்த புலவன் நடந்து போய் கொண்டிருந்தார். வெறும் பொட்டல் வெளி.... பொட்டல் என்றால் புல் பூண்டு கூட முளைக்காத பொட்டல் ... வெயிலுக்கு ஒதுங்குவதற்கு ஒரு மரம் கூட கிடையாது. ஆங்காங்கே வெறும் கள்ளிக்காடு இருந்தது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத பொட்டல்.
புலவன் நடந்து வந்த களைப்பாலும் தண்ணீர் தாகத்தாலும் துவண்டு போய் ஓரிடத்தில் அமர நினைத்தான். தூரத்தில் ஒரு சிலை இருப்பது போல தெரிந்தது. மெல்ல நகர்ந்து போய் அந்த சிலையின் கீழ் உள்ள நிழலில் அமர்ந்து கொண்டான். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் நிமிர்ந்து பார்த்தான். அது ஓர் பிரமாண்டமான சிலை. அது முன்பொரு காலத்தில் ஆட்சி செய்த ஒரு பேரரசனின் சிலையாகும். அந்த சிலைக்கு கீழே சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.....
அது அந்த மன்னனின் வீர, தீரங்களை புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது.
.....
. இந்த மன்னனின் ராஜ்ஜியத்தின் எல்லைகள் நான்கு திசைகளிலும் பரந்து விரிந்து இருந்தன........
புலவன் சுற்றி முற்றி பார்த்தான்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நான்கு திசைகளிலும் ஒரே பொட்டல் தான்..........
...... இந்த ராஜ்யத்தில் செல்வம் மலை போல் குவிந்திருந்தது.......
புலவன் திரும்பிப் பார்த்தான் .
எங்கும் தரித்திரத்தின் தாண்டவமே கண்ணுக்கு தெரிந்தது.....
..... இந்த மன்னனின் புகழ், ஆளுமை, அந்தஸ்து எக்காலத்திற்கும் அழிவற்றது.. ....
புலவன் சிலையை உற்றுப் பார்த்தான்.சிலை ஆங்காங்கே சிதிலமடைந்து கோரமாய் இருந்தது.....
..... இந்த மன்னனின் வீரத்திற்கு அடிபணியாதவர்களே இந்த உலகில் இல்லை........
புலவன் சிலையை உற்றுப் பார்த்தான்.
. அந்த சிலையில் மேலே கழுகு காக்கைகளின் எச்சம் சிதறி காய்ந்து கிடந்தது.
ஏதோ ஒரு விலங்கு அருகே வருவது போல இருந்தது.
. ஒரு நாய் ஒன்று அந்த சிலையின் மேல் சிறுநீர் கழித்து விட்டு சென்றது..
____________________________-
சிறுவயதில் என் அப்பா சொன்ன கதைகளில் ஒன்று இது .அவர்களுக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை .
இப்போது நீங்கள் யாருடனாவது ஒப்பிட்டுப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல......
No comments:
Post a Comment