சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 23 April 2025

உலக புத்தக தினம்


எனது நண்பர் ஒருவர் நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார். நான் அவரை பாராட்டி இவ்வளவு புத்தகங்களை திரட்டி இருக்கிறீர்களே என்று பாராட்டினேன் . 

அவர் சொன்னார் திரட்டியது பாதி, திருடியது மீதியென்றார்... 

நான் அவரிடமிருந்து இரண்டு புத்தகங்களை கடனாக கேட்டேன். 

அவர் சிரித்துக் கொண்டே தர மறுத்துவிட்டார். "புத்தகங்களை கடன் கொடுப்பவன் ஏமாளி" என்றார். 

"நான் நிச்சயமாக திருப்பி தந்து விடுவேன்" என்றேன்.

 "புத்தகங்களை திருப்பித் தருபவன் படு ஏமாளி" என்றார்.

இது நான் சொல்லும் வார்த்தை இல்லை, ஒரு பெரிய மேதை சொன்ன வார்த்தை என்றார்..

இன்னொரு நண்பர் இருந்தார். அவர் மிக்க நல்லவர்.யார் கேட்டாலும், எப்போது புத்தகம் கேட்டாலும் உடனே கொடுத்துவிடுவார். அதேபோல யாரிடமும் புத்தகங்கள் எளிதில் வாங்கி விடுவார், வாங்கியதை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார். அவரிடம் புத்தகங்கள் போவது என்பது ஒரு வழி போக்கு மாதிரி. திரும்பி வரவே வராது. அதேபோல கொடுத்தவரிடம் திருப்பி கேட்கவே மாட்டார். அவருடைய புத்தகமாக இருந்தால் தானே.. அவருக்கு ஞாபகமும் இருக்காது.. அப்படி ஒரு புத்தக கொடை வள்ளல்.... நான் அவரிடம் சில புத்தகங்களை கொடுத்து விட்டு கடைசியாக வரை கிடைக்கவே இல்லை. அது வேறு எங்கும் வாங்க முடியாது. ஏனெனில் அந்த பதிப்புகள் நின்று பல வருடங்கள் ஆகிவிட்டது. உதாரணமாக ரஷ்ய புரட்சியைப் பற்றி பல புத்தகங்கள் வந்திருக்கலாம். ஜான்ரீடு எழுதிய உலகை குலுக்கிய பத்து நாட்கள் மாதிரி.... 

ஆல்பர்ட் ரைஸ் எழுதிய நேரில் கண்ட ருஷ்ய புரட்சி என்றொரு நூல்...

உலகை குலுக்கிய பத்து நாட்கள் என்ற நூல், நகரப் பகுதியில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியைப் பிரதிபலித்ததென்றால் நேரில் கண்ட ருஷ்ய புரட்சி நூல் கிராமப்புறங்களில் ரஷ்ய புரட்சி எப்படி பிரதிபலித்தது என்பதைக் குறிக்கிறது. அபூர்வமான புத்தகம். என் நன்பரிடம் போனது திரும்பி கிடைக்கவே இல்லை.. இது போல பல புத்தகங்கள்....

 நல்ல வேலையாக அவர் கேட்ட சில அபூர்வமான புத்தகங்களை கொடுக்காமலே மறைத்து விட்டேன். போயிருந்தால் சத்தியமாக திரும்பி கிடைத்திருக்காது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப் முதலி சரித்திரம் என்ற தமிழில் வந்த முதல் புதினம் என்னிடமிருந்தது 1885 ஆம் ஆண்டு வெளியான பதிப்பு. 1905 ஆம் ஆண்டு வெளியான ராபின்சன் குருசோ.... 

இந்த புத்தகங்கள் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பதிப்புகள்.... அதனுடைய சரித்திர முக்கியத்துவத்துக்காகவே வைத்துக் கொள்ளலாம். இது போன்ற நிறைய பழைய புத்தகங்களை வைத்திருக்கிறேன்.. இதெல்லாம் பழைய புத்தக கடை புண்ணியத்தால் கிடைத்தவை..

சரி அதெல்லாம் போகட்டும் பழைய பெருமைகள்...


 நம் காலத்தில் மிக அருமையான விஷயம், இப்போது நடந்து கொண்டிருக்கும் புத்தக திருவிழாக்கள் தான். இப்பொழுதெல்லாம் புத்தகத் திருவிழா நடைபெறாத நகர்களே இல்லை எனலாம். நடைபெறாத வருடங்கள் இல்லை எனலாம். நிறைய புத்தக திருவிழாக்கள்.. .ஏராளமான படைப்பாளிகள்.. ஏராளமான வெளியிட்டவர்கள்... 

ஏராளமான புத்தகங்கள்.. அள்ள அள்ள குறையாத சுரங்கங்களை போல, அண்ணாந்து பார்க்க முடியாத அளவுக்கு மலைகளை போல புத்தகக் குவியல்கள் வந்து விட்டன.

 சங்க கால இலக்கியங்களில் இருந்து இன்று வரை உள்ள நவீன இலக்கியம் வரை, புராணங்களிலிருந்து புத்தறிவை மீட்டெடுக்கக்கூடிய பகுத்தறிவு புத்தகங்கள் வரை, ஆன்மீகத்தில் இருந்து அறிவியல் வரை பல்வேறு திசைகளில் பல்வேறு தலைப்புகளில் பெரியவர்கள் சிறியவர்கள் படிக்கும் மாதிரி, விதம் விதமாய் புத்தகங்கள் மலிந்து கிடக்கின்றன..   ஏராளமாய் மக்கள் புத்தகங்களையும் வாங்குகிறார்கள். வாங்குகிற புத்தகங்களை படிக்கிறார்களா என்பது தான் மிக முக்கியமான விஷயம். ஒரு புத்தகம் படிக்கப்படாமல் கிடைக்கிறது என்றால், அந்த புத்தகத்திற்கு அதைவிட அவமானம் ஒன்றுமில்லை என்கிறார் ஒரு அறிஞர்.

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது

"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா.. 

பெண்களின் கைகளிலிருந்து கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.. 

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புகழ் உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்று யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்... 

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!

– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்...

– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பை முடிப்பதே இல்லை!

– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…

– மாசேதுங்

இதெல்லாம் மாமேதைகளின் அனுபவ வார்த்தைகள். அறிவுரைகள்.. பொன்மொழிகள்... 

வாங்குகிற புத்தகங்களை படிக்க வேண்டும்,. நுனிப்புல் மெய்வதைப் போலல்லாமல், ஆழமாக ஊன்றி படிக்க வேண்டும். அதுதான் புத்தகங்களுக்கு செய்யக்கூடிய மரியாதை.


 இல்லை என்றால்   புத்தக திருவிழாக்களும், புத்தக தினம் என்பதும் வழக்கமான சடங்குகளில் ஒன்றாய் மாறிவிடும்.... 

1 comment:

  1. அருமையான பதிவு...
    நூல்பிடித்து நம்மை நுகத்தடி வைத்தாரை
    நூல்படித்து வெல்வோம் நொடித்து.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...