சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 27 February 2025

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

1965ஆம் ஆண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய கவிதை இன்றும் பொருந்துமாறு உள்ளது வெட்கக்கேடானது....... 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கொலை...

'எழுதுவ தெல்லாம் இலக்கியம்' என்னும்

பழுதுறுங் கருத்தைப் பல்கலைக் கழக

மொழியா சிறியன் முத்துச் சண்முகம்

கழிசடை வாயால் கக்கித் தொலைத்தான்!

அண்ணா மலையார் தமிழ்க்கென அமைத்தார்

பண்ணார்ந் திசைத்த பல்கலைக் கழகம்

கொட்டிக் கொடுக்கும் ஊதியம் பெறுவோன்

தட்டிக் கேட்க ஆளிலாத் தன்மையால்

இப்படிப் பற்பல இழிந்த கருத்தெல்லாம்

தப்பி யாக அடித்துத் தள்ளினான்! 10


இத்தனை நாட்களாய் இலக்கியம் என்னும்

முத்தமிழ்ச் சொற்கு முழுப்பொருள் அறியோம்!

முத்துச் சண்முகம் மொழிவதைக் கேண்மின்!

ஏத்துப் புரட்டென எண்ணிட வேண்டா!

'அவாள்' 'இவாள்' என்னும் 'ஆனந்த விகடன்'

கவர்ச்சி ஓவியக் கழிசடைக் 'குமுதம்'

ஓட்டைவாய்ப் பார்ப்பான் உளறும் மொழிகளைக்

கோட்டைமே லேற்றிடுங் 'கல்கி' 'மித்திரன்'

படித்த வாயைப் பன்முறை கழுவும்,

அடித்ததீ நாற்றம் அடிவயிறு கலக்கிடத் 20

தீது பரப்பும் 'தினத்தந்தி' முதலிய

பொல்லாத் தாள்கள் பொழிந்தன பொழிவன

எல்லா எழுத்தும் இலக்கியம் ஆகுமாம்!

அச்சுப் பிழையதும் அகற்றிடல் வேண்டா!

அச்சுப் பிழையுமோர் இலக்கிய அழகே!

முத்துச் சண்முக மொழியா சிறியநின்

சொத்தைக் கருத்தைக் கேட்டபின், நாட்டில்

விளையும் விளைவைக் கேட்கவும் வேண்டுமோ?

களையும் பயிர்தான்! காக்கையும் கிளிதான்!

தத்துப் பித்தென எழுதித் தள்ளலாம்! 30

எத்திப் பிழைத்திட எவரும் முன் வரலாம்!

குடியன் உளறலும் கோணையன் மொழிவதும்

தடியர் பிதற்றலும் தவளைக் கூச்சலும்

அழகு மங்கை ஆடை களைவதும்

பழகு தமிழில் பக்கம் பக்கமாய்

எழுதித் தள்ளலாம்? இழிவென்ன இழிவு?

புழுதிக் கருத்துகள் பொல பொல வென்று

நந்தமி ழகத்தின் எழுதுவார் நாவில்

வந்து மொழிவதும் இலக்கிய வளர்ச்சியே!

'பிடித்த'தைப் 'பிடிச்ச'தென் றெழுதலாம் இனிமேல்! 40

'பெற்ற'தைப் 'பெத்த'தென் றெழுதலாம் இனிமேல்!

'போன'தைப் 'போச்'செனப் புகலலாம் இனியே !

'வேண்டு' மென்பதை 'வேணு'மென் றெழுதலாம்!

மொத்தமாய்க் கூட்டிக் கழித்து மொழிந்தாள்

முத்துச் சண்முகம் கருத்துப் படியினி

அத்திம்பேர் அம்மாமித் தமிழே இலக்கியம்!

முத்தமிழ் வளர்ச்சியைப் பாருங்கள் தமிழரே!

முத்துச் சண்முகம் மூதறி வாளன் (!)

திக்குவாய்த் தமிழன் தெ.பொ.மீ.யின் 50

தக்கநல் லடியான்; அவன் தாள் பிடிப்பவன்!

படித்தவன்; படித்துப் பட்டம் பெற்றவன்;

நடிப்பவன் தமிழ் நலம் நாடுவான் போல;

மொழிநலம் பேணும் மொழியா சிறியன்!

இழிவு அவனுக்கா? தமிழர்க்கே என்க!

மெய்யாய்ச் சொல்லுவேன் முத்துச் சண்முகம்

வையா புரியின் வகையிலோர் புது ஆள்!

கழிசடை நாயும் கண்டதை உணாதே!

இழிவுற அவனோ எதையும் உண்பவன்!

இத்தகை யான இழிந்த பிறவிகள் 60

முத்தமிழ் நலத்தை முழுவதும் அழிக்கப்

புறப்பட் டனர்காண்! தமிழனே! பாரடா!

இறப்பத் தூங்கினை! எழடா இனிமேல்!

யாழிசைப் போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!

பாழாய் இசைப்போன் பழிக்கப் படுவான்;

நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!

பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!

ஆனாலும்,

முத்துச் சண்முகம் எனும் முழு மகனின்

முத்துக் கருத்து யாதெனில், தாளெடுத் 70

தெழுதுவ தெல்லாம் இலக்கியம்! அதனை

எழுதுவோர் யாவரும் இலக்கியப் புலவரே!

கல்லார் உளறும் மொழியே உயிர்மொழி!

எல்லா ரும் அதை எழுதிடல் சாலும்!

மொழிக்கெனப் பயிற்சி தேவையே இல்லையா!

மொழியா சிறியனின் முழுமைக் கருத்திது!

மொழிக்கெனப் பயிற்சி தேவையே இன்றால்

மொழியா சிறியனுக் கிங்கென்ன வேலை?

பாண்டியன் பேணிய பண்பார் தமிழைத்

தோண்டிப் புதைத்திட இவனுந் தோன்றினான்! 80

முப்பழங் கழகத்து முகிழ்த்த தமிழைத்

தப்புந் தவறுமாய்த் தாழ்த்துகின் றானே!

ஏடா, தமிழனே! எடுத்தெறி எழுதுகோல்!

நீடார் பழம்புகழ் நினை! வாள் தூக்கு!

அன்றிலும் மானும் அலைந்த சோலையுள்

பன்றியும் கழுதையும் தமிழைக் கலக்குவ!

மொழியென் பெயரால் முள்ளங்கிப் பற்றைபோல்

கொழிக்கின் றனரே கொள்ளை ஊதியம்!

அத்தனைப் பணமும் தமிழர் அளித்ததே!

இத்தனை நாட்களும் தமிழரை ஏய்த்தனர்! 90

அணிதமிழ் கற்க அண்ணா மலைவரும்

மணியெனும் அமெரிக்க மாணவ ரிடத்துத்

தமிழ்மொழி ஈதெனத் தகவிலா மொழி

உமிழ்ந்து கொள்ளை ஊதியம் பெறுவான்!

ஒன்றை 'ஒன்னாய்' இரண்டை 'ரெண்டா'ய்

மூன்றை 'மூனா'ய் அவரிடை மொழிவான்!

பேச்சுத் தமிழெனக் கல்லார் பிதற்றலைக்

காச்சு மூச்செனக் கற்பிக் கின்றான்!

அரைவேக் காட்டின் ஆசிரி யன்மார்

விரைவாய்க் கற்றுக் கொடுத்திடும் இழிவை 100

நேரிலே காணில் நெஞ்சு கொதித்திடும்!

அரசினர் கேளார்! அண்ணா மலையின்

கரிசனக் காரர் கவனியார் இதனை!

தெ.பொ.மீ.யின் தலைமையில்

காப்பா றின்றிக் குலைந்தது நாளும்!

பன்மொழிக் குரிசில் பாவா ணர்தம்

வன்மொழி யறிவு வாடிக் குலைந்திட

ஒலிமுறை சொன்முறை மொழிவர லாறு

துளியும் அறிகிலாப் பேதையர் யாவரும்

அண்ணா மலையுள் அமர்ந்து கொண்டே 110

உண்ணா உணவுக்குத் தமிழ் உலை வைப்பார்!

விழியிலார் விழிமருத் துவம்பார்ப் பதுபோல்

மொழியறி யாதார் மொழித்துறைத் தலைவராய்

இற்றை அமர்ந்தனர்; இழிவடா இழிவு!

அற்றை நாளினும் தமிழ்மொழி இக்கால்

பல்லாற் றானும் பரவிய தென்று

புல்லிய வாயால் புகல்கின் றானே!

ஐயகோ தமிழே! நினக்கிவ் விழிவோ!

உய்யுமோ தமிழும்? தமிழனும் உய்வனோ?

சிரைத்திடு வானிடம் தமிழைத் தந்தால் 120

நரைத்தது தமிழெனத் தமிழினைச் சிரைப்பான்!

ஆளத் தெரியா அமைச்சர்; அவரடி

மீளத் தெரியா மேலதி காரி!

அரைப்புதுக் காசும் அவர்தரும் பணத்தில்

குறைந்திட விரும்பக் கல்வித் தலைமையர்!

சொல்விற் றுண்ணும் சோம்பலா சிரியர்!

அவர்வயின் கற்கும் அரைகுறைப் படிப்பும்!

உவர்நிலத் தூற்றாய் என்றும் உவர்ப்பதே!

இத்தகைப் படிப்பிற் கிடிபிடி என்னும்

குத்தகை மாணவக் கொள்கையில் கூட்டமே

பல்கலைக் கழகத்துப் பார்க்கும் ஓவியம்

தமிழனை வடவன் தாழ்த்தினான் அல்லன்! தமிழனைத் தாழ்த்துவோன் தமிழனே!

இமையும் மூடாது எழுக இளைஞரே!

---1965




Wednesday, 26 February 2025

 அய்யன் வள்ளுவனுக்கு

ஆடைகள் நிறமாற்றி

இடையே பூனூலிட்டு

நீற்றுபட்டையிட்டு

அலங்கோலப்படுத்தியதில்

வருத்தமில்லை எமக்கு...


அய்யரா, அய்ங்காரா என

ஆவேசமாய் பூசலிட்டு

 இடையே வடகலையா

தென்கலையா என

அவரையும் இழுத்து

அசிங்கப்படுதிடாதீர்...


பிறக்கும் எல்லா

உயிருக்குமென

உலகுக்கு உரைத்திட்ட

உத்தமரை நாளை

சாதிச்சண்டையில்

சிக்கவிட்டுடாதீர் மூடர்கள்...


மதத்தால் ஒன்றெனக்கூறி, 

மக்களை பிளவுபடுத்தி

உள்ளுக்குள் ஓராயிரம் சாதியென

ஓயாமல் மோதவிடும் மூடரே.. 

விட்டுவிடும் எம் வள்ளுவரை

சனாதன சாக்கடையில் இழுத்திடாமல்..... 

Tuesday, 25 February 2025

வைராக்கியம்

 

 வைராக்கியம் என்றால் எல்லோருக்கும் தெரியும். ஒரு முடிவு எடுத்து விட்டால் என்ன நடந்தாலும் அதை கைவிடாமல் அந்த.

 முடிவின் படி நிற்பது தான். ஒரு படத்தில் கூட விஜய் சொல்லுவார். நான் முடிவு எடுத்துவிட்டால், என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று. அதுபோல என்று கூட வைத்துக் கொள்ளலாம்?. காந்தியார் கூட சிறுவயதில் அரிச்சந்திரா நாடகம் பார்த்த பிறகு பொய் சொல்வதில்லை என்று வைராக்கியம் எடுத்துக் கொண்டாராம் . அரிச்சந்திரன் பொய் சொன்னாரா, இல்லையா என்பது நமக்கு தெரியாது. கதைப்படி அரிச்சந்திரன் விசுவாமித்திரன் என்ற முனிவரிடம் கொடுத்த வாக்கில் இருந்து மீற மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்து, நிறைய கஷ்டங்களை எல்லாம் சந்தித்து, இறுதியில் சாதித்து காட்டினார் என்று சொல்லுவார்கள். விசுவாமித்திரரிடம் சொன்ன வாக்கை காப்பாற்றினாரோ, இல்லையோ எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன் என்று திருமணம் செய்த மனைவியையும், பிள்ளையையும் தெருவிலே ஏலம் போட்டு விற்றுவிட்டு, அம்போ என்று விட்டுவிட்டு வாக்கை காப்பாற்றுவது என்ன வைராக்கியமோ தெரியவில்லை. அரிச்சந்திரன் கதை கிடக்கட்டும். என் அப்பா வைராக்கியம் பற்றி சில கதைகள் கூறுவார். அதுதான் ஞாபகம் வந்தது.

நம் மக்களிடம் பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்றெல்லாம் வார்த்தைகள் அடிக்கடி புழங்கும்.

. மனைவி பிரசவ காலத்தில் வலி எடுக்கும் போது கணவனை கண்டபடி ஏசுவாளாம். அந்த ஆள் முகத்தில் முழிக்க கூடாது, இனிமேல் பிள்ளையே பெற்றுக்கொள்ளமாட்டேன், என்றெல்லாம் சொல்வாளாம். ஆனால் குழந்தை பிறந்து, குழந்தை முகத்தை பார்த்தவுடன் எங்கே அவர் வரவில்லையா என்று கேட்பாளாம். இதுதான் பிரசவ வைராக்கியம்.

இதைவிட சிறப்பானது மயான வைராக்கியம் யாராவது தீய பழக்கங்களால்கடுமையான நோய் வாய் பட்டு இறந்து போனால், மயானத்திற்கு கொண்டு செல்லும் உறவினர்கள், நண்பர்கள் இதைப் பற்றி அதிகம் பேசுவார்கள். இனிமேல் இது மாதிரி எந்த கெட்ட பழக்கமும் வைத்துக் கொள்ளக் கூடாது. இதை அவர் அவருக்கு இருக்கக்கூடிய பழக்க வழக்கங்களையும் சேர்த்து சொல்லி கொள்வார்கள் வெத்தலை, பாக்கு, சிகரெட் தண்ணி எதுவும் தொடக்கூடாதுப்பா என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டு வருவார்கள். வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, சாப்பிட்டு வெளியே வந்தவுடன், எதை தொடக்கூடாது எதை விட்டு விட வேண்டும் என்று சொன்னார்களோ அடுத்த நொடியே ஆரம்பித்து விடுவார்கள்.. மயான வைராக்கியத்தின் லட்சனம் அவ்வளவுதான்.

எனது நண்பர் ஒருவர் இருந்தார் அவர் ஒரு மதுப்ரியர். கூடவே சீட்டு ஆட்டமும் உண்டு. அவருடைய மனைவியார் அவரை குடி, சீட்டை விட சொல்லி சத்தியம் செய்து சொல்வார். இவரும் கூசாமல் சத்தியம் செய்துவிட்டு குடிக்க சென்று விடுவார். ஏன் இப்படி சத்தியம் செய்துவிட்டு குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் மனதிற்குள் ஒரு அணாவை சேர்த்து தானே சத்தியம் செய்தேன். அதாவது அசத்தியம் அவருடைய மனைவிக்கு பயப்படுகிறாரோ இல்லையோ மனசாட்சிக்கு பயப்படுவார். அதனால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பொய் சத்தியம் செய்துவிட்டு சீட்டாட சென்று விடுவார் அல்லது குடிக்க சென்று விடுவார்.

சரி ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டாலாவது திருந்து விடுவார் என்று அவரது மனைவி ஒரு வருடம் அவருக்கு ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விட்டார். யாரோ அந்த அம்மாவிடம் கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு மதுக்கடைகளில் தனி கிளாஸ் உண்டு என்று போர்டு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார் கள். அந்தம்மா நொந்து போய் ஐயப்பன் கோவிலுக்கு போனாலாவது திருந்துவார் என்று பார்த்தேன். அங்கு போனாலும் வழியில்லை என்றால் எதற்காக இங்கிருந்து அங்கு அனுப்ப வேண்டும் என்று அடுத்த வருடத்தில் இருந்து மாலை போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இனிமேல் குடிப்பதில்லை சீட்டு ஆடுவது இல்லை என்று வைராக்கியம் எடுத்துக் கொள்வது தானே என்று கேட்டேன். எனக்கு அந்த எழவெல்லாம் தெரியாது ஆள விடுங்க சாமி என்று சொல்லிப் போய்விட்டார்.

அரசியல்வாதிகளும் வித்தியாசமாக வைராக்கியம் எடுத்துக் கொள்வார்கள். இனி உயிரே போனாலும் அந்த கட்சி அலுவலகத்திற்கு போக மாட்டேன். கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன். நானோ எனது வாரிசுகளோ தேர்தலில் நிற்க மாட்டோம் என்றெல்லாம் வைராக்கியம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும். அது என்ன வைராக்கியம் என்று தெரியவில்லை.

.. அது போகட்டும் அப்பா சொன்ன கதைக்கு வருவோம். அவர் சின்ன வயதில் பிழைப்பு தேடி சிலோனுக்கு போயிருந்தாள். சிலோன் நம்மளை விட வசதியான நாடு என்று கருதி விடாதீர்கள். வடக்கே இருந்தது பானிபூரி, பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் இங்கு வருவது இல்லையா, அதுபோலத்தான், அந்த காலத்தில் ஓரளவு நன்றாக இருந்த சிலோனுக்கு தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி செல்வார்கள். அப்படி இவர் போயிருக்கையில் கணக்கு பிள்ளை வேலைக்கு சொல்லி இருந்தார்கள். அதுவரைக்கும் இருக்கட்டும் என்று ஒரு பெட்டி கடையில் வேலை பார்த்திருக்கிறார்.

வேலைக்கு போன போது யாரிடமும் அதிகம் பழக்கம் இல்லை. முதலாளியை மட்டும் தான் தெரியும். ஒரு நாள் மாலை ஒருவர் நன்கு நாகரீகமாக உடைய அணிந்து வந்தவர் சோடா கேட்டு இருக்கிறார். இவரும் சோடா உடைத்து கொடுத்தவுடன் வந்த நபர் ஒரு மடக்கு குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி எறிந்து இருக்கிறார். அப்பாவுக்கு கோவம் வந்து விட்டது. ஏன் எறிந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். வந்த நபர் இன்னொரு சோடா கொடு என்று கேட்டிருக்கிறார். அப்பாவும் மீண்டும் சோடா உடைத்துக் கொடுத்தவுடன் ஒரு மடக்கு குடித்துவிட்டு இந்த பாட்டிலையும் எறிந்து விட்டார். அப்பாவுக்கு பயமும் கோபமும் வந்துவிட்டது. சத்தம் போட ஆரம்பித்தவுடன் வந்த நபரும் ஆங்கிலத்தில் கண்ணா பின்னால் என்று திட்டி மீண்டும் சோடா கேட்டு இருக்கிறார். சத்தம் கேட்டு உள்ளிருந்த முதலாளி வேகமாய் ஓடி வந்து அப்பாவை அமைதிப்படுத்தி விட்டு அவருக்கு சோடா கொடுத்திருக்கிறார். அந்த சோடாவையும் ஒரு மடக்கு குடித்துவிட்டு தூக்கி எறிந்து விட்டு, தின்பண்டங்கள்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டார். அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. முதலாளி உனக்கென்ன என்று சொல்லிவிட்டு கடன்நோட்டை எடுத்து, வந்தவருடைய பக்கத்தில் செலவு கணக்கு எழுதி வைத்தார். அந்த நபரைப் பற்றி கேட்டவுடன், முதலாளி நம்ம கஸ்டமர் தான் ஒன்னும் பிரச்சனை இல்லை. காசு கொடுத்து விடுவார் நீ பேசாம இரு, நாளை காலை அவர் வரும்போது எப்படி இருக்கிறார் என்று பார் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் காலை அந்த நபர் வந்த கோலமே வேறு. சுத்தமான தும்பை பூ வேஷ்டி, நெற்றி நிறைய பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டை, சட்டை போடாமல் மேல் ஒரு துண்டு என்று வந்திருக்கிறார். வந்தவர் பூஜைக்கான சாமான்கள் நிறைய வாங்கிக் கொண்டு கோவிலுக்கு சென்று விட்டார். அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலாளியிடம் கேட்டிருக்கிறார். அவர் அப்படித்தான் சற்று வித்தியாசமான நபர் என்று சொல்லியிருக்கிறார்

 வந்தவர் பெயர் சிவபிரகாசம் பெரிய சவுண்ட் இன்ஜினியர். திறமைசாலி. இன்ஜினியரிங் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் தீர்த்து வைக்க கூடியவர். ராணுவத்தில் கொஞ்ச காலம் வேலை பார்த்திருக்கிறார். எந்த ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கும் உட் படாதவர். அதனால் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் எந்த பிரச்சனை என்றாலும் கூப்பிட்டு அனுப்புவார்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் செய்து கொடுப்பார். அவருடைய திறமைக்கு அவ்வளவு மரியாதை. . ஒரு முறை புதிதாக கட்டப்பட்ட திரையரங்கில் எதிரொலி பிரச்சனை இருந்ததாம். இவரை கூப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு நாள் பூராவும் உள்ளேயே திரையரங்கில் அடைந்து கிடந்தவர், எப்படியோ அந்த பிரச்சினையை தீர்த்து விட்டாராம். அதற்குப் பிறகு எக்கோ பிரச்சனையே இல்லையாம். அப்பேர்ப்பட்ட திறமைசாலி. சரியான பக்திமான். சிவப்பழமாகவே காட்சி அளிப்பார். கோயிலுக்கு சென்றால் எல்லா சம்பிரதாயங்களையும் முறையாக கடைபிடித்து சாமி கும்பிட்டு வருவார். ஆனால் அவருக்கு வேறொரு முகம் இருந்தது.

மாதக் கடைசியில் பற்றுக்கணக்கை பார்த்து அவர் செலுத்த வேண்டிய பாக்கித்தொகையை எழுதி அப்பாவிடம் கொடுத்து பணம் வாங்கி வரும்படி முதலாளி அனுப்பினார். அப்பாவின் தயக்கத்தோடு பயந்துகொண்டேதான் போனார். அவரும் மறு பேச்சு பேசாமல் பட்டியலை கூட வாங்கி செக் பண்ணாமல் பணத்தை எண்ணி கொடுத்து அனுப்பினாராம்.

சாதாரணமாக மது குடிக்க மாட்டார். மது குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். ஒரு வாரம், பத்து நாளோ அவராக பார்த்து நிறுத்தினால் தான் உண்டு. குடிக்காமல் இருந்தால் மிகவும் வைராக்கியமாக இருப்பார். யாராவது பிறந்தநாள் பார்ட்டி , திருமணநாள், அது இது என்று என்று அழைத்துச் சென்று ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு தான் சொல்ல வேண்டியது இல்லை.

இவரும் சிவனே என்று தான் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார். இவருடைய பிரிட்டிஷ் நண்பர் ஒருவர் பிறந்தநாள் பார்ட்டிக்கு இவரை அழைத்து இருக்கிறார். இவருடைய பாரியாள் அதாங்க இவரது மனைவி " ஐயா நீர் போய் நல்ல வழியாக பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வாருங்கோ, தண்ணி அடிச்சு அசிங்கப்படுத்திராதிங்கோ பிள்ளைங்க பார்த்து கேட்டு போறதுகள்" என்று குனமாத்தான் சொல்லி அனுப்பினார். இவரும் குடிக்கிறதில்லன்னு சத்தியம் செய்து விட்டுத்தான் போனார்.

இவரும் அங்கு போய் நான் குடிக்கிறதா இல்லை என்னோட பாரியாளிடம் குடிக்கிறதில்லன்னு என்று சத்தியம் செஞ்சிருக்கேன். அதனால் நீங்க ஆரம்பிங்கோ என்று மறுத்திருக்கிறார். அவருடைய நண்பர்களும் பிரிட்டிஷ் நண்பரும் அது எப்படி ஐயா நீர் தொடாமல் நாங்கள் எப்படி குடிப்பது என்று சொல்லி இருக்கிறார்கள். அவரும் தட்ட மாட்டாமல் பாட்டிலை திறந்து இருக்கிறார்....

........

...

அப்புறம் என்ன பழைய குருடி கதவைத் திருடி கதை தான்... வைராக்கியம் காற்றோடு போயிட்டது...

இதைப் படித்துவிட்டு டாஸ்மார்க் வைராக்கியவாதிகள் சண்டைக்கு வந்து விடக்கூடாது

Monday, 24 February 2025

இருமொழியே போதும்

 இரு மொழிக் கொள்கை வேண்டாம்

மும் மொழி தான் வேண்டுமென

மூர்க்கமாய் உரைத்திடும்

எம் குலத்தின் துரோகிகளே

இயம்பிடுங்கள் எமக்கு...


அருங்கலைகள் ஆயிரம்

அறம் பொருள் இன்பமென

அத்தனையும் போதித்து

அறிவியலையும் போதிக்கும்

அருந்தமிழ் இருக்கையில்...


அகிலமெங்கும் பரவி

அறிவியலும் அரசியலும்

 நல்லிலக்கியமும் தந்தெமை

அவனியெங்கும் உலவ விடும்

ஆங்கிலம் இருக்கையில்...


புராணக் குப்பைகளையும்

 அறிவுக்கொவ்வா கதைகளையும்

அள்ளிவிட்டு மூடராக்கும்

அமரராகிப் போன

ஆரிய மொழி எமக்கெதற்கு....


ஆரியத்தோடு உருது

 கலவி கொண்டும்

 இந்திய மொழிகள் பல

 விழுங்கி யெமை அடிமையாக்க

 துடித்திடும் இந்தி எமக்கெதற்கு... . 

கழிவிரக்கம்

 அள்ள அள்ள குறையா

   அருந்தமிழ் பாடல்பல

    ஆயிரம் ஆயிரமாயிரமாய்

      எமக்கீந்து சென்றனர்

         எம் முன்னோர் பலர்...


இமயம் போல் எம்முன்

  இருக்கும் இலக்கியத்தை

   சிறிதேனும் பருகாமல்

    சிறுபிள்ளைத்தனமாய்

      கழித்தேன்வாழ்நாளை வீணே...


பால பருவம் முதன்

   பதினாண்காண்டுகள்

     போய் மீதமுள்ள

       அய்ம்பதாண்டுகளும்

         அழிந்தது வீணே....


கலைபல கற்க வைத்து

  உலகை உணர வைத்து

     வாழ்வளித்த தமிழை

       வணங்குதற்கு மனமின்றி

       வீணடித்தேன் வாழ்நாளை....


 எஞ்சி இருக்கும்

   சிறுகாலமேனும்

    இயன்றவரை கற்றாலும்

     பருகிடுவேனோ

        சிறு துளியேனும்...

Sunday, 23 February 2025

ஏமாந்து விடாதே....

 தேரையை பாம்பும்

மாட்டை புலியும்

 மானை வேங்கையும்

 புல்லை ஆடும்

 தின்றாமல் விட்டுவிட்டால்

திருந்திவிட்டதென்று எண்ணாதே...

வயிறு நிறைந்து இருக்கலாம்

உடம்பிலும் நோய் இருக்கலாம் ...

கறுப்பு பணத்தை நடிகனும்

சுரண்டலை முதலாளியும்

லஞ்சத்தை அரசியல்வாதியும்

கலவரத்தை சங்கியும்

புளுகுவதை அரசியல் வாதியும்

 நிறுத்தினால் திருந்தி

 விட்டாரென்று எண்ணாதே...

வரப்போவது மாற்றமோ

விபரீதமாக ஏதாவதிருக்கலாம்.

திருந்தி விட்டாரென்று

 ஏமாந்து விடாதே....


Saturday, 22 February 2025

அப்பா சொன்ன கதைகள்

என் அப்பா சிறுவயதில் எங்களுக்காக நிறைய கதைகள் சொல்லுவார்கள். அதில் பேராசைக்கார சாப்பாட்டு பிரியர்களைப்பற்றி கதைகள் சொல்லிருக்கிறார். ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அந்த பெரியவருக்கு உளுந்து வடை சாப்பிட வேண்டுமென்று ரொம்ப ஆசை. தன் மனைவியிடம் கூப்பிட்டு அடியே, உளுந்தவடை சுட்டுக் கொடுடி என்று கேட்டார்

 அந்த அம்மா எவ்வளவு வடை சுடுவது என்று கேட்டிருக்கிறார். 100 வடை சுட்டுக் குடுடி என்று இருக்கிறார்.

அந்த அம்மாவும் உளுந்த வடை பிரியர் தான்.வீட்டுக்காரர் ஆசைப்படுகிறார் என்று உளுந்து ஊறப்பட்டு அரைத்து வடை சுட ஆரம்பித்தாள். வடை சுடும் போது அவளுக்கு வாய் ஊற ஆரம்பித்தது. வடை உப்பு காரம் சுவை நன்றாக இருக்கிறதா என்று ஒரு வடையை விட்டு தின்று பார்த்தாள். நன்றாக இருந்தது. அப்படியே ஒன்று ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே வடையை சுட்டு முடித்தாள்.

சுட்டு வைத்திருந்த சட்டியை பார்த்தால் ஒரே ஒரு வடை தான் மிச்சம் இருந்தது. சுவை பார்க்கிறேன், சுவைபார்க்கிறேன் என்று எல்லாவற்றையும் தின்று முடித்து விட்டாள். சரி ஐயா வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று மிச்சமிருந்த ஒரு வடையை எடுத்து வைத்தாள்.

பெரியவர் வெளித்தோற்றத்தில் பார்க்கத்தான் மகாவீரர். ஆனால் வீட்டுக்காரம்மாவிடம் உள்ளூர பயம் கொண்டவர்தான். வெளியே சென்று இருந்த பெரியவர் வீட்டுக்கு வந்து, முகம் கைகள் அலம்பி விட்டு வந்து உட்கார்ந்து வடையை கொண்டு வரச் சொன்னார். வீட்டுக்காரம்மா மிச்சம் இருந்த ஒரு வடையை தட்டில் கொண்டு வந்து வைத்தாள்.

என்னடி ஒரே ஒரு வடை தான் இருக்கு எவ்வளவு வடை சுட்டாய் என்று கேட்டார். நீங்கள் சொன்னபடி 100 வடை தான் சுட்டேன் என்று சொன்னாள்.

ஏண்டி ஒன்னு தான் இருக்கு. பாக்கியெல்லாம் எங்கேடி என்றார்.

உப்பு, காரம் சரியா இருக்கா என்று பார்க்கையில் தின்று விட்டேன் என்று வீட்டுக்காரம்மா சொன்னாள்.

பெரியவருக்கு சண்டாளமாய் கோபம் வந்தது.

எப்படிடி வடையை தின்றாய் என்று கோபமாய் கேட்டார். இப்படித்தான் தின்றேன் என்று மிச்சம் இருந்த ஒருவடையையும் அந்தம்மா சாப்பிட்டு விட்டாள்.

பெரியவருக்கு மகா கோபமும், துக்கமும் பீறிட்டது.

படு கோபமாய் எழுந்து வெளியே சென்று விட்டார். வேற என்ன செய்ய முடியும்....

வெளியே சென்று கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்த பெரியவரை ஒருவர் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்கிறார். சாப்பிட கூப்பிட்டவர் மகாபரமசாது. அவருடைய அம்மா செத்ததுக்கு வருடாந்திர திவசம். யாரையாவது சாப்பிட கூப்பிட வேண்டுமே என்று இந்த பெரியவரை கூப்பிட்டு சென்றார். அந்த வீட்டிலும் சாப்பாடு நன்றாகவே சமைத்திருந்தார்கள். வைத்திருந்த பட்சனங்களகளை எல்லாம் பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். இவர் ஆசைப்பட்ட உளுந்த வடையும் இருந்தது.

பெரியவருக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும் வைத்துவிட்டு, வடையை வைத்தார்கள், வேகமாக உளுந்து வடை எடுத்துக் தின்றார். சாப்பிட சாப்பிட வைத்துக் கொண்டே இருந்தார்கள். அவரும் உளுந்த வடை தின்று கொண்டே இருந்தார். வந்திருக்கும் அதிதியை திருப்திப்படுத்துவது முன்னோரை திருப்திப்படுத்துவதற்காக சமம் என்பது ஐதீகம். சரி இவ்வளவு பிரியமாய் இருக்கிறாரே என்று வடை தட்டை நீட்டி இன்னும் வைக்கவா என்று கேட்டார்.

இவர் எச்சில் கையை நீட்டி தட்டில் இருந்த நடுவடையைத் தொட்டு இந்த வடையை வையுங்கள் என்றார்.

எச்சில் கையால் தட்டில் இருந்த வடையை தொட்டுவிட்டால் மொத்தமும் எச்சில் பட்டதாகத்தானே அர்த்தம் என்று மொத்த உளுந்த வடையையும் அவர் இலையில் கொட்டி விட்டார்கள். இவர் வீட்டில் வீட்டுக்காரம்மா இவரை ஏமாற்றி உளுந்த வடையை தின்றதற்கு, இந்த வீட்டில் எல்லா வடையும் தின்று தனது ஆசையை தீர்த்துக் கொண்டார். 



பொதுவாக இப்படிப்பட்ட ஆட்களை தான்தின்னி என்று அப்பா சொல்லுவார். பிறருக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணாமல் தானாக தின்று தீர்க்கும் மனிதர்கள் உலகில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

Friday, 21 February 2025

உலக தாய்மொழி தினம்

உலகமெங்கும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாடு மதத்தின் பெயரால் மட்டும் ஒற்றுமை அடைந்து விட முடியாது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, இந்த உலக தாய் மொழி தினம் தான்.

மதத்தின் பெயராலே அமைந்த பாகிஸ்தான், உண்மையில் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக தான் இருந்தது.

1947 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்காளதேசம்), மேற்கு பாகிஸ்தான்  (தற்போது பாகிஸ்தான் ) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு பாகிஸ்தான் எனும் நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு இடையில் மேற்கிலும் கிழக்கிலும் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் மொழியிலும் பண்பாட்டிலும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டிருந்தன.

 மேற்கு பாகிஸ்தானில் உருது மொழி பேசுபவர்களும், கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசுபவர்களுமாக மக்கள் இருந்தார்கள். ஆனால் பாகிஸ்தானில் ஆட்சி மொழி உருது மட்டுமே இருந்தது. கிழக்கு பாகிஸ்தானால், இன்றைய வங்கதேசத்து மக்களுக்கு வங்க மொழி மட்டுமே தெரியும். உருது மொழி தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டதால் உருது தெரியாத வங்க மக்கள் தங்களது வங்க மொழியையும், தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராடினார்கள்.இந்தக் கோரிக்கை முதலில் தேரேந்திரநாத் தத்தா அவர்களால் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாளன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.  மொழி பிரச்சனையை மக்கள் சார்ந்த பிரச்சனையாக கருதி அரசியல் தீர்வு காண்பதற்கு பதிலாக, அரசு தனது வழக்கமான அதிகாரத் திமிரினையே காட்டியது.

இதற்காக டாக்கா மாநகரில் மாணவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அரசு ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் தடை செய்தது.

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி நடைப்பெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் அப்துசு சலாம், அப்துல் பார்கத், இரபீக் அகமது, அப்துல் ஜபார், சபியூர் இரகுமான் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தாய்மொழி காக்க போராடி அவர்களுடைய நினைவாக இந்த நாளை வங்க மக்கள் தேசிய நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்ற வங்கதேசமானது, இந்த நாளை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவிக்க யுனெஸ்கோ நிறுவனத்துடன் கோரிக்கை வைத்தது

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொதுமன்ற மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது..

இனம் காக்கப்பட வேண்டும் என்றால் அதனுடைய பண்பாடு காக்கப்பட வேண்டும். அதனுடைய பண்பாடு காக்கப்பட வேண்டும் என்றால் அதனுடைய மொழி காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய தாய் மொழியை காப்பாற்றுவது அவர்களது தலையாக கடமையாகும். மொழி அழிந்தால் வாழ்வு இல்லை என்பதை உணர வேண்டும்.

ஒரே தேசம் ஒரே மொழி என்று கூறுவது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல மக்கள் விரோத கொள்கை. எனவே இந்த சர்வதேச தாய்மொழி தினத்தில், நமது தமிழ் மொழியை காக்க போராட உறுதி ஏற்க வேண்டும். 

Thursday, 20 February 2025

சென்று வா நண்பா......


 கொஞ்சம் நாட்களாக எனது நண்பன் கணேசனிடம் தொலைபேசியில் பேசாமல் இருந்தேன் நேற்று மாலை அவனிடம் பேசலாம் என்று அலைபேசியில் அழைத்தேன் எடுத்தது கணேசனின் அருமை மகள்... எடுத்தவுடன் கணேசனின் உடல் நலம் பற்றி விசாரித்தேன். அழுகை சத்தம்... என்னம்மா என்று பதறி கேட்டேன். அப்பா இப்போதுதான் தவறி விட்டார்கள் என்று சொன்னது. சரியாக நான் அலைபேசியில் அழைப்பதற்கு சிறிது நேரம் முன்பாக தான் உயிர் பிரிந்திருக்கிறார். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவு ஒன்றை படித்துவிட்டு மிகவும் ரசித்து என்னிடம் பேசினார். பழைய நாட்களுக்கு மீண்டும் அழைத்து சென்று விட்டேன் என்று சிலாகித்துப் பேசினார். அதற்கு பிறகு இருவரும் தொடரபு கொள்ளவில்லை. இவ்வளவு நாள் தொடர்பு கொள்ளாமல் இருந்தது எவ்வளவு தவறு என்று எனக்கு உரைத்தது. 

நானும் அவரும் 83 ஆம் ஆண்டிலிருந்து பழக்கம் மறந்தாலும் நான் சங்கத்தில் அடிக்கடி சந்திப்போம் சங்கத்தின் மிகவும் உற்சாகமாய் இருப்பார். 86 ஆம் ஆண்டில் அவர் பணிபுரிந்த திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றலாகி சென்றேன். ஜெகதீசன், கணேசன், சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் அங்கு மருந்தாளுனராக பணிபுரிந்தார்கள் ஜெகதீசன் உடைய இடத்திற்கு நான் மாறுதலாகி சென்றேன். அவருடைய வகுப்புத்தோழரும் நண்பருமான ஜெகதீசன் மாற்றி விட்டு நான் அங்கு சென்றதில் ஒருபுறம் அவருக்கு வருத்தம். இருந்தாலும் என்னோடு பணி புரிவதில் ஒரு மகிழ்ச்சி. 

மறந்தாளுநர் முன்னேற்றம், மருந்தாளுனருடைய கௌரவம், வளர்ச்சி அதைப் பற்றி தான் எப்பொழுதுமே பேசிக் கொண்டிருப்பார். அவரோடு பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாதவை. மருந்தாளுனருக்கு ஒரு பிரச்சனை என்றால் கொதித்து எழுந்து விடுவார். 

ஓரிரு ஆண்டுகளிலேயே நான் வேறு இடத்திற்கு பணி மாற்றத்தில் சென்று விட்டாலும் , சங்க தொடர்பு என்பது பணி ஓய்வு பெறும் வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. 

மருந்தாளுனர் சங்கத்தை வளர்ப்பதற்காக இரு சக்கர வாகனங்களில் நானும் நண்பர்கள் சக்திவேலு, கணேசன், கண்ணன், கார்த்திகேயன்,பாஸ்கர், நாகராஜன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்தை பலமுறை சுற்றி வந்து அனைத்து மருந்தாளுநர்களையும் சந்தித்து பணிபுரிந்தது மறக்க இயலாதது.

 அதேபோல அரசு ஊழியர் சங்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னோடு இணைந்து பணியாற்றினார். 

மருந்தாளுனருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும், கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். நான் பணி இறுதி காலங்களில், மருந்து கிடங்கு அலுவலராக பொது சுகாதாரத்துறை  இயக்ககத்தில் பணிபுரியும் போது ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட தமிழகமெங்கும் செல்ல நேர்ந்தது. அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர் அவரே. நான் பார்வையிடுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றபோது, என்னை வந்து சந்தித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பெருமைப்பட்டார். 


சொந்த வாழ்க்கையில் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். எப்பொழுது பணக்கஷ்டம் ஏற்பட்டாலும் உடனே உதவி செய்வார். ஒரு டேப் ரெக்கார்டர் வாங்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஆசைப்பட்ட போது, உடனே கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு எப்பொழுது முடிகிறதோ அப்போது மாதாமாதம் இயன்றவரை கொடு என்று கொடுக்கிற போது வாங்கிக் கொண்டார். எனது குடும்பத்தினர் மீது அதிகமாக பாசம் கொண்டிருந்தார். எனது மனைவி அண்ணா என்று அன்போடு பாசத்தோடு நடந்து கொள்வார். .

சொந்த வாழ்க்கையில் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். 

அவரது மகள் திருமணத்திற்கு நான் மட்டுமே சென்று வந்தேன் எனது மனைவியால் வர இயலவில்லை.  எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று எனது மனைவி நீண்ட நாட்களாக வற்புறுத்திக் கொண்டிருந்தார். 


அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டையாலிசிஸ் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் வருந்தினோம். சென்ற ஜூலை மாதம் நாங்கள் தென் மாவட்டங்களுக்கு குடும்பத்தோடு சென்ற போது, அவரது வீட்டிற்கு சென்று, அவரையும், அவரது தந்தையார், அவரது மகள், மருமகன், பேத்தி மற்றும் சகோதரியை சந்தித்து வந்தோம். மிகவும் உற்சாகமாக எங்களை வரவேற்று, சிறு வயதில் அந்த காலத்தில் எப்படி இருந்தாரோ அதைப்போல ஓடியாடி எங்களை கவனித்துக் கொள்வதில் அக்கறையாய் இருந்தார். 


இப்படி திடீரென்று நம்மை விட்டு செல்வார் என்று நினைக்க முடியவில்லை. இன்னும் எழுதுவதற்கு ஏராளமாய் இருக்கிறது. 


ஒரு சிறு விபத்தில், என்னால் பயணம் செய்ய இயலாத நிலையில், வீட்டில் சூழ்நிலை கைதியாக இருக்கிறேன். நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று என்னை மிகவும் வருந்துகிறேன். இங்கிருந்தாலும் நண்பா... உன்னை கண்ணீரோடு வழி அனுப்புகிறேன்... 

சென்று வா நண்பா...... 

உனது ஆத்மா சாந்தியடையட்டும்


 எனது ஆருயிர் நண்பரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தாளுனர் சங்க மாவட்ட நிர்வாகியாக பணிபுரிந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்தாளுநராக  பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு கே கணேசன் இன்று 20.2.25 மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டையில் உடல் நலக்குறைவால் அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 21.2.25 12.மணியளவில் பாளையங்கோட்டையில் நடைபெறும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 

சீனி கார்த்திகேயன்

Wednesday, 19 February 2025

சினிமா மொழி

 சினிமா மொழி

சினிமாவிற்கு என்று மொழி இருக்கிறதா என்ன . சரி மொழி என்பது தான் என்ன. அது ஒரு தகவல் தொடர்பு சாதனம். கம்யூனிகேஷன் மீடியா. மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு ஊடகம்.. அது இனம் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அது எழுத்து , சொல், வாக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது .வெர்பல் லாங்குவேஜ் என்பார்கள். ஒருவருடைய மொழி இன்னொருவருக்கு தெரிந்திருக்க முடியாது அல்லவா. அந்த தகவல்களை பரிமாறுவதற்கு ஓவிய மொழி பயன்பட்டது. (லாங்குவேஜ் ஆப் டிராயிங்). 1745 இல் தற்செயலாக சில்வர் நைட்ரேட் கொட்டப்பட்ட தாளில் விழுந்த படிமத்தை கொண்டு உருவானது புகைப்படம் என்னும் சாதனம். பிலிம் கண்டு பிடிக்கப்பட்டது , புகைப்படங்கள் மூலம் பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்டன. அதுதான் புகைப்பட மொழி. (லாங்குவேஜ் ஆப் போட்டோகிராபி). உள்ளதை உள்ளபடி தத்ரூபமாக கொண்டு வந்ததால் மக்களை மயக்கும் மொழியானது. அசையாதிருக்கும் படங்களை விட அசைவோடு காட்டினால் தத்ரூபமாய் இருக்கும் என்பதற்கான முயற்சியில் பலர் ஈடுபட்டு 1830ல் எட்வர்ட் மைபிரிட்ஷ் என்ற ஆங்கிலேயர் ஓடும் குதிரையை திரைப்படமாக எடுத்து சாதித்துக் காட்டினார். கண்ணில் காணும் காட்சி மறைந்து விட்ட போதிலும்,மாயத் தோற்றமாக நொடியில் 1/48 பங்கு இருப்பதாகவே காட்சி அளிக்கும் ""பெர்ஸிஸ்டன்ஸ் ஆப் வியூ ""என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு படத்தை 24 ஃபிரேம்கள் தொடர்ச்சியாக ஒரு நொடியில் நகரத்தினால் அது அசைவது போல தோன்றும். எனவே பிலிம்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நொடியில் 24 பிரேம்கள் நகருமாறு, தொடர்ச்சியாக ஒளி ஊடகத்தின் மூலமாக ஒரு திரையிலே படத்தை காட்டும் போது அது அசையும் படமாக தோன்றியது. அதுதான் மூவி என்பதன் அடிப்படை. தாமஸ் ஆல்வா எடிசனில் தொடங்கி லூமியர் பிரதர்ஸ் வரை தொடர்ச்சியாக பலருடைய உழைப்பால் திரைப்பட கலை உருவானது. பின்னர் ஒலியினை பிலிமில் சவுண்ட் டிராக் ஆக இணைத்து அசையும் படத்தோடு ஒலியும் சேர்ந்து பேசும் படமானது. 28. 12.1895–ல் பாரீஸ் நகரில் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. 1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர்.

வெறும் பொழுதுபோக்கிற்காகவே ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டது . திரைப்படக்கலை.முதல் திரைப்படமே கொள்ளையைப் பற்றி எடுத்தனாலோ என்னவோ இன்னமும் நம் பட தயாரிப்பாளர்கள் கொலை, கொள்ளை, செக்ஸை விட்டு வர மறுக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..

முதலில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட திரைப்படங்களை நம் நாட்டிலும் வெளியிடப்பட்டு வந்தது. பிறகு நம் நாட்டிலும் பட தயாரிப்புகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

நம் நாட்டில் ஏற்கனவே இருந்த நாட்டியம், தெருக்கூத்துகளுக்கு போட்டியாக இங்கு திரைப்படம் வர ஆரம்பித்தது. ஏற்கனவே இங்கு நம்மிடம் இருந்த புராணக் கதைகளும் நாட்டுப்புற கதைகளுமே திரைப்படங்களாக வந்தன. அரிச்சந்திரா, சீதா கல்யாணம், திரௌபதை அகல்யா.... போன்ற ஏராளமான படங்கள் அனைத்துமே புராணத்தை அடிப்படையாகவே கொண்டு எடுக்கப்பட்டவை. இவை அனைத்துமே இந்திய மக்களுக்கு பொதுவாகவே ஒரே மாதிரியாகவே அமைந்தது.

சினிமாட்டோகிராஃப் சட்டம் 1918  என்ற சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் 1918இல் கொண்டு வந்தது. இச்சட்டமானது ஒரு திரைப்படத்தைத் திரையிடுவதற்கு உள்ளூர் சிவில் அதிகாரிகளிடமிருந்து உரிமத்தைப் பெறுவதையும், இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் எந்தப் படத்திற்கும் முன்னதாக தணிக்கை செய்யப்படுவதையும் கண்காட்சியாளர்கள் கட்டாயமாக்கினர். சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் "பொது கண்காட்சிக்கு ஏற்றது" என்று கருதப்படும்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்த போது, சில தேச பக்தர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடலாயினர். அவர்கள் புராண படங்களுக்கு ஊடேயே, சுதந்திர கருத்துக்களையோ அல்லது நேரடியாக ஜனங்களின் மனோபாவத்திற்கு ஏற்ற மாதிரி சுதந்திர போராட்ட கருத்துக்களை உடைய நேரடி சமூக படங்களையோ தயாரிக்க ஆரம்பித்தனர். டாக்டர் சாந்தாராம் போன்ற தேசபக்தர்கள் தீண்டாமை வட்டி கொள்ளை, பெண்கள் பிரச்சனை, சமூக பிரச்சனைகள், விவசாயிகள் பிரச்சனைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர். சாந்தாராம் தர்மாத்மா , சவ்காரி பாஷ், அம்ரித் மந்தன், குங்கும, மனோஸ் போன்ற சமூக அவலங்களை சித்தரிக்கும் திரைப்படங்களை இயக்கினார். இதே போல ஹிந்தி, மராட்டி, வங்கம், தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் ஆங்காங்கே இருந்த தேசபக்தர்கள் சமூக சிந்தனையாளர்கள் நல்ல திரைப்படங்களை தயாரித்து தந்தனர். தமிழ்நாட்டில் கே. சுப்பிரமணியம் என்ற இயக்குனர் சேவா சதனம், தியாக பூமி போன்ற மிகச் சிறந்த படங்களை தயாரித்து தந்தார். .

சுதந்திர உணர்ச்சிகளை தூண்டும் படங்கள் வெளிவராத வண்ணம் அல்லது கட்டுப்படுத்தும் வண்ணம் பிரிட்டிஷார் சென்சார் சட்டத்தை பயன்படுத்தினர். .

தியாக பூமி என்ற திரைப்படம் தணிக்கை துறை சட்டத்தின் மூலமாக பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டு கடைசி வரை நீக்கப்படவே இல்லை.

இந்தக் காலத்தில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது ஆதனால் திரைப்படத் துறைக்கு தேவையான ஃபிலிம் போன்ற கச்சா பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பொருளை வாங்கி விற்ற வியாபாரிகள் தாங்களே திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்தனர். பிலிம் வியாபாரம், மற்றும் லேவாதேவி செய்து அதிக லாபம் கண்ட சந்துலால் ஷா, ஏ. வி, மெய்யப்ப செட்டியார் போன்ற முதலாளிகளின் திரைப்படத்துறையில் இறங்கலாயினர்.

போட்ட முதலை எப்படி பன்மடங்காக சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்த வித்தகர்கள், ஆங்கில படங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர். ஹீரோ வொர் ஷிப் சிஸ்டம், (தனிநபர் சாகசம்) நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் விளம்பரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி திரைப்படங்கள் எடுக்கலாயினர்.

படத்தில் வரும் கதாநாயகர்கள் பாடல், ஆடல், சண்டை போன்ற சகல திறமைகளையும் கொண்டவனாகவும் அழகனாகவும், கதாநாயகிகள் அழகிகளாகவும், நாட்டியம் ஆடுபவர்கள் ஆக சித்தரித்து திரைப்படங்கள் வரலாயின. அதுவரை திரைப்படத்துறையில் நடிகர்களுக்கு மாதச் சம்பளம் என்று இருந்தது போய், கதாநாயகன், கதாநாயகிகளுக்கு அதிக சம்பளமும், மற்ற கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் அதிக சம்பள வித்தியாசம் இருக்கும்படியாகவும் அமைந்தது. பிரம்மாண்டமான செட்டுகள், அதீதமான விளம்பரங்களுடன் அவர்கள் தயாரித்த படங்களை வெற்றி படங்களாக்கின. சமூக சிந்தனை உள்ள குறைந்த செலவில் படம் எடுக்கும் பட தயாரிப்பாளர்கள் நலிவடைந்தனர்.

எடுக்கப்பட்ட படங்களிலும் சமூகப் படங்களாக இருந்தால் பெயருக்கு பாரதியார் பாடல்களையோ சமூக சீர்திருத்த கருத்துக்களையோ கூறினாலும், ஒட்டு மொத்தத்தில் வரும் பொழுதுபோக்கு சித்திரங்களாகவே தயாரிக்கப்பட்டன.

பல மொழிகளில் திரு எஸ் எஸ் வாசன் அவர்களால் தயாரிக்கப்பட்ட சந்திரலேகா என்ற திரைப்படம் மிகப்பிரமாண்டமான செட்டுகளுடன் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அதைப் பற்றிய விளம்பரம் இந்தியா முழுக்க இருக்கக்கூடிய மக்களிடம் போய் சேரும் அளவிற்கு இருந்தது.

இது திரைப்படத்துறையை அழிக்கும் செயல் என்று அன்றைய சமூக சிந்தனையாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு முதலாவது ஃபிலிம் சேம்பர் கூட்டத்தை துவக்கி வைத்த இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி பட தயாரிப்பாளர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். இதுவரை நாம் அந்நியனை எதிர்த்து சுதந்திரப் போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்ததால், படங்களில் அரசியல் கருத்துக்களை சொல்ல வேண்டியிருந்தது. இப்போது நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டபடியால் நீங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்கள் வராமல், ஜனங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு பொழுதுபோக்கு படங்களை எடுத்தால் மட்டும் போதுமானது என்றார்.

பிலிம் சேம்பர் தலைவர் சந்துலால்ஷா ஏற்கனவே வியாபாரி. கவர்னர் ஜெனரலே கூறிவிட்டார் அவர் எப்படிப்பட்ட படங்களை தயாரிப்பார்.

சந்துலால் ஷாவை பற்றி ஒரு குறிப்பு? 50களின் துவக்கத்தில் முதன்முதலாக பகல் காட்சி ஓட்டுவதற்கு அரசு அனுமதி அளித்தது. அப்போது பல பத்திரிக்கையாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் பகல் காட்சி நடத்துவதால் மாணவர்களின் படிப்பு, தொழிலாளர் பங்கேற்பு ஆகியவை பாதிக்கப்படக்கூடும். எனவே அதை அனுமதிக்க கூடாது என்று கட்டுரைகள் எழுதினர். அப்போது சந்துலால் ஷா, மதிய காட்சிகள் மூலம் காலாடிகளை அடைத்து வைப்பதன் மூலம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மேட்னி ஷோ உதவுகிறது என்றார். சினிமா படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் என்ன காலடிகளா அதாவது ரவுடிகளா என்று கல்கி காட்டமாய் கட்டுரை எழுதினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் புராண படங்கள், சரித்திர படங்கள்..... புராண படங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அதில் கற்பனைகளுக்கு பஞ்சமே இருக்காது. சரித்திர படங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ராஜா ,ஒரு மந்திரி ,ராணி இளவரசர்கள், சதி வேலைகள் பக்கத்து நாட்டுடன் போர் காதல், மோதல், கொஞ்சம் பாடல்கள், கொஞ்சமென்ன நிறையவே பாடல்கள். இறுதியில் கிளைமாக்ஸ், சுபம். சுபம்.

ஒரே அரைத்த மாவு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தன. இதற்கிடையில் திரைப்பட அரங்கு உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்பவர்கள் என சினிமாக்களை தீர்மானிக்க ஏராளமான பேர் வந்து விட்டார்கள். நிறைய சமூகப் படங்களும் வர ஆரம்பித்தன

 கதாநாயகன், கதாநாயகி, வில்லன், வில்லி, ஜமீன்தார் அல்லது நிலப்பரப்பு, முதலாளி, விவசாயக் கூலி, தொழிலாளி, இவர்களுக்கு உதவும் துனைப்பாத்திரங்கள், நகைச்சுவை கோஷ்டி... என்று கதைகள் நிறைய வந்துவிட்டன. ஆனாலும் எல்லா படங்களிலும் கதாநாயகர் மட்டுமே பிரச்சனைகளை தீர்வு காணக்கூடிய ஆளாகவும் மற்ற அத்தனை பேரும் கதாநாயகனோ அல்லது வில்லனோ சொல்படி ஆடுகிறவர்களாக மட்டுமே கதைகள் வந்தன . காதல் டூயட்டுகள் சைட்டுகள் தேவைப்பட்டால் கிளப் டான்ஸ் என்று எல்லாம் கலந்த கலவையாகவே படங்கள் வந்தன

இறுதியில் முடிவு அநீதி அழிக்கப்பட்டுவிடும், அல்லது கெட்டவர் திருந்தி விடுவார். ஒன்று சுபமாக முடியும் அல்லது எப்பொழுதாவது சோகமாக முடியும் கதைகள்.

மக்களின் பங்களிப்பு இருக்காது. திரைப்படங்களில் பெரும்பாலும் மக்கள் பார்வையாளர்களாகவே இருப்பார்கள்.

படம் பார்க்கிறவர்களுடைய உணர்ச்சிகளை வடிகாலாக, பூராவும் திரையரங்குகளில் கொட்டி தீர்த்துவிட்டு வீட்டிற்கு வழக்கம் போல் உள்ள ஆளாக மாற்றி திருப்பி அனுப்பியது திரைப்படங்கள்.

காதல் காட்சிகள் என்றால் காதல் சொட்ட சொட்ட பாடல்கள்... பூங்காக்கள், பொது இடங்களில் ஆட்டங்கள், வசதிக்கேற்ப வெளிநாடுகளில் காட்சிகள்.. சண்டைகள் என்றால் ஒரு ஆள் 10 பேரை சமாளித்தது போய் 100 பேர் ஏன் ஆயிரம் பேரை கூட அழிக்கக்கூடிய அளவிற்கு மகாவீரர்களாக காட்டியது திரைப்படங்கள்.

நல்ல சமூக சிந்தனையுடன் திராவிட இயக்க படங்கள் திரு அண்ணாதுரை கலைஞர் உள்ளிட்ட பலர் கதை வசனங்களில் ஏராளமான படங்கள் வந்தன. ரசிகர்கள் இடையே ஏராளமான வரவேற்பு பெற்றது இடையிடையே இடதுசாரி சிந்தனை கொண்ட திரைப்படங்களும் வந்தன.

பெண் அடிமைத்தனத்தையும், பிற்போக்கு கருத்துக்களையும், மூடநம்பிக்கைகளையும் விதைத்து வரும் பக்தி படங்களுக்கு இடையே, பெண் விடுதலை, சாதி கொடுமைகள், சமதர்ம கோட்பாடுகள் போன்ற கருத்துக்களை ஆழமான அழுத்தமான கதை வசனங்களை கலைஞரும் திராவிட இயக்க சிந்தனையாளர்களும் தங்கள் திரைப்படங்களில் விதைத்து வந்தனர்.

முற்போக்கு சிந்தனைகள் பொதுவுடமை கருத்துக்களை வலியுறுத்திய பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள் திரைப்படங்களுக்காக எழுதினார்கள். மக்களை கவரும் தத்துவ கருத்துக்களை கொண்ட படங்களில் எம்ஜிஆர் நடித்தார். எஸ் எஸ் ஆர் போன்ற எத்தனையோ பேரை சொல்லலாம்.

தனது வசன உச்சரிப்பும், அசாத்திய நடிப்பாலும் சிவாஜிகணேசன் ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமா உலகம் உருவாக்கிய ஸ்டார் வேல்யூ சிஸ்டம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. ஊதி பெரிசாக்கி நடிகர் நடிகர்களின் படங்களின் பெருமைகளை பேச பத்திரிகைகள் போன்ற மீடியாக்கள் வந்து விட்டன. அப்புறம் என்ன ... விளைவு, பாடலை எழுதியவர் ஒருவராக இருப்பார், இசையமைத்தவர் வேறொருவர், பாடியவர் ஒருவர், வாய் அசைத்தவரின் பாடல் என்று ஊரெல்லாம் கூறும் காலம் வந்துவிட்டது. எம்ஜிஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, கமல் பாட்டு என்று கூறும் நிலை வந்து விட்டது.

சினிமாத்துறை ஊடகத்துறையின் மூலமாக நட்சத்திர போட்டிகளை உருவாக்கி ரசிகர்களிலேயே நிரந்தரமான பரபரப்பை ஏற்படுத்தியது. பாகவதர்- சின்னப்பா, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்று இன்றைய தலைமுறை வரை இடைவிடாத இந்த போட்டியை ஊடகத்துறை ஊதி பெருசாக்கி பரபரப்பாகவே வைத்திருக்கிறது.

அதேபோல திரைப்படத்துறையில் உள்ள மற்ற பிரிவினரிடமும் உள்ள போட்டிகளை தூண்டி விடுவது, நடிகர் நடிகர்களின் சொந்த வாழ்க்கையில் உள்ள விஷயங்களை பெரிது படுத்துவது என்று திரைத்துறையை பரபரப்பாகவே வைத்துள்ளனர்.

சினிமாவில் நடிப்பவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், சகல பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கடவுள்களாகவே தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட இந்தியா முழுக்க இதே நிலைதான்.. வங்கத்திலும் கேரளாவிலும் மராட்டியத்திலும் ஆங்காங்கே சில நல்ல படங்கள் எதார்த்தமான படங்கள் வந்து கொண்டே தான் இருந்தன, சத்தியஜித் ரே, மிருனாள் சென், கிரீஷ்கர்ணாட் போன்ற தலைசிறந்த இயக்குநர்கள் சர்வதேச சினிமாக்களில் தங்கள் முத்திரைகளை பதித்தனர்.

சில சமூக சிந்தனையுள்ள இயக்குனர்களை தவிர்த்து பெரும்பாலான இயக்குனர்கள் ஒரே மாதிரியான பார்முலாக்களையே பயன் படுத்தி ரசிகர்களை கவரும் வண்ணமாக ஆடல் பாடல்கள் சண்டைகள் போன்ற அம்சங்கள் நிறைந்த மசாலா படங்களையும் எடுத்து வந்தனர்.

டூயட் கள், கிளப் டான்ஸ் இல்லாத படங்களை இல்லை என்ற மாதிரி படங்கள் தான் வந்தன. ஒரு நண்பர் வேடிக்கையாக சொல்வார் நம் ஆட்கள் காந்தி படம் எடுத்தால் கூட அதிலும் டூயட்டையும் கிளப் டான்ஸ் செய்யும் புகுத்தி விடுவார்கள். ஒருவேளை இயக்குனர் அம்மாதிரி காட்சி இல்லாமல் எடுத்தால் கூட பைனான்சியர்கள் விநியோகஸ்தர்கள் திரைப்பட உரிமையாளர்கள் இம்மாதிரியான காட்சிகளை வைக்க நிர்ப்பந்தப்படுத்துவார்கள்

எந்த மொழியும் விளக்கல்ல, இந்தி படங்களை பொருத்தமட்டில் பிரம்மாண்டங்கள்... தெலுங்கு படங்களை பொருத்தமற்றிலும் அதிகமான கற்பனைகள் அல்லது புராண படங்கள்.... இது மாதிரி படங்களை வந்தன

கிரைம் செக்ஸ் வயலன்ஸ் குற்றம் காமம் சண்டை இவையே ஹாலிவுட் படங்களின் அடிப்படை அம்சங்கள். இங்கும் அதே குற்றம் காமம் சண்டை என்ற ஃபார்முலா கூட செண்டிமெண்ட் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக திரைப்படங்கள் வரலாயின.

இதற்கிடையில் இடதுசாரி சிந்தனை உடையவர் பாதை தெரியுது பார், தாமரைக் குளம், யாருக்காக அழுதான் மாதிரியான நல்ல படங்களை எடுத்தனர். இது மாதிரியான படங்கள் வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் இன்றி வெளிவருவதில் சிரமப்பட்டனர். ஊருக்கு வெளியில் உள்ள சுமாரான தியேட்டர்களில் வெளிவந்து, போதிய விளம்பரம் இல்லாமலும், மக்களுடைய ஆதரவு இல்லாமல் படுதோல்வி அடைந்தன.

எழுபதுகளில் மசாலா படங்களை தாண்டி சர்வதேச அளவில் நியூவேவ் என்று சொல்லக்கூடிய புதிய அலைகளாக மாறுபட்ட படங்கள் வர ஆரம்பித்தன. தமிழகத்திலும் கே. பாலச்சந்தர் வருகைக்கு பின் ஓரளவு வித்தியாசமான படங்கள் வர ஆரம்பித்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தண்ணீர் தண்ணீர் குடிசை அக்ரஹாரர்கள் கழுதை கழுதை போன்று எப்பொழுதாவது சமூக சிந்தனை உள்ள படங்கள் வந்தன

இடையிடையே ஓரளவு நல்ல சமூக சிந்தனை உள்ள படங்கள் ஓடினாலும், பெரும்பகுதி மசாலா படங்களே வெற்றியடைந்த. இதனால் திரைப்படத்துறையிலிருந்து பத்திரிக்கையாளர்களும் வரை வெற்றி கண்ட படங்களை வியாபார படங்கள் என்றும், நல்ல கலையம்சமுள்ள படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறாததால் கலைப்படங்கள் என்றும் பிரிக்க ஆரம்பித்தனர்.

பாரதிராஜாவின் வருகைக்கு பின் தமிழ் திரைப்படங்கள் செட்டில் இருந்து கிராமங்களுக்கு குடிபோக ஆரம்பித்தது. கிராமத்தில் உள்ள சாமானிய மனிதனுடைய கதைகளெல்லாம் படங்களாக ஆரம்பித்தன. இது ஒரு பெரும் புரட்சி என்றே சொல்லலாம்.

இதுபோல தமிழில் வந்த மிகச் சிறந்த நல்ல படங்கள், கதைகள் என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

தகவல் தொழில் நுட்ப புரட்சி உலக மாயமாக்கல் எல்லாம்ஆன பிறகு திரைப்படங்களும் முழுமையாக கார்ப்பரேட் வசம் ஆயின.

தொழில்நுட்பத்தில் காட்சி அமைப்பில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து பிரமை பூட்டும் அளவிற்கு திரைப்படத்தை வளர்ந்துள்ளது . ஆனாலும் அடிப்படை அம்சங்கள் பெரிதாக மாறிவிடவில்லை . மனிதனுடைய சிந்தனையை உயர்த்துவதாக, பண்பாட்டை மேம்படுத்துவதாக, மனிதநேய சிந்தனையை வளர்ப்பதாக , மக்களின் உண்மையான வாழ்க்கைப்பிரச்சனைகளை பேசுவதாக திரைப்படங்கள் பெரிதாக வந்துவிடவில்லை அதே மசாலாக்கள் தான் தொடர்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அபூர்வமான, வித்தியாசமான படங்கள் வரத்தான் செய்கின்றனர்.

. ஒருமுறை பொம்மை இதழில் பொது இடங்களில் பூங்காக்களில் காதலர்கள் ஆடிப்பாடி ஓடுவதும் ஒரு ஆள் 10 பேருடன் சண்டை போடுவது சாத்தியமா என்று திரு எம் ஜி ஆரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த திரு எம் ஜி ஆர் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் ஆடி பாடி காதல் செய்வதோ ஒரு ஆள் பத்து பேரிடம் சண்டை இட்டு பந்தாடுவதோ சாத்தியமே இல்லாத விஷயம் ஆனால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் ஆதலால் இவை இல்லாமல் படம் எடுக்க இயலாது என்று படாதிபதிகள் கூறுகிறார்கள் என்று ரசிகர்கள் இதை வேண்டாம் என்று சொல்லுகிறார்களோ அன்று இவை எல்லாம் நின்று விடும் என்றார்.

எளிதில் பதில் சொல்லி தப்பித்து விட்டார் நடக்கிற கதையா என்ன. ..

ஒருமுறை புதுக்கோட்டைக்கு வந்த ஒரு பிரபல நடிகரிடம், இதே கேள்வி பதிலை பற்றி கூறி எப்பொழுது மாற்றப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவர் அமைதியாக சொன்னார். திரைப்படத்தை தீர்மானிப்பது பட தயாரிப்பாளர்கள், பைனான்ஸ் செய்பவர்கள், பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று நான்கு அரக்கர்கள் வசம் உள்ளது. அதை தாண்டி இதையெல்லாம் மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அத்தி பூத்தார் போல் வரும் நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் பெருமளவில் ஆதரித்தால் மட்டுமே இந்த போக்கு மாறலாம் என்றார்.

ஒருமுறை புரட்சி கவிஞர் பாரதிதாசன் சினிமா துறையில் நுழைந்து தான் பட்ட அவதிகளை வைத்து அருமையாய் ஒரு கவிதை எழுதி இருந்தார்..

"".......

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!

ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்

உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!

ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!........

.........................

ஆங்கில ப்ரசங்கம்!................

வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!

அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,

.........

. பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி

இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி

இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்

படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்

படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!.

நான் இதுவரை வந்த படங்களில் நல்ல படங்கள் இது, கெட்ட படம் இது என்று பட்டியலிட வரவில்லை. பொதுவான அதனுடைய திசைவழிப் போக்கை தான் கூற வந்துள்ளேன்

இலக்கிய துறைக்கே வழக்கமான வாதம் தான் இது. கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்ற கேள்வி தான் அது. சமூக சிந்தனையும் மனிதனையும் மேம்படுத்துகிற கலை தான் மக்களுக்கான கலை. திரைப்படத் துறை துவங்கையிலே புராணம் படக்கதைகளை படமாக்கியவர்கள் கையில் ஒரு சினிமா மொழி இருந்தது. பின்னர் தேசிய உணர்வும் சமூக சிந்தனையும் உள்ளவர்களுடைய மொழி ஒன்று வந்தது. பின்னர் பெரிய பெரிய திரைப்பட முதலாளிகளுடைய சினிமா மொழி வந்தது. இப்போது உலகமயமாக்களின் பின் கார்ப்பரேட்டுகளின் சினிமா மொழி உலவிக் கொண்டிருக்கிறது. உண்மையாக மக்களிடம் வாழ்க்கையை மேம்படுத்தும், சிந்தனையை வளர்க்கும், மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும், பூவுலகை நேசிக்கும், சமாதான சகவாழ்வை நேசிக்கும் சினிமா மொழி எப்பொழுது, எப்படி வரப்போகிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

Saturday, 15 February 2025

பறவைகள் பலவிதம்


பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அவரவர் வாழ்க்கையில
 ஆனந்தமாய்... 
கிடைத்ததை கொண்டு
  இன்பமாய்... 
இயற்கையின் அழகோடு
இணைந்ததாய்... 
இணையோடு தன்
குடும்பமாய்... 
பேராசை இன்றி
பேரின்பமாய்... 
எல்லைகள் இன்றி
அனைத்துமாய்.. 
அகிலத்திற்கே
 பொதுமையாய்.. 
 ஆறறிவு மனிதனுக்கு
 பாடமாய்.....


இருக்கையில் மனிதா நீ
ஏன் வீணாய்.... .


 

 

நாலடியார்

 நட்பாராய்தல்

நாய்க்காற் சிறுவிரல்போ ன‌ன்கணிய ராயினு

மீக்காற் றுணையு முதவாதார் நட்பென்னாஞ்

சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டுஞ் செய்விளைக்கும்

வாய்க்கா ல‌னையார் தொடர்பு. (218)

நாய் கால்- நாயின் கால்களிலுள்ள. நன்கு அணியர்-மிக நெருங்கினவர். ஈ கால் துணையும்-ஈயினது காலினளவும், என்னாம்-என்ன பயனைச்செய்யும்? சேய்த்து ஆனும்- நெடுந் தூரத்திலிருப்பினும். செய்வினைக்கும்-கழனியைப் பயிர் விளையும் படிச் செய்கின்ற, வாய்க்கால் அனையர் தொடர்பு-வாய்க்காலை ஒத்தவரது நட்பு.

நாயினுடைய கால்களை பார்த்திருக்கிறோம். கடைசியில் இருக்கக்கூடிய சிறு விரல்கள் மிக நெருக்கமாய் இருக்கும். அது போல சிலருடைய நட்பு மிகவும் நெருக்கமாய் இருக்கும். நாம் ஈக்களை பார்த்திருக்கிறோம் . அதனுடைய கால்கள் மிகவும் சிறியவை. அதனுடைய பாதமோ காண இயலாது. அந்தப் பாதத்தின் அளவு கூட உதவி செய்யாதவருடைய நட்பு இருந்தால் நமக்கு என்ன பயன்?

வயல்கள் எங்கோ இருக்கும். வயல்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமான குளங்களும், ஏரிகளும், கிணறும், ஆறுகளும் வேறு இடத்தில் இருக்கும். அந்த வயலுக்கு தேவையான நீரினை வாய்க்கால்கள் கொண்டு செல்லும். அதனால் அந்த வாய்க்கால்களுக்கு எந்த பயனும் இல்லை. இருந்தாலும் வயலுக்கு உதவும் வாய்க்கால்களை போன்ற சான்றோர்கள் உடைய நட்பே என்றும் நிலையானது, சிறந்தது... 

Friday, 14 February 2025

குழந்தை தொழிலாளர்




குழந்தை தொழிலாளர்

நேற்று சொந்த வேலையாக கிராமத்துக்கு ஸ்கூட்டரில் செய்து சென்று கொண்டிருந்தேன். அப்போது காற்று குறைவாக இருப்பதை உணர்ந்து அருகில் உள்ள பஞ்சர் கடைக்கு சென்றேன். அங்கு ஒரு சிறுவன் வண்டிக்கு காற்றடிக்க வந்தான். பொறுமையாய் காற்றடித்துக் கொடுத்து விட்டு, கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டான். இவனை ஒத்த சிறுவர்கள் எல்லாம் சினிமா அது இது என்று பயனில்லாத கால வேலைகளைக் கழிக்கும்போது இவன் மட்டும் ஏன் இப்படி, வறுமையாய் இருக்குமோ என்று அவனிடம் விசாரித்தேன் . 

"வீட்ல சும்மா இருக்க நேரத்துல வேலே செஞ்சா நல்லது தானே" என்றான். 


எனக்கு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன .

மதுரை ருக்மணி பாளையத்தில் எங்கள் வீட்டு அருகே குடிசைத் தொழிலாக பத்தி தயாரிக்கும் கடை ஒன்று இருந்தது. நாங்கள் ஏழு, எட்டு வயது இருக்கும் போது பத்தி தயாரிப்பதற்கான பொடியைக் கொட்டி தண்ணீர் தெளித்து எங்களை மிதிக்கச் சொல்லுவார்கள், பிறகு பக்குவமாக்கி அவற்றை உருட்டி போடுவார்கள், பிறகு தான் பத்தி தயாரிப்பார்கள், மிதிப்பதற்கு ஐந்து பைசா பெற்றதாக ஞாபகம்.

 எங்கள் தெருவில் மூன்று பைண்டிங் ஆபீஸ்கள் இருந்தன. பெருமாள் சாமி, கோவிந்தசாமி என்று இரு சகோதரர்கள் இரு பைண்டிங் ஆபீஸ் உரிமையாளர்களாக இருந்தனர். 40 பக்கம், 80 பக்கம் நோட்டுகள் அங்கு தயாரிப்பார்கள். பேப்பரை மடித்து, ராப்பரில் திணிப்பது, தைப்பது போன்ற வேலைகளுக்கு அங்குள்ள வீடுகளுக்கு அனுப்புவார்கள். 100 நோட்டுக்கு இவ்வளவு காசு என்று கணக்கு இருக்கும். வீட்டில் உள்ள பெண்களெல்லாம் குடிசை தொழிலாக இதை செய்து கொடுப்பார்கள்.

 நானும் எனது சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் பெருமாள் சாமி அவர்களின் பைண்டிங் ஆபிஸ்வேலைக்கு செல்வேன். அங்கு கட்டிங் மிஷினில் வெட்ட வேண்டிய பொருள்களை இறுக்கி பிடிப்பதற்காக மேலே ஒரு சக்கரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அதை இறுக சுற்றினால், வெட்ட வேண்டிய நோட்டுகளை டைட்டாக பிடிக்கும். . இதற்கு குண்டு போடுதல் என்று சொல்வார்கள். இன்னொருவர் கரும்பு ஜூஸ் பிழியும் இயந்திரத்தில் இருப்பது போல ஒரு கைப்பிடியோடு சக்கரம் இருக்கும். அதை வேகமாக சுற்றினால், கத்தி மேலிருந்து கீழாக இறங்கி, திரும்ப மேலே செல்லும். ஒருவர் வெட்ட வேண்டிய பொருள்களை அடுக்கி உள்ளே திணித்து வெட்டிய பிறகு எடுப்பார். இது மட்டும் பெரிய செய்கிற வேலை. சற்று கவனக்குறைவாக இருந்தாலும் நோட்களைஅடுக்கி எடுக்கிறவர் கைகள் வெட்டுப்பட நேரிடும். பெருமாள் சாமி அவர்களின் மூத்த மகன் கண்ணன் அந்த வேலையை செய்து வருவார். சில நேரங்களில் அவர் தம்பி ராமச்சந்திரன் அந்த வேலையை செய்வார். மேலே குண்டு சுற்றுகிற வேலை, சக்கரம் சுற்றுகிற வேலை ஆகியவற்றை சிறுவர்கள் செய்வார்கள். பெரும் பகுதி அந்த வேலையை நான் செய்வேன். ராமச்சந்திரன் அன்பாக நடத்துவார். 

கண்ணன் சரியான சிடுமூஞ்சி. அவர் மனைவி மீது கோபம் என்றால், எங்கள் மீது காட்டுவார். ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் வேலை செய்யும் சிறுவர்களை அடித்து விடுவார். என்னை முதன் முதலில் கன்னத்தில் அறைந்த மனிதர் அவர்தான்.

அதேபோல ஒரு முறை சர்பத் தயாரிக்கும் கம்பெனியில் லீவு நாட்களில் வேலைக்கு சென்ற போது பாட்டில்கள் சரிந்து கீழே விழுந்ததற்கு அங்கு வேலை பார்த்து ஒரு ஆள் என்னை அடித்து விட்டார். அதிலிருந்து சர்பத் கம்பெனிக்கு போவதில்லை.

நாங்கள் குடியிருந்த காம்பவுண்ட் வீட்டில் ஒரு விளம்பர பலகை தயார் செய்யும் பெயிண்டர் இருந்தார். அவர் உள்ளூரில் பிரபலமாயிருந்த சோப் கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கும் இதே அனுபவம் தான்.

ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. சிறுவர்கள் வேலைக்கு சென்றால், வேலை பார்க்கும் இடத்தில் மேலே உள்ளவர்கள் யார் மீதாவது கோபம் என்றால் சிறுவர்களை தான் அடித்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்வார்கள். மிகவும் குறைவான கூலியை தந்து கூடுதல் வேலை வாங்குவார்கள்.

வீட்டில் சொல்லவும் கஷ்டமாக இருக்கும். பெற்றோர் வேண்டுமென்றே வேலைக்கு அனுப்புவதில்லை. சரி, லீவு நாளில் வேலை பார்த்தால் கிடைக்கும் பணம் படிப்புக்கு உதவுமே என்று தான் வேலைக்கு செல்வோம். அங்கும் கஷ்டம் என்று வீட்டிற்கு தெரிந்தால் அப்பா அம்மா சங்கடப்படுவார்கள் என்று சொல்வதில்லை.

பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இதே போல விடுமுறை நேரத்தில் பைண்டிங் ஆபிஸில் வேலை செய்கின்றபோது, பைண்டிங் செய்த பில் புக்கு களை புதுமண்டபத்திலிருந்த கடையில் கொடுத்து வர சொன்னார்கள். சைக்கிள் வாடகை பணமும் கொடுத்தார்கள். மிச்சமாக இருக்கட்டும் என்று தலையில் சுமந்து சென்றேன். தற்செயலாக என்னுடன் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் என் எதிரில்  வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. காக்கி டவுசர், அழுக்கு சட்டை, தலையில் சுமைை, வெறும் காலுடன் வருபவன் தன்னுடன்  படிப்பவன் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், லேசாக ஒதுங்கிக் கொண்டேன். யதேச்சையாக பக்கத்தில் இருந்த கோயிலில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததை கேட்டேன்.

அவ்வையார் படத்தில் முருகன் அவ்வையிடம் கொடிது பற்றி கேள்வி கேட்பார்

அவ்வை பாடுவார்

"கொடிது.. கொடிது இளமையில் வறுமை...."

 வறுமையின் கொடுமையை அன்று மிகவும் உணர்ந்தேன்.....  

அக்கா

 

மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடும்பங்களும் உண்டு. ஏழை குடும்பங்களும் உண்டு. 

நாங்கள் நீண்ட காலமாக குடியிருந்த ருக்மணிபாளைய வீட்டினை இடித்து புதிதாக வீடு கட்டவிருப்பதால் எங்களை காலி செய்ய சொல்லி விட்டார்கள். அதனால் கான்பாளையத்தில் இந்த காம்பவுண்டு வீட்டில் கூடியேறினோம்.

அப்போது நான் தியாகராஜர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஓரளவு சுமாராக படிப்பேன். அப்போது அந்த காம்பவுண்ட் வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. சரசுஅக்கா குடும்பம் தான் அது. சரசு அக்கா வீட்டுக்காரர் மணிசார் மாலை முரசு பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் அதிகம் பேசியது இல்லை ஏனென்றால் அவர் பத்திரிகை பணி என்ற முறையிலே எப்பொழுதுமே பரபரப்பாக வேலை நிமித்தமாக அலைந்து கொண்டே இருப்பார். 

சரசு அக்காவிடமும் அவர்கள் பிள்ளைகளிடமும் தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பேன. அப்போது மாலைமுரசு பத்திரிக்கையில், தினசரி எஸ்எஸ்எல்சி கேள்வி பதில் பிரசுரிக்கப்பட்டு இருக்கும். அக்கா தினசரி பத்திரிக்கையை வந்தவுடன் என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று என்னிடம் கொடுத்து கேள்வி பதில்களை படிப்பதற்கு கொடுப்பார். 

பொதுவாகவே நான் வீட்டில் அதிகம் படிப்பதில்லை. நான் படிக்கும் வரை கொஞ்சம் வித்தியாசமானது. வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்பேன. சந்தேகம் ஏற்பட்டால் அப்பொழுதே அதை தெளிவு படுத்திக் கொள்வேன். என்னுடைய சக மாணவர்கள் சிலரை உட்கார வைத்துக் கொண்டு, கேள்வி கேட்டு பதில் சொல்லுதல் என்று கலந்துரையாடலாகவே படித்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்தது. சில நண்பர்கள் என்னுடன் படிப்பதற்கு பிரியப்பட்டு வீட்டில் அழைத்து சென்றல்லாம் பாடங்களைப் பற்றி கேட்டுக் கொள்வார்கள். ஆதலால் அவர்கள் கொடுக்கும் பத்திரிக்கையை வாங்கி கடகடவென்று முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை புரட்டி விட்டு திருப்பி அனுப்பி விடுவேன். சரிதான், படிப்பு லட்சணம் அவ்வளோதான் என்று அவர்களும் முடிவு கட்டி, நன்குபடிக்க புத்திமதி சொல்லுவார்கள். தேர்வு முடிவுகள் அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் தான் வரும். அதுவும் குறிப்பாக மாலை பத்திரிகைகளில் தான் வெளிவரும். ரிசல்ட் பார்ப்பதற்கு மணி சார் என்னை தன்னுடைய மாலைமுரசு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அதிகம் சுவாரஸ்யம் இல்லாமல் தான் சென்றேன். 

சரி பையன் பயத்தோடு இருக்கிறான் என்று நினைத்து தட்டிக் கொடுத்து வா பார்க்கலாம் என்று கூட்டிச்சென்றார். என்னுடைய கவலை எல்லாம் பாஸ் பண்ணுவதில் இல்லை, எவ்வளவு மார்க் வாங்க போகிறேன் என்ன செய்யப் போகிறேன் என்பது தான். 

ரிசல்ட் பாஸ் என்றவுடன் வாழ்த்தி அனுப்பினார். இரண்டு மூன்று நாட்களில், பள்ளியில் மதிப்பெண் பட்டியல் ஒட்டினார்கள். மார்க்கை குறித்து வந்தேன். எனது வகுப்பில் முதல்மதிப்பெண். வீட்டுக்கு வந்தவுடன் சரசக்கா தான் முதலில் எவ்வளவு மார்க் என்று கேட்டார்கள். 450 என்றேன். நல்லது என்று வாழ்த்தி அடுத்து என்ன படிக்கப் போகிறாய் என்று கேட்டார்கள். என்னுடைய குடும்ப சூழ்நிலை மேற்கொண்டு படிக்க முடியுமா என்று தெரியவில்லை என்றேன். 

மணி சார் வீட்டுக்கு வந்தவுடன் சரசக்காவிடம் என்னுடைய மார்க்கைப்பற்றி விசாரித்திருக்கிறார். 450 மார்க் என்றவுடன் சந்தோஷப்பட்டு என்ன படிக்கப் போகிறான் என்று கேட்டிருக்கிறார். 

அக்கா அவன் படிக்க பிரியப்படவில்லை எங்காவது வேலைக்கு செல்லலாம் என்று கூறுகிறான் என்றிருக்கிறார். இவ்வளவு நல்ல மார்க்கை வைத்துக் கொண்டு ஏன் அவன் வேலைக்கு போக வேண்டும் படிக்கச் சொல்ல வேண்டியது தானே என்று சார் கேட்டிருக்கிறார். எனது குடும்ப சூழ்நிலை பற்றி அக்கா சொன்னவுடன் அவன் வேலைக்கு போகிற மாதிரி நல்ல படிப்பாக படிக்க சொல்லலாம் என்று கூறிவிட்டார். 

அடுத்த நாள் காலை என்னை அழைத்து வேலைக்கு போகிற மாதிரி நல்ல படிப்பாக சேர்த்து விடுகிறேன் படி என்று கூறினார். அன்றே என்னை மதுரை அரசினர் பாலிடெக்னிக்கு அழைத்துச் சென்று நேரடியாக முதல்வரிடம் அறிமுகப்படுத்தி பையன் நானூற்றி ஐம்பது மதிப்பெண் பெற்றிருக்கிறார் அவன் என்ன படிக்கலாம் என்று கேட்டவுடன், முதல்வர் 450 மார்க் நிச்சயமாக டிப்ளமோ கிடைக்கும் எந்த டிப்ளமோ படித்தாலும் அவனுக்கு வேலை கிடைத்துவிடும் என்று சொன்னார். 

மதிப்பெண்பட்டியலை வாங்கி பார்த்தவுடன் அவருக்கு முகம் மாறிவிட்டது. ஏனென்றால் நான் எடுத்திருந்தது உயிரியல் பிரிவு. கணக்கு அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும் உயிரியல் படிப்பிற்கு பாலிடெக்னிக்கில் வேலை இல்லை.

பையன் நன்றாக மதிப்பெண் பெற்று இருக்கிறான் ஆனால் உயிரியல் படிப்பிற்கு நமது மதுரை பாலிடெக்னிக்கில் படிப்பு ஏதும் இல்லையே நன்றாக படிக்கிறான் உதவி செய்ய முடியலையேஎன்று வருந்தினார். தூத்துக்குடி பாலிடெக்னிக்கில் கடல்சார்ந்த டிப்ளமா படிப்பு இருக்கிறது. அங்கு அப்ளை செய்தால் நிச்சயமாக இடம் கிடைக்கும் என்றார். வெளியூர் சென்று படிக்கும் அளவிற்கு வசதி இல்லை என்று சொன்னவுடன் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார். 

மறுநாளே மணி சார் என்னை நேரடியாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்று எனது மதிப்பெண்ணை கூறி என்ன படிக்கலாம் என்று கேட்டவுடன், மருந்தியல் பட்டய படிப்பு படிக்க சொல்லுங்கள் உடனே வேலை கிடைக்கும் என்றார்.

நானும் மருந்தியல் டிப்ளமோ படிப்பிற்க்கு அப்ளிகேஷன் பட்டவுடன், எனது அப்ளிகேஷன் நம்பரை குறித்து வாங்கிக் கொண்டார். ஞாபகமாக முதல்வரிடம் இந்த அப்ளிகேஷன் நம்பரை கொடுத்துவிட்டு, அவ்வப்போது நினைவுபடுத்தவும் செய்தார். 

அவர் சொன்னபடியே எனக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, டிப்ளமோ படித்தேன். படித்து முடித்த உடனேயே எனக்கு வேலை கிடைத்தது. எனது குடும்பத்திற்கு பேரு உதவியாக அமைந்தது. நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் நிச்சயமாக சரசு அக்கா, மணி சார் அவர்களுடைய உதவியினால் மட்டும் தான். இந்த உதவிக்கு நான் வாழ்நாள் முழுவதும் சரசுஅக்கா, மணி சார் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.

நானும் புதுக்கோட்டைக்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. மணி சார் சென்னை தேவி பத்திரிக்கைக்கு சென்று விட்டார். திருப்பி சந்திக்கவே முடியவில்லை. முகவரி எதுவும் தெரியவில்லை. யார் யாரிடமோ விசாரித்தேன். எப்படியோ மதுரை பத்திரிக்கைதுறையில் வேலை செய்யும் திரு தியாகராஜன் அவர்கள் உதவியால் தேவிமணி சாரோட பையன் குமாரின் தொலைபேசி எண்ணை பெற்று நீண்ட வருடங்களுக்கு பிறகு சாரிடம் பேசினேன். 

காலத்தினால் செய்த உதவி சிறிதனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்றார் வள்ளுவர். 

அவர்கள் எனக்கு செய்தது சிறிய உதவி அல்ல பேருதவி. 

 என் வாழ்க்கையே உயர்த்திய மாபெரும் உதவி. 

Wednesday, 12 February 2025

சிரிப்போ சிரிப்பு

 


மனிதனுக்கு மட்டுமே சிரிப்பு சொந்தமானது என்று ராஜாராணி திரைப்படத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மனைவி மதுரம் அம்மையாரிடம் கூறி பாடலொன்றை பாடியிருப்பார் . அதில் விதம் விதமான சிரிப்புகளை வகைப்படுத்தி பாடியிருப்பார். அசட்டு சிரிப்பு, ஆனவச்சிரிப்பு, சாகச சிரிப்பு, சங்கீத சிரிப்பு என வகைவகையாய், நகைச்சுவையாகபாடியிருப்பார்.

அதேபோல ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு பாடல் வரும் . அங்கே சிரிப்பார்கள் சிரிக்கட்டும் அது ஆனவச்சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் சிரிப்போ ஆனந்த சிரிப்பு என்று குழந்தையிடம் எம்ஜிஆர் பாடுவதாக காட்சி.

அதேபோல

சிரித்து வாழவேண்டும்......

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்...

நீ சிரித்தால் தீபாவளி. ...

இது மாதிரி ஏராளமான திரைப்படப்பாடல்களுண்டு

மனிதனின் அத்தனை குணங்களையும் சிறப்பாக வெளிக்கொனரும் சக்தி சிரிப்புக்கு மட்டுமே உண்டு. உள்ளத்தில் உள்ளதை உள்ளபடிகொண்டுவரும் சிரிப்பே உண்மையானது. உள்ளத்தில் உள்ளதை மறைத்து போலியாய் சிரித்தவர் வாழ்க்கை ஒரு நாள் சிரிப்பாய் சிரித்து விடும்.

 இந்த படங்களை பார்த்தபின் என் கருத்துக்களை மாற்றிக் கொண்டேன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் தான். விலங்குகள் சந்தோசத்தில் மட்டுமே சிரிக்கும். மனிதர்கள் போல மனதில் உள்ளதை மறைத்து வில்லங்கமாய் சிரிக்க தெரியாது.

சிரிப்பு என்பது உண்மையாய், அடிமனத்திலிருந்து விட்டால் வாழ்க்கை என்றுமே ஆனந்தம் தான்.


ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...