ஆரண்யமும் மலையும்
ஆறும் நிலமும் இயற்கை
அளித்த அனைவருக்கான
அருட்கொடையாம்....
வலுத்தவன் பறித்ததால்
வயலெல்லாம் பறிபோனது
வனங்களின் வளங்களை
வகையாய் திருட வந்தது
வன பாதுகாப்பு சட்டம்..
அரசு பறித்ததால் ஆரண்யம்
அசலம் கைவிட்டு போனது..
பழங்குடியும் விலங்குகளும்
பாதுகாப்பிழந்து போயினர்..
ஆங்கிலேயரை நிலத்தை
அபகரித்த சண்டாளரை
துரத்திட ஆயுதம் ஏந்தினர்
முண்டா தலைமையில்...
களம் கண்ட முண்டா
களப்பலியான தினம் இன்று.
ஆட்சிகள் மாறிய போதும்
காட்சிகள் மாறிடவில்லை..
இன்று பிர்சா முண்டா (Birsa Munda) நினைவு நாள். ஜூன் 9, 1900.
இவர் இந்தியாவில் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் மக்களைத்திரட்டி போராடிய முதல் வீரராவார். ஆங்கிலேய அரசின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து இந்தியாவை இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார். சோட்டா நாக்பூர் பகுதிகளில் பழங்குடி மக்களை ஒன்று திரட்டினார். 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று அறைகூவல் விடுத்துப் போராடினார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் அவர். 1894 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவிலே நடந்த முதல் போராட்டம் ஆகும். 1990ஆம் ஆண்டு கெரில்லா வீரர்களின் உதவியால் போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது. தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார்.
அவர் வாழ்ந்த 25 வருடங்கள் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவு கூருகிறார்கள்.. அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்றே அழைக்கிறார்கள்.
பிரிட்டிஷ் சிறையிருப்பில் உள்ள அழியாத தியாகி வீர் பிர்சா முண்டாவின் அரிய படம், அதில் அவர் நான்கு ஆயுதமேந்திய வீரர்களுக்கு மத்தியில் பெருமையுடன் மார்பு வீங்கி நிற்கிறார். அவரது கைகள் சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ளன..
நாடே விடுதலை பெற்றாலும், இன்னமும் கனிம வளங்களுக்காகவும், இயற்கை வளங்களை சுருட்டுவதற்காகவும், பழங்குடியினர் காடுகளை விட்டு, மலைகளை விட்டு துரத்தப்படுவதும், வேட்டையாடப்படுவதும் இன்னும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது...
பழங்குடியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள், சமத்துவம் அடைவது தான் பிர்சா முண்டா செய்த தியாகத்திற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...
No comments:
Post a Comment