இப்பொழுதெல்லாம் ஆன்மீகம் சார்ந்த எழுச்சி மிக அதிகமாக காணப்படுகிறது. முகநூல் பக்கங்கள், சமூக ஊடகங்களில் எல்லாம் ஆன்மீகம் தொடர்பான செய்திகள் கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சாமியார்களுடைய உபதேசங்களுக்கும் பஞ்சமில்லை. ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள். அது அவர்களின் சொந்த விஷயம். எழுதுகிறவர்கள் பாடு, படித்து ஏற்றுக்கொள்கிறவர்கள் பாடு. அதற்குள் நாம் ஏன் போக வேண்டும். ஏனெனில் அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில விஷயங்களில் அபத்தமாக கருத்துகள் வரும்போது நமது கருத்தையும் பதிவு செய்வதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்..
சமீபத்தில் வந்த இரு கருத்துக்களை பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.
அதில் ஒருவர் முன்பெல்லாம் இங்கு ஏராளமான கோயில்கள், வழிபாட்டு தலங்கள் எல்லாம் இருந்தன. மக்கள் பிரகாரங்களை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். அப்பொழுதெல்லாம் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் எல்லாம் இல்லை. இப்பொழுது நாத்திகம் பெருகி, இறைநம்பிக்கை குறைந்து விட்டதால் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் எல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்று எழுதினார்.
இப்பொழுதெல்லாம் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் அதிகரித்து இருப்பது உண்மைதான். 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்த போது எங்களிடம் இரண்டு ரத்த அழுத்த நோயாளிகளும் ஒரு சர்க்கரை நோயாளியும் இருந்தனர். ஏன் இவ்வளவு உறுதியாக சொல்லுகிறேன் என்றால், தினசரி வந்த நோயாளிகள் பட்டியலில் என்னென்ன வகை நோயாளிகள் வந்திருக்கிறார்கள் என்று பட்டியலை நான் தினசரி தயாரித்து, அரசுக்கு மாதாந்திர அறிக்கை சமர்பிப்பது வழக்கம்.
நான் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுகாதார இயக்குநரகத்தில் பணிபுரியும் போது, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யும் பணி எனக்கிடப்பட்டிருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை, செயல்பாடுகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அப்போது நான் பணிபுரிந்த அதே திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய விவரங்களைப் பார்க்கும் போது வரும் நோயாளிகளிடம் கிட்டத்தட்ட 15 சதவீதத்திற்கு மேல் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய்கள் உள்ளிட்ட தொற்றாநோய்கள் இருப்பதை காண முடிந்தது. இதுதான் நாடு முழுக்க இருக்கும் நிலைமை. கிட்டத்தட்ட வருகின்ற நோயாளிகளின் தொற்றா நோய் பிரிவு அதாவது ரத்த அழுத்த நோய் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோயாளிகள் மிகவும் அதிகரித்து வருவதைக் காணலாம் முடிந்தது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்ற தொற்ற நோய்கள் அதிகரித்ததற்கு மக்களுடைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன உலைச்சல்கள் உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன. நோய்களுக்கு ஆத்திகர், நாத்திகர், இந்த சாதிக்காரர் இந்த ஊரார் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. இது ஒரு சமூக பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயமாகும். இதை மத நம்பிக்கைகளோடு இணைத்தல் என்பது அபத்தமானது, கேலிக்கூத்து ஆனது.
அதேபோல போதுமான மழை இல்லாமல் போனதற்கும், வறட்சி பஞ்சத்திற்கும் நாத்திகம் அதிகரிப்பது தான் காரணம். இறை நம்பிக்கை குறைந்தது தான் காரணம் என்று மதுரை ஆதீனம் புலம்பி இறந்தார்.
மழை குறைந்து வருவதற்கு மாறி இருக்கக்கூடிய உலகத்தினுடைய சுற்றுச்சூழல்கள், வெப்பமயமாதல், காடுகள் அழிக்கப்படுதல், நகர் மயமாதல் உள்ளிட்டவை ஏராளமான காரணிகள் உள்ளன. மத நம்பிக்கைக்கும் மழைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் மழையையும் மதத்தையும் மத நம்பிக்கையும் இணைத்து பேசுவது அபத்தமானது இல்லையா. நாத்திகமும், நாத்திகர்களும் உருவாவதற்கு பல காலங்களுக்கு முன்பே மழையின்றி பஞ்சம் வந்ததாக நம் இலக்கியங்களில் ஏராளமாய் இருக்கிறது. இவ்வாறெல்லாம் உளறலாமா அவர்கள் தான் யோசிக்க வேண்டும்.
இன்று சொல்லப்போனால் மத நம்பிக்கைகள் மத செயல்பாடுகள் மிக அதிகமாக இருப்பது இந்த சமீபத்திய சில பத்தாண்டுகள் தான். எனக்கு தெரிந்து பிரதோஷ வழிபாடுகள், கிரிவலம் வருதல், வாரந்திர மாதாந்திர மத வழிபாடுகள், திருவிளக்கு பூஜைகள் போன்றவை அதிகரித்து வருவது சமீப காலங்களில் தான்.
அது போல சோதிடர்களும் சோதிட நம்பிக்கைகளும் மிகவும் அதிகரித்து வருவது இந்த சில பத்தாண்டுகளுக்கு உள்ளே தான். அதற்கு முன்பெல்லாம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் குடும்பத் தேவைகளுக்கும் தான் ஜோதிடர்களை அணுகுவார்கள். ஆனால் இன்று தொட்டதற்கெல்லாம் ஜோதிடம்... ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களுக்கு எல்லையே இல்லாத அளவிற்கு போய் இருக்கிறது..
ஜோதிடர்கள் கைங்கரியத்தால் இன்று எல்லோரும் பரிகாரங்கள் செய்வதற்கும், வழிபடவும் கோயில்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புனித யாத்திரைகளும், கிரிவலங்களும், பாதயாத்திரைகளும், மத விழாக்களும் பெருகிக்கொண்டே போகின்றன.
அதேபோல கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் முன்னெப்போதையும் விட அதிகமாக மத சடங்குகளில் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மதகுரளி வித்தைக்காரர்களின் கூத்துக்களுக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. நொண்டிகளை நடக்க வைத்தல், ஊமைகளை பேச வைத்தல், செவிடர்களை கேட்க வைத்தல், குருடர்களை பார்க்க வைத்தல், பேயோட்டுதல், எழுப்புதல்,உறங்க வைத்தல் போன்ற குறளி வித்தை கூத்துக்களை மத விழாக்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முன் எப்போதையும் விட எல்லா மதத்துக்காரர்களும் தங்களது மத சின்னங்களை அணிந்து கொள்வதிலும், மத அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டுவதிலும், மத விழாக்களில் பங்கேற்பதும் மிக அதிகமாகக் கொண்டே வருகிறது.
நியாயமாகப் பார்த்தால் வருத்தப்பட வேண்டியவர்கள், கவலைப்பட வேண்டியவர்கள் நாத்திகர்களும், பொதுவுடமைக் கட்சிகளும் தான். அவர்களுடைய செல்வாக்கு தான் குறைந்து கொண்டிருக்கிறதே தவிர, மதவாதிகளின் செல்வாக்குகளும், அவர்களது நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் மிகுதியாக பெருகி ஆக்கிரமித்து உள்ளது.
No comments:
Post a Comment