நான் முதன்முதலாக பட்டிமன்றத்தை பார்த்து ரசித்தது, மதுரை ராமநாதபுரம் காலையில் உள்ள அரச மரம் பிள்ளையார் கோயிலில் 1977 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவின் போது நடைபெற்ற ஒரு சிறப்பான பட்டிமன்றம் தான். குன்றக்குடி அடிகளார் நடுவராக இருந்து மக்களின் பிரச்சினையை தீர்ப்பது பகவத் கீதையா, திருக்குறளா, மார்க்சியமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றம் தான்.
அந்தப் பட்டிமன்றத்தில் தமிழகத்தில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டார்கள் பகவத் கீதையே என்ற தலைப்பில் திரு சத்தியசீலன் அவர்கள் தலைமையில் ஒரு அணியும் திருக்குறளே என்ற தலைப்பில் திருமதி சக்தி கோதண்டம் தலைமையில் ஒரு அணியும், மார்க்சியமே என்ற தலைப்பில் திரு தா பாண்டியன் அவர்கள் தலைமையில் ஒரு அணியும் கலந்து கொண்டு மிக சிறப்பாக பேசினார்கள். பேசியவர்கள் எல்லாம் கொடுக்கப்ட்ட தலைப்பின் உள்ளே புகுந்து அலசி ஆராய்ந்து மிகத் தெளிவாக தங்களது கருத்துக்களை விளக்கினார்கள்.
முதற் சுற்றிலே பகவத் கீதை வெளியேறியது. இறுதியாக திருக்குறளே, மார்க்சியமே என்ற தலைப்பு மோதியதில், மக்கள் பிரச்சினையை தீர்க்க உதவுவது திருக்குறளும், மார்க்சியமும் இணைந்து என்று குன்றக்குடி அடிகளார். தனது தீர்ப்பினை வழங்கினார். ஒரு துறவியாக இருந்தாலும் மார்க்சியம் என்ற தலைப்பில் அரசியல் பொருளாதார கருத்துக்களை பற்றியும், திருக்குறளில் உள்ள சமூக பொருளாதார கருத்துக்களையும் இணைத்து இலக்கிய பூர்வமாக மிக அருமையாக தனது உரையை நிகழ்த்தி தீர்ப்பு வழங்கினார்.
அந்தக் கூட்டத்தை அப்போதைய மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு என் சங்கரையா அவர்கள் துவக்கி வைத்தார்கள். அந்த காலத்தில் மதுரையிலே அந்த பட்டிமன்றம் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது.
பொதுவாக அந்த காலங்களில் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கருத்தரங்கங்கள் அதிகமாக நடைபெற்றன. நல்ல தலைப்புகளில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் நல்லதொரு ஆராய்ச்சி உரை வழங்கினார்கள். பெரும்பாலும் ராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற தலைப்புகளை ஒட்டியே பட்டிமன்றங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் மிகச் சிறந்த பேச்சாளர்களாகநெல்லை கண்ணன், அறிவொளி, சத்தியசீலன், இளம்பிறை மணிமாறன், பாரதி கிருஷ்ணகுமார் என்று ஒரு பெரிய பட்டாளமே வந்தது.
பின்னாளில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக மாற ஆரம்பித்தது.
மக்கள் ரசிப்பதற்காக நிறைய நகைச்சுவை கலந்து பேச ஆரம்பித்தார்கள். நண்பர் பாரதி கிருஷ்ணகுமார் வேடிக்கையாக சொல்வார். கற்பில் சிறந்தவர் கண்ணகியா மாதவியா என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் நடைபெற்றால், கற்பில் சிறந்தவள் கண்ணகி அல்லது மாதவி, இன்னின்ன வகையில் சிறந்தவள் என்று அவர்களது சிறப்பு அம்சங்களை கூறுவதை விட இவள் எப்படி கெட்டுப் போனவள் அல்லது சரியில்லாதவள் என்று அதிகமாக பேசிவிட்டு அதனால் அவள் கற்பில் சிறந்தவள் என்று பேசி கைதட்டு வாங்குகிறார்கள் என்பார்.
அப்புறம் பேசுகிற பேச்சாளர்களை ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசி ஜனங்களை சிரிக்க வைத்து தலைப்புகளில் ஆழமாக பேசுவதை விட கைதட்டுகளுக்காகவே கதைகள், நகைச்சுவை துணுக்குகள், ஆகியவற்றை அதிகம் இணைத்து பேசி பட்டிமன்றத்தின் சாராம்சங்களை குறைக்க ஆரம்பித்தார்கள்.
அப்புறம் புண்ணியவான் லியோனி தலைமையில் ஒரு பட்டிமன்ற கோஷ்டி வந்தது. அவர்கள் பேசுவதோடு திரைப்பட பாடல்களைப் பாடி, காமெடி செய்து பட்டிமன்றத்தின் போக்கையே மாற்றினார்கள். நிறைய பேர் ரசிக்க ஆரம்பித்தனர். அவர்களது பேச்சுக்கள் எல்லாம் ஒலிநாடாக்களாக தமிழகம் தமிழகமெங்கும் வளம் வந்தது.
நல்ல வேலையாக அந்த காலத்தில் பாடுகிற கூத்துக்கள் இல்லை. இருந்திருந்தால் அறிவொளி, சத்தியசீலன் போன்றவர்கள் எல்லாம் பாடி இருப்பார்களா தெரியவில்லை. பாட தெரியவில்லை என்றால் பேச முடியாது என்கிற நிலை இருந்திருந்தால் நல்ல பேச்சாளர்கள் வந்திருப்பார்களா என்று தெரியாது.
தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் ஒளி பரப்ப ஆரம்பித்த பிறகு, சமூக தலைப்புகளில், குடும்பத் தலைப்புகளில் அதிக பட்டிமன்றங்கள் வந்தன. நிறைய பேரை பட்டிமன்றங்கள் சென்றடைந்தது,.
ஆனாலும் ஆழமான கருத்துக்களை.,ஆராய்ந்து பேசுவதை விட ஜனங்களை ரசிக்க வைக்கும் விதமாக கதைகள், நகைச்சுவை துணைக்குகள், பாடல்கள் நிறைந்த கதம்ப பேச்சுக்கள் தான் அதிகம் வருகின்றன.
இட்லிக்கு தேவை சட்னியா, சாம்பாரா போன்ற தலைப்புகள் வந்து, இட்லிக்கு தேவை அரிசியும் உளுந்தும் தான் என்கிற மாதிரியான பட்டிமன்றங்கள் அதிகமாகிறது. சமூக பொருளாதார விஷயங்களை, மனிதனை சிந்திக்க தூண்டுகின்ற, கருத்தாழமிக்க பேச்சுக்கள் குறைந்து வருவதாக தோன்றுகிறது.
பட்டிமன்ற புகைப்படம் கிடைக்கவில்லை. அதேகோவிலில் நடைபெற்ற வேறொரு மகாசிவராத்திரி நிகழ்ச்சி இது
No comments:
Post a Comment