உலகமெங்கும் தொழிற்புரட்சிக்குப் பின் பல தொழிற்சாலைகளும் சிறு தொழிற்கூடங்களும் துவக்கப்பெற்று உலகத்தின் முகமே மாறியது என்றால் மறுப்பதற்கல்ல.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தொழிலாளிகளின் உழைப்பால் ஏராளமான முன்னேற்றங்களை கண்டது.அப்படிப்பட்ட காலங்களில் முதலாளிகளின் லாபவேட்டைக்காக உழைப்பாளரது ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர்.அவர்களுக்கு லாப வேட்டை ஒன்றே குறிக்கோளாக இருந்தது.
ஆக குறைந்த கூலிக்கு யார் அகப்படுகிறார்களோ அவர்களை வேலைக்கமர்த்தி சுரண்டுவது அவர்களுக்கு வசதியானது.குறிப்பாக பெண்கள்,குழந்தை தொழிலாளர் என்றால் அவர்களுக்கு வசதியாய் போனது.மிக குறைந்த கூலிக்கு அமர்த்திக்கொள்ளலாம்,அவர்கள் மீது வன்முறையை பிரயோகித்தால் கேட்பதற்கும் நாதிஇருக்காது. பொருளாதார நெருக்கடியால் பெற்றோர் குழந்தைகளை வேலைக்கனுப்பும் நிலை ஏற்பட்டது..
வயல்வெளிகளில், சுரங்கங்களில், காடுகளில், கடைகளில், வீடுகளில் என்று எல்லா இடங்களிலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை இருந்தது.
குழந்தை தொழிலாளிகள், பெண் தொழிலாளர்கள் பட்ட துன்பங்களுக்கு அளவே கிடையாது. உடல்ரீதியாக, பாலியல் ரீதியாக துன்புறுத்தலை சந்தித்தனர்.
காலங்கள் மாறிய பின்னர் ,சோஷலிச கருத்துக்கள் பரவிய பின்னர் தொழுலாளர்கள் அமைப்பு ரீதியாக திரண்டு போராடிய பின்னர் ,,உலக தொழிலாளர் அமைப்பு(சர்வதேச) தொழிலாளர் அமைப்பு) உருவானது. பின்னர் தான் கொஞ்சம் நிலைமை மாறியது.
உலக தொழிலாளர் அமைப்பின் முடிவிற்கிணங்க குழந்தை தொழிலாளி வேலைக்கமர்த்தும் கொடுமைக்கு சற்றே விடிவு காலம் பிறந்தது,
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.
ILO-வின் ஆய்வு தகவல்களின்படி, உலகளவில் கோடிக்கணக்கான சிறுமிகளும் சிறுவர்களும் போதுமான கல்வி, சுகாதாரம், ஓய்வு மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பெறுவதைத் தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், இதனால் அவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. இந்தக் குழந்தைகளில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஆளாகிறார்கள். இந்த மோசமான குழந்தைத் தொழிலாளர் முறைகளில் ஆபத்தான சூழல்களில் வேலை செய்தல், அடிமைத்தனம் அல்லது கட்டாய உழைப்பின் பிற வடிவங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விபச்சாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள், ஆயுத மோதலில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.
வளர்ந்த நாடுகளில் குழந்தை தொழிலாளி முறை ஒழிக்கப்பட்டாலும்,பின் தங்கிய நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க,ஆசிய நாடுகளை குழந்தை தொழிலாளர் முறை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று முற்றாக குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படாத நிலையில் ,சமூகத்தில் இன்று முன்னேற்றமடையாத நிலையில் பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் பிரிவினரை சார்ந்த குழந்தைகள் இன்று கல்வி மறுக்கப்பட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது...
2006 அக்டோபர் 10 தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது.
குழந்தைகள் நலனுக்கான உழைத்து வரும் சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மூன்று வகையாக உள்ளது பிரித்துள்ளது.
மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.அதன்விளைவாக தவறான பழக்க வழக்கங்களும்,குற்றங்களும் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது,,
அவர்களை குழந்தை தொழிலாளர் கொடுமையிலிருந்து மீட்டெடுக்க கீழ்க்கண்ட செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
*சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .
*சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்
*கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
*பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க அனைவரும் முன்வரவேண்டும்..
"குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல" என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment