இந்தியாவில் அவசர நிலை நீக்கப்பட்ட நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பொதுக்கூட்டத்தினை காணச் சென்ற நானும் எனது தோழர்கள் அப்துல்ரஜாக், தாமரைச்செல்வன் ஆகியோர் தோழர் நன்மாறனின் பேச்சால் கவரப்பட்டு அவரிடம் சென்று எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். மறுநாளே இஸ்மாயில் புரத்தில் உள்ள எனது நண்பன் அப்துல் ரசாக் வீட்டிற்கு தோழர்கள் நன்மாறன், ஏசிஏஅனந்தன், ரஹ்மத் மற்றும் ஜீவானந்தம் எங்களை தேடி வந்து பார்த்தார்கள். அதிலிருந்து தொடர்ந்தது எங்கள் நட்பு. நாங்களும் சோசிலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இணைந்து பணியாற்றினோம். சங்க பலகை என்று அழைக்கப்படக்கூடிய அருமைத் தோழர் வேலாயுதம் அவர்களின் கண்ணாடி கடையில் அடிக்கடி சந்தித்து பல தலைப்புகளில் பேசி மகிழ்வோம். ஏராளமான அரசியல் வகுப்புகளில் பங்கேற்றோம். சோசிலிஸ்ட் வாலிபர் முன்னணியின் சார்பாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றோம்.
வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு என்ற முழக்கத்தின் கீழ் இளைஞர்களை ஒன்றிணைத்து, சென்னை நோக்கி சைக்கிள் பேரணி மூன்று திசைகளில் இருந்து மூன்று அணிகளாக கிளம்பி சென்றது. தோழர்கள் கிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், நன்மாறன் தலைமையில் ஒரு அணியும், கே சி கருணாகரன் தலைமையில் ஒரு அணியும் சென்னைக்கு சென்றது. தங்கள் பகுதிக்கு வரும் அணியை ஆங்காங்கே இருக்கக்கூடிய இளைஞர்கள் வரவேற்றனர், கூடவே சைக்கிள் பயணம் செய்து குறிப்பிட்ட எல்லை வரை செல்லுங்கள் அனுப்பி வைத்தோம். இறுதியாக இந்த அணிகள் ஆகஸ்ட் 15, 1978 அன்று சென்னையில் கோட்டைக்கு ஒரு பிரம்மாண்டமான பேரணியாக சென்றது. நாங்கள் எல்லாம் மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்னையில் சென்று அந்த பேரணியில் கலந்து கொண்டோம். தோழர்கள் ஜீவானந்தம், கந்தசாமி, ஆனந்தன் உள்ளிட்ட தோழர்களோடு சென்னை சென்றது இன்று நன்றாக நினைவில் உள்ளது.என்னைப் போன்ற இளம் வயது தோழர்களை மிக அருமையாக தோழர் ஜீவானந்தம் கவனித்துக் கொண்டார். எங்களிடம் படிப்பதற்கு ஏராளமான புத்தகங்களை கொடுத்து எப்படி படிக்க வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அவரிடம் பெற்ற ஜார்ஜ் டிமிட்ரோ எழுதிய ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற புத்தகம் என்னிடம் இன்னும் கைவசம் உள்ளது. அரசு பணி கிடைத்தது நான் புதுக்கோட்டைக்கு வந்த பிறகு தொடர்புகள் குறைந்து தான் போனது. இருந்தாலும் எப்பொழுது சந்தித்தாலும் பழைய நினைவுகளை பேசி மகிழ்வோம்.
1977 மற்றும் 1980 சட்டமன்ற தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதியில் தோழரின் சங்கரையா அவர்களுக்கு மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 1985இல் தமிழ்நாடு முற்போக்குழுத்தாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற நாடக விழாவில் நாங்கள் புதுக்கோட்டை சார்பில் கலந்து கொண்டோம். அங்கு அவர் மதுரை குழுவினரோடு வந்து வண்ணங்கள் வேற்றுமை பட்டால் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார் கலை இலக்கியத் துறையிலும் மிக ஆர்வம் கொண்டிருந்த தோழர் ஜீவானந்தம்.
2013 இல் மீண்டும் நான் மதுரைக்கு மாற்றலாகி சென்றபோது அவரை அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கம். சில காரணங்களால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடராமல் போனாலும், இறுதி மூச்சு அடங்கும் வரை உண்மையான கம்யூனிஸ்ட் ஆகவே திகழ்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய பிரச்சாரங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரிமாறிக் கொண்டே இருந்தார்.
கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் உறுதியாக இருந்தார். மிக மிக அருமையான, அபூர்வமான தோழர். அவர் விரும்பியபடி ரஷ்யா சென்று லெனின் உடலை பார்த்துவிட்டு, அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு உணர்ச்சி பெருக்கோடு அதைப் பற்றி பற்றி நிறைய சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அவரது நிறைவேறாத ஆசை செஞ்சீனா செல்ல வேண்டும் என்பதுதான்.
அப்பேர்ப்பட்ட அருமையான தோழர் இன்று 28.6.2025 காலமாகிவிட்டார்.அவரது விருப்பப்படி அவரது உடல் மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ கல்லூரி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவருடைய இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, பொதுவுடைமை இயக்கத்திற்கும் தான் அவருக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment