Thursday 29 December 2022



 என் தம்பி டைனோசர்களை துரத்துகிறான் -எஸ்.இளங்கோ -
நூல் விமர்சனம் 

கலை கலைக்காகவா ?கலை மக்களுக்காகவா ?என்ற வினா காலம் காலமாகவே எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.இதன் ஒரு பகுதி தான் திரைப்படங்கள் குறித்த விவாதத்த்திலும் வருகிறது.

இதில் அறிவு ஜீவிகள் திரைப்படங்களை வர்த்தக திரைப்படங்கள்,கலைப்படங்கள் என்று அவர்களாகவே வியாக்கியானம் செய்து கொண்டு நல்ல திரைப்படங்களை கலைப்படங்கள் என்று கூறி மக்களிடம் சென்றடையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நல்ல திரைப்படம் என்பது மக்களது ரசனை,சிந்தனை எண்ணம் உள்ளிட்ட அணைத்து வழிகளிலும் அது மனிதகுல மேம்பாட்டுக்காக இருப்பது தான்....  

அந்த வகையில் நல்ல திரைப்படங்களை தேடி நண்பர் எஸ்.இளங்கோ 44 திரைப்படங்கள் மூலம் 5000 நிமிடங்கள் பயணம் செய்து ,ஆராய்ச்சி செய்து நமக்கான நல்ல உலக படங்களை நம்மிடம் அறிமுகம் செய்திருக்கிறார்..

இப்புத்தகம் ஒரு உலக சுற்றுப்பயணம் போன்றதே.பல்வேறு நிலைகளில் உள்ள ,உலக பொருளாதார நெருக்கடி,அசமத்துவ நிலை  ,தொழிலாளர் நிலை,ஆண் பெண் பாலின பாகுபாடு,மூட நம்பிக்கை,மத வெறியர் ,பாசிசவாதிகளால் ஏற்பட்டுள்ள வன்முறைப்போக்கு,மனித நேயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்க கூடிய படங்களின் தொகுப்பாக உள்ளது.

*உலகில் சரிபாதி பேர் பெண்கள் .இறை நம்பிக்கை அதிகம் கொண்டவர்களும் பெண்களே.என்றாலும்,வளர்ந்து விட்டதாக கருதப்படும் அமெரிக்க  தேசத்தில் கன்னிகாஸ்திரீ பாதிரியாகவிரும்புவதால் ஏற்படும் பிரச்சனைகளை சிறப்பாக வெளிக்காட்டுகிறது"Created equal"என்ற அமெரிக்க திரைப்படம்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்ட போதிக்கும் கிறித்து நம்பிக்கை கொண்ட மதவெறியர்கள் கொலை வெறி தாக்குதல் தொடுக்கின்றனர் .

தன் உடலில் சரிபாதி கொடுத்த அர்தநாரீஸ்வரரைக்கொண்ட இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க,கிறித்துவ,இஸ்லாமிய ,பௌத்தம் உள்ளிட்ட எந்த மதமும் பெண்களை சமமாக நடத்துவதில்லை என்பது மட்டுமல்ல சம உரிமை கேட்டல் நசுக்க படுவதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு.

*கடத்தி செல்லப்பட்டு வன்புணர்வு செய்யப்பட பெண் எதிர்த்து போராடும்போது வன்புணர்வு செய்தவனை கொலை செய்து விடுகிறாள்.அப்பெண்ணை சட்டப்படி தண்டிக்க அரசும்,சமூகமும் முயல்கிறது.இக்கொடூரத்தை எதிர்த்து போராடி வெற்றி கொள்ளும் கதை வீரம்"DIFRET" என்கிற எத்தியோப்பிய திரைப்படம்.

*சாதி மத ,இன, பால்,பிறப்பிடம்  இவற்றின் அடிப்படையில் இந்திய குடிமக்களிடம் அரசும் அதன் அமைப்புகளும் பாகுபாடு காட்டக்கூடாது என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்திய அரசியல் சட்ட விதி என் ௧௫.

ஆனால் பாகுபாடு என்பதே வேதம் விதித்த விதி.இதை மாற்ற முயற்சிக்கவோ,மீறவோமுடியாது என்பதை நடைமுறையாக கொண்டது வடமாநிலங்கள்.

  உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் "ஆர்டிகிள் 15"

நாள் கூலி 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தி கேட்டதற்காக 3 தலித் பெண்களை கடத்தி சென்று வன்புணர்வு செய்து கொடுமை செய்கிறான் சாதிய வெறியன் .இரு பெண்களை கொலை செய்து தூக்கிலிடுகிறான்.ஒரு பெண் ஓடி தப்பித்து கொள்கிறாள்.

அரசியல் சட்ட விதி 15ன்படி பாகுபாடு கட்ட கூடாது என நியாயமாக  செயல்பட்டு காணாமல் போன பெண்ணை தேடியும்,கற்பழித்தவனை கைது செய்யவும் முயலும் ஒரு இளம் காவல் அதிகாரிக்கு இடையூறாக இருக்கிறது மொத்த நிர்வாக அமைப்பும் சமூக கட்டமைப்பும்..

வாக்கு பறிப்பிற்காக உயர் சாதி தலித் ஒற்றுமையை பகடைக்காயாக பயன் படுத்துகிறார் .அவருக்கு துணை போகிறார் உள்ளூர் தலித் தலைவர்,

ஜாதிய வாதத்திற்கு மதவாதமோ,மதவாதத்திற்கு ஜாதியவாதமோ மாற்றாக இருக்க முடியாது .மக்கள் ஒற்றுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே தீர்வாக இருக்க முடியும் என்பதை பாடமாக்கியிருக்கிறது  இந்திய திரைப்படம் ஆர்டிகிள் 15.  

*1978ல் லெனின் தலைமையில் ஏற்பட்ட ரஷ்ய புரட்சி நில சீர்திருத்தம், தொழில்கள் நாட்டுடைமை, ஆண் பெண் சமத்துவம், என்று மனித குலத்தை  முன்ன்னேற்றம் காண செய்வதை கண்டு கிலி பிடித்து போனது முதலாளித்துவம் மட்டுமல்ல அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கும் மதவாதிகளும் தான்...

அதனால் தான் பாசிசம் நாசிசத்தால் யூதர்களும் மக்களும் கொல்லப்படும்போது கண்டுகொள்ளாத போப் ஆண்டவர்களும் மத தலைவர்களும் ,செம்படையால் நாசிசம் வீழ்த்தப்படும் போது பதை பதைக்கிறார்கள். முதலாளித்துவதால் கம்யூனிஸ்ட்கள் இந்தோனேசிய,ஈரான்,எகிப்து துருக்கி என பல நாடுகளில் வேட்டையாடப்படும்போது குதூகூலம் அடைகிறார்கள்.  

1978ல் ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய உதவியோடு ஆட்சிக்கு வருகிறார்கள் .நில சீர்திருத்தம் அனைவருக்கும் மருத்துவம் பெண்கல்வி முன்னேற்றம் ஏற்படும் போது அமெரிக்க முதலாளிகள்  மிரள்கிறார்கள் .உள்ளூர் பிற்போக்கு மதவாதிகள் பதற்றம் அடைகிறார்கள்.கம்யூனிஸ்ட்களை   அழிக்க இஸ்லாமிய தீவிர வாதிகளும் அரபு நாடுகளும் எதிர்முனையினராக கருதப்படும்  இஸ்ரேலியர்களும் ஒன்றிணைகிறார்கள்.கம்யூனிஸ்ட் பீதியை கிளப்பி அமெரிக்க முதலாளிகளின் சி ஐ  ஏ செய்த சதியை விவரிக்கிறது   Charlie Wilson's War அமெரிக்க திரைப்படம்

*மதவாதிகளுக்குள்ளே ஏற்பட்ட முரண்பட்டால் முஹாஜிர்களுக்கும் தாலிபான்களுக்குமிடையில் ஏற்படும்போரில் தலிபான்கள் கை மேலோங்கி ஆப்கான் ஈரான் எல்லை பகுதியில் உள்ள மசார் இ ஷரீப் என்ற நகரை 1998ல் கைப்பற்றுகின்றனர் .தாலிபான்களோடு மாறுபாடு கொண்ட ஈரான் தூதரகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த தூதரக அலுவலர் பன்னிருவரையும் ஒரு செய்தியாளரையும் கொன்று விடுகின்றனர்.தப்பிய ஒரு ஈரானிய தூதரக அலுவலர் ஆப்கான் ஓட்டுநர் குடும்பத்தார் உதவியோடு  பதினெட்டு நாட்கள் பயணம் செய்து ஈரான்சென்றடைகிறார்.இதில் கிடைத்த அனுபவங்கள் ,தப்பும்போது ஓட்டுனரின் மனைவி இவரை தாலிபான்களிடமிருந்து காப்பாற்றுவது,வழியில் தலிபான்கள் செய்கின்ற கொடுமைகள் பெண்களை துன்புறுத்துவது மனித மீறல்கள் அனைத்தையும் விவரிக்கிறது.மதவாதிகளிடம் சிக்கிய நாடு குரங்கு கையில் பூ மாலை என்பதை அற்புதமாய் விவரிக்கிறது.

இப்புத்தகம் காலத்துக்கேற்ற சிறந்த புத்தகம்.அணைத்து படங்களும் தேடி காணவேண்டிய பொக்கிஷங்களாகும்.