Wednesday 15 February 2012

ஏணி ,தோணி,வாத்தியார்..


            எனது ஆசிரியர்  திரு பொன்பாண்டியன்




நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் எனது ஆசிரியர்

 திரு பொன்பாண்டியன் வழக்கமாக சொல்லுகிற 
வார்த்தைகள்.ஏணியும் தோனியும் ஆசிரியர்களும்
தாங்கள் எந்தவித பலனும்,முன்னேற்றமும் அடையாமலே 
பிறருடைய முன்னேற்றத்துக்கும் காரணமானவர்கள்

எனது தந்தையார் தின்னைப்பள்ளிகூடத்தில் படித்தவர்.

"அந்திக்கு போறோம் நாங்கள்

அகந்தனில் விளையாடாமல் 

சிந்தையாய் விளக்கு முன்னே 

சுவடிகள் அவிழ்த்துப்பார்த்து

வந்தது வராததெல்லாம் 

வகையாய் படித்துப்பார்த்து 

இந்திரன் சேவல் கூவ 

எழுந்திருந்து வாரோம் அய்யா .

எங்களை அனுப்புங்கையா 

இணையடி சரணம் தானே"

என்று படித்து வந்தவர்.

அவர் சொல்லிக்கொடுத்த பாடல்கள் இன்னும் கூட

 என்னால் சொல்ல முடிகிறதென்றால் 

அவர் படித்த முறை  அப்படி.   

"பிள்ளையும்   படிக்க வேண்டாம்

பிரம்படி படவும் வேண்டாம் 

சள்ளையாம் சுவடி தூக்கி 

சங்கடப்படவும் வேண்டாம்

பிள்ளைஎன்றிருந்தால் போதும்  

பெற்றவள் களிக்க"

என்றிருந்த தமிழ் சமுதாயத்தை கல்வியின் அவசியத்தினை 
உணர்த்தி  முன்னேற்றியவர்கள் ஆசிரியர்கள்.

பிள்ளையின் கண்ணைத்தவிர எங்கு வேண்டுமானாலும் 
அடியுங்கள் எங்கள் பிள்ளைகள் படித்தால் போதும்
 என்றிருந்தனர் பெற்றோர்.

படிக்கும்போது ஆசிரியர் மீது வெறுப்பு  வந்த போது

"நெடுமால் திருமுருகா 

நித்தம் நித்தம் இந்த இழவா

வாத்தியான் சாகானோ 

வயித்தெரிச்சல் நீங்காதோ "

என்று மாணவன் பாடினானே தவிர 

கத்தியை தூக்கி வந்து கொலை செய்யவில்லை.

எங்கோ திருநெல்வேலி ,குமரி ஜில்லா மாதிரி
 தொலை தூரத்திலிருந்து வடகோடி மூலையிலுள்ள
 கிராமத்தில் குடியேறி பிள்ளைகள் படிப்பிலிருந்து 

கிராமத்து நல்லது கெட்டது போன்ற அனைத்து

 நிகழ்ச்சிகளும் பங்கேற்று முன்னேற்றியவர்கள் 
ஆசிரியர்கள் ,அதெல்லாம் ஒரு காலம்.

நான் மதுரை தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளியில்
 படித்த காலத்தை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது
.பள்ளிகளில் ஏற்றத்தாழ்வு இருக்கமுடியாதபடி கல்விமுறை 
சிறப்பாக இருந்தது.வாராந்திர தேர்வு,மாததேர்வு,
என தொடர்ச்சியாக மாணவர்களை உருவாக்கினர்.

பள்ளி நேரம் போக காலையில்   ஒருமணிநேரம்,
மாலை ஒருமணிநேரம் சிறப்பு வகுப்புகள் நடக்கும்.
ஆசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த சிறப்பு 
வகுப்புகளை பயன் படுத்திக்கொண்டனர்.
எனது ஆசிரியர் தெய்வத்திருபொன்பாண்டியன் அவர்கள் 
சிறப்பு வகுப்பில்  நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் 
கொடுத்து நிறைய போதிப்பார்.எப்படி பொது இடத்தில்
 நடந்து கொள்வது,எப்படி அணுகுவதுஎப்படி நாகரீகமாக 
சாப்பிடுவது.உள்ளிட்ட  எவ்வளவோ விசயங்களை போதிப்பார்.
தேர்வு என்பது மிக சாதாரணமான விஷயம்,
உனக்கு என்ன தெரியும்,எப்படி வெளிப்படுத்துகிறாய் 
என்று அறிய நடத்தப்படும் விஷயம் 
தான் தேர்வு என்று பயத்தை போக்கினார்.சொந்தநடையில்
எழுத எனக்கு அதிக தைரியம் கொடுத்தவர் அவர்தான்.
 நான் பின்னாளில் ஆய்வியல் நிறைஞர் கற்கும் போது,
எத்தனையோ பேர் "மண்டபத்தில்யாரோ எழுதிகொடுத்ததை
 பிறர் பெற்றுவந்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தபோது 
நான் சுயமாய் ஆய்வுக்கட்டுரை எழுத முடிந்தது அவரால் தான்

.அதே நேரம் கண்டிக்கும்போதும்,தண்டிக்கும் போதும் 
விருப்பு வெறுப்பு காட்டியதில்லை.
அவர் மட்டுமல்ல அவர் போல நிறைய ஆசிரியர்கள் 
அது போலவே நடந்து கொண்டனர்.
 பல ஆசிரியர்கள் அப்போதெல்லாம் டியூசன் நடத்தியதில்லை
.அதனால் தான் முப்பத்து மூன்றாண்டுகளுக்கு 2010இல்
 பழைய மாணவர்கள் மீண்டும் பள்ளியில் கூடி எங்கள் 
ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து கெளரவித்தபோது 
ஆசிரியர்கள் கண்கள் பணிக்க ஏற்றுக்கொண்டனர்.

நான் வேலைக்கு வந்த பின்னரும் எனக்கும் அவருக்குமான 
குரு சீட உறவு தொடர்ந்தது.
 பின்னாளில் ஒருமுறை அவரை சந்திக்குபோது அவர் கூறிய 
ஒரு தகவல் என்னை அதிர்ச்சியடைய செய்தது.
எனது இன்னொரு ஆசிரியர் தெய்வத்திரு முத்து கிருஷ்ணன் 
ஒரு மாணவனை தவறு செய்த்ததற்க்காக அடித்த போது .
மறுநாள் அந்த மாணவனின்  தந்தை பள்ளிக்கு வந்து
 "எனது மகனை நானே அடித்ததில்லை.நீ எப்படி அடிக்கலாம்'  
என கேவலமாக திட்டியிருக்கிறார்.அதற்குப்பின் அந்த ஆசிரியர்கள்
 யாரையும் கண்டிப்பதில்லை.என கூறினார்.

 தற்பொழுது  மாணவர்கள் , ஆசிரியர்கள் உறவினை 
கொச்சைப்படுத்தும் திரைப்படங்களும்
,வன்முறை ,பாலுணர்வை தூண்டும் கலாசார சீரழிவை
 தூண்டும் திரைப்படங்களும் ,மனிதனை நல்வழிப்படுத்தும்
 சமூக உணர்வு,நல்லொழுக்க கல்வி இல்லாத 
,கல்வி வியாபாரம் ஆன சூழலும்  வளர்ந்து விட்டன.

இந்த கொடுமையின் தொடர்ச்சி தான் விரும்பி ஏற்று
 மாணவர்களின் முன்னேற்றத்திற்காக
 பாடுபட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின்   கோர மரணம்..

கால மாற்றங்கள் ,போட்டிகள்,ஆசிரியர்களை மாற்றிவிட்டதும் 
ஆசிரியர்கள்  பணம் பண்ணும் டியூசன் என்னும் மாய வழியில் 
சிக்கி மாணவர்களை  பொன் முட்டையிடும் வாத்துகளாக
 நினைத்திருப்பதும்மீடியாக்கள்,திரைப்படங்கள் 
ஒட்டுமொத்த சமுதாயத்தை சீரழித்திருப்பதைப்போல
 கல்வித்துறையையும் சீரழித்திருப்பதே இன்றைய நிலைமைக்கு 
காரணம்.ஆசிரிய சமூகமும் அரசும்,தமிழ் சமுதாயமும் 
தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.   



இது தான்  ஆசிரியர்கள் மாணவர்கள்,
பொதுமக்கள் அனைவரும் படுகொலை 
செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி 
அவர்களுக்கு செய்யும் அஞ்சலி.

2 comments:

  1. ஆய்வியல் நிறைஞர்? பி ஹெச் டி?
    கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்ததும் சுவாரஸ்யமாக அந்தப் பழைய பாடல்களை நினைவில் வைத்துப் பகிர்ந்ததும் பாராட்டத் தக்கது.

    ReplyDelete
  2. மிகுந்த உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். பழைய பாடல்களை நினைவில் இருத்தி இருப்பது இன்பமாக இருக்கிறது. தங்கள் எழுத்துருவின் அளவைக் குறைத்தால் மார்ஜின் பிழைகள் வராமல் இருக்கும்.

    உங்கள் ஆசானுக்கு என் வணக்கங்கள்.
    நல்லதொரு மனிதரைச் சமூகத்துக்கு உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.

    ReplyDelete