நான் 18 வயதிலேயே அரசு பணியில் சேர்ந்து விட்டேன். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளிலிருந்து உடன் பணியாற்றுபவர்கள் வரை எல்லோருமே கம்பவுண்டர் ஐயா என்று தான் அழைப்பார்கள். கூச்சமாக இருக்கும். வயதில் சிறியவனாக இருக்கும் போது ஐயா என்று அழைத்தால் ஒரு மாதிரியாக சங்கடமாகத்தான் தெரியும்.
சில வருடங்களுக்கு பின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கெடுத்து வட்ட தலைவராக செயல்பட்டு கொண்டிருந்தேன். இருபத்தி மூன்று வயதேயான நிலையில் வயதுமுதிர்ந்த ஊழியர்கள் கூட தலைவரே என்று அழைக்கும் போது சற்று கர்வமாக இருந்தாலும், கூச்சமாகவும் இருந்தது.
ஒரு நன்பர் மிகவும் மரியாதையாக பேசுவார். சார், தோழர் என்று தான் கூப்பிடுவார். சில வருடங்களுக்கு பிறகு அவரது சங்கத்தின் மாநிலபொறுப்பிற்கு வந்த பின் ஒருமையில் பேச ஆரம்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆனபின் என்னையா எப்படி இருக்கே என்று பேசலானார். இத்தனைக்கும் என்னைவிட வயது குறைந்தவரே...
எனக்கு முப்பது வயதானபோது மாவட்ட ஆட்சியர் அவர்களது நிர்வாகத்தின் கீழ் அறிவொளி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய போது ஒரு அதிகாரி பாஸ் என்றே அழைப்பார். அறிவொளி இயக்கத்தில் இருந்து விடுபட்டபின் சார் என்றழைத்தார். இன்னும் சில வருடங்களுக்கு பின் என்னை பார்த்து என்னையா எங்கே வேலை பார்க்கிற என்று கேட்டார்
பணி ஓய்வு பெறுவதற்கு சில காலம் இயக்குநரகத்தில் பணிபுரிய நேரிட்ட போது பல ஆரம்பசுகாதார நிலையங்களை பார்வையிட்டு விட்டு நோக்குநிலை கூட்டங்கள் Orientation meetings நடத்தி பயிற்சி கொடுத்துவந்தேன். எல்லோரும் மிக மரியாதையுடன் நடந்து கொண்டனர். சில வருடங்களுக்குப் பின் தற்செயலாக இயக்குநரகம் சென்றேன். பணிக்காலத்தில் மிக மரியாதையுடன் நடந்து கொண்ட ஒருநன்பரை சந்திக்க நேரிட்டது. அவர் முதலில் கேட்ட கேள்வி"என்ன இந்த பக்கம்"
ஆக மரியாதை என்பது செலுத்துகிறவருடைய நிலை, வளர்ச்சியைப் பொறுத்து மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அதேபோல பெறுகிறவருடைய நிலை, வளர்ச்சியை பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே நிலையாக இருப்பதில்லை.
என்னை பொறுத்த அளவில் சிலர் ஆக ஓஹோ என்று செயல்பாடுகளை பாராட்டுவார்கள். அதை பற்றி நான் அலட்டிக் கொள்வதே இல்லை. அதேபோல செயல்பாடுகளை கண்ணா பின்னாவென்று விமர்சித்து திட்டவும் செய்திருக்கிறார்கள். அதற்காகவும் வருத்தப்படுவதில்லை. ஏனென்றால் பெரிய பாராட்டிற்கு முழுமையாக உரியவனும் நான் இல்லை. அதேபோல கேவலமான திட்டிற்கு பொருத்தமானவனும் நான் இல்லை. என்னுடைய செயல்பாடு என்பது எப்பொழுதும் சமூகத்திற்கு ஏதாவது பிரயோஜனம் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதை பொறுத்தே அமைந்திருந்தது.
முழுக்க முழுக்க உண்மை..... நமது சமூகம் அப்படித்தான்.. நாம் தான் அதை புரிந்துகொண்டு சற்று விலகி பழகி கொள்ள வேண்டும் தலைவரே 😂
ReplyDeleteஉலகம் உங்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டுதானிருக்கும்.அது கிடைத்ததும் அல்லது கிடைக்கவில்லை என்கின்ற போதும் வெருப்பதும் இயல்புதான் அண்ணாச்சி
ReplyDelete