மதுரை நகரிலும் ஒரு அணை ,அதுவும் நான் படிக்கின்ற காலத்திலே கட்டப்பட்ட அணை என்ற வகையில் அதை காணும்போது மகிழ்ச்சி ஏற்படும்.நான் மதுரை தியாகராஜர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்ற போது விரகனுரில் வைகை ஆற்றின் குறுக்கில் ஒரு சிறு தேக்க மதகு அணை கட்டப்பட்டது.அந்த நேரத்தில் வைகையில் ஒருமுறை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நன்றாக நினைவில் உள்ளது.பொதுவாக மதுரையில் வைகையில் பெரு வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வருவதை அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் மதுரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டதாகவும்,வெள்ளத்தால் மதுரை நகரம் அழியாமல் காக்கும் பொருட்டு,மன்னன் வீட்டுக்கு ஒரு ஆள் வந்து மண்வெட்டிபோட்டு நகரை காப்பாற்ற ஆணையிட்டான்.அப்போது புட்டு வியாபாரம் செய்யும் மகவு இல்லாத கிழவி ஒருத்தியை காப்பாற்றும் பொருட்டு,சிவபெருமானே கூலி ஆளாக வந்து,அக்கிழவியின் வேலையாளாக வந்து ,மண் சுமப்பதற்காக உடைத்து தூளாகும் புட்டினை கூலியாக பெற்றுக்கொண்டு,புட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு, மண்சுமந்து போடாமல் விளையாண்டு திரிந்து விட்டு,பின் கரையில் படுத்து தூங்கினாராம்.வேலை செய்யாமல் படுத்து தூங்கும் சிவபெருமானை தண்டிக்கும் பொருட்டு,பிரம்பினால் முதுகில் அடிக்க ,உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,பிரம்படி விழுந்து வலி ஏற்பட ,உண்மை அறிந்திட சிவன் காட்சி அளித்ததாகவும் கதை உண்டு,,,,மதுரை ஆற்றங்கரையில் புட்டுத்தோப்பும் துறையும்,இருக்கிறது.இன்னம் கூட புட்டு திருவிழாவும் நடந்து கொண்டிருக்கிறது,
அதே போல மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றபோது ,தங்கையின் திருமணத்திற்காக திருமாலிருஞ்சோலையிலிருந்து அழகர் மதுரைக்கு கிளம்பிவர ,வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ,ஆற்றை தாண்டி மதுரைக்கு வராமலே திரும்பி சென்றார் என புராண கதைகள் உண்டு .இன்னமும் வருடாவருடம் சித்திரை திருவிழா நடந்து கொண்டுதான் இருக்கிறது.தண்ணீரே வராவிட்டாலும் சிறு அளவிலாவது தண்ணீரை தேக்கி அழகர் ஆற்றி இறங்கி திரும்பி செல்கிறார் .
மதுரை வீரன் திரைப்படத்தில் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் ,மதுரம் அம்மாவிடம் வைகை நதி பற்றி கை வை, வை கை என்று வேடிக்கையாய் சொல்லுவார்.
அது என்னவோ தெரியவில்லை,மதுரை மக்களுக்கு வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணும் பாக்கியம் அதிகம் கிடைப்பதில்லை.
நாங்கள் படிக்கின்ற போது ஒருமுறை கடுமையாய் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கரையோரம் இருந்த குடிசைகளெல்லாம் ,இழுத்து சென்று விட்டது.ஆற்றில் இழுத்து வரப்பட்ட மரங்களால்,பெரிய பாலத்திற்கே ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.கீழ் பாலம்,குருவிக்கறான் சாலையில் இருந்த பாலமெல்லாம் உடைத்து காணாமல் போய்விட்டன.தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை காப்பாற்ற போன ராணுவ மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி இறந்து போனார்.ஹெலிகாப்டரும் தண்ணீரில் மூழ்கி உடைந்து வெகு தூரத்தில்,சிதிலமடைந்து கிடைத்தது,
எங்கள் பள்ளிக்கு ஆற்றின் வடகரையில் வண்டியூர்,ஆண்டாள் கொட்டாரம் போன்ற பகுதியில் இருந்தெல்லாம் மாணவர்கள் படிக்க வருவார்கள்.அவர்களெல்லாம் பள்ளிக்கு வரவில்லை.ஆண்டாள் கொட்டாரத்திலிருந்து என்னுடன் படித்த சதுரகிரி என்ற மாணவ நண்பன் வந்து தப்பி பிழைத்த விபரத்தை கதை கதையாய் சொல்லுவான்.
இந்த நிகழ்வுக்கு பின் விரகனுர் தடுப்பணை காட்டும் நிகழ்வு நடைபெற்றது.நாங்கள் சில நண்பர்கள் நேரம் கிடைக்கும்போது விரகனுரில் உள்ள எங்கள் நண்பர்கள் ராஜசேகரன்,பாலசுப்ரமணியன் போன்றோரை சந்தித்து விட்டு விரகனுர் அணை கட்டுவதை வேடிக்கை பார்க்க செல்வோம்.பார்க்க எங்களுக்கு பிரம்மாண்டமாய் தெரியும்...ஒரு அழகான பூங்காவெல்லாம் அமைத்தார்கள்.அந்த பூங்காவில் பிற்காலத்தில் சினிமாக்களெல்லாம் எடுத்தார்கள்.
இப்போது பார்த்தால் பூங்கா பராமரிப்பில்லாமல் இருக்கிறது. பார்க்க சகிக்கவில்லை...
No comments:
Post a Comment