பள்ளி விளையாட்டு
நான் படித்த தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளி மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் தென் கரையில் அமைந்துள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஓரிரு மாதங்கள் தவிர பெரும்பகுதி தண்ணீர் இல்லாமல் தான் இருக்கும். அழகாக பொன்னாங்கண்ணி கீரை தரையோடு வெல்வெட்டு விரித்தது போல படர்ந்து இருக்கும். விளையாடுவதற்கு மிக அருமையான மைதானமாக இருக்கும். அதேபோல பள்ளியின் உள்புறம் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது.
தெப்பக்குளத்திலோ அல்லது பள்ளி மைதானத்திலோ நாங்கள் பெரும் பகுதி சோளக்கட்டையை அல்லது டஸ்டரை எறிந்து விளையாடுவோம், அல்லது ஓடிப்பிடித்து விளையாடுவோம். மற்றபடி விளையாட்டு ஆசிரியர்கள் மூலமாக ஏதும் விளையாடியதாக ஞாபகம் இல்லை. எப்பொழுதாவது எங்களை விளையாட்டு வகுப்பின் போது அழைத்துச் சென்று உயரம் எடை போன்றவற்றை அளந்து குறிப்பெடுப்பார்கள். எப்பொழுதாவது ஒரு நாள் எல்லோரையும் அழைத்துச் சென்று சில விளையாட்டு பயிற்சிகள் கொடுப்பார்கள். அதுவும் குறிப்பாக விளையாட்டு தின அறிவிப்பிற்கு சில காலத்திற்கு முன்பாக நடைபெறும். எல்லோரையும் சிவப்பு குழு, மஞ்சள் குழு, நீலக்குழு, பச்சை குழு என்று குழுக்களாக பிரித்து அறிவிப்பார்கள். அடிக்கடி எந்த குழுவில் இருக்கிறோம் என்று தெரியாமல் அடுத்த குழுவில் போய் நின்று விளையாட்டு ஆசிரியரிடம் அடி வாங்குவது உண்டு. தொடர்ச்சியாக விளையாடிருந்தால் தானே ஞாபகம் இருக்கும்..
சில நேரங்களில் மைதானத்தை சுற்றி ஓடி வர விடுவார்கள். பெரும்பகுதி ஓடுவதற்கு சக்தி இல்லாமல், தொத்தல் குதிரையை போல கடைசியாக ஓடி வருவேன். புல்லப்ஸ் எடுப்பதற்கு கம்பியில் தொங்க விட்டால், தொங்கிக் கொண்டே இருப்பேன், அல்லது புல்லப்ஸ் கம்பியில் பிடித்து தொங்க முடியாமல் கீழே விழுந்து விடுவேன். ஒரு புல்லப்ஸ் கூட எடுத்ததாக நினைவில்லை. அதேபோல தண்டாலும் அந்த கதை தான். தரையோடு படுத்து விடுவேன். அடிதான் கிடைக்கும். அதே போல பந்து, அல்லது இரும்பு குண்டு எறிய சொன்னால் மிகக் குறைந்த தூரத்துக்கு எறிந்து விளையாட்டு ஆசிரியர்களிடம் அடி வாங்குவேன்.
பூபதி என்று ஒரு விளையாட்டு ஆசிரியர் இருந்தார். மிகவும் குண்டாக உருளைக்கட்டை போல இருப்பார். அதேபோல பாண்டி என்று ஒரு விளையாட்டு ஆசிரியர் ஒல்லியாக இருப்பார். சாம் நத்தானியேல் மிகவும் வயதானவர். ஸ்டீபன் மட்டுமே பிட்டானவராக இருந்தார். பரசுராமன் என்று புதிதாக ஒரு விளையாட்டு ஆசிரியர் நான் படிக்கும்போது பணியில் சேர்ந்தார். ஓரளவுக்காவது மாணவர்களை அவர் விளையாட வைத்ததாக ஞாபகம். அவர் இடது கையை அதிகமாக பயன்படுத்துவதால் லெஃப்ட் என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம்.
பெரும் பகுதி எங்கள் விளையாட்டு ஆசிரியர்கள் மாணவர்களை மேய்க்கின்ற பணியை தான் அதிகம் செய்தார்கள். மாணவர்களை விழாக்களின் போது ஒழுங்குபடுத்துவது, விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வது, அதாவது பெஞ்ச் சேர்களை கொண்டு போய் அடுக்குகின்ற வேலை, பள்ளி ஆரம்பிக்கின்ற நேரத்திலே தாமதமாக வருகின்ற மாணவர்களை கண்காணிப்பது, பொதுவாக அமைதி யின்மை ஏற்படும்போது மாணவர்களை கட்டுப்படுத்துவது போன்ற வேலைகளை தான் அவர்கள் அதிகம் செய்தார்கள். விசில் கயிற்றால் அடி கொடுப்பார்கள். மற்றபடி விளையாட்டெல்லாம் சொல்லிக் கொடுத்ததில்லை.
ஒரு முறை பாட்டுப் போட்டி நடத்துகின்ற வேலையை பாண்டி உடற்பயிற்சி ஆசிரியர் செய்தார். நானும் வெட்கமே இல்லாமல் பேர் கொடுத்திருந்தேன். சுத்தமாக பேசவே வராது. இந்த லட்சணத்தில் பாட்டு போட்டியில் கலந்து கொண்டால் எப்படி இருந்திருக்கும். தத்தக்கா புத்தக்கா என்று வசனம் ஒப்பிப்பது போல ஒரு பாட்டை கொலை செய்தேன். தலையில் ஓங்கி ஒரு அடி கொடுத்து ஓடி போடா என்று பாண்டி வாத்தியார் விரட்டி விட்டார்.
என் நண்பன் அசோக்குமார் அடிமைப்பெண் படத்தில் உள்ள தாய் இல்லாமல் நான் இல்லை என்ற பாடலை பாடினார். அவரையும் பாண்டி வாத்தியார் திட்டி விரட்டி விட்டார். கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார். பாட்டு போட்டிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று எங்களுக்கு புரியவில்லை.
பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது கலந்து கொள்கிறவர்களின் பெயர் கேட்பார்கள். கலந்து கொள்ளலாம் என்ற நப்பாசையோடு அந்தப் பக்கம் போகும்போது விளையாட்டு ஆசிரியர்களை பார்த்தவுடன் பயந்து போய் பேர் கொடுக்காமலே ஓடி வந்து விடுவேன். எனக்கு தெரிந்தவரை சில மாணவர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள். வேறு பள்ளியில் இருந்து புதிதாக விநாயகமூர்த்தி, கமலக்கண்ணன், கல்யாண சுந்தரம் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். அந்த அண்ணன்மார்கள் எங்களை விட வயதில் மூத்தவர்கள். விநாயகமூர்த்தி அண்ணன் மிகச் சிறப்பாக விளையாடி போட்டி களில் நிறைய பரிசுகள் வாங்குவார். மிக நீண்ட காலம் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது அவரைப் பார்த்தேன். நான் அண்ணனைப்போலவும் அவர் தம்பியைப்போலவும் காட்சியளித்தோம்.
இன்னொரு நன்பர், சிலைமான் பகுதி என்று நினைக்கிறேன். மிக சிறப்பாக விளையாடி பரிசுகள் வாங்கினார். அவர் பெயரை மறந்து விட்டேன்.
அது சரி... நான் விளையாடியதைப்பற்றி பெரிதாக ஒன்றும் கூறவில்லையே. எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒரு நாவல் மரம் இருந்தது. நாவல்பழ சீசனில், இடைவேளை , உணவு இடைவேளை மணி அடித்தவுடன் பழம் பொறுக்க சிட்டாய் பறப்போம். துரதிர்ஷ்டவசமாக மரத்தின் அருகே உள்ள கூரைக்கொட்டகை வகுப்பு மாணவர்கள் முந்திவிடுவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் சில நேரங்களில் பழம் கிடைக்கும்...
நான் விளையாட்டில் கலந்து கொண்ட லட்சனம் அவ்வளவுதான்......
No comments:
Post a Comment