பொங்கல் என்றாலே தமிழர்களின் விருப்பத்திற்குரிய மிகப்பெரிய பண்டிகையாகும். மற்ற எந்த திருவிழாக்களும், பண்டிகைகளும் ஓரிரு நாளில் முடிந்துவிடும். ஆனால் பொங்கல் மட்டுமே நான்கு நாட்களுக்கு மேல் எல்லோரும் கொண்டாடும் சமுதாய பண்டிகை ஆகும். இதில் நான் உங்களுடைய பெருமைகளை பற்றி இதில் அதிகம் கூறப்போவதில்லை. ஆனால் சிறுவயதில் பொங்கல் என்றாலே நாங்கள் அனுபவித்த சந்தோசங்களையும் அனுபவங்களையும் நினைவு படுத்திக் கொள்ளவிரும்புகிறேன்.
பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கலை வரவேற்க மக்கள் தயாராகி விடுவார்கள். வருடா வருடம் வீடுகளுக்கு வெள்ளையடிக்கின்ற வேலை நடைபெறும்.சுண்ணாம்பு சுட்ட சுண்ணாம்பு கல்லை பெரிய தொட்டியில் இட்டு தண்ணீர் விட்டு நீர்க்கரைசலாக்குவார்கள். சுண்ணாம்புக்கல் தண்ணீரில் போட்ட உடனே சலசலவென்று கொதிக்க ஆரம்பித்து விடும். பிள்ளைகள் எல்லாம் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பார்கள்.தென்னை மட்டையை நன்றாக தட்டி பிரஷ் போல தயார் செய்து வெள்ளை அடிக்க பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்போதும் சரி, அசுப காரியங்கள், தீட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வார்கள். இது தவிர வருடா வருடம் பொங்கலுக்கு அனைத்து வீடுகளிலுமே வெள்ளை அடிக்கப்படும்். இதனால் வீட்டில் உள்ள நோய்க்கிருமிகள், மூட்டை பூச்சி போன்ற மக்களுக்கு கெடுதல் செய்யக்கூடிய உயிரினங்கள் அழிக்கப்பட்டு வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். நவீன காலங்களில் பெயிண்ட் போன்றவை வந்த பிறகு வருடா வருடம் வெள்ளையடிக்கின்ற பழக்கங்கள் மறைந்து போயிருந்தன.
மூட்டை பூச்சி போன்ற பூச்சி வகைகள் தற்பொழுது காணாமலே போய்விட்டு. இப்பொழுது இருக்கக்கூடிய தலைமுறைக்கு மூட்டை பூச்சி பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் உள்ள அனைத்து துணிமணிகள் பாய்கள் போன்றவை எல்லாம் தண்ணீரில் நனைத்து காயவைத்து வைக்கப்படும்.
வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சுத்தம் செய்யப்பட்டு, தேவையற்ற பொருள்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும். தேவையற்ற பொருட்களை தீயிலிட்டு அழிக்கின்ற பழக்கம் இருந்தது. பெரும்பகுதி போகி பண்டிகை என்று தேவையற்ற பொருள்கள் தீயிட்டு அழிக்கப்படும்.
வீடுகளில் சாமி படங்கள், புகைப்படங்கள் பிரேமிட்டு சுவற்றில் அடித்திருப்பார்கள். பொங்கல் வந்துவிட்டால் வீட்டை சுத்தம் செய்யும் போது, புகைப்படங்களை எடுத்து சுத்தம் செய்வார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டில் பழனி அண்ணன் இது ஒரு பெரிய வேலை போல செய்வார். புகைப்படங்களை எடுத்து தண்ணீரை லேசாக ஸ்ப்ரே செய்வது போல செய்து, திருநீறு அடித்து நல்ல துணி கொண்டு அழகாக சுத்தம் செய்வார். புகைப்பட கண்ணாடி மீது இருந்த அழுக்குகள் போய் ஃபிரேம்கள் பளிச்சிட புகைப்படங்கள் அழகாய் இருக்கும். நானும் அதிக பிரசிங்கித்தனமாய் போட்டோக்களை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரிலே தண்ணீரை கொஞ்சம் கூடுதலாக தெளித்து அது மூலையிலே தண்ணீர் உள்ளே போய், புகைப்பட அட்டை கறைப்பட்டு அம்மாவிடம் நன்றாக திட்டு வாங்கி இருக்கிறேன்.
கிராமங்களில் இன்னும் வேடிக்கையாக நடைபெறும் வீட்டை சுற்றி மெழுகி, சாணமிட்டு, சுண்ணாம்பு, செம்மண் பட்டைகள் சுவற்றில் அடிக்கப்படும். கிராமங்களில் தீபாவளிக்கு துணி எடுக்கிறார்களோ இல்லையோ பொங்கலுக்கு நிச்சயமாக புது துணி எடுப்பார்கள். இது எல்லாம் பொங்கலுக்கு முந்தைய செயல்பாடுகள், ஏற்பாடுகள் எனலாம்.
எங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் தற்போதைய காலங்களில் பொங்கலுக்கு முந்தைய ஏற்பாடுகள் எல்லாம் காணாமலே போய்விட்டன..
No comments:
Post a Comment