எனது தங்கையை ஆர். சி பள்ளியில் சேர்த்திருந்தோம். ஒருமுறை அம்மா தங்கையை ஏதோ தவறு செய்து விட்டது என்று அடித்து விட்டார்கள். உடனேயே ஏசப்பா என்று தங்கை கததியது.
அம்மாவுக்கு கோவம் அதிகமாகி இது என்ன புது பழக்கம் என்று திட்டினார்கள்.
அப்பா சிரித்தார்.
இதென்ன நம்ம வழக்கத்தில் இல்லாமல் கிறிஸ்துவை கூப்பிடுகிறாள் என்று அம்மா கடிந்து கொண்டார்.
அம்மா எப்போதுமே சொல்வார்கள் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் வணங்கும் சாமி காப்பாற்றுவார் என்று.
நாங்கள் குடியிருந்த பகுதியில் கான்பாளையம் குறுக்கு தெருவில் ஒரு பெரிய கடை இருந்தது.
அந்தக் கடையில் இல்லாத பொருட்களை இல்லையெனலாம். அவ்வளவு பெரிய கடை. அதில் எல்லா சாமி படமும் வைத்திருந்தார்கள். இந்து கடவுள்கள் இயேசுநாதர், நாகூர் தர்கா எல்லா படங்களும் அடக்கம்.
நான் அப்பாவிடம் கேட்டேன்.
ஏனப்பா நம்ம பக்கத்து தெருவில் உள்ள கடையில் எல்லா சாமி படமும் வைத்திருக்கிறார்கள், அந்த கடைக்காரருக்கு பிரச்சனை வந்தால் எந்த சாமி வந்து காப்பாற்றுவார். ஹிந்து சாமியா. அல்லாவா கிறிஸ்துவா என்று
அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்
எந்த சாமி வந்து அவரை காப்பாற்றும் என்பதை பற்றி கடைக்காரருக்கு கவலை இல்லை. ஆனால் எல்லா சாமி கும்பிடுகிறவர்களும் அவர் கடைக்கு வர வேண்டும் அவ்வளவுதான். அவர் ஒரு வியாபாரி.
அப்பா மேலும் ஒரு குட்டி கதை சொன்னார்
ஒரு ஊரில் ஒரு பக்திமான் இருந்தார். அவர் எல்லா சாமியையும் கும்பிட்டுக் கொண்டே இருப்பார். ரோட்டில் ஒரு கல்லை நட்டு பூ போட்டு இருந்தாலும் அதையும் கும்பிடுவார். இந்த சாமி, அந்த சாமி என்றெல்லாம் பேதம் கிடையாது அவருக்கு.
அப்படி இருக்கையில் எல்லா கடவுள்களும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, பார்வதி சிவனை பார்த்து கேட்டார்.
இந்த பக்திமான் நம் எல்லோரையுமே கும்பிட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு பிரச்சனை என்றால் யார் போய் காப்பாற்றுவது என்று கூறுங்கள் என்றார்.
சிவன் சொன்னார்.
எனது ஞான திருஷ்டியில் சொல்கிறேன் இப்போது அவனுக்கு ஒரு விபத்து நடக்க போகிறது அவன் யாரை கூப்பிடுகிறானோ அவரு போய் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதை விஷ்ணு, முருகன், விநாயகர் உள்ளிட்ட சர்வ மதங்களைச் சார்ந்த கடவுள்களும் ஒப்புக்கொண்டனர். அதே மாதிரியாக அவன் போகும்போது மரக்கிளை ஒடிந்து அவன் மேல் விழுந்தது.
அவன் சப்தமிட்டு கத்தினான் "ஐயோ" வென்று........
ஐயோ வென்று...
ReplyDelete