எனது நண்பன் ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பாரதியின் "சரித்திரம் தேர்ச்சி கொள்" என்ற வாசகத்தை படித்துவிட்டு தமிழய்யாவிடம் "ஐயா, சரித்திரத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதுமா" என்று கேட்டுவிட்டான். தமிழய்யாவுக்கு கோபம் வந்துவிட்டது.
"அட தரித்திரமே, அது சரித்திரத்தில் தேர்ச்சி கொள்ளல்ல. சரித்திரம் தேர்ச்சி கொள், என்று தான் சொல்லியிருக்கிறார். அதாவது எந்த ஒரு மனிதனும் தனது குடும்பத்தின் சரித்திரத்தை தெரிந்து கொண்டால் முன்னுக்கு வருவான். அதே போல எந்த ஒரு சமூகமும் தனது சமூகத்தின் சரித்திரத்தை தெரிந்து கொள்ளாவிட்டால் அது அழிவை நோக்கி சென்றுவிடும். எனவே ஒவ்வொரு மனிதனும், சமூகமும், நாடும் தனது சரித்திரத்தில் தேர்ச்சி கொண்டு முன்னுக்கு வர வேண்டும்" என்று அர்த்தம் என்றார்.
அது என்னமோ தெரியவில்லை படிக்கும்போது சரித்திரம், பூகோளம் என்று ஒரு வகுப்பு உண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சரித்திரம் பூகோளத்திற்கு கொடுப்பதில்லை. அதனால் தான் அதனுடைய முக்கியத்துவம் கருதி முன்பு சரித்திரம் பூகோளம் என்று இருந்ததை, இப்பொழுது சமூக அறிவியல் என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். ஆனால் மற்ற பிரிவு ஆசிரியர்களை பற்றி நினைவு கொள்ளும் அளவிற்கு சரித்திர ஆசிரியர்களை நினைவுபடுத்தும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் எங்கள் பள்ளியில் சரித்திர ஆசிரியர்களிடம் பெற்ற சில அனுபவங்களை இங்கு கூறுகிறேன்.
எங்களுக்கு "ஜி" என்று ஒரு வரலாற்று ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் ராம்நாத் என்று ஞாபகம். "ஜி" "ஜி" என்று சொல்லி பழகி விட்டதால், அவருடைய இயற்பெயர் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அவர் தனியாக ஹிந்தி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அதனால் அவரை "ஜி" என்று அழைப்பார்கள். எங்கள் பள்ளியிலும் அப்படியே அழைத்து பழகிவிட்டோம். அவர் மிகவும் அமைதியாக இருப்பார் பேசுவது கூட அமைதியாக தான் இருக்கும் கோபம் வந்தால் மாணவர்களை அடிக்க மாட்டார் காதை பிடித்து அக்குபஞ்சர் சிகிச்சை செய்வார். அதாவது கிள்ளுவார். காது மாட்டிக்கொண்டால் ஓட்டை விழும் வரை விட மாட்டார். அந்த அளவுக்கு கிள்ளி கொண்டிருப்பார் . அவரிடம் அக்குபஞ்சர் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் யாரும் மாட்டிக் கொள்ளமாட்டோம்.
அவர் பாடம் நடத்தும் விதமே மிகவும் அலாதியானது. பாதி கண்களை மூடியவாறு வரலாற்று பாடம் சொல்லிக் கொண்டே வருவார். நாம் நோட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். அப்படியே கோசாம்பி நோட்ஸில் இருப்பதை போலவே இருக்கும். அப்படியே மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி விடலாம். வகுப்பு எல்லாம் நடத்த மாட்டார். கிட்டத்தட்ட நோட்ஸ் ஒப்பித்துக் கொண்டுதான் இருப்பார். எப்பேர்பட்ட விழிப்புணர்வு கொண்ட மாணவனாக இருந்தாலும், அவர் வகுப்பில் தூக்கம் வந்துவிடும். தாய் குழந்தைக்கு தாலாட்டுவது போல கிட்டத்தட்ட ராகம் போலவே அந்த பாடம் இருக்கும். பரிட்சையில் அவர் சொன்னதை தாண்டி எழுதினால் அக்குபஞ்சர் வைத்தியம் தான்...
இன்னொரு சரித்திர ஆசிரியர் "சியான் சார்" . அவரது பெயர் கோபால். பள்ளியில் மாணவர்கள் வைத்த பெயர் சியான். அந்த சியான் என்ற பெயரை கேட்டாலே கோபால் சார் சிம்மமாக மாறிவிடுவார். ஆனாலும் மாணவர்கள் சியான் என்று தான் சொல்லுவார்கள்.
இப்பொழுது நடிகர் விக்ரம் சியான் என்ற பட்டத்தை தான் போட்டுக் கொள்கிறார். அவரது ரசிகர்கள் சியான் என்று சொல்வதை பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் என்னமோ எங்கள் கோபால் சாருக்கு சியான் என்றால் கெட்ட கோபம் வந்துவிடும். அது ஏன் என்று புரியவில்லை. அந்தப் பெயர் எப்படி வந்தது என்றும் புரியவில்லை. அவருக்கு ஏன் கோபம் வருகிறது என்றும் புரியவில்லை.
அவருக்கு எப்போது கோபம் வரும் என்று தெரியாது. எப்போது சிரித்து சாதாரணமாக பேசுவார் என்றும் புரியாது. வேடிக்கையான மனிதர். ஆனால் மிகவும் சுவாரசியமானவர். அவர் வகுப்பிற்கு வந்தவுடன் சாக்பீஸ் எடுத்து எந்த பகுதியை பற்றி பாடம் நடத்தப் போகிறாரோ, அதை அப்படியே மனப்பாடமாக வரைபடம் வரைந்து விடுவார். உதாரணமாக குப்த பேரரசு என்று ஆரம்பித்தால், இந்தியாவினுடைய அந்தப் பரந்த வரைபடத்தை வரைந்து விசாலமாக பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
எந்த சந்தேகம் கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்வார். ஆனால் கோபம் வந்து விட்டாலோ, கண் மண் தெரியாமல் அடி கொடுப்பாள். வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்றாலும் அடிதான் விழும். என்ன, ஏதென்றெல்லாம் கேட்க மாட்டார்.
ஒருமுறை என் நண்பன் செல்வம் பாடம் எழுதி வரவில்லை. இன்னொரு நண்பன் நமசிவாயம் மிக நன்றாக படிப்பார். அவர் வீட்டு படம் எழுதி வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் செல்வம் எழுதி வரவில்லை என்று சொல்லிவிட்டு நமசிவாயம் எழுதிய நோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். நமசிவாயம் செல்வத்தின் எழுதாத நோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று கோபால் சார் வகுப்பிற்கு வந்து விட்டார்.
வந்தவர் எல்லாரையும் பாடம் எழுதி விட்டீர்களா என்று கேட்டவர், முதலில் செல்வத்தின் கையில் இருந்த நோட்டை வாங்கி பார்த்து வெரி குட் என்று சொல்லிவிட்டு, நமசிவாயம் கையில் இருந்து நோட்டை வாங்கி பார்த்தார். பாடம் எழுதவில்லை என்றவுடன் நமசிவாயத்தை போட்டு வெளுத்து விட்டார். நமசிவாயம் மிகவும் அமைதியானவர். அவர் இது என்னுடைய நோட்டு இல்லை, செல்வத்தின் நோட்டு என்று கூட சொல்ல வாய் வரவில்லை. பொலபொலவென்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். இவர் ஏனென்று கூட கேட்காமல் அடி கொடுத்துவிட்டு அடுத்த மாணவனிடம் போய்விட்டார்.
இந்திய முதல் சுதந்திர போரான சிப்பாய் கலகத்தின் போது அதை அடக்க ஆங்கில அரசு மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது. லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டன. இந்தப் போரின் போது மிகவும் கொடூரமாக நடந்து கொண்டு, இறுதியில் கருணையோடு நடந்து கொள்வதைப் போல தன்னை காட்டிக் கொண்டான் ஆங்கில அரச பிரதிநிதி கானிங் பிரபு. அவரது நண்பர்கள் அவரை கேலியாக "காருன்யமிக்க கானிங்"என்று அழைத்தனர்.ஆனால் பிற்காலத்தில் வரலாற்றில் இந்தியர்களிடம் மிகவும் கருணையாக நடந்து கொண்டதால் காருண்யம் மிக்க கானிங் என்றழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது.
ஒரு முறை தேர்வின் போது இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நான் முதலில் கூறிய வரலாற்றை எழுதியிருந்தேன். எனக்கு மதிப்பெண் அளிக்கப்படவில்லை. உடனே விடைத்தாளை எடுத்துச் சென்று சரித்திர ஆசிரியரிடம் முறையிட்டேன். அதற்கு கோபால் சார் தட்டிக் கொடுத்து நீ எழுதியது உண்மை ஆனால் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதற்குத்தான் மதிப்பெண் கிடைக்கும். எழுதப்பட்டிருப்பதெல்லாம் உண்மை வரலாறு என்று ஆகி விடாது. உண்மை என்ன என்பதை ஆய்வு செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் மதிப்பெண் வேண்டுமென்றால் புத்தகத்தில் உள்ளபடியே தான் எழுத வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்.
இவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நைசாக அவர் டெல்லி சென்று வந்ததை பற்றியும், துருப்பிடிக்காத இரும்பு தூண் பற்றியும் ஏதாவது கேள்வி கேட்டால் அப்படியே அதைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். வந்த விசயத்தை மறந்து விடுவார். நாங்கள் பள்ளிப்படிப்பு முடித்த சில வருடங்களில் அவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிவிட்டார் என்று கேள்விப்பட்டோம். எங்கள் நல்ல நேரம் நாங்கள் தப்பித்து விட்டோம்.
பல வருடங்கள் கழித்து நான் புதுடெல்லியில் வேலை பார்க்கின்ற காலத்தில் பல முறை குதுப்மினார் போன்ற வரலாற்று சான்றிடங்களுக்கு சென்று வருவேன். அப்போதெல்லாம் அந்த துருப்பிடிக்காத இரும்பு தூண் அருகில் வந்து நிற்கும்போது கோபால் சார் தான் ஞாபகத்துக்கு வருவார்...??
.
No comments:
Post a Comment