சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 30 January 2025

இந்திய செய்தித்தாள்கள் தினம்.

 ஒருமுறை படைப்பு கடவுளும் நாரதரும் சந்தித்துக் கொண்டனர்.  

நாரதர் சலித்துக் கொண்டார். 

"இங்கு மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே போகிறது. நினைத்தவர்கள் எல்லாம் ராஜாக்கள் ஆகிறார்கள். ஆளாளுக்கு ஆட்சி செய்கிறார்கள். நான் நேரடியாக இவ்வளவு பேரிடம் போய் எப்படித் தான் கலகம் செய்வது." 

படைப்பு கடவுள் சொன்னார். 

"ஒன்றும் கவலைப்படாதே. உன்னுடைய சிரமத்தை குறைக்க நான் ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். காலங்கள் மாறிக்கொண்டே போகிறது. விஞ்ஞானமும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்களுக்கு அறிவும் வளர்ந்து கொண்டே போகிறது. உன் ஒருவனால் அத்தனை பேரிடமும் கலகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. மேலும் மக்கள் தெளிவாகும் போது உன்னுடைய தொழில்நுட்பம் மிகவும் பழையதாகி விட்டது அதனால் புதிய தொழில்நுட்பங்கள் தேவை... ஆதலால்....."

படைப்பு கடவுள் இழுக்க ஆரம்பித்த உடன் நாரதருக்கு பதை பதைப்பு வந்து விட்டது. 

என்ன சொல்லப்போகிறாரோ என்று யோசிக்கலானார். 

" ஆதலால்... என்று இழுக்கிறீர்களே என்ன செய்யலாம் என்று சொல்லவில்லையே" என்று நாரதர் கேட்டார். 

" ஆதலால் தான். என்ன சொல்ல வருகிறேன் என்றால் உனக்கு பதிலாக இன்னும் கலகம் இழுக்க நிறைய பேரை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

"அப்படியானால் இன்னும் நிறைய நாரதர்களை உருவாக்கப் போகிறீர்களா?, தேவர்கள் உலகம் தாங்காதே" என்று நாரதர் பயந்து கொண்டே கேட்டார். 

நாரதருக்கு தன்னுடைய பதவி போய்விடும் என்ற பயம் வந்துவிட்டது. "இல்லை, இல்லை. நாரதர்களை உருவாக்க போகவில்லை. நாரதரையே எடுத்துவிடலாம் என்று இருக்கிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

"நாரதராகிய என்னை எடுத்துவிட்டு எந்த தேவரை போடப் போகிறீர்கள்" என்று நாரதர் கேட்டார். 

" இல்லை இல்லை மனிதர்களிடம் தான் அந்த பொறுப்பை ஒப்படைக்க போகிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

" மனிதர்களிடமா... . அவர்கள் எப்படி செய்வார்கள்". என்று நாரதர் கேட்டார்.

 "மனிதர்களிடம் சிலரை உருவாக்கி, அவர்களுக்கு செய்தித்தாள் என்ற சாதனத்தை ஒப்படைக்க போகிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பது ஐதீகம். மனிதர்கள்..... என்று நாரதர் இழுத்தார். 

அவர்கள் மனிதர்கள் தானே? நிச்சயமாக நன்மையில் முடியாது. கலகம் கலகமாக தானே முடியும்... என்றார் படைப்பு கடவுள்.

"செய்தித்தாள்கள் போக முடியாத இடங்களில் இந்த கலகத்தை யார் செய்வது" என்று நாரதர் கவலைப்பட்டார். 

படைப்பு கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார். 

"அதனால என்ன அந்த காலி இடத்தை நிரப்புகிற வேலையை சமூக ஊடகங்கள் செய்யும்"


நேற்று இந்திய செய்தித்தாள்கள் தினம். இந்திய செய்தித்தாள்கள் தினத்திற்கு ஏதாவது வாழ்த்து செய்தி சொல்ல வேண்டுமே என்பதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு இந்த செய்தியை தயாரித்து உள்ளேன். யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்..... 




Saturday, 25 January 2025

பள்ளி விளையாட்டு

 பள்ளி விளையாட்டு 

நான் படித்த தியாகராஜர் நன்முறை உயர்நிலைப்பள்ளி  மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் தென் கரையில் அமைந்துள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஓரிரு மாதங்கள் தவிர பெரும்பகுதி தண்ணீர் இல்லாமல்  தான் இருக்கும். அழகாக பொன்னாங்கண்ணி கீரை தரையோடு வெல்வெட்டு விரித்தது போல படர்ந்து இருக்கும். விளையாடுவதற்கு மிக அருமையான மைதானமாக இருக்கும். அதேபோல பள்ளியின் உள்புறம் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது.

தெப்பக்குளத்திலோ அல்லது பள்ளி மைதானத்திலோ நாங்கள் பெரும் பகுதி சோளக்கட்டையை அல்லது டஸ்டரை எறிந்து விளையாடுவோம், அல்லது ஓடிப்பிடித்து விளையாடுவோம். மற்றபடி விளையாட்டு ஆசிரியர்கள் மூலமாக ஏதும் விளையாடியதாக ஞாபகம் இல்லை. எப்பொழுதாவது எங்களை  விளையாட்டு வகுப்பின் போது அழைத்துச் சென்று உயரம் எடை போன்றவற்றை அளந்து குறிப்பெடுப்பார்கள். எப்பொழுதாவது ஒரு நாள் எல்லோரையும் அழைத்துச் சென்று சில விளையாட்டு பயிற்சிகள் கொடுப்பார்கள். அதுவும் குறிப்பாக விளையாட்டு தின அறிவிப்பிற்கு சில காலத்திற்கு முன்பாக நடைபெறும். எல்லோரையும் சிவப்பு குழு, மஞ்சள் குழு, நீலக்குழு, பச்சை குழு என்று குழுக்களாக பிரித்து அறிவிப்பார்கள். அடிக்கடி எந்த குழுவில் இருக்கிறோம் என்று தெரியாமல் அடுத்த குழுவில் போய் நின்று விளையாட்டு ஆசிரியரிடம் அடி வாங்குவது உண்டு. தொடர்ச்சியாக விளையாடிருந்தால் தானே ஞாபகம் இருக்கும்..

சில நேரங்களில் மைதானத்தை சுற்றி ஓடி வர விடுவார்கள். பெரும்பகுதி ஓடுவதற்கு சக்தி இல்லாமல், தொத்தல் குதிரையை போல கடைசியாக ஓடி வருவேன். புல்லப்ஸ் எடுப்பதற்கு கம்பியில் தொங்க விட்டால், தொங்கிக் கொண்டே இருப்பேன், அல்லது புல்லப்ஸ் கம்பியில் பிடித்து தொங்க முடியாமல் கீழே விழுந்து விடுவேன். ஒரு புல்லப்ஸ் கூட எடுத்ததாக நினைவில்லை. அதேபோல தண்டாலும் அந்த கதை தான். தரையோடு படுத்து விடுவேன். அடிதான் கிடைக்கும். அதே போல பந்து, அல்லது இரும்பு குண்டு எறிய சொன்னால் மிகக் குறைந்த தூரத்துக்கு எறிந்து விளையாட்டு ஆசிரியர்களிடம் அடி வாங்குவேன்.

 பூபதி என்று ஒரு விளையாட்டு ஆசிரியர் இருந்தார். மிகவும் குண்டாக உருளைக்கட்டை போல இருப்பார். அதேபோல பாண்டி என்று ஒரு விளையாட்டு ஆசிரியர் ஒல்லியாக இருப்பார். சாம் நத்தானியேல் மிகவும் வயதானவர். ஸ்டீபன் மட்டுமே பிட்டானவராக இருந்தார். பரசுராமன் என்று புதிதாக ஒரு விளையாட்டு ஆசிரியர் நான் படிக்கும்போது பணியில் சேர்ந்தார். ஓரளவுக்காவது மாணவர்களை அவர் விளையாட வைத்ததாக ஞாபகம். அவர் இடது கையை அதிகமாக பயன்படுத்துவதால் லெஃப்ட் என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம். 

பெரும் பகுதி எங்கள் விளையாட்டு ஆசிரியர்கள் மாணவர்களை மேய்க்கின்ற பணியை தான் அதிகம் செய்தார்கள். மாணவர்களை விழாக்களின் போது ஒழுங்குபடுத்துவது, விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வது, அதாவது பெஞ்ச் சேர்களை கொண்டு போய் அடுக்குகின்ற வேலை, பள்ளி ஆரம்பிக்கின்ற நேரத்திலே தாமதமாக வருகின்ற மாணவர்களை கண்காணிப்பது, பொதுவாக அமைதி யின்மை ஏற்படும்போது மாணவர்களை கட்டுப்படுத்துவது போன்ற வேலைகளை தான் அவர்கள் அதிகம் செய்தார்கள். விசில் கயிற்றால் அடி கொடுப்பார்கள். மற்றபடி விளையாட்டெல்லாம் சொல்லிக் கொடுத்ததில்லை. 

 ஒரு முறை பாட்டுப் போட்டி நடத்துகின்ற வேலையை பாண்டி உடற்பயிற்சி ஆசிரியர் செய்தார். நானும் வெட்கமே இல்லாமல் பேர் கொடுத்திருந்தேன். சுத்தமாக பேசவே வராது. இந்த லட்சணத்தில் பாட்டு போட்டியில் கலந்து கொண்டால் எப்படி இருந்திருக்கும். தத்தக்கா புத்தக்கா என்று வசனம் ஒப்பிப்பது போல ஒரு பாட்டை கொலை செய்தேன். தலையில் ஓங்கி ஒரு அடி கொடுத்து ஓடி போடா என்று பாண்டி வாத்தியார் விரட்டி விட்டார்.

என் நண்பன் அசோக்குமார் அடிமைப்பெண் படத்தில் உள்ள தாய் இல்லாமல் நான் இல்லை என்ற பாடலை பாடினார். அவரையும் பாண்டி வாத்தியார் திட்டி விரட்டி விட்டார். கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவார். பாட்டு போட்டிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று எங்களுக்கு புரியவில்லை. 

பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது கலந்து கொள்கிறவர்களின் பெயர் கேட்பார்கள். கலந்து கொள்ளலாம் என்ற நப்பாசையோடு அந்தப் பக்கம் போகும்போது விளையாட்டு ஆசிரியர்களை பார்த்தவுடன் பயந்து போய் பேர் கொடுக்காமலே ஓடி வந்து விடுவேன். எனக்கு தெரிந்தவரை சில மாணவர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள். வேறு பள்ளியில் இருந்து புதிதாக விநாயகமூர்த்தி, கமலக்கண்ணன், கல்யாண சுந்தரம் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். அந்த அண்ணன்மார்கள் எங்களை விட வயதில் மூத்தவர்கள். விநாயகமூர்த்தி அண்ணன் மிகச் சிறப்பாக விளையாடி போட்டி களில் நிறைய பரிசுகள் வாங்குவார். மிக நீண்ட காலம் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது அவரைப் பார்த்தேன். நான் அண்ணனைப்போலவும் அவர் தம்பியைப்போலவும் காட்சியளித்தோம்.

இன்னொரு நன்பர், சிலைமான் பகுதி என்று நினைக்கிறேன். மிக சிறப்பாக விளையாடி பரிசுகள் வாங்கினார். அவர் பெயரை மறந்து விட்டேன். 

அது சரி... நான் விளையாடியதைப்பற்றி பெரிதாக ஒன்றும் கூறவில்லையே. எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒரு நாவல் மரம் இருந்தது. நாவல்பழ சீசனில், இடைவேளை , உணவு இடைவேளை மணி அடித்தவுடன் பழம் பொறுக்க சிட்டாய் பறப்போம். துரதிர்ஷ்டவசமாக மரத்தின் அருகே உள்ள கூரைக்கொட்டகை வகுப்பு மாணவர்கள் முந்திவிடுவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் சில நேரங்களில் பழம் கிடைக்கும்... 


நான் விளையாட்டில் கலந்து கொண்ட லட்சனம் அவ்வளவுதான்...... 


Friday, 24 January 2025

பக்திமான்

 எனது தங்கையை ஆர். சி பள்ளியில் சேர்த்திருந்தோம். ஒருமுறை அம்மா தங்கையை ஏதோ தவறு செய்து விட்டது என்று அடித்து விட்டார்கள். உடனேயே ஏசப்பா என்று தங்கை கததியது. 

அம்மாவுக்கு கோவம் அதிகமாகி இது என்ன புது பழக்கம் என்று திட்டினார்கள். 

அப்பா சிரித்தார். 

இதென்ன நம்ம வழக்கத்தில் இல்லாமல் கிறிஸ்துவை கூப்பிடுகிறாள் என்று அம்மா கடிந்து கொண்டார். 

அம்மா எப்போதுமே சொல்வார்கள் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் வணங்கும் சாமி காப்பாற்றுவார் என்று. 

நாங்கள் குடியிருந்த பகுதியில் கான்பாளையம் குறுக்கு தெருவில் ஒரு பெரிய கடை இருந்தது.

அந்தக் கடையில் இல்லாத பொருட்களை இல்லையெனலாம். அவ்வளவு பெரிய கடை. அதில் எல்லா சாமி படமும் வைத்திருந்தார்கள். இந்து கடவுள்கள் இயேசுநாதர், நாகூர் தர்கா எல்லா படங்களும் அடக்கம். 

நான் அப்பாவிடம் கேட்டேன். 

ஏனப்பா நம்ம பக்கத்து தெருவில் உள்ள கடையில் எல்லா சாமி படமும் வைத்திருக்கிறார்கள், அந்த கடைக்காரருக்கு பிரச்சனை வந்தால் எந்த சாமி வந்து காப்பாற்றுவார். ஹிந்து சாமியா. அல்லாவா கிறிஸ்துவா என்று 

அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார் 

எந்த சாமி வந்து அவரை காப்பாற்றும் என்பதை பற்றி கடைக்காரருக்கு கவலை இல்லை. ஆனால் எல்லா சாமி கும்பிடுகிறவர்களும் அவர் கடைக்கு வர வேண்டும் அவ்வளவுதான். அவர் ஒரு வியாபாரி.

அப்பா மேலும் ஒரு குட்டி கதை சொன்னார்

 ஒரு ஊரில் ஒரு பக்திமான் இருந்தார். அவர் எல்லா சாமியையும் கும்பிட்டுக் கொண்டே இருப்பார். ரோட்டில் ஒரு கல்லை நட்டு பூ போட்டு இருந்தாலும் அதையும் கும்பிடுவார். இந்த சாமி, அந்த சாமி என்றெல்லாம் பேதம் கிடையாது அவருக்கு. 

அப்படி இருக்கையில் எல்லா கடவுள்களும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, பார்வதி சிவனை பார்த்து கேட்டார். 

இந்த பக்திமான் நம் எல்லோரையுமே கும்பிட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு பிரச்சனை என்றால் யார் போய் காப்பாற்றுவது என்று கூறுங்கள் என்றார். 

சிவன் சொன்னார். 

 எனது ஞான திருஷ்டியில் சொல்கிறேன் இப்போது அவனுக்கு ஒரு விபத்து நடக்க போகிறது அவன் யாரை கூப்பிடுகிறானோ அவரு போய் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதை விஷ்ணு, முருகன், விநாயகர் உள்ளிட்ட சர்வ மதங்களைச் சார்ந்த கடவுள்களும் ஒப்புக்கொண்டனர். அதே மாதிரியாக அவன் போகும்போது மரக்கிளை ஒடிந்து அவன் மேல் விழுந்தது. 

அவன் சப்தமிட்டு கத்தினான் "ஐயோ" வென்று........ 

Tuesday, 21 January 2025

படித்ததில் பிடித்தது


 நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தை

சேர்ந்த இஸ்லாமிய பெண்!

என்னுடைய நாடு பாகிஸ்தான்!

என் அப்பாவை எனக்கு அதிகம்

பிடிக்கும்!

எனக்கு பதினெட்டு வயதாகும்போது

எனக்கு திருமணம் செய்யவேண்டும்

என்று அப்பா விரும்பினார்!

ஆனால் எனக்கு திருமணத்தில்

விருப்பமில்லை!

அதை அப்பாவிடம் காட்டிக்கொள்ளவும்

இல்லை!

எனக்கு திருமணம் செய்து வைத்தால்

உங்களுக்கு சந்தோஷமா அப்பா என்றேன்!

ஆமாம் என்று புன்முறுவலோடு

தலையாட்டினார்!

அவருடைய சந்தோஷத்திற்காக

அவர் பார்த்த மாப்பிள்ளையையே

திருமணம் செய்துகொண்டேன்!

திருமணத்திற்கு பிறகும் 

எனக்கு பெரிய சந்தோஷம் இல்லை,

ஆனாலும் வாழ்ந்துகொண்டு இருந்தேன்!

ஒரு நாள் நானும் கணவரும் 

காரில் சென்றுகொண்டு இருந்தோம்!

அவர் தூக்கக்கலக்கத்தில் 

காரை தவறாக ஓட்டி

பள்ளத்தில் விழுந்து

விபத்துக்குள்ளாகும் நேரத்தில்

அவர் மட்டும் கதவை திறந்து

குதித்துவிட நான் காருக்குள்ளேயே

சிக்கிக்கொண்டேன்!

காப்பாற்றவே முடியாத சூழ்நிலையில்

இருந்து உயிரை மட்டும்

காப்பாற்றினார்கள்!

முதல் நாள் வந்து, உங்கள்

இரண்டு கைகளும் உடைந்துவிட்டது,

இனிமேல் உங்களுக்கு பிடித்த

ஓவியம் வரையும் பணியை

செய்யமுடியாது என்றார்கள்!

அடுத்த முறை வந்து

உங்கள் இரண்டு கால்களும்

உடைந்துவிட்டது உங்களால்

இனிமேல் நடக்கமுடியாது 

Wheel chair தான் 

பயன்படுத்த வேண்டும் என்றார்கள்!

மீண்டும் ஒரு முறை வந்து,

உங்களுடைய முதுகெலும்பும்

இடுப்பு எலும்புகளும் உடைந்துவிட்டதால்

உங்களால் இனி எப்போதுமே 

ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது 

என்று சொன்னார்கள்!

இனி வாழ்நாள் முழுவதும்

Wheel chair ல் உட்கார்ந்து

எல்லாவற்றுக்கும் யாரோ ஒருவரின்

உதவியை எதிர்ப்பார்த்து 

வாழ்கின்ற இந்த வாழ்க்கை எதற்கு,

உயிரை மட்டும் மிச்சம் வைத்ததற்கு

பதிலாக அந்த இறைவன் என்னை

கொன்றிருக்கலாமே என்று 

தோன்றியது!

அவர் கொல்லாவிட்டால் என்ன

நாமே தற்கொலை செய்துகொள்ளலாம்

என்று தோன்றினாலும் அதை

செய்யக்கூட கை கால் வேண்டுமே

என்று படுக்கையிலேயே 

அழுதுகொண்டிருந்தேன்!

இந்த அதிர்ச்சியை எல்லாம் கடந்த

இன்னொரு அதிரச்சி,

நான் எதற்கும் உபயோகப்பட மாட்டேன்

என்று என் கணவர் எனக்கு

விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி

இருந்தார்!

விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாமல்,

எதற்காக யாருக்காக நான்

வாழவேண்டும் என்று எத்தனை முறை

யோசித்து அழுதாலும் எனக்கு

எந்த பதிலும் கிடைக்கவில்லை!

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து

ஒருநாள் தெளிவு கிடைத்தது!

என்னிடம் இருந்து

இத்தனையும் பறித்துக்கொண்ட

இறைவன் ஏன் என் உயிரை மட்டும்

மிச்சம் வைத்திருக்கிறான்,

இந்த உயிரை இன்னும் வைத்திருப்பதின்

மூலம் நான் செய்ய வேண்டிய

ஏதோ ஒரு வேலை, செல்லவேண்டிய

ஏதோ ஒரு பயணம் மிச்சமிருக்கிறது

என்றே தோன்றியது!

எல்லாவற்றையும் இறைவனிடம்

விட்டுவிட்டு, எதையும் எதிர்கொள்ளும்

தைரியத்தை மட்டும் எனக்கு கொடு

என்று வேண்டிக்கொண்டு 

தைரியமாக ஒரு முடிவு எடுத்தேன்!

அந்த முதல் முடிவு,

என் கணவருக்கு விவாகரத்து அளிப்பது!

சந்தோஷப்பட்டார்!

இன்னொரு பெண்ணை திருமணமும்

செய்துகொண்டார்!

மனப்பூர்வமாக வாழ்த்துமடல் 

அனுப்பினேன்!

ஹாஸ்பிடலை விட்டு நகர முடியாமல்

இன்னும் ஹாஸ்பிடலிலேயே

இருந்தேன்!

படுத்த நிலையில் நான்கு பக்கமும்

எந்த பக்கம் திரும்பினாலும்

அதே வெள்ளை நிற சுவர்கள்!

குறைந்தபட்சம் இந்த சுவர்களின்

நிறத்தையவது மாற்றுங்கள்,

மாதக்கணக்கில் இதை 

பார்த்து பார்த்து பைத்தியம் பிடிக்கிறது

என்று கத்தினேன்!

மாற்றினார்கள்!

உடைந்த கையை வைத்து

எதையாவது அரைகுறையாவது 

வரைய முடியாதா என்று முயன்றேன்!

என் முயற்சிக்கு கொஞ்சம்

கொஞ்சம் பலன் கிடைத்தது!

வரைவது ஒன்றே எனக்கான

ஜன்னலாக தெரிய தூங்கும் நேரத்தை

தவிர மற்ற எல்லா நேரத்திலும்

வரைந்துகொண்டே இருந்தேன்!

நான் வரைந்த அந்த ஓவியங்களே

என்னை உயிர்ப்போடு வைத்திருந்தது!

கால்கள் இல்லாவிட்டால் என்ன

வெளியே போக வீல் சேர் 

போதும் என்று தோன்றியது!

குழந்தை பெற முடியாவிட்டால்

என்ன ஏற்கனவே பிறந்து 

அனாதையாக்கப்பட்ட எத்தனையோ

குழந்தைகள் இருக்கிறார்கள்

அவர்களில் ஒரு குழந்தையை

தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று

முடிவெடுத்தேன்!

உட்கார்ந்த இடத்தில் இருந்தே

எழுதமுடியுமே என்று எழுத

ஆரம்பித்தேன்!

குரல் நன்றாகத்தானே இருக்கிறது

பாடலாமே என்று பாட ஆரம்பித்தேன்!

வாயும் நன்றாகத்தானே இருக்கிறது

என்று பேச ஆரம்பித்தேன்!

என்னை இறைவன் உயிரோட

வைத்திருந்ததின் காரணம்

கொஞ்சம் கொஞ்சமாக புரிய

ஆரம்பித்தது!

எழுந்திரிக்கவே முடியாத பள்ளத்தில்

இருந்து எப்படி எழுந்து வந்தேன்

என்ற என்னுடைய கதையையே

எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன்!

எப்படி முடிந்தது என்று எல்லோருமே 

ஆச்சர்யப்பட்டார்கள்!

அது அவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை

கொடுத்தது!

வீல் சேரில் நகர்ந்து 

மேடைகளிலும் பேச ஆரம்பித்தேன்!

மீண்டும் மீண்டும் சலிக்காமல்

என் கதையையே சொல்ல ஆரம்பித்தேன்!

என் கதையை சொல்லி 

நான் பரிதாபத்தை தேடிக்கொள்வதாகவும்

பலர் சொன்னார்கள்,

நான் கவலைப்படவில்லை,

என் கதை பரிதாபத்திற்குரியதாக

இருந்தாலும் அது பலரை

உத்வேகப்படுத்தியது,

அவர்களை எழுந்து நடக்கவைத்தது!

தோற்றுப்போன அவர்கள் 

எழுந்து நடப்பதை பார்க்க

சந்தோஷமாக இருந்தது!

மீண்டும் மீண்டும்,

மீண்டும் மீண்டும் என 

என் கதைகளையே எல்லா

மேடைகளிலும் பேசினேன்,

ஆயிரக்கணக்கான மக்கள் 

கூடினார்கள், 

என்னுடைய கதையே என்னை

Motivational பேச்சாளராக மாற்றியது!

ஒரு தொலைக்காட்சியில் 

தொகுப்பாளராகவும் மாற்றியது!

என்னுடைய பாகிஸ்தானை கடந்து

உலகம் முழுவதும் என்னுடைய

கதை எல்லோருக்கும் தெரிய

ஆரம்பித்தது!

எல்லோருக்கும் தன்னம்பிக்கையை

உருவாக்கியது!

BBC ல் என்னை சிறப்பு

பேட்டி எடுத்தார்கள்!

ஜநாவில் என்னை பேச

அழைத்தார்கள், அங்கேயும் என்

கதையை பேசினேன்!

நிறைய இசை ஆல்பங்களை பாடி

சேர்ந்து வெளியிட்டேன்,

நிறைய எழுதினேன்!

இவற்றை எல்லாம் எனக்கு

கொடுக்கவேண்டும் என்று 

கடவுள் நினைத்திருந்தால்

பிறகு எப்படி என்னை

கார் விபத்தில் சாக விடுவார்!

உனக்காக நிறைய வைத்திருக்கிறேன்

மகளே, சீக்கிரம் எழுந்து வா

என்று அவர் எனக்காக

காத்திருந்ததாகத்தான் தோன்றுகிறது!

விபத்துக்கு பின்

என்னுடைய உடம்போடும்

வீல் சீரோடும் சேர்த்து

Urinal bag ஒன்று எப்போதுமே

பொருத்தப்பட்டிருக்கும்!

எங்கு போனாலும் அது இல்லாமல்

போகமுடியாது என்னுடைய

உடல் பிரச்சனை அவ்வாறானது!

சரி இருந்துவிட்டு போ என்று

என் சீட்டிற்கு பின்னாலேயே

வைத்துக்கொண்டேன்!

அது என் இழப்பின் குறியீடு!

என்னை அது பின்தொடர்ந்து

கொண்டு தான் இருக்கும்,

ஆனால் ஒருபோதும் என்னை

முந்த முடியாது!

எனக்கான இறப்பு என்றோ

ஒரு நாள் இருக்கும்,

இருந்துவிட்டு போகட்டும்,

அதற்கு முன் தன்னம்பிக்கையை

இழந்து நானே ஏன் சாகவேண்டும்!

தோற்றுப்போனதாய் நினைத்துவிட்டாலே

நான் செத்துவிட்டாதாய் அர்த்தம்,

நான் சாக விரும்பவில்லை,

நீங்களும் சாகாதீர்கள்!

தோற்றுப்போகும் போதெல்லாம்

இந்த இஸ்லாமிய இரும்புப்பெண்

முனீபா மசாரியை நினைத்துக்கொள்ளுங்கள்,

*வெற்றியின் கதவு உங்களின்*

*விழி கூர்மை கண்டு*

*தானாய் திறக்கும்!*


படித்ததில் பிடித்தது

  நன்றி. முகநூல் பதிவு 

Monday, 20 January 2025

Seeni.Karthikeyan pages: கடுதாசி

Seeni.Karthikeyan pages: கடுதாசி:   *தம்பி ஊருக்கு போன உடனே லெட்டர் போடுப்பா.." " இந்த கடிதம் கண்டவுடன் தந்தி போல் பாவித்து.." கடுதாசி என்றால் வேறொன்றும் இல்லை...

கடுதாசி

 

*தம்பி ஊருக்கு போன உடனே லெட்டர் போடுப்பா.."

" இந்த கடிதம் கண்டவுடன் தந்தி போல் பாவித்து.."

கடுதாசி என்றால் வேறொன்றும் இல்லை, லெட்டர் தான்.. இப்போது உள்ள தலைமுறைக்கு மேலே சொன்ன வார்த்தைகள் கேள்விப்பட்டிராதவை. ஆனால் எங்கள் வாழ்க்கையில் இவை எல்லாம் மிகவும் முக்கியமானவை. நான் 17 வயது வரை வீட்டை விட்டு வெளியே சென்று தங்கியதில்லை. எனக்கென்று எந்த கடிதமும் வந்ததில்லை. முதன்முதலாக என்னுடைய பட்டய படிப்பு     ( டிப்ளமோ.) பதிவு செய்த கடிதம் தான் என் பெயருக்கு வந்த முதல் கடிதம். 

என்னுடைய டிப்ளமோ வந்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, கேரளாவில் மூணாறில் உள்ள ஒரு மருந்து கடைக்கு வேலைக்கு சென்று விட்டேன். அங்கு போனவுடன் எங்க அப்பா சொன்ன படி, வந்து சேர்ந்ததற்கான கடிதத்தை அப்பாவிற்கு அனுப்பி வைத்தேன். அங்கு வேலைக்கு போன ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் இருந்து வேலைக்கான நேர்காணல் கடிதம் வந்தென்று எனக்கு தந்தி வந்தது. எனவே கேரளா மருந்து கடை வேலையை மூட்டை கட்டிவிட்டு, மதுரை வந்து சேர்ந்தேன். நான் வந்த பிறகுதான் நான் எழுதிய கடிதமே எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. 

தந்தி என்பது வேறொன்றுமில்லை, அரசு மூலமாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி. தபால் தந்தி அலுவலகத்தில் நாம் அனுப்ப வேண்டிய செய்திகளை எழுதி கொடுத்தால், வார்த்தைகளை எண்ணி அதற்கு தகுந்தார் போல் பணம் வசூலித்து கொண்டு அந்த செய்திகளை மோர்ஸ் சங்கீத வார்த்தைகளாக அனுப்புவார்கள் 

தந்தி பெறப்படும் அலுவலகத்தில் செய்தியைப் பெற்று, அவற்றை மீண்டும் வார்த்தைகளாகி கடித வடிவில் உரிய நபருக்கு கொண்டு போய் சேர்ப்பார்கள். வார்த்தைகள் கூட கூட கட்டணம் ஏறிக்கொண்டே போகும். எனவே செய்தி மிக மிக சுருக்கமாக எழுதி அனுப்புவது வழக்கம். 

தொலைபேசிகள், அலைபேசிகள் வரும் வரை தகவல் தொடர்புக்கு கடிதத்தையும் தந்தியை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருந்தது. 

வீட்டிலிருந்து வேலைக்காக முதன் முதலில் புதுக்கோட்டை வந்தபோது குடும்பத்திலுள்ள எல்லோருமே படித்து படித்து சொன்ன வார்த்தை "அப்பா போனதும் லெட்டர் போடுப்பா," 

வந்த புதிதில் மிக விரிவாக கடிதங்கள் எழுத ஆரம்பித்து  காலம் செல்ல செல்ல கடிதங்கள் கார்டு அளவிற்கு குறைய ஆரம்பித்தது. 

சோம்பேறித்தனம் பெருக பெருக, கடிதம் எழுதும் பழக்கம் குறைய ஆரம்பித்தது. ஒரு கடிதத்தை ஒரு தேதி போட்டு ஆரம்பித்து, பிறகு தேதியை அடித்து மாற்றி, மீண்டும் மாற்றி, பல நாட்கள் கழித்து கடிதத்தில் எழுதி முடிப்பது, அதையே கூட ஞாபகமாக போஸ்ட் பண்ண மறந்து விடுவது என்றெல்லாம் ஆகிப்போனது. 

அப்பா கூட கிண்டலாக சொல்லுவார், "நீ பல தேதிகள் போட்டு எழுதிய ஒரு கடிதம் பல நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது" என்று. 

அப்போதும் திருந்துவதில்லை. ஊரிலிருந்து கிளம்பியவன் ஊர்போய் சேர்ந்தான் என்பது, கடிதத்தை பார்த்து தான் தெரியவரும். கடிதம் போய் சேரவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள் என்ற புத்தி கூட இருப்பதில்லை.

நான் டெல்லியில் சில வருடங்கள் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டபோது, எனது மனைவி வாராவாரம் கடிதம் எழுதுவார். நானும் பதில் கடிதம் எழுதுவேன். என்னதான் போனில் பேசினாலும், கடிதம் படிக்கின்ற சுகமே தனி. அடுத்த கடிதம் வரும் வரை திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருப்பார். கடிதம் வரவில்லை என்றால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படித்தானே அப்பா, அம்மாவுக்கு இருந்திருக்கும். 

கடிதங்கள் எவ்வளவு மதிப்பு மிக்க பொக்கிசம் என்பதை பாதுகாப்பாய் வைத்திருப்பவர்களுக்குத்தான் தெரியும். எனது அக்கா திருமணத்தின்போது அப்பா திருமணஅழைப்பிதழை தனது முதலாளி, என்பீல்டு நிறுவன அதிபர் திரு ஈஸ்வரன் அவர்களுக்கு அனுப்பி, திருமண அழைப்பிதழை அனுப்பி திருமணத்திற்கு முன்பணம் கேட்டு விண்ணப்பம் அனுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்து திரு ஈசுவரன் அவர்கள் தானே கைப்பட பதில் கடிதம் எழுதி இருந்தார். என்னுடைய அக்கா திருமணத்தை வாழ்த்தியும், தன்னால் இயன்ற உதவியும் செய்து கடிதம் எழுதி இருந்தார். இந்தியாவிலேயே ஒரு பெரிய நிறுவனமான என்ஃபீல்டு நிறுவனத்தின் முதலாளி, கடைக்கோடியில் இருக்கக்கூடிய சாதாரண ஒரு தொழிலாளிக்கு கை படம் கைப்பட கடிதம் எழுதியது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதை நீண்ட நாட்கள் பொக்கிஷமாக கடிதத்தை பராமரித்து வந்தோம். எப்படியோ கடிதத்தை தொலைத்து விட்டோம். மிகவும் வருத்தமாக இருந்தது. 

இது மாதிரி நிறைய கடிதங்கள் வீட்டில் பொக்கிஷமாய் வைத்திருந்தேன். இப்போது படித்தாலும் வேடிக்கையாக இருக்கும். அதே நேரம் சில கடிதங்கள் வில்லங்கங்களையும், குழப்பங்களையும் உருவாக்கி விடும் என்ற ஆபத்தும் உள்ளது. 

அதேபோல இறப்பு செய்தி என்றால் தந்தியடிப்பார்கள், அல்லது ஆள் மூலமாக செய்து சொல்லி அனுப்புவார்கள். 

ஒரு திரைப்படத்தில் பாண்டியராஜன் மூலமாக சாவு செய்தியை சொல்லி அனுப்புவார்கள். அவர் நகரத்திற்கு போனவுடன் சாவு செய்தியை சொல்வதை விட்டுவிட்டு, சினிமா பார்க்க போய்விடுவார். இவர் எல்லா சினிமாக்களையும் பார்த்துவிட்டு வீடு வந்து சேரும் போது சவ அடக்கமே முடிந்திருக்கும். 

அதுபோல அப்போதெல்லாம் செய்தி சொல்லுகிறார் ஆள் வந்து முறையாக சொன்னால் தான் உண்டு.

அப்போது நாங்கள் சற்று வசதி குறைவாக இருந்ததால் மிக நெருங்கிய உறவினரின் சாவு செய்தியை தெரிவிக்காமல் விட்டு விட்டார்கள். எப்படியோ தகவல் சேர்ந்து தெரிந்து அடக்கம் முடிகிற நேரத்தில் போய் சேர்த்தோம். கேட்டால் ஆளாளுக்கு தந்தி அடித்தோம் என்று கதை விட்டார்கள்.

பல வருடங்களுக்கு முன்னால் எனது உறவினர் இறந்து விட்டதாக தந்தி வந்திருந்தது. அதே பேரில் இரண்டு பேர் இருந்தார்கள். யார் என்று தெரியவில்லை. இருவரும் மிக நெருங்கிய உறவினர்கள். நான் புதுக்கோட்டையில் இருந்து எனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களோடு போய் சேர்ந்தேன். அதில் ஒருவர் தனது தாயார் இறக்கவில்லை என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். நான் கேட்டேன் உன் அம்மா சாகவில்லை என்று சந்தோஷப்படுகிறாயா, அல்லது இன்னொரு உறவினர் இறந்து விட்டார் என்று சந்தோசப்படுகிறாயா?. 

ஏனென்றால் அந்த இன்னொரு உறவினர் இவருக்கு பிடிக்காதவர் அந்த சூழ்நிலையிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 

நல்ல வேலையாக பிற்காலத்தில் தொலைபேசி வந்து சேர்ந்தது. அலைபேசி வந்த பிறகுதான் ஓரளவுக்கு தகவல் தொடர்புகள் சீர் நிலைக்கு வந்துவிட்டன. இப்போது எல்லாம் இதனுடைய உச்ச நிலை கடிதம் என்பதே காணாமல் போய் எல்லோரும் அலைபேசியின் அடிமைகளாகிப் போனார்கள். 

நவீன காலத்தில் அலைபேசி வந்துவிட்டதால் மகன்கள் வெளியூர் போகும் போது உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ள லைவ் லொகேஷன் போடச் சொல்லி என் மனைவி வற்புறுத்துவார். 

*அட போங்கம்மா உங்களுக்கு வேற வேலை இல்லை "என்று சலித்துக் கொள்வார்கள் மகன்கள். 

தகவல் தொடர்புக்கு புறா விடு தூது, ஆள் மூலம் செய்தி என்பது எல்லாம் தாண்டி, மிக அருமையாக நல்ல உறவுகளை பராமரித்து வந்த கடிதம் எழுதும் பழக்கங்கள் காணாமலே போனது துரதிஷ்டவசமாக.... 

Friday, 17 January 2025

மரியாதை


நான் 18 வயதிலேயே அரசு பணியில் சேர்ந்து விட்டேன். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளிலிருந்து உடன் பணியாற்றுபவர்கள் வரை எல்லோருமே கம்பவுண்டர் ஐயா என்று தான் அழைப்பார்கள். கூச்சமாக இருக்கும். வயதில் சிறியவனாக இருக்கும் போது ஐயா என்று அழைத்தால் ஒரு மாதிரியாக சங்கடமாகத்தான் தெரியும்.

சில வருடங்களுக்கு பின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கெடுத்து வட்ட தலைவராக செயல்பட்டு கொண்டிருந்தேன். இருபத்தி மூன்று வயதேயான நிலையில் வயதுமுதிர்ந்த ஊழியர்கள் கூட தலைவரே என்று அழைக்கும் போது சற்று கர்வமாக இருந்தாலும், கூச்சமாகவும் இருந்தது.

 ஒரு நன்பர் மிகவும் மரியாதையாக பேசுவார். சார், தோழர் என்று தான் கூப்பிடுவார். சில வருடங்களுக்கு பிறகு அவரது சங்கத்தின் மாநிலபொறுப்பிற்கு வந்த பின் ஒருமையில் பேச ஆரம்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆனபின் என்னையா எப்படி இருக்கே என்று பேசலானார். இத்தனைக்கும் என்னைவிட வயது குறைந்தவரே... 

எனக்கு முப்பது வயதானபோது மாவட்ட ஆட்சியர் அவர்களது நிர்வாகத்தின் கீழ் அறிவொளி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய போது ஒரு அதிகாரி பாஸ் என்றே அழைப்பார். அறிவொளி இயக்கத்தில் இருந்து விடுபட்டபின் சார் என்றழைத்தார். இன்னும் சில வருடங்களுக்கு பின் என்னை பார்த்து என்னையா எங்கே வேலை பார்க்கிற என்று கேட்டார் 

பணி ஓய்வு பெறுவதற்கு சில காலம் இயக்குநரகத்தில் பணிபுரிய நேரிட்ட போது பல ஆரம்பசுகாதார நிலையங்களை பார்வையிட்டு விட்டு நோக்குநிலை  கூட்டங்கள் Orientation meetings நடத்தி பயிற்சி கொடுத்துவந்தேன். எல்லோரும் மிக மரியாதையுடன் நடந்து கொண்டனர். சில வருடங்களுக்குப் பின் தற்செயலாக இயக்குநரகம் சென்றேன். பணிக்காலத்தில் மிக மரியாதையுடன் நடந்து கொண்ட ஒருநன்பரை சந்திக்க நேரிட்டது. அவர் முதலில் கேட்ட கேள்வி"என்ன இந்த பக்கம்" 

ஆக மரியாதை என்பது செலுத்துகிறவருடைய நிலை, வளர்ச்சியைப் பொறுத்து மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அதேபோல பெறுகிறவருடைய நிலை, வளர்ச்சியை பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே நிலையாக இருப்பதில்லை. 

என்னை பொறுத்த அளவில் சிலர் ஆக ஓஹோ என்று செயல்பாடுகளை பாராட்டுவார்கள். அதை பற்றி நான் அலட்டிக் கொள்வதே இல்லை. அதேபோல செயல்பாடுகளை கண்ணா பின்னாவென்று விமர்சித்து திட்டவும் செய்திருக்கிறார்கள். அதற்காகவும் வருத்தப்படுவதில்லை. ஏனென்றால் பெரிய பாராட்டிற்கு முழுமையாக உரியவனும் நான் இல்லை. அதேபோல கேவலமான திட்டிற்கு பொருத்தமானவனும் நான் இல்லை. என்னுடைய செயல்பாடு என்பது எப்பொழுதும் சமூகத்திற்கு ஏதாவது பிரயோஜனம் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதை பொறுத்தே அமைந்திருந்தது. 




Tuesday, 14 January 2025


 

பென்னி குவிக்

 


பொதுவாகவே இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றுவது நம் தமிழக மண்ணின் மரபு,! 


அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே நாம் மதிப்பதில் தவறேதுமில்லை!.


ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுப் போன கையோடு, அவர்களின் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் அடிமைத்தனத்தின் சின்னமாகத்தான் நாடு பார்த்தது!. 


தமிழகத்தில் பல ஊர்களில் ஆங்கிலேயர் பெயரிலிருந்த தெருக்கள், சாலைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுவிட்டன!. 


ஆனால், நூறு ஆண்டுகள் கடந்த நிலையில்,ஒரு பிரிட்டிஷ்காரரின் பெயர் மட்டும் இன்னும் கிராமங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கும், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், சாலைகளுக்கும் வைக்கப்படுகிறதென்றால் அது #பென்னி_குவிக் தான்!


இனத்தால் ஆங்கிலேயர் என்றாலும் பிறப்பால் இந்தியர்தான் கர்னல் பென்னி குவிக்!. 


1841-ல் புனே நகரில் பிறந்த இவர்,இங்கிலாந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சென்னை மாகாண சட்டசபை கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார்!. 


இந்தியாவின் பல பகுதிகளில் உருவான நீர்ப்பாசனத் திட்டங்களில் இவர் பங்கு பெரியது.!


ஆனால் இவரே திட்டம் தீட்டி, முன்னின்று செயல்படுத்தியது முல்லைப் பெரியாறு அணை. இவர் இந்த அணைக்கு சொந்தக்காரர் என்று கூட சொல்லலாம்!.


இந்த அணை உருவாவதற்கு முன்பு,தென் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களான மதுரை,ராமநாதபுரத்தில் தலைவிரித்தாடி பஞ்சம், பசியால் துடித்து இறந்த உயிர்கள் ஏராளம் என்பதை, பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்கால அரசிதழ்களில் பதிவு செய்துள்ளனர்!.


அன்றைக்கு தென்மாவட்டங்களுக்கு பெரிய நதி என்றால் வைகைதான். ஆனால் வைகை பல முறை பொய்த்துப் போய் மக்களை பெரும் துயத்தில் தள்ளிவிட்டது!. 


அப்போதுதான் மேற்கு தொடர்ச்சி மலையில், நம் தமிழகப் பகுதிக்குள் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற பெயரில் 56 கிமீ தூரம் தமிழகத்தில் ஆறாகப் பாய்ந்து, கேரளாவுக்குள் நுழைந்து முல்லையாற்றுடன் கலந்து அரபிக் கடலில் வீணாகச் சென்று கலந்தது.!


இந்த ஆற்றை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் என்பதை ஒரு ஆய்வு மூலம் தெரிந்து கொண்டவர், பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார்!. 


இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு, பெரியாறு-முல்லையாறுகள் கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார்.!


அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன!. 


ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர்.!


காடு,விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.! 


இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலகட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுவிக் அவர்கள் இங்கிலாந்து சென்றார்!. 


தனது நாட்டில் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றார். வீட்டில் இருந்த கட்டிலைக் கூட அவர் விடவில்லை, அதையும் விற்றார். தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு பெரும்பணக்காரர்களிடம் கையேந்தி நிதி சேகரித்தார்!. 


தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பூமியில், தனக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களாக இருந்தாலும், மக்கள் வறட்சியில் வாடக் கூடாது, அவர்கள் தண்ணீரின்றி தவிக்கக் கூடாது,காய்ந்து கருகிப் போன தென் தமிழக வயல்களெல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இப்படி மெனக்கெட்டார் பென்னிகுவிக்!. 


முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார்!.




இப்படி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாக காட்சிதரும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவரை தெய்வமாக வணங்குவதில் தவறேது!.


தென் தமிழக மக்களின் வாடிய வயிறுகளையும், சுருண்டு விழுந்து அவர்கள் செத்த பரிதாபத்தையும், கருகிப் போன வயல்களையும் பார்த்து வேதனைப்பட்டு, இந்த அணையை தனது உழைப்பையும், சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுவிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். அவரது படங்களை வைத்து தென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் வணங்கி வருகின்றனர்.!



அணை கட்டி முடிக்கப்பட்டவுடன் தனது மனைவியோடு அங்கு சென்று பொங்கிப் பெருகி அணை வழியாக ஓடி வந்த தண்ணீரைப் பார்த்து பென்னிகுவிக் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று செய்திகள் கூறுகின்றன!.


ஒரே ஒரு அரசு அதிகாரி, அதிகபட்ச நேர்மை,மக்கள் மீது கரிசனம் கொண்டு செயல்பட்டால்கூட எவ்வளவு பெரிய நன்மை விளையும் என்பதற்கு பென்னி குவிக் பெரிய உதாரணம்!


 தேனி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் சில கிராமங்களில் இன்றும் கூட தங்களது வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னிகுவிக் என்று பெயர் சூட்டுவது பாரம்பரியமாக தொடர்கிறது.தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின்போது பென்னிகுவிக்குக்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.!


அவரின் பிறந்தநாள் இன்று! 


#வயல்_உள்ளவரை_வாழும்_அவர்_திருப்பெயர்.


பொன். ஆன. வேல்முருகன் .....


நன்றி முகநூல் பதிவு

Monday, 13 January 2025

போகி பண்டிகை

 போகி பண்டிகை 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கான பண்டிகையே போகி. அப்படி என்றால் என்ன அர்த்தம்?. சென்ற ஆண்டின் கடைசி நாளான மார்கழி கடைசி நாள். தேவையற்ற பழைய குப்பைகளை நீக்கி கொளுத்தி விட்டு, புதியனவோடு தை திங்களின் துவக்க நாளான புதிய தமிழ்ப்புத்தாண்டின் துவக்கத்தை குறித்தது ஆகும்.

கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாளாக போகிப்பண்டிகையை கொண்டாடுகிறோம். 

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

ஆனால் நாமோ

வீட்டில் உள்ள

பழையன. நீக்கி 

ஊரை அசுத்தமாக்கி 

புதியன புகுத்திடும் 

புதுமை பண்டிகையாக 

அல்லவா 

கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 






Sunday, 12 January 2025

கொடும்பாளூர்


ஒரு காலத்தில் வேளீர் குல மன்னர்களின் தலைநகராக இருந்த கொடும்பாளூர் இன்று ஒரு சிற்றூராக உள்ளது. 2000 ஆண்டுகளாக எந்த பெயர் மாற்றமும் இல்லாமல் அப்படியே அதே பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு நடந்து வந்த போது கொடும்பாளூர் வழியாக சென்றதாக கதை உள்ளது. ராஜராஜ சோழனின் மனைவியான வானதி தேவி கொடும்பாலூர் வேளிர் குல இளவரசி ஆவாள். 


 

தைப்புத்தாண்டே நம் புத்தாண்டு.....

 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

அறிவியலின் பாற்பட்டு

உழவரும் தமிழரும் 

கொண்டாடியதே

தைப்புத்தாண்டு...


ஆரியம் வந்து 

ஆண்ட மன்னர்

துணையோடு

ஆன்மீகம் பெயரால்

வந்ததே சித்திரை புத்தாண்டு....


ஆணுக்கும் ஆணுக்கும்

பிறந்ததாம்

அறுபது ஆண்டுகள்

அத்தனையும்

ஆரியத்தின் பெயரால்....


ஆங்கிலேயர் வந்ததும்

அவர்பின்னே

ஓடி அனைவரும்

ஆடிமகிழ்ந்ததாம்

ஆங்கில புத்தாண்டு....


தமிழாய்ந்த அறிஞர்

பலர்கூடி அறிவித்தார்

தமிழ் புத்தாண்டு

தைப்புத்தாண்டே

நம் புத்தாண்டு.....


எத்தனையோ ஆண்டு

பொறுத்துருந்த

தமிழ்மக்கள் மகிழ

கலைஞர் அறிவித்தார்

தைப்புத்தண்டினையே....


மீண்டும் மீண்டும்

தடுத்தாலும்

தமிழும் தமிழரும் வாழும் மட்டும்

தைப்புத்தாண்டே

நம் புத்தாண்டு....... 


Saturday, 11 January 2025

கங்கை கொண்ட சோழபுரம்

 சில வருடங்களுக்கு முன் நான் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற போது என் அலைபேசியில் பதிவு செய்த படம்




Friday, 10 January 2025

பொங்கல் வருது

 பொங்கல் என்றாலே தமிழர்களின் விருப்பத்திற்குரிய மிகப்பெரிய பண்டிகையாகும். மற்ற எந்த திருவிழாக்களும், பண்டிகைகளும் ஓரிரு நாளில் முடிந்துவிடும். ஆனால் பொங்கல்  மட்டுமே நான்கு நாட்களுக்கு மேல் எல்லோரும் கொண்டாடும் சமுதாய பண்டிகை ஆகும். இதில் நான் உங்களுடைய பெருமைகளை பற்றி இதில் அதிகம் கூறப்போவதில்லை. ஆனால் சிறுவயதில் பொங்கல் என்றாலே நாங்கள் அனுபவித்த சந்தோசங்களையும் அனுபவங்களையும் நினைவு படுத்திக் கொள்ளவிரும்புகிறேன்.

பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கலை வரவேற்க மக்கள் தயாராகி விடுவார்கள். வருடா வருடம் வீடுகளுக்கு வெள்ளையடிக்கின்ற வேலை நடைபெறும்.சுண்ணாம்பு சுட்ட சுண்ணாம்பு கல்லை பெரிய தொட்டியில் இட்டு தண்ணீர் விட்டு நீர்க்கரைசலாக்குவார்கள். சுண்ணாம்புக்கல் தண்ணீரில் போட்ட உடனே சலசலவென்று கொதிக்க ஆரம்பித்து விடும். பிள்ளைகள் எல்லாம் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பார்கள்.தென்னை மட்டையை நன்றாக தட்டி பிரஷ் போல தயார் செய்து வெள்ளை அடிக்க பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்போதும் சரி, அசுப காரியங்கள், தீட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வார்கள். இது தவிர வருடா வருடம் பொங்கலுக்கு அனைத்து வீடுகளிலுமே வெள்ளை அடிக்கப்படும்். இதனால் வீட்டில் உள்ள நோய்க்கிருமிகள், மூட்டை பூச்சி போன்ற மக்களுக்கு கெடுதல் செய்யக்கூடிய உயிரினங்கள் அழிக்கப்பட்டு வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். நவீன காலங்களில் பெயிண்ட் போன்றவை வந்த பிறகு வருடா வருடம் வெள்ளையடிக்கின்ற பழக்கங்கள் மறைந்து போயிருந்தன. 

மூட்டை பூச்சி போன்ற பூச்சி வகைகள் தற்பொழுது காணாமலே போய்விட்டு. இப்பொழுது இருக்கக்கூடிய தலைமுறைக்கு மூட்டை பூச்சி பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் உள்ள அனைத்து துணிமணிகள் பாய்கள் போன்றவை எல்லாம் தண்ணீரில் நனைத்து காயவைத்து வைக்கப்படும். 

வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சுத்தம் செய்யப்பட்டு, தேவையற்ற பொருள்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும்.  தேவையற்ற பொருட்களை தீயிலிட்டு அழிக்கின்ற பழக்கம் இருந்தது. பெரும்பகுதி போகி பண்டிகை என்று தேவையற்ற பொருள்கள் தீயிட்டு அழிக்கப்படும்.

வீடுகளில் சாமி படங்கள், புகைப்படங்கள் பிரேமிட்டு சுவற்றில் அடித்திருப்பார்கள். பொங்கல் வந்துவிட்டால் வீட்டை சுத்தம் செய்யும் போது, புகைப்படங்களை எடுத்து சுத்தம் செய்வார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டில் பழனி அண்ணன் இது ஒரு பெரிய வேலை போல செய்வார். புகைப்படங்களை எடுத்து தண்ணீரை லேசாக ஸ்ப்ரே செய்வது போல செய்து, திருநீறு அடித்து நல்ல துணி கொண்டு அழகாக சுத்தம் செய்வார். புகைப்பட கண்ணாடி மீது இருந்த அழுக்குகள் போய் ஃபிரேம்கள் பளிச்சிட புகைப்படங்கள் அழகாய் இருக்கும். நானும் அதிக பிரசிங்கித்தனமாய் போட்டோக்களை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரிலே தண்ணீரை கொஞ்சம் கூடுதலாக தெளித்து அது மூலையிலே தண்ணீர் உள்ளே போய், புகைப்பட அட்டை கறைப்பட்டு அம்மாவிடம் நன்றாக திட்டு வாங்கி இருக்கிறேன். 

கிராமங்களில்  இன்னும் வேடிக்கையாக நடைபெறும் வீட்டை சுற்றி மெழுகி, சாணமிட்டு,  சுண்ணாம்பு, செம்மண் பட்டைகள் சுவற்றில் அடிக்கப்படும். கிராமங்களில் தீபாவளிக்கு துணி எடுக்கிறார்களோ இல்லையோ பொங்கலுக்கு நிச்சயமாக புது துணி எடுப்பார்கள். இது எல்லாம் பொங்கலுக்கு முந்தைய செயல்பாடுகள், ஏற்பாடுகள் எனலாம். 

எங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் தற்போதைய காலங்களில்  பொங்கலுக்கு முந்தைய ஏற்பாடுகள் எல்லாம் காணாமலே போய்விட்டன.. 



 

Thursday, 9 January 2025

செஞ்சிக்கோட்டை


 

படித்ததில் பிடித்தது.


 எப்படி சொல்வது தன் மகளிடம் ..?” 

– தவித்தார் அந்த தந்தை .


அவர் பெயர் அஜய் முனாட் . 

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .


அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் . 

தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது . 

கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.

.

இப்போது அந்த திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம் 

...இல்லையில்லை ... 

மிகப் பெரிய மாற்றத்தை செய்யலாமா என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார் அஜய் . 

ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே ... முக்கியமாக மகள் ஸ்ரேயா ..? 

அவள் சம்மதிக்க வேண்டுமே ..?

.

சரி ...சிந்தித்துக் கொண்டே இருந்தால் செயல்படுத்துவது எப்படி ?


ஒருநாள் ... குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்தார் அஜய் . 

மகள் ஸ்ரேயாவும் அங்கிருந்தாள் .


அஜய் தன் மனதில் இருந்த ஸ்ரேயாவின் கல்யாணம் பற்றிய திட்டத்தை, மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .


சொல்லும்போதே மகள் ஸ்ரேயாவின் முகத்தை உற்றுக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் . 

அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை . ஒருவழியாக சொல்லி முடித்து விட்டார் .


அவர் சொன்னதைக் கேட்டு விட்டு , அந்தக் குடும்பமே அமைதியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தது.

.

அஜய் முனாட் மெதுவாக தன் மகள் ஸ்ரேயா அருகே சென்று கேட்டார் : 

“ நான் ஏதாவது தப்பாக திட்டம் போட்டு விட்டேனா ? அப்படி இருந்தால் என்னை மன்னித்து விடு அம்மா ..”


அப்பா இப்படி சொல்லவும் , திடுக்கிட்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரேயா .

அப்பாவின் கண்களில் கண்ணீர் ..! அதைப் பார்த்த மகள் ஸ்ரேயாவின் கண்களிலும் கண்ணீர் .. “அப்பா ... உண்மையை சொல்லட்டுமா ?”


அஜய் தன் மகள் என்ன சொல்லப் போகிறாள் என படபடப்போடு பார்த்திருந்தார் .


ஸ்ரேயா சொன்னாள் : “ உண்மையை சொல்லப் போனால் ... எனக்கு இப்போது சந்தோஷத்தில் ... வார்த்தைகள் எதுவும் வரவில்லை அப்பா ... ஆனால் ...என்னைப் போல் ஒரு புண்ணியம் செய்த மகள் , இந்த உலகத்தில் எவருமே இருக்க முடியாது . எப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மனிதரை அப்பாவாக நான் அடைந்து இருக்கிறேன் ..”

.

ஸ்ரேயா பேச பேச ... அவளது தந்தை அஜய் அதை நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் : “நிஜமாகவா சொல்கிறாய் ஸ்ரேயா ?”

ஆனந்தக் கண்ணீருடன் “ஆம்” என தலையசைத்தாள் ஸ்ரேயா .

.

அப்பறம் என்ன..?

அஜய் முனாட்டின் மகள் ஸ்ரேயா திருமணம் சந்தோஷமாக நடைபெற்றது .

.

அஜய் முனாட்டின் திட்டப்படி ஆடம்பர செலவுகள் எதுவும் இல்லாத திருமணம் .


கல்யாண செலவுகளுக்காக அஜய் முனாட் ஒதுக்கி வைத்திருந்த அந்த ஒரு கோடி ரூபாயில் ... 

90 வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன . 

.

யாருக்காக அந்த வீடுகள்..?

தங்குவதற்கு இடம் இல்லாமல் பிளாட்பார்மில் குடியிருந்த 90 குடும்பங்களுக்கு ..!

.

ஆம் .. அஜய் முனாட் தன் வீட்டிலிருந்து அலுவலகம் போகும் வழியில் , தங்குவதற்கு வீடு இல்லாமல் பிளாட்பார்மில் பரிதவிப்போடு வாழ்ந்து கொண்டிருந்த பல குடும்பங்களை தினம்தோறும் பார்த்து வந்திருக்கிறார் . இது அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது .


அவர்களிலிருந்து 90 குடும்பங்களை தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு தன் மகள் ஸ்ரேயா கரங்களால் , கல்யாண மேடையிலேயே அந்த வீடுகளை பரிசாக வழங்கினார் அஜய் முனாட் .

.

அந்த 90 குடும்பங்களும் இன்று மிகவும் சந்தோஷமாக சொல்கிறார்கள் : “எல்லா கல்யாணங்களிலும் மாப்பிள்ளைக்கும் , பெண்ணுக்கும்தான் மற்றவர்கள் கல்யாணப் பரிசு கொடுப்பார்கள் . ஆனால் இந்தக் கல்யாணத்தில் இந்த மணப்பெண் எங்களுக்கு கல்யாணப்பரிசு கொடுத்திருக்கிறாள் . இதை எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் மறக்க மாட்டோம் ..! அந்தப் பெண் ஸ்ரேயா தன் கணவனோடு பல்லாண்டு நலமாக வாழ ஒவ்வொரு நாளும் நாங்கள் வாழ்த்துவோம். 


.ஒரு நாள் கூத்து திருமணத்திற்கு பல லட்சம் (முகத்துக்கே மேக்கப்போட பல ஆயிரங்கள்)

ஆடம்பர செலவு செய்பவர்கள் மத்தியில்

90 பேர் வாழ்க்கையில் அடிப்படை தேவையை நிறைவேற்றியவ இந்த மனிதாபிமானம் மிக்க குடும்பத்துக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்...



நன்றி முகநூல் பதிவு. 

Tuesday, 7 January 2025

சரித்திரம் தேர்ச்சி கொள்.

 

எனது நண்பன் ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பாரதியின் "சரித்திரம் தேர்ச்சி கொள்" என்ற வாசகத்தை படித்துவிட்டு தமிழய்யாவிடம் "ஐயா, சரித்திரத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதுமா" என்று கேட்டுவிட்டான். தமிழய்யாவுக்கு கோபம் வந்துவிட்டது.

"அட தரித்திரமே, அது சரித்திரத்தில் தேர்ச்சி கொள்ளல்ல. சரித்திரம் தேர்ச்சி கொள், என்று தான் சொல்லியிருக்கிறார். அதாவது எந்த ஒரு மனிதனும் தனது குடும்பத்தின் சரித்திரத்தை தெரிந்து கொண்டால் முன்னுக்கு வருவான். அதே போல எந்த ஒரு சமூகமும் தனது சமூகத்தின்  சரித்திரத்தை தெரிந்து கொள்ளாவிட்டால் அது அழிவை நோக்கி சென்றுவிடும். எனவே ஒவ்வொரு மனிதனும், சமூகமும், நாடும் தனது சரித்திரத்தில் தேர்ச்சி கொண்டு முன்னுக்கு வர வேண்டும்" என்று அர்த்தம் என்றார்.

அது என்னமோ தெரியவில்லை படிக்கும்போது சரித்திரம், பூகோளம் என்று ஒரு வகுப்பு உண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சரித்திரம் பூகோளத்திற்கு கொடுப்பதில்லை. அதனால் தான் அதனுடைய முக்கியத்துவம் கருதி முன்பு சரித்திரம் பூகோளம் என்று இருந்ததை, இப்பொழுது சமூக அறிவியல் என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். ஆனால் மற்ற பிரிவு ஆசிரியர்களை பற்றி நினைவு கொள்ளும் அளவிற்கு சரித்திர ஆசிரியர்களை நினைவுபடுத்தும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் எங்கள் பள்ளியில் சரித்திர ஆசிரியர்களிடம் பெற்ற சில அனுபவங்களை இங்கு கூறுகிறேன்.

எங்களுக்கு "ஜி" என்று ஒரு வரலாற்று ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் ராம்நாத் என்று ஞாபகம். "ஜி" "ஜி" என்று சொல்லி பழகி விட்டதால், அவருடைய இயற்பெயர் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அவர் தனியாக ஹிந்தி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அதனால் அவரை "ஜி" என்று அழைப்பார்கள். எங்கள் பள்ளியிலும் அப்படியே அழைத்து பழகிவிட்டோம். அவர் மிகவும் அமைதியாக இருப்பார் பேசுவது கூட அமைதியாக தான் இருக்கும் கோபம் வந்தால் மாணவர்களை அடிக்க மாட்டார் காதை பிடித்து அக்குபஞ்சர் சிகிச்சை செய்வார். அதாவது கிள்ளுவார். காது மாட்டிக்கொண்டால் ஓட்டை விழும் வரை விட மாட்டார். அந்த அளவுக்கு கிள்ளி கொண்டிருப்பார் . அவரிடம் அக்குபஞ்சர் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் யாரும் மாட்டிக் கொள்ளமாட்டோம்.

அவர் பாடம் நடத்தும் விதமே மிகவும் அலாதியானது. பாதி கண்களை மூடியவாறு வரலாற்று பாடம் சொல்லிக் கொண்டே வருவார். நாம் நோட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். அப்படியே கோசாம்பி நோட்ஸில் இருப்பதை போலவே இருக்கும். அப்படியே மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி விடலாம். வகுப்பு எல்லாம் நடத்த மாட்டார். கிட்டத்தட்ட நோட்ஸ் ஒப்பித்துக் கொண்டுதான் இருப்பார். எப்பேர்பட்ட விழிப்புணர்வு கொண்ட மாணவனாக இருந்தாலும், அவர் வகுப்பில் தூக்கம் வந்துவிடும். தாய் குழந்தைக்கு தாலாட்டுவது போல கிட்டத்தட்ட ராகம் போலவே அந்த பாடம் இருக்கும். பரிட்சையில் அவர் சொன்னதை தாண்டி எழுதினால் அக்குபஞ்சர் வைத்தியம் தான்... 

இன்னொரு சரித்திர ஆசிரியர் "சியான் சார்" . அவரது பெயர் கோபால். பள்ளியில் மாணவர்கள் வைத்த பெயர் சியான். அந்த சியான் என்ற பெயரை கேட்டாலே கோபால் சார் சிம்மமாக மாறிவிடுவார். ஆனாலும் மாணவர்கள் சியான் என்று தான் சொல்லுவார்கள். 

இப்பொழுது நடிகர் விக்ரம் சியான் என்ற பட்டத்தை தான் போட்டுக் கொள்கிறார். அவரது ரசிகர்கள் சியான் என்று சொல்வதை பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் என்னமோ எங்கள் கோபால் சாருக்கு சியான் என்றால் கெட்ட கோபம் வந்துவிடும். அது ஏன் என்று புரியவில்லை. அந்தப் பெயர் எப்படி வந்தது என்றும் புரியவில்லை. அவருக்கு ஏன் கோபம் வருகிறது என்றும் புரியவில்லை.

அவருக்கு எப்போது கோபம் வரும் என்று தெரியாது. எப்போது சிரித்து சாதாரணமாக பேசுவார் என்றும் புரியாது. வேடிக்கையான மனிதர். ஆனால் மிகவும் சுவாரசியமானவர். அவர் வகுப்பிற்கு வந்தவுடன் சாக்பீஸ் எடுத்து எந்த பகுதியை பற்றி பாடம் நடத்தப் போகிறாரோ, அதை அப்படியே மனப்பாடமாக வரைபடம் வரைந்து விடுவார். உதாரணமாக குப்த பேரரசு என்று ஆரம்பித்தால், இந்தியாவினுடைய அந்தப் பரந்த வரைபடத்தை வரைந்து விசாலமாக பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

 எந்த சந்தேகம் கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்வார். ஆனால் கோபம் வந்து விட்டாலோ, கண் மண் தெரியாமல் அடி கொடுப்பாள். வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்றாலும் அடிதான் விழும். என்ன, ஏதென்றெல்லாம் கேட்க மாட்டார். 

ஒருமுறை என் நண்பன் செல்வம் பாடம் எழுதி வரவில்லை. இன்னொரு நண்பன் நமசிவாயம் மிக நன்றாக படிப்பார். அவர் வீட்டு படம் எழுதி வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் செல்வம் எழுதி வரவில்லை என்று சொல்லிவிட்டு நமசிவாயம் எழுதிய நோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். நமசிவாயம் செல்வத்தின் எழுதாத நோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று கோபால் சார் வகுப்பிற்கு வந்து விட்டார். 

வந்தவர் எல்லாரையும் பாடம் எழுதி விட்டீர்களா என்று கேட்டவர், முதலில் செல்வத்தின் கையில் இருந்த நோட்டை வாங்கி பார்த்து வெரி குட் என்று சொல்லிவிட்டு, நமசிவாயம் கையில் இருந்து நோட்டை வாங்கி பார்த்தார். பாடம் எழுதவில்லை என்றவுடன் நமசிவாயத்தை போட்டு வெளுத்து விட்டார். நமசிவாயம் மிகவும் அமைதியானவர். அவர் இது என்னுடைய நோட்டு இல்லை, செல்வத்தின் நோட்டு என்று கூட சொல்ல வாய் வரவில்லை. பொலபொலவென்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். இவர் ஏனென்று கூட கேட்காமல் அடி கொடுத்துவிட்டு அடுத்த மாணவனிடம் போய்விட்டார்.

இந்திய முதல் சுதந்திர போரான சிப்பாய் கலகத்தின் போது அதை அடக்க ஆங்கில அரசு மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது. லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டன. இந்தப் போரின் போது மிகவும் கொடூரமாக நடந்து கொண்டு, இறுதியில் கருணையோடு நடந்து கொள்வதைப் போல தன்னை காட்டிக் கொண்டான் ஆங்கில அரச பிரதிநிதி கானிங் பிரபு. அவரது நண்பர்கள் அவரை கேலியாக "காருன்யமிக்க கானிங்"என்று அழைத்தனர்.ஆனால் பிற்காலத்தில் வரலாற்றில் இந்தியர்களிடம் மிகவும் கருணையாக நடந்து கொண்டதால் காருண்யம் மிக்க கானிங் என்றழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது. 

ஒரு முறை தேர்வின் போது இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நான் முதலில் கூறிய வரலாற்றை எழுதியிருந்தேன். எனக்கு மதிப்பெண் அளிக்கப்படவில்லை. உடனே விடைத்தாளை எடுத்துச் சென்று சரித்திர ஆசிரியரிடம் முறையிட்டேன். அதற்கு கோபால் சார் தட்டிக் கொடுத்து நீ எழுதியது உண்மை ஆனால் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதற்குத்தான் மதிப்பெண் கிடைக்கும். எழுதப்பட்டிருப்பதெல்லாம் உண்மை வரலாறு என்று ஆகி விடாது. உண்மை என்ன என்பதை ஆய்வு செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் மதிப்பெண் வேண்டுமென்றால் புத்தகத்தில் உள்ளபடியே தான் எழுத வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். 

இவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நைசாக அவர் டெல்லி சென்று வந்ததை பற்றியும், துருப்பிடிக்காத இரும்பு தூண் பற்றியும் ஏதாவது கேள்வி கேட்டால் அப்படியே அதைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். வந்த விசயத்தை மறந்து விடுவார். நாங்கள் பள்ளிப்படிப்பு முடித்த சில வருடங்களில் அவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிவிட்டார் என்று கேள்விப்பட்டோம். எங்கள் நல்ல நேரம் நாங்கள் தப்பித்து விட்டோம். 

பல வருடங்கள் கழித்து நான் புதுடெல்லியில் வேலை பார்க்கின்ற காலத்தில் பல முறை குதுப்மினார் போன்ற வரலாற்று சான்றிடங்களுக்கு சென்று வருவேன். அப்போதெல்லாம் அந்த துருப்பிடிக்காத இரும்பு தூண் அருகில் வந்து நிற்கும்போது கோபால் சார் தான் ஞாபகத்துக்கு வருவார்...??

Sunday, 5 January 2025

மீன் வேட்டை


ஒருமுறை ராமநாதபுரம் சென்றிருந்தபோது அருகே கடற்கரையை பார்க்க சென்றிருந்தேன். அங்கு ஒரு 50, 60 பேர் சேர்ந்து கடலில் இருந்து வலையை இழுத்துக் கொண்டிருந்தனர். விசாரித்த போது முதல் நாளே கடலில் வலையை போட்டுவிட்டு வந்து விடுவார்கள். மறுநாள் வலையின் இரு புறமாக ஆட்கள் இருந்து இழுத்துக்கொண்டே வருவார்கள். கடைசியாக வலையில் சிக்கி இருக்கக்கூடிய மீன்களை அள்ளுவார்கள். நான் சென்றிருந்தபோது வலையில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் பெரும்பகுதி மீன்கள் தப்பி சென்று விட்டன. பாவம் குறைவான அளவு தான் அவர்களுக்கு கிடைத்தது. வந்த மீன்களை விட இழுக்கின்ற ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி அதிகம் என்று புலம்பினார்கள். கஷ்டமாக இருந்தது... 


 

Friday, 3 January 2025

வேண்டும் சமாதானம்


 போர் எல்லா காலத்திலும் பைத்தியக்காரத்தனங்களும், பயங்கரங்களும் நிறைந்த, மனிதகுலம் வெறுத்து ஒதுக்க வேண்டிய விஷயம். 

Thursday, 2 January 2025

போடிமெட்டு


 சில வருடங்களுக்கு முன் நான் போடிமெட்டு சென்றபோது எனது அலைபேசியில் எடுத்த வீடியோ தொகுப்பு... 

படித்ததுபிடித்தது

 #மகள்

படித்ததுபிடித்தது

`*"எழுதியவர் யார் என்று தெரியவில்லை  

     ஆனால்


*படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"*


*********


வாழைத்

தோட்டத்திற்குள்

வந்து முளைத்த...


காட்டுமரம் நான்..!


எல்லா மரங்களும்

எதாவது...

ஒரு கனி கொடுக்க ,


எதுக்கும் உதவாத...

முள்ளு மரம் நான்...!


தாயும் நல்லவள்...

தகப்பனும் நல்லவன்...


தறிகெட்டு போனதென்னவோ

நான்...


படிப்பு வரவில்லை...

படித்தாலும் ஏறவில்லை...


இங்கிலீஷ் டீச்சரின்

இடுப்பைப் பார்க்க...


இரண்டு மைல் நடந்து

பள்ளிக்கு போவேன் .


பிஞ்சிலே பழுத்ததே..

எல்லாம் தலையெழுத்தென்று

எட்டி மிதிப்பான் அப்பன்...


பத்து வயதில் திருட்டு...

பனிரெண்டில் பீடி...


பதிமூன்றில் சாராயம்...

பதினாலில் பலான படம்...


பதினைந்தில்

ஒண்டி வீட்டுக்காரி...

பதினெட்டில் அடிதடி...


இருபதுக்குள் எத்தனையோ...

பெண்களிடம் விளையாட்டு...


இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...


எட்டாவது பெயிலுக்கு...

ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?


மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...

நூறு தருவார்கள .


வாங்கும் பணத்துக்கு...

குடியும் கூத்தியாரும் என...


எவன் சொல்லியும் திருந்தாமல்...

எச்சிப் பிழைப்பு பிழைக்க ...


கை மீறிப்

போனதென்று...

கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .


வேசிக்கு காசு

வேணும் ...


வருபவள் ஓசிதானே...


மூக்குமுட்டத் தின்னவும்...

முந்தானை விரிக்கவும்...

மூன்று பவுனுடன் ...


விவரம் தெரியாத ஒருத்தி...

விளக்கேற்ற வீடு வந்தாள் .


வயிற்றில் பசித்தாலும்...

வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...

வக்கணையாய் பறிமாறினாள்...


தின்னு கொழுத்தேனே தவிர...

மருந்துக்கும் திருந்தவில்லை...


மூன்று பவுன் போட

முட்டாப் பயலா நான்...


இன்னும் ஐந்து வேண்டுமென்று ,

இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...


கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,


நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,

சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...


மாமனாரான மாமன்...!


பார்த்து வாரமானதால்...

பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,


தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...

சிறுக்கிமவ .


இருக்கும் சனி...

போதாதென்று

இன்னொரு சனியா..?


மசக்கை என்று சொல்லி...

மணிக்கொரு முறை வாந்தி..,


வயிற்றைக் காரணம் காட்டி...

வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,


சாராயத்தின் வீரியத்தால்...

சண்டையிட்டு வெளியே அனுப்ப..,


தெருவில் பார்த்தவரெல்லாம்

சாபம் விட்டுப்

போவார்கள் .


கடைசி மூன்று மாதம்...


அப்பன் வீட்டுக்கு

அவள் போக..,

கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...


வாசனையாய் வந்து போனாள்..,


தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...

தகவல் சொல்லியனுப்ப..,


ரெண்டு நாள் கழித்து...

கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...


கருகருவென

என் நிறத்தில்...


பொட்டபுள்ள..!


எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?


'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...

கழுத்தை திருப்புவாயோ...

ஒத்தையாக வருவதானால் ...

ஒரு வாரத்தில்

வந்து விடு '


என்று சொல்லி திரும்பினேன் .


ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...


அரசாங்க மானியம்

ஐயாயிரம்...

கிடைக்குமென்று


கையெழுத்துக்காகப்

பார்க்கப் போனேன் ,


கூலி வேலைக்குப் போனவளைக்

கூட்டி வரவேண்டி...


பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...


ஆடி நின்ற ஊஞ்சலில்...

அழுகுரல் கேட்டது..,


சகிக்க முடியாமல்

எழுந்து ...

தூக்கினேன் ...


அதே அந்த பெண்

குழந்தை..!


அடையாளம் தெரியவில்லை ...

ஆனால் அதே கருப்பு...


கள்ளிப் பாலில்

தப்பித்து வந்த அது ,

என் கைகளில் சிக்கிக் கொண்டது..,


வந்த கோபத்திற்கு...

வீசியெறியவே தோன்றியது...


தூக்கிய நொடிமுதல்...

சிரித்துக் கொண்டே இருந்தது,


என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,


என்னைப் போலவே

சப்பை மூக்கு,


என்னைப் போலவே

ஆணாகப்..,

பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க

வேண்டியதில்லை...,


பல்லில்லா வாயில்...

பெருவிரலைத் தின்கிறது,


கண்களை மட்டும்..,

ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,


ஒரு கணம் விரல் எடுத்தால்...

உதைத்துக் கொண்டு அழுகிறது,


எட்டி... விரல் பிடித்துத்..

தொண்டை வரை வைக்கிறது,


தூரத்தில்

அவள் வருவது கண்டு...

தூரமாய் வைத்து விட்டேன்...


கையெழுத்து வாங்கிக்கொண்டு...

கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,


முன் சீட்டில் இருந்த குழந்தை...


மூக்கை எட்டிப் பிடிக்க

நெருங்கியும்...

விலகியும் நெடுநேரம்...


விளையாடிக் கொண்டு இருந்தேன்!


ஏனோ அன்றிரவு ...

தூக்கம் நெருங்கவில்லை,


கனவுகூட

கருப்பாய் இருந்தது,


வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...


போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...

என்ற பொய்த்தனத்தோடு ,


இன்னொரு கையெழுத்துக்கு...

மீண்டும் சென்றேன்,


அதே கருப்பு,

அதே சிரிப்பு,


கண்ணில் மச்சம்,

சப்பை மூக்கு...


பல்லில்லா வாயில்

பெருவிரல் தீனி...


ஒன்று மட்டும் புதிதாய் ...


எனக்கும் கூட

சிரிக்க வருகிறது ...


கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...

எந்த குழந்தையும் இல்லை .


வீடு நோக்கி நடந்தேன்,


பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...


கைப் பிடித்தாள்

உதறிவிட்டு நடந்தேன்...


தூக்கம் இல்லை

நெடுநேரம்...


பெருவிரல்

ஈரம் பட்டதால் ...

மென்மையாக

இருந்தது ...


முகர்ந்து பார்த்தேன் ....


விடிந்தும் விடியாததுமாய்...

காய்ச்சல் என்று சொல்லி...


ஊருக்கு

வரச் சொன்னேன்,


பல்கூட விளக்காமல் ...

பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,


பஸ் வந்ததும் லக்கேஜை

காரணம் காட்டி...

குழந்தையைக் கொடு என்றேன் !


பல்லில்லா வாயில் பெருவிரல் !


இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ

சென்று கொண்டு இருந்தது...


தினமும் என் மீது படுத்துக்கொண்டு...

பொக்கை வாயில் கடிப்பாள்,


அழுக்கிலிருந்து

அவளைக் காப்பாற்ற...


நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,


பான்பராக் வாசனைக்கு...

மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...


சிகரெட் ஒரு முறை..,

சுட்டு விட்டது

விட்டு விட்டேன்...


சாராய வாசனைக்கு...

வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,


ஒரு வயதானது ...


உறவுகளெல்லாம்...

கூடி நின்று ,


'அத்தை சொல்லு '

'மாமா சொல்லு '

'பாட்டி சொல்லு '

'அம்மா சொல்லு 'என்று...


சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...


எனக்கும் ஆசையாக இருந்தது,

'அப்பா 'சொல்லு

என்று சொல்ல,


முடியவில்லை ......

ஏதோ என்னைத் தடுத்தது,


ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...


அவள் சொன்ன முதல் வார்த்தையே...


'அப்பா'தான்!


அவளுக்காக எல்லாவற்றையும்...

விட்ட எனக்கு ,


அப்பா என்ற

அந்த வார்த்தைக்காக...


உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,


அவள் வாயில் இருந்து வந்த..,


அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,


இந்த சாக்கடையை...

அன்பாலேயே கழுவினாள்...


அம்மா சொல்லித் திருந்தவில்லை,


அப்பா சொல்லித் திருந்தவில்லை ,

ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,


நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,

நாடு சொல்லியும் திருந்தவில்லை,


முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...


இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..


வளர்ந்தாள்..,

நானும் மனிதனாக வளர்ந்தேன்...


படித்தாள்,

என்னையும் படிப்பித்தாள்...


திருமணம்

செய்து வைத்தேன் ,


இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,


இரண்டு குழந்தைகளுமே...

பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,


நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,


என்னை மனிதனாக்க...

எனக்கே மகளாய் பிறந்த...


அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...


இந்த_கடைசி_மூச்சு..!


ஊரே ஒன்று கூடி..,

உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,


எனக்குத் தெரியாதா என்ன?


யாருடைய பார்வைக்கப்புறம்...


பறக்கும் இந்த உயிரென்று?


வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...


......................வாசலில் ஏதோ சலசலப்பு,


நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,


என் பெருவிரலை யாரோ

தொடுகிறார்கள் ,


அதோ அது அவள்தான்,

மெல்ல சாய்ந்து ...


என் முகத்தை பார்க்கிறாள் ...


என்னைப் போலவே...


கண்களில் மச்சம்,

சப்பை மூக்கு,

கருப்பு நிறம்,

நரைத்த தலைமுடி,

தளர்ந்த கண்கள்,


என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,


'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,


அவள் எச்சில்

என் பெருவிரலிட,


உடல் முழுவதும் ஈரம் பரவ...


ஒவ்வொரு புலனும் துடித்து...


#அடங்குகிறது....................

.......................


"தாயிடம் தப்பி வந்த

மண்ணும்...

கல்லும்கூட ,


மகளின் ..

கை பட்டால் காந்தச் சிலையாகும்! "



நன்றி: முகநூல் 

Wednesday, 1 January 2025

விரகனுர் மதகு அணை


மதுரை நகரிலும் ஒரு அணை ,அதுவும் நான் படிக்கின்ற காலத்திலே கட்டப்பட்ட அணை என்ற வகையில் அதை காணும்போது மகிழ்ச்சி ஏற்படும்.நான் மதுரை தியாகராஜர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்ற போது விரகனுரில் வைகை ஆற்றின் குறுக்கில் ஒரு சிறு தேக்க மதகு அணை கட்டப்பட்டது.அந்த நேரத்தில் வைகையில் ஒருமுறை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நன்றாக நினைவில் உள்ளது.பொதுவாக மதுரையில் வைகையில் பெரு வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வருவதை அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் மதுரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டதாகவும்,வெள்ளத்தால் மதுரை நகரம் அழியாமல் காக்கும் பொருட்டு,மன்னன் வீட்டுக்கு ஒரு ஆள் வந்து மண்வெட்டிபோட்டு நகரை காப்பாற்ற ஆணையிட்டான்.அப்போது புட்டு வியாபாரம் செய்யும்  மகவு இல்லாத கிழவி ஒருத்தியை காப்பாற்றும் பொருட்டு,சிவபெருமானே கூலி ஆளாக வந்து,அக்கிழவியின் வேலையாளாக வந்து ,மண் சுமப்பதற்காக உடைத்து தூளாகும் புட்டினை கூலியாக பெற்றுக்கொண்டு,புட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு, மண்சுமந்து போடாமல் விளையாண்டு திரிந்து விட்டு,பின் கரையில் படுத்து தூங்கினாராம்.வேலை செய்யாமல் படுத்து தூங்கும் சிவபெருமானை தண்டிக்கும் பொருட்டு,பிரம்பினால் முதுகில் அடிக்க ,உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,பிரம்படி விழுந்து வலி ஏற்பட ,உண்மை அறிந்திட சிவன் காட்சி அளித்ததாகவும் கதை உண்டு,,,,மதுரை ஆற்றங்கரையில் புட்டுத்தோப்பும் துறையும்,இருக்கிறது.இன்னம் கூட புட்டு திருவிழாவும் நடந்து கொண்டிருக்கிறது,
அதே போல மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றபோது ,தங்கையின் திருமணத்திற்காக திருமாலிருஞ்சோலையிலிருந்து அழகர் மதுரைக்கு கிளம்பிவர ,வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ,ஆற்றை தாண்டி மதுரைக்கு வராமலே திரும்பி சென்றார் என புராண கதைகள் உண்டு .இன்னமும் வருடாவருடம் சித்திரை திருவிழா நடந்து கொண்டுதான் இருக்கிறது.தண்ணீரே வராவிட்டாலும் சிறு அளவிலாவது தண்ணீரை தேக்கி அழகர் ஆற்றி இறங்கி திரும்பி செல்கிறார் .
மதுரை வீரன் திரைப்படத்தில் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் ,மதுரம் அம்மாவிடம் வைகை நதி பற்றி கை வை, வை கை என்று வேடிக்கையாய் சொல்லுவார்.
அது என்னவோ தெரியவில்லை,மதுரை மக்களுக்கு வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணும் பாக்கியம் அதிகம் கிடைப்பதில்லை.
நாங்கள் படிக்கின்ற போது ஒருமுறை கடுமையாய் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கரையோரம் இருந்த குடிசைகளெல்லாம் ,இழுத்து சென்று விட்டது.ஆற்றில் இழுத்து வரப்பட்ட மரங்களால்,பெரிய பாலத்திற்கே ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.கீழ் பாலம்,குருவிக்கறான் சாலையில் இருந்த பாலமெல்லாம் உடைத்து காணாமல் போய்விட்டன.தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை காப்பாற்ற போன ராணுவ மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி இறந்து போனார்.ஹெலிகாப்டரும் தண்ணீரில் மூழ்கி உடைந்து வெகு தூரத்தில்,சிதிலமடைந்து கிடைத்தது,      
எங்கள் பள்ளிக்கு ஆற்றின் வடகரையில் வண்டியூர்,ஆண்டாள் கொட்டாரம் போன்ற பகுதியில் இருந்தெல்லாம் மாணவர்கள் படிக்க வருவார்கள்.அவர்களெல்லாம் பள்ளிக்கு வரவில்லை.ஆண்டாள் கொட்டாரத்திலிருந்து என்னுடன் படித்த சதுரகிரி என்ற மாணவ நண்பன் வந்து தப்பி பிழைத்த விபரத்தை கதை கதையாய் சொல்லுவான். 
இந்த நிகழ்வுக்கு பின் விரகனுர் தடுப்பணை காட்டும் நிகழ்வு நடைபெற்றது.நாங்கள் சில நண்பர்கள் நேரம் கிடைக்கும்போது விரகனுரில் உள்ள எங்கள் நண்பர்கள் ராஜசேகரன்,பாலசுப்ரமணியன் போன்றோரை சந்தித்து விட்டு விரகனுர் அணை கட்டுவதை வேடிக்கை பார்க்க செல்வோம்.பார்க்க எங்களுக்கு பிரம்மாண்டமாய் தெரியும்...ஒரு அழகான பூங்காவெல்லாம் அமைத்தார்கள்.அந்த பூங்காவில் பிற்காலத்தில் சினிமாக்களெல்லாம் எடுத்தார்கள்.
இப்போது பார்த்தால் பூங்கா பராமரிப்பில்லாமல் இருக்கிறது. பார்க்க சகிக்கவில்லை...








 

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...