*தம்பி ஊருக்கு போன உடனே லெட்டர் போடுப்பா.."
" இந்த கடிதம் கண்டவுடன் தந்தி போல் பாவித்து.."
கடுதாசி என்றால் வேறொன்றும் இல்லை, லெட்டர் தான்.. இப்போது உள்ள தலைமுறைக்கு மேலே சொன்ன வார்த்தைகள் கேள்விப்பட்டிராதவை. ஆனால் எங்கள் வாழ்க்கையில் இவை எல்லாம் மிகவும் முக்கியமானவை. நான் 17 வயது வரை வீட்டை விட்டு வெளியே சென்று தங்கியதில்லை. எனக்கென்று எந்த கடிதமும் வந்ததில்லை. முதன்முதலாக என்னுடைய பட்டய படிப்பு ( டிப்ளமோ.) பதிவு செய்த கடிதம் தான் என் பெயருக்கு வந்த முதல் கடிதம்.
என்னுடைய டிப்ளமோ வந்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, கேரளாவில் மூணாறில் உள்ள ஒரு மருந்து கடைக்கு வேலைக்கு சென்று விட்டேன். அங்கு போனவுடன் எங்க அப்பா சொன்ன படி, வந்து சேர்ந்ததற்கான கடிதத்தை அப்பாவிற்கு அனுப்பி வைத்தேன். அங்கு வேலைக்கு போன ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் இருந்து வேலைக்கான நேர்காணல் கடிதம் வந்தென்று எனக்கு தந்தி வந்தது. எனவே கேரளா மருந்து கடை வேலையை மூட்டை கட்டிவிட்டு, மதுரை வந்து சேர்ந்தேன். நான் வந்த பிறகுதான் நான் எழுதிய கடிதமே எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
தந்தி என்பது வேறொன்றுமில்லை, அரசு மூலமாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி. தபால் தந்தி அலுவலகத்தில் நாம் அனுப்ப வேண்டிய செய்திகளை எழுதி கொடுத்தால், வார்த்தைகளை எண்ணி அதற்கு தகுந்தார் போல் பணம் வசூலித்து கொண்டு அந்த செய்திகளை மோர்ஸ் சங்கீத வார்த்தைகளாக அனுப்புவார்கள்
தந்தி பெறப்படும் அலுவலகத்தில் செய்தியைப் பெற்று, அவற்றை மீண்டும் வார்த்தைகளாகி கடித வடிவில் உரிய நபருக்கு கொண்டு போய் சேர்ப்பார்கள். வார்த்தைகள் கூட கூட கட்டணம் ஏறிக்கொண்டே போகும். எனவே செய்தி மிக மிக சுருக்கமாக எழுதி அனுப்புவது வழக்கம்.
தொலைபேசிகள், அலைபேசிகள் வரும் வரை தகவல் தொடர்புக்கு கடிதத்தையும் தந்தியை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருந்தது.
வீட்டிலிருந்து வேலைக்காக முதன் முதலில் புதுக்கோட்டை வந்தபோது குடும்பத்திலுள்ள எல்லோருமே படித்து படித்து சொன்ன வார்த்தை "அப்பா போனதும் லெட்டர் போடுப்பா,"
வந்த புதிதில் மிக விரிவாக கடிதங்கள் எழுத ஆரம்பித்து காலம் செல்ல செல்ல கடிதங்கள் கார்டு அளவிற்கு குறைய ஆரம்பித்தது.
சோம்பேறித்தனம் பெருக பெருக, கடிதம் எழுதும் பழக்கம் குறைய ஆரம்பித்தது. ஒரு கடிதத்தை ஒரு தேதி போட்டு ஆரம்பித்து, பிறகு தேதியை அடித்து மாற்றி, மீண்டும் மாற்றி, பல நாட்கள் கழித்து கடிதத்தில் எழுதி முடிப்பது, அதையே கூட ஞாபகமாக போஸ்ட் பண்ண மறந்து விடுவது என்றெல்லாம் ஆகிப்போனது.
அப்பா கூட கிண்டலாக சொல்லுவார், "நீ பல தேதிகள் போட்டு எழுதிய ஒரு கடிதம் பல நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது" என்று.
அப்போதும் திருந்துவதில்லை. ஊரிலிருந்து கிளம்பியவன் ஊர்போய் சேர்ந்தான் என்பது, கடிதத்தை பார்த்து தான் தெரியவரும். கடிதம் போய் சேரவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள் என்ற புத்தி கூட இருப்பதில்லை.
நான் டெல்லியில் சில வருடங்கள் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டபோது, எனது மனைவி வாராவாரம் கடிதம் எழுதுவார். நானும் பதில் கடிதம் எழுதுவேன். என்னதான் போனில் பேசினாலும், கடிதம் படிக்கின்ற சுகமே தனி. அடுத்த கடிதம் வரும் வரை திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருப்பார். கடிதம் வரவில்லை என்றால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படித்தானே அப்பா, அம்மாவுக்கு இருந்திருக்கும்.
கடிதங்கள் எவ்வளவு மதிப்பு மிக்க பொக்கிசம் என்பதை பாதுகாப்பாய் வைத்திருப்பவர்களுக்குத்தான் தெரியும். எனது அக்கா திருமணத்தின்போது அப்பா திருமணஅழைப்பிதழை தனது முதலாளி, என்பீல்டு நிறுவன அதிபர் திரு ஈஸ்வரன் அவர்களுக்கு அனுப்பி, திருமண அழைப்பிதழை அனுப்பி திருமணத்திற்கு முன்பணம் கேட்டு விண்ணப்பம் அனுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்து திரு ஈசுவரன் அவர்கள் தானே கைப்பட பதில் கடிதம் எழுதி இருந்தார். என்னுடைய அக்கா திருமணத்தை வாழ்த்தியும், தன்னால் இயன்ற உதவியும் செய்து கடிதம் எழுதி இருந்தார். இந்தியாவிலேயே ஒரு பெரிய நிறுவனமான என்ஃபீல்டு நிறுவனத்தின் முதலாளி, கடைக்கோடியில் இருக்கக்கூடிய சாதாரண ஒரு தொழிலாளிக்கு கை படம் கைப்பட கடிதம் எழுதியது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதை நீண்ட நாட்கள் பொக்கிஷமாக கடிதத்தை பராமரித்து வந்தோம். எப்படியோ கடிதத்தை தொலைத்து விட்டோம். மிகவும் வருத்தமாக இருந்தது.
இது மாதிரி நிறைய கடிதங்கள் வீட்டில் பொக்கிஷமாய் வைத்திருந்தேன். இப்போது படித்தாலும் வேடிக்கையாக இருக்கும். அதே நேரம் சில கடிதங்கள் வில்லங்கங்களையும், குழப்பங்களையும் உருவாக்கி விடும் என்ற ஆபத்தும் உள்ளது.
அதேபோல இறப்பு செய்தி என்றால் தந்தியடிப்பார்கள், அல்லது ஆள் மூலமாக செய்து சொல்லி அனுப்புவார்கள்.
ஒரு திரைப்படத்தில் பாண்டியராஜன் மூலமாக சாவு செய்தியை சொல்லி அனுப்புவார்கள். அவர் நகரத்திற்கு போனவுடன் சாவு செய்தியை சொல்வதை விட்டுவிட்டு, சினிமா பார்க்க போய்விடுவார். இவர் எல்லா சினிமாக்களையும் பார்த்துவிட்டு வீடு வந்து சேரும் போது சவ அடக்கமே முடிந்திருக்கும்.
அதுபோல அப்போதெல்லாம் செய்தி சொல்லுகிறார் ஆள் வந்து முறையாக சொன்னால் தான் உண்டு.
அப்போது நாங்கள் சற்று வசதி குறைவாக இருந்ததால் மிக நெருங்கிய உறவினரின் சாவு செய்தியை தெரிவிக்காமல் விட்டு விட்டார்கள். எப்படியோ தகவல் சேர்ந்து தெரிந்து அடக்கம் முடிகிற நேரத்தில் போய் சேர்த்தோம். கேட்டால் ஆளாளுக்கு தந்தி அடித்தோம் என்று கதை விட்டார்கள்.
பல வருடங்களுக்கு முன்னால் எனது உறவினர் இறந்து விட்டதாக தந்தி வந்திருந்தது. அதே பேரில் இரண்டு பேர் இருந்தார்கள். யார் என்று தெரியவில்லை. இருவரும் மிக நெருங்கிய உறவினர்கள். நான் புதுக்கோட்டையில் இருந்து எனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களோடு போய் சேர்ந்தேன். அதில் ஒருவர் தனது தாயார் இறக்கவில்லை என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். நான் கேட்டேன் உன் அம்மா சாகவில்லை என்று சந்தோஷப்படுகிறாயா, அல்லது இன்னொரு உறவினர் இறந்து விட்டார் என்று சந்தோசப்படுகிறாயா?.
ஏனென்றால் அந்த இன்னொரு உறவினர் இவருக்கு பிடிக்காதவர் அந்த சூழ்நிலையிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
நல்ல வேலையாக பிற்காலத்தில் தொலைபேசி வந்து சேர்ந்தது. அலைபேசி வந்த பிறகுதான் ஓரளவுக்கு தகவல் தொடர்புகள் சீர் நிலைக்கு வந்துவிட்டன. இப்போது எல்லாம் இதனுடைய உச்ச நிலை கடிதம் என்பதே காணாமல் போய் எல்லோரும் அலைபேசியின் அடிமைகளாகிப் போனார்கள்.
நவீன காலத்தில் அலைபேசி வந்துவிட்டதால் மகன்கள் வெளியூர் போகும் போது உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ள லைவ் லொகேஷன் போடச் சொல்லி என் மனைவி வற்புறுத்துவார்.
*அட போங்கம்மா உங்களுக்கு வேற வேலை இல்லை "என்று சலித்துக் கொள்வார்கள் மகன்கள்.
தகவல் தொடர்புக்கு புறா விடு தூது, ஆள் மூலம் செய்தி என்பது எல்லாம் தாண்டி, மிக அருமையாக நல்ல உறவுகளை பராமரித்து வந்த கடிதம் எழுதும் பழக்கங்கள் காணாமலே போனது துரதிஷ்டவசமாக....
SUPERB SIR
ReplyDelete