இதெல்லாம் எங்கப்பா சொன்ன கதைகள்.நான் திரித்து விட்டவை அல்ல.அவர் நகைச்சுவையாய் சொன்ன கதைகள் என்பதால் யாரும் சண்டைக்கு வந்துவிடக்கூடாது.
அந்த காலத்தில் மூதாதையர் கடலோடி வணிகம் செய்த கதைகளில் ஒரு வில்லங்கமானவர் பற்றிய கதை இது.
இங்கிருந்து பலவிதமான பொருட்களை பாய்மரக்கப்பல்களில் ஏற்றிச்சென்றுவெளிநாடுகளில் விற்றுவிட்டு , அங்கு கிடைக்க கூடிய பொருட்களை இங்கு கொண்டுவந்து விற்பது வழக்கம்.
அவ்வாறு பொருள் ஏற்றிச்சென்ற கப்பல்களில் ஒன்று பாக்கு மூட்டைகளை ஏற்றிச்சென்றது. வில்லங்கமான வணிகர் ஒரு பாதி பாக்கினை கப்பல் தலைவனிடம் கொடுத்து இதையும் கொண்டுவாருங்கள் .எவ்வளவு கூலி வேண்டுமோ பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.கப்பல் தலைவன் சரியான பைத்தியக்காரன் வந்து சேர்ந்திருக்கிறானே என்று நினைத்து இதெல்லாம் கொண்டு வரமுடியாது என்றிருக்கிறான்.
உங்களுக்கென்ன கூலி எவ்வளவோ வாங்கி கொள்ளுங்கள் என்றான் வணிகன்.
இவனை ஏமாற்ற எண்ணிய கப்பல் தலைவன் சரி ஐந்து பொற்காசு கொடு என்றான்.
சரி தாராளமாய் பெற்றுக்கொள்ளுங்கள் .பத்திரமாய் கொண்டுவந்தால் சரி என்று கூறிவிட்டு பணத்தை எண்ணிவைத்தான்.
கப்பல் தலைவன் பெற்றுக்கொண்டவுடன் எனக்கு அத்தாட்சி எழுதி கொடுங்கள் .நான் கொடுத்த பணத்திற்கு கணக்கு சொல்ல வேண்டுமென்றான் வணிகன்.
எவ்வாறு எழுதி தரவேண்டும் என்று கேட்டான் கப்பல் தலைவன்.
இந்த கப்பலில் இன்ன ஊரை சேர்ந்த இன்னார் மகன் இன்னாருக்கு சொந்தமான பாதி பாக்கினை கொண்டு வருவதற்கு கூலியாக ஐந்து பணத்தை பெற்றுக்கொண்டதற்கு இதுவே ரசீது ஆகும் என எழுதி வாங்கி கொண்டான் வணிகன்.
கப்பல் போய் ஊர் சேர்ந்தவுடன் ,கப்பலில் வரும் பாக்குமூடைகளில் பாதியை எடுத்து வைக்க சொன்னான்.
கேட்டதற்கு நீதானே கப்பலில் வரும் பாக்கில் பாதி எனக்கு சொந்தமென்று எழுதி கொடுத்திருக்கிறாய் என்று வாதம் செய்தான்.
அப்படி ஒரு வில்லங்கமான ஆள் அவன்.
ஊரிலே வட்டி தொழில் செய்து வந்தார்.பெரும்பகுதி விவசாயம் செய்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பார்.பெரும்பாலான விவசாயிகளுக்கு எழுத படிக்க தெரியாது.அதனால் அவர் சொன்னது தான் கணக்கு.அறுவடை காலம் முடித்த பின் பணத்தை மொத்தமாக கொடுத்து கணக்கை தீர்க்க வருவார்கள் விவசாயிகள்.இவர் கொஞ்சம் வேகமாக பேசுவார்.கடகடவென்று விரல் விட்டு மாதங்களை ஆடியிலிருந்து தைக்கு பன்னிரண்டு மாதங்களென கணக்கிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு கொஞ்சம் பணத்தை அவர்கள் கையில் கொடுத்து வீட்டில் பிள்ளைகளுக்கு தின்பண்டம்,பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என்பார்.
அவர்களும் பணம் மீதம் பிள்ளைகளுக்கு பெருந்தன்மையாய் கொடுக்கிறார் என்று பெருமையாய் பாராட்டி செல்வார்கள்.
அவர் முகச்சவரம் செய்து கொள்ளும்போது கொஞ்சம் பயப்படுவார்.சவரத்தொழிலாளி கத்தியை கழுத்தருகில் கொண்டுவரும்போது ,என்னப்பா உன் பெண்டு பிள்ளைகளெல்லாம் எப்படி இருக்கிறார்கள் .வீட்டுக்கு போகும்போது ஆச்சியிடம் தின்பண்டங்கள் வாங்கிட்டு போ சொல்லியிருக்கிறேன் என்பார்.ஒருவேளை கழுத்தில் வெட்டிவிட்டால் என்ன செய்வதென்று பயம்.
இவரை போலவே இவர் ஆட்களெல்லாம் அநியாய வட்டி வாங்கி ஏமாற்றுகிறார்கள் என்று மகாராஜாவிடம் சிலர் போய் புகார் செய்தனர்
மகாராஜா கூப்பிட்டு விசாரித்தார் . மகாராஜாவுக்கு ஏராளமான பரிசு பொருட்களை கொண்டுவந்து பணிந்து சமர்ப்பித்துவிட்டு பணிவாய் நின்றனர்.
"என்ன அநியாய வட்டி வாங்குகிறீர்களாமே "என்று கேட்டார்.
வணிகர்கள் கோரஸாக பதிலளித்தனர்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மகாராஜா தம்பிடிக்கு தம்பிடி தான் வாங்குகிறோம்.தர்மப்பிரபு தாங்கள் ஆட்சி செய்யும்போது அப்படியெல்லாம் அநியாயம் செய்வோமா மகாராஜா" என்று நைச்சியமாக பதிலளித்தனர்.
மகாராஜா உச்சி குளிர்ந்து போனார்.வெறும் தம்பிடி தானே என்று நினைத்து அனுப்பிவைத்தார்.புகார் செய்தவர்களை மகாராஜா மிரட்டி அனுப்பிவைத்தார்.
மந்திரிக்கு வருத்தமாய் இருந்தது.நேரம் பார்த்து மகாராஜாவிடம் இவர்களைப்பற்றி விளக்க நினைத்தார்..மகாராஜாவிற்கு பிறந்தநாள் வந்தது.இவர்கள் லட்சணத்தை புரியவைக்க இது தான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்த மந்திரி மகாராஜாவிடம் ஒரு ஆலோசனை சொன்னார்.மகாராஜாவின் பிறந்தநாளை ஒட்டி கோவிலில் பால் அபிஷேகம் செய்ய ஒரு பெரிய அண்டாவை வணிகர்கள் வசிக்கும் வீதியில் வைத்தனர்.வீட்டிற்கு ஒரு செம்பு பாலை அண்டாவில் ஊற்ற உத்தரவிடப்பட்டது.
அண்டா ஆளுயரத்துக்கு மேல் இருந்தது.எட்டி தான் ஊற்றமுடியும்.எல்லோரும் பால் ஊற்றும்போது நாம் மட்டும் ஒரு செம்பு தண்ணீர் ஊற்றினால் தெரியப்போகிறதென்று எல்லோருமே நினைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு செம்பு தண்ணீரை ஊற்றிச்சென்றனர்.
மாலை அண்டாவை எடுத்து சென்று மகாராஜாவும் மந்திரியும் பார்த்த போது மொத்தஅண்டாவுமே தண்ணீரால் நிறைந்திருந்தது.யாராவது ஒருவர் பால் ஊற்றியியிருந்தால் கூட கொஞ்சமாவது வெள்ளையாய் தெரிந்திருக்கும் .எல்லோருமே ஏமாற்றுக்காரர்களென்று மகாராஜா புரிந்து கொண்டார்.
அப்புறமென்ன மண்டகப்படி தான்.
No comments:
Post a Comment