நாங்கள் சின்ன வயதில் நிறைய சண்டை போட்டுக்கொள்வோம்.அப்போது அப்பா சமாதானப்படுத்த கதைகள் சொல்லுவார்.புகழ்ச்சி ,கோபத்தை அடக்கிவிட்டால் எதையும் சாதிக்கலாம் என்பார்.இரண்டும் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டால் நிஜ சாமியார்கள் தான் என்பார்.
எனக்கு சின்ன வயதில் சாமியாரரெல்லாம் பெரிதாக தெரியாது.
அப்பாவை கேட்டால்
"பெண்டு பிள்ளை இல்லாதவன்
பிழைக்க வழி காணாதவன்
சண்டையினால் வீட்டை விட்டோன்
சாமியாராய் போனாரடி " என்பார் .
மதுரை ருக்மணிப்பாளையத்தில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் மாரியம்மன் கோவில் இருந்தது.எதிர்புறத்தில் ஒரு பாய் இரும்புக்கடை வைத்திருந்தார்.அவர் பெயரெல்லாம் எங்களுக்கு தெரியாது.குண்டாய்பெரிய தொப்பை வயிறுடன் இருப்பார்.பெரிய தாடி.சட்டையெல்லாம போடமாட்டார். அவரை தேடி காவி வேட்டி,தாடி,நெற்றி,உடம்பு முழுக்க விபூதி பட்டையுடன் கூடிய சாமிகள் வருவார்கள். சத்தமாக,சிரித்துக்கொண்டே தர்க்கம் செய்வார்கள்.ஒரே சிரிப்பாக கேட்கும்.அதே நேரம் கடை முழுக்க புகை மண்டலமாய் இருக்கும்.
பத்தி புகையுடன் பீடி புகை நிறைந்திருக்கும்.எங்களுக்கு ஒன்றும் புரியாது.யாரும் கடைப்பக்கம் போக மாட்டார்கள்.வேறு யாரும் அங்கு வியாபாரம் செய்ய வந்ததாய் நினைவில்லை.அப்படிகடைப்பக்கம் வருபவர்களில் எங்களுக்கு தெரிந்த சாமியார் ஒருவரும் இருந்தார்.அவரை நீச்ச தண்ணி சாமியார் என்று தான் அம்மா சொல்லுவார்கள்.அவர் பெயரெல்லாம் எங்களுக்கு தெரியாது.அவரை வருந்தி வீட்டுக்கு அழைத்தால் கூட வரமாட்டார்.திண்ணையில் உட்கார்ந்துகொண்டு நீராகாரம் வாங்கி குடித்து விட்டு செல்லுவார்.எப்படி வற்புறுத்தி கேட்டுக்கொண்டாலும் சாப்பிட வரமாட்டார்.அவரது உணவு நீராகாரம் மிளகாய் தான்.ஒருமுறை ஊரில் எங்க அக்கா சிறுபிள்ளையாய்இருக்கையில் விளையாட்டுத்தனமாய் விஷ காய் ஒன்றை சாப்பிட்டு வாய் நுரைதள்ளகிடந்த போது ஏதோமூலிகையெல்லாம் கொடுத்து காப்பாற்றினாராம் அதனால் அவர்மீது எங்கள் குடும்பத்தாருக்கு பக்தி.
ஒருநாள் திடீரென்று போலீஸ் பாய் கடைக்கு வந்து உள்ளே சோதனை போட்டதில் ஏதோ கஞ்சா இருந்ததாக சொன்னார்கள் ,பாயை பின்கை கட்டாக கட்டி போலீஸ் இழுத்து சென்றது.பக்கத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் வருத்தம் தான்.பெரியவர் பாய் எல்லோரையும் வாங்க போங்க என்று தான் மரியாதையாய் பேசுவார்.யாரிடமும் சண்டை போட்டதில்லை ,அமைதியானவர்.என்ன செய்வது கஞ்சா வைத்திருந்தது தவறு தானே.கடை மூடப்பட்டது.அப்புறம் சாமியார் யாரும் கடைப்பக்கம் காணோம்.கொஞ்ச நாளில் பாய் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.எனக்கு தெரிந்த சாமியாரெல்லாம் அவ்வளவு தான் அப்போது.
அப்பாவை கதை கேட்டால் எங்கள் ஊர் பக்கத்தில் ஒரு சாமியார் வந்த கதையை சொன்னார்.
ஊருக்கு புதிதாய் சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்.குதிரையெல்லாம் வைத்திருக்கிறார் என்று பரபரப்பாய் இருந்ததாம்.அவரிடம் ஒரு இளைஞன் போய் சீடனாக சேர கேட்டிருக்கிறான்..
"என்னிடம் எதுக்கப்பா சேர வந்திருக்கிறாய் "என்று கேட்டார் சாமியார்.
"நீங்கள் மிகவும் நல்லவர் ,வல்லவர்,இறைவனுக்கு நிகரானவர்"என்று புகழ்ந்தான் இளைஞன்.
"எனக்கு புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது .நான் மிக சாதாரணமானவன்"என்றார் சாமியார்.
"சாமி ,எனக்கு தெரிந்து புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் கிடையாது.சாதாரண ஆளிலிருந்து,மன்னன் ஏன் சாமியார் வரை புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் கிடையாது.நீங்கள் கோடியில் ஒருவர்.உங்களை போன்றவர் இந்த யுகத்தில் பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் "என்று ஒரேயடியாக புகழ்ந்தாç.
அப்படியா என்று புன்சிரிப்புடன் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டார் சாமியார்.
ஒரே புகழ்ச்சியுடன் வேலைக்கு சேர்ந்த சீடன் அவருக்கு எல்லா சேவை செய்து நம்பிக்கைக்கு பாத்திரமானான்.
சாமியார் நிறைய பக்தி ,பொறுமை,தர்மம், கோபத்தை அடக்குதல் ,எளிமை பற்றியெல்லாம் பிரசங்கம் செய்தார்.
ஜனங்கள் நிறைய பிரசங்கங்கள் கேட்க வந்தனர்.நிறைய காணிக்கைகளை செலுத்தினர்.செல்வம் குவிய ஆரம்பித்தது.சாமியார் உத்திராட்சம் உள்பட அனைத்திலும் தங்கம் பகட்டுகள் என ஆடம்பரமாய் வள ஆரம்பித்தார்.
ஒருநாள் கோபத்தை அடக்குவது பற்றி சாமியார்பிரசங்கம் செய்தார்.
"ஏன் சாமி கோபத்தை அடக்குவது அவ்வளவு எளிதா"என்று கேட்டான் சீடன்.
கோபத்தை அடக்குவது மூச்சு பயிற்சி யோகங்கள் ,பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்து முடித்தார்.
" கோபத்தை அடக்குவது எளிதா,நீங்கள் எப்படி சாமி அடக்கினீர்கள்" என்று மீண்டும் சீடன்கேட்டான்.
சற்று எரிச்சலான சாமியார் கோபத்தை அடக்குவது பற்றி மீண்டும் மிக விளக்கமாக பிரசங்கம் செய்தார்.
""அப்படியா சாமி உண்மையிலேயே நீங்கள் கோபத்தை அடக்கிவிட்டீர்களா சாமி என்று பவ்வியமாய் கேட்டான் சீடன்.
சாமியாருக்கு கோபம் வந்தது.இருந்தாலும் கோபத்தை அடக்கி கொண்டு கோபத்தை அடக்குவது பற்றி பேச ஆரம்பித்தார்.
அவர் பேசி முடித்ததும் "என்ன இருந்தாலும் கோபத்தை அடக்குவது கஷ்டம் தானே சாமி பிறந்ததிலிருந்து வரும் குணமாயிற்றே "என்றான் சீடன்.
சாமியாருக்கு சண்டாளமாய் கோபம் வந்தது.கையில் கிடைத்த பொருட்களை தூக்கி எறிந்தார்.புரிந்துகொள்ளாத முட்டாளாய் இருக்கிறாயே ஓடிப்போ என்று கத்தி விட்டு எழும்பி வேகமாய் தன் அறைக்கு திரும்பினார் சாமியார்.
புகழ்ச்சி, தற்பெருமை, கோபத்தை அடக்கிய சாமியின் லட்சணம் இவ்வளவு தான் என்று சீடன் வேறு வேலை பார்க்க போய் விட்டான்.
No comments:
Post a Comment