மெய்ப்பொருள் காண்பதறிவு
(அப்பாவை அடிக்கடி தொந்தரவு செய்யும்போது ஏராளமாய் கதைகள் சொல்லுவார்.ரசித்தவைகளில் நினைவில் நின்றவைகளில் ஒன்று )
ஒரு ஊரில் ஆமாம்சாமி என்று ஒருத்தர் இருந்தார்.எதுக்கு ஏதாவது ஒரு பேரை சொல்லி யாரும் சண்டைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது.அவர் ரொம்ப நல்லவர்.பரம சாது .நல்ல உழைப்பாளி.சிக்கனமானவர்.யார் பொருளுக்கும் ஆசைப்பட மாட்டார்..தானுண்டு தன்வேலையுண்டு என்று இருப்பவர்.ஆனால் ஒரே ஒரு கெட்ட பழக்கம்.சட்டென்று ஒரு முடிவுக்கு வரமாட்டார்.எந்த விஷயமானாலும் நிறைய பேரிடம் கருத்து கேட்பார் ,அவ்வளவு தான்.
அந்த காலத்தில் மக்கள்வாகனங்கள் அதிகம் இல்லாததால் நடந்து போய் இங்கிருந்து தங்களிடமுள்ள பொருட்களை கொண்டு போய் விலைக்கு விற்று விட்டு, வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு கால்நடையாய் தான் வருவார்கள்.நிறைய வியாபாரம் செய்பவர்கள் ,வசதி உள்ளவர்கள் மட்டுமே வண்டி கட்டி போய் வருவார்கள்.மற்றவர்களெல்லாம் நடைபயணம் தான்.. ..
அவர் மனைவி வீட்டில் ஆடு வளர்க்க ஆசைப்பட்டதால் ,வீட்டில் உள்ள விளை பொருட்களை கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு ஆடு ஒன்றை வாங்கி வந்தார்.சந்தை வெகு தூரத்திலிருந்தாலும் கால்நடையாய் வாங்கிக்கொண்டு வந்தார்.வருகின்ற வழியில் இவரது சுபாவத்தை தெரிந்த சில குசும்பர்கள் ஆட்டை களவாட முடிவு செய்தனர்.வலுக்கட்டாயமாய் பறித்து செல்வதைவிட இவரிடம் ஏமாற்றி பறித்துவிட திட்டமிட்டனர். தனித்தனியாய் வந்து பறிக்க திட்டமிட்டனர்.
திட்டமிட்டபடி முதலில் ஒருவன் எதிரில் வந்து பேச்சு கொடுத்தான்.என்னப்பா நல்ல ரக நாயாய்தெரிகிறதே ,என்ன ரக நாய் என்று கேட்டான்.
ஆமாம் சாமிக்கு கோவம் வந்து விட்டது.என்னப்பா நல்ல வெள்ளாடாய் வாங்கி வந்திருக்கிறேன் .நாய் என்கிறாயே என்றார்.
என்னப்பா ஆச்சு உனக்கு நாயை போய் ஆடு என்கிறாயே பார்த்து போ என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.
கொஞ்ச தூரம் கழித்து இன்னொருவன் வந்து ஏம்பா வாங்குனது தான் வாங்கினாய் ,என் வெள்ளை நிற நாய் வாங்கினாய் ,கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் நாய் வாங்கியிருக்கலாமே என்றான்.
ஆமாம் சாமி கடுப்பாகி விட்டார்.வாங்கியது கருப்பு நிற வெள்ளாடு.இவன் வெள்ளை நிற நாய் என்கிறானே...
உனக்கென்ன கண் குருடா கருப்பு நிற வெள்ளாட்டை வெள்ளை நிற நாய் என்கிறாயே என்றார்.
என்னய்யா உனக்கு நிறமும் தெரியல நாயும் தெரியல உன்ன ஏமாத்திட்டாங்க போ என்று சொல்லிவிட்டு போய்விட்டான் .
இவர் கொஞ்சம் குழப்பமாக ஆரம்பித்து விட்டார்.
இன்னும் கொஞ்ச தூரம் போனபின் இன்னுமொருவன் வந்தான்.
வந்தவன் நல்ல நாயாய் தான் வாங்கியிருக்கிறாயே,ஒரு கழுத்து சங்கிலி வாங்கி கட்டி வந்திருக்கலாமே,வெறும் கயிறு கட்டியிருக்கிறாயே நாய்க்கு வலிக்காதா என்றான்.
பொறுமைசாலியான ஆமாம் சாமிக்கு கோபம் வந்துவிட்டது.
என்னய்யா வெள்ளாடு வாங்கி வந்திருக்கிறேன்.நாய்..கழுத்து சங்கிலி என்று உளறுகிறாய் என்று கோவித்துக்கொன்டே சென்றார்.
பொழுது சாய ஆரம்பித்து விட்டதால் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பின் ஒருவன் வந்து நாய் என்னப்பா இப்படி குரைக்குது,யாரையாவது கடித்து விடப்போகிறது ஜாக்கிரதையாய் கொண்டு போப்பா என்றான்.ஆடு அப்பதான் மே மே என்று கத்தியது.
ஆமாம் சாமிக்கு பயங்கரமாய் கோபம் வந்தது.ஆடு மே என்று கத்துகிறது.நீ என்ன செவிடா நாய் குறைக்கிறது என்கிறாய் என்று கத்திவிட்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தார்.
நன்கு இருட்ட ஆரம்பித்தது.
வரும் வழியில் சின்ன பாலம் ஒன்று .அசதியாக பாலக்கட்டையில் உட்கார்ந்தார். சற்று தூரத்தில் ஒரு ஆலமரம் இவருக்கு பயங்கரமாய் தெரிந்தது.சேர்ந்த்தாற்போல நாய் குறைக்கும் குரல் கேட்டது.
நல்ல நாளிலேயே பத்து பேரிடம் ஆலோசனை கேட்பவர்.வந்தவனெல்லாம் நாய் என்கிறார்கள்.தன் கண்களையும் ,காதுகளையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்.விடாமல் நாய் குறைக்கும் சத்தம்.
வெள்ளாட்டை அவிழ்த்து விட்டு விட்டு வேகமாய் நடந்தார்...
பின்னாலேயே பொறுமையாய் வந்த குசும்பர்கள் ஆட்டை எளிதாய் லவட்டி சென்றார்கள்.
No comments:
Post a Comment