சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 12 September 2024

ஓணம் சத்யா

 அபுதாபியில் வணிக வளாகங்களுக்கு சென்ற போது ஓணம் விளம்பரங்களை பார்த்தேன்.ஓணம் பண்டிகைகளுக்கு ஓணம் சத்யா விளம்பரங்கள் நம்பூதிரி சமையல் விளம்பரங்களை பார்த்த போது அந்த காலத்தில் அப்பா சிரிக்க சிரிக்க ஏராளமாய் கதைகள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

அந்த காலத்தில் ஒரு சமஸ்தான ராஜா சாப்பாட்டுபிரியராக இருந்தார்.ஒருத்தரென்ன அநேகமாக எல்லோருமே அப்படித்தானே இருந்தார்கள் .அவர் மந்திரியிடம் சாப்பாடு பற்றி குறைப்பட்டு கொண்டார் .எப்ப பார்த்தாலும் வச்ச வகைகளையே வைக்கிறார்கள் .புதுசு புதுசா வகையான உணவு சமைக்க ஏற்பாடு பண்ண சொல்லி கேட்டுக்கொண்டார்.

மந்திரியும் அலைந்து திரிந்து ஒரு நம்பூதிரியை கூட்டி வந்தார்.ராஜா நம்பூதிரியிடம் உணவு பற்றி பேசினார்.இவர் பேசுறது அவருக்கு புரியல .அவர் சொல்றது இவருக்கு விளங்களை ஒரு வழியாக புரிய வச்சு அல்லது புரிந்ததா நினைச்சுகிட்டு ராஜா நம்பூதிரிகிட்ட என்ன வேணும்னு கேட்டார்.

அவரும் கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் பின்ன கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் என்றார்.  

சரி இவர் கேக்கறத செய்யுங்க என்றார் ராஜா 

நம்பூதிரி சாப்பிட உட்கார்ந்தார் .திருப்தியா சாப்பிட்டார்.சாப்பிட்டு முடிந்தவுடன் உறங்க சென்றார்.நன்கு தூங்கினார்.எழுப்பும் வரை தூங்கினார்.நல்ல அயர்ச்சி போல தூங்கட்டும் என யாரும் எழுப்பவில்லை .தானாக விழித்து எழுந்தார்.எழுந்தவுடன் சாப்பாடு கேட்டார்.திருப்தியாக சாப்பிட்டார்.சாப்பிட்ட பின் உறங்க சென்றார்.உறங்கினார் .எழுந்த பின் சாப்பாடு கேட்டார் .   

கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் பின்ன கொஞ்சம் உண்ணனும் பிறகு உறங்கணும் என்பதன் அர்த்தம் அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது .ஒருவழியாக அவரிடம் மீண்டும் விளக்கிய பின் ஓ நளபாகமா என்ன செய்யணும் என்று நம்பூதிரி கேட்டார் 

ராஜா சாப்பாட்டு பிரியரல்லவா .

காய் கறிகள் வகை வகையாய் இருக்க வேண்டும் என்றார்  ராஜா. 

நம்பூதிரி சமையலல்லவா விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் ராஜா.

விருந்துக்கு ஏற்பாடு செய்தாகி விட்டது.அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வந்து சேர்ந்தனர்.பந்தி பாய் விரிக்கப்பட்டது.அனைவரும் வரிசையாய் அமர்ந்தனர் .தலைவாழை இலை போடப்பட்டது.தலை வாழை  இலையென்றால் பக்கவாட்டு மரத்து இலை இல்லை.பெரிய மரத்து இலை.ஒன்றொன்றும் ஆள் உயரளவு இலை.

சாப்பாடு வரட்டுமென்றார் ராஜா.வரிசையாய் பரிமாறுபவர்கள் வந்து பரிமாற ஆரம்பித்தார்கள் .வகை வகையாய் பொரியல் அவியல் கூட்டு என்று வந்து கொண்டே இருந்தது.

இலை நிரம்பி விட்டது .வைப்பதற்கு இடமே இல்லை .ராஜா அசந்து போனார் .

சாதம் வரட்டுமென்றார்.  

மகாராஜா சாதம் சொல்லலையே என்றார் நம்பூதிரி 




உண்மையிலேயே ராஜா அசந்தே போனார் 


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...