மஞ்சு விரட்டு என்னும் வீர விளையாட்டு
எங்கள் அப்பாவிடம் மஞ்சு விரட்டு என்னும் வீர விளையாட்டு பார்க்க கேட்டு தொந்தரவு செய்வோம் .அவரும் சளைக்காமல் அழைத்து செல்வதாக கூறுவார்.ஆனால் அழைத்து சென்றதில்லை.வீர விளையாட்டு பற்றி கேட்பதற்கு ஆமாம் வீரவிளையாட்டு தான் மாட்டிற்கு என்பார்.சுற்றிவர மனிதர்கள் சூழ்ந்து கொண்டு மாட்டினை தொந்தரவு செய்யும்போது தப்பி ஓடுவது மாட்டுக்கு வீர விளையாட்டு தான் என்பார் .
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு அழைத்து சென்று காட்டினார்.ஜெமினி கணேசன் மாட்டை அடக்கும் காட்சி வரும்போது நாங்கள் உற்சாகமாக கத்தும் போது ,மாட்டை காலை கட்டிவிட்டு,அரை மயக்கத்தில் கொம்பை பிடித்து அடக்குவதை வெறும் முகத்தையும் கொம்பையும் நடிகரை மட்டும் காட்டி ஏமாற்றுகிறார்கள் என்று விளக்குவார்.
அப்படியானால் நிஜமாகவே மாட்டை அடக்குபவர்கள் இல்லையா என்று கேட்போம் .அவர் எங்கள் பகுதியில் ஒரு அய்யர் நிஜமாகவே அடக்குவதில் கில்லாடி என்பார்.உண்மையிலேயே அப்படி ஒருவர் இருந்தாராம்.சரியான முரடர்.நன்றாக குடிப்பார் ,எப்போதும் கண்கள் சிவந்தே இருக்கும் என்பார்.மஞ்சுவிரட்டு வந்துவிட்டால் வேட்டியை மடித்து இறுக்கி கட்டிவிட்டு பூணூலை இடுப்பில் இருக்க கட்டி களத்தில் இறங்கிவிட்டால் மாடுகளுக்கு திண்டாட்டம் தானாம் .தரையோடு தரையாக உருண்டு கொம்பில் ஒரு கையும் திமிலில் லாவகமாக கைபோட்டு உடும்பு பிடியாக பிடித்து அடக்கி விடுவாராம்.யாரையும் கூட்டு சேர்க்காமல் தனியாக களமாடுவாராம்.எவ்வளவு கிடைத்தாலும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் செலவழித்துவிடுவாராம்.
உண்மையிலேயே அய்யர் தானாஎன்று சந்தேகம் வந்து விடுமாம்.ராமாயணம் பற்றி கேட்டால் ராமன் பொண்டாட்டியை இராவணன் தூக்கிட்டு போனான் அனுமனை கூட்டிட்டுபோய் அடிச்சு பிடுச்சு கூட்டிட்டு வந்தான் அவ்வளவு தான் ராமாயணம் போங்கடா என்பாராம்.
அது சரி ...அவர் கதை நமக்கெதுக்கு .வேற சொல்லுங்கப்பா என்போம்.
எங்க அய்யாவுக்கு நெருங்கிய நண்பர்குடும்பம் கருமலைக்கு அருகில் இருந்ததாம்.அண்ணன் தம்பிகள் என இருவர் .அவர்கள் பெரிய குடித்தனக்காரர்களாம்.நிறைய வயல் மாடுகள் என செல்வாக்கு மிக்கவர்களாம்.ஒரு ஆட்டு கறியை அவர்கள் இரண்டுபேரும் அய்யாவும் சேர்ந்தே தின்று விடுவார்களாம்.சண்டை என்று வந்து விட்டால் இருவரும் சிலம்பு ஆடி ஊரையே துரத்தும் அளவுக்கு வல்லமை படைத்தவர்களாம்.
மஞ்சு விரட்டு என்று வந்துவிட்டால் வீட்டில் வளர்த்து வந்த ஒரு தொத்தல் மாட்டுக்கு நல்ல அலங்காரம் செய்து கொம்புக்கு கரை வைத்த பட்டு வேட்டிகட்டி ஒரு சிறுவனுடன் அனுப்பி வைப்பார்களாம்.அவனும் கையில் ஒரு வேல்கம்பை பிடித்தவாறு மாட்டை ஒட்டிக்கொண்டு வீதி முக்கத்தில் நிற்பானாம்.உள்ளூர் ஆட்கள் அவரவர் பங்குக்கு மாட்டின் கொம்பிலும் கழுத்திலும் புது வேட்டிகளை கட்டிவிடுவார்கள்.எல்லோருக்கும் அவ்வளவு அன்பு..வேறே வழி...
ஏற்கெனவே தொத்த மாடு ,இதில் பாரம் தாங்கமுடியாத அளவுக்கு பரிசு பொருட்கள் .மாடு தலை தூக்க முடியாமல் குனிந்தே தான் வரும்.மாட்டு தொழுவில் கட்டி விட்டு அய்யாமாரின்அனுமதிக்காக காத்திருப்பர் .அனுமதி வந்தவுடன் கோயில் காளை அவிழ்த்து விட்டபின் முதல் மாடாக அய்யாமாரின் மாடு அவிழ்த்து விடப்படும்.எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய மாடுபிடிவீரராக இருந்தாலும் அப்படியே ஒதுங்கி மாடு போக வழி விட்டு ஒதுங்கி நிற்பர்.பின்னாடியே சிறுவன் வேல்கம்புடன் மாட்டை தொட்டு விட்டு அடிவாங்க அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.தப்பித்தவறி எவனாவது தெரியாத வெளியூர்காரன் மாட்டை தொட்டாலே அவனக்கு பொங்கல் தான்..
இப்படிப்பட்ட காளை ஒரு மஞ்சு விரட்டில் தடுமாறி விழுந்து இறந்து போயிற்று.அதன் துக்கம் தாங்காததாலோ ,அல்லது வயது முதிர்ந்து விட்டது போதும் இந்த விளையாட்டு என்று அய்யாமார் நினைத்ததாலோ என்னவோ அதற்கு பிறகு மஞ்சு விரட்டிக்காக மாடு வளர்க்கவில்லை .அந்த ஊர் மக்களும் நிஜமாகவே மஞ்சுவிளையாட்டை கொண்டாட ஆரம்பித்தனர்.
(உங்கள் ஊரில் யாராவது மாடு பிடிக்கையில் ஆட்கள் அடித்தால் அதை இந்த கதையுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல )
No comments:
Post a Comment