என்னுடைய முப்பதாவது வயதில் தான் முதன் முதலில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த போகவேண்டியிருந்தது.சிறு வயதில் கோவிலுக்கு போவதென்பது சகஜமாய் தான் இருந்தது.என் அப்பா ஆத்திக வாதியா நாத்திக வாதியா என்றெல்லாம் தெரியாது.குளித்து முடித்தவுடன் நெற்றிநிறய விபூதி பூசுவார்.மதுரை ருக்மணிபாளயத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த கட்டிடமே மாரியம்மன் கோவில் தான்.அவர் ஒருநாள் கூட நின்று கும்பிட்டதில்லை.வெளியில் எந்த கோவிலுக்கும் கூட்டி சென்றதில்லை.சித்திரை திருவிழா வந்தால் வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு கூட்டி போவார்.தைப்பூசம் அன்று மாரியம்மன் தெப்பக்குள தெப்ப திருவிழாவுக்கு கூட்டி போவார்.மற்றபடி வேறெந்த திருவிழாவுக்கு கூட்டி போனதில்லை.
ஒருமுறை ஓபுளா படித்துறையில் திருவிழாவிற்கு சென்றபோது பாலம் ஏதும் அங்கில்லாத நிலையில் தடுமாறி கீழே விழுந்து விட்டார். `என்னை தோளில் சுமந்து சென்றவர் விழும்போது என்னை கீழேபோட்டு என்மேல் விழுந்து விட்டார்.உடனே பதறிப்போய் என்னை தட்டு தடுமாறி தூக்கியவர் மிகவும் சங்கடப்பட்டு போனார்.எனக்கு வேறே ஒன்றும் நினைவில்லை.மற்றபடி அவர் என்னை கோவிலுக்கு அழைத்து சென்றதும் இல்லை.போகாதே என்று சொன்னதும் இல்லை.
எங்கம்மாவுக்கு பக்தி அதிகம் .நாங்கள் குடியிருந்த வீட்டில் ஏழு குடித்தனங்கள் இருந்தன .யார் என்ன ஜாதி என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை .ஒருவர்க்கொருவர் முறை வைத்து அழைத்து கொள்வது வழக்கமாய் இருந்தது.அவரவர் உறவினர்களையும் அந்தந்த உறவுமுறைப்படியே அழைப்போம்.எல்லோரும் ஒற்றுமையாகவே திருவிழா பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.இன்றுவரை அந்த உறவுமுறை தொடர்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.மார்கழி ஆனதென்றால் எல்லா வீட்டுக்காரர்களும் சேர்ந்தே மீனாட்சி அம்மன் கோவில்,பெருமாள் கோவில் என்று போய்வருவோம்.ஆடி மாதம் என்றால் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவருவோம்.அது மாதிரி எந்த விசேஷம் என்றாலும் நண்டு சிண்டுகளை அழைத்துக்கொண்டு பெரியவர்கள் கூட்டி செல்வார்கள்எந்த கோவிலுக்கு கால்நடையாக தான் செல்வோம்.
கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்வதெல்லாம் கிடையாது.சூடம் வாங்கி செல்வோம்.தட்டில் காசு போடுவோம்.எப்போதாவது வேண்டுதல் இருந்தால் உண்டியலில் காசு போடுவோம்.மற்றவகையில் எந்த செலவும் செய்ததாக ஞாபகம் இல்லை.மற்ற வகையில் அம்மாவும் சாமி கும்பிட கட்டாய படுத்தியதும் இல்லை.
வயது கூட கூட கோவிலுக்கு போகும் வழக்கமெல்லாம் குறைந்தது.வாலிபர் சங்க சேர்க்கை பொதுவுடைமை அறிமுகங்கள் வர வர அறவே கோவிலுக்கு போவதில்லை.
நாளடைவில் முழு நாத்திகனாக மாறியபின் இறை எதிர்ப்பாளராகவே மாறிப்போனேன்.திருமணமான பின் மனைவி இறை நம்பிக்கை உள்ளவராக இருந்ததால் அவரை கோவிலுக்கு செல்வதை தடுப்பதில்லை .ஆனால் கோவிலுக்கும் போனதில்லை.
எங்கள் மகன் மூன்று வயதாக இருந்தபோது அம்மை போட்டு குணமடைந்த பின் ,பழனி முருகனுக்கு மொட்டை போடுவதென்று நேர்த்திக்கடன் வைத்தோம்.நானும் என் மனைவியும் நேர்த்திக்கடன் செலுத்த பழனிக்கு போவதாக இருந்தது.உடல் நலம் காரணமாக அவர் வர முடியாததால் நானும் எனது மகனும் செல்வதென்று முடிவானோம்.நேர்த்திக்கடனை முழுமையாக செய்ய சொல்லி அனுப்பி வைத்தார்.
பழனிக்கு சென்று இறங்கியவுடன் ஊரே வித்தியாசமாக் தெரிந்தது.நிறைய குதிரை வண்டிகள் சுற்றிக்கொண்டிருந்தன.சின்ன வயதில் மதுரையில் தான் குதிரை வண்டிகளை நிறைய பார்த்திருக்கிறேன்.சாலை முக்கங்களில் குதிரை லாயங்களும்,குதிரைகள் மற்றும் கால்நடைகள் குளிப்பதற்கென்று தண்ணீர் தொட்டிகளும் இருக்கும்.பள்ளிக்கூடம் சென்று வருகையில் தினமணி டாக்கீஸ் முக்கத்தில் தண்ணீர்த்தொட்டியில் காலை கழுவுவோம்.தண்ணீரில் தவறி விழுந்துவிடக்கூடாதென்று குதிரைவண்டிக்காரர்கள் அதட்டி விரட்டுவார்கள்.
அந்த ஞாபகம் வந்தது.மகனை அழைத்துக்கொண்டு முடி எடுக்க கிளம்பினேன்.எங்கு முடிஎடுப்பதென்று தெரியாது.ஏதாவது குளக்கரை அல்லது ஆற்றுக்கரையில் எடுக்க வேண்டுமென்று நினைத்து யாரிடமாவது கேட்கலாமென்றிருக்கையில் ஒருவர் சப்தமாக முடியெடுக்க இங்கே வாங்க என்றார்.அவர்களுக்கு ஞான திருஷ்டி இருக்கவேண்டும் அல்லது வருகிறவன் முகத்தை பார்த்தே கண்டு பிடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.பக்கத்தில் உள்ள கட்டிடத்திற்கு கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றார்.அங்கு சிலர்மொட்டைபோட்டுக்கொண்டிருந்தனர். பையனுக்கு மொட்டை போட்டவுடன் அங்கேயே குளித்து முடித்தவுடன் வேகமாக வந்து ஒருவர் பையன் தலையில் சந்தனத்தை தடவிவிட்டு ஐந்து ரூபாய் கேட்டார். முடியெடுத்தவர் பத்து ரூபாய் கேட்டார்.மறுத்து பேச முடியல .பேசியும் பிரயோஜனம் இல்லை. சந்தனம் பூசியவர் அன்று முழுமைக்கும் ஐந்து ரூபா சந்தனத்திலேயே பிழைப்பை ஒட்டிவிடுவார் என்று நினைக்கிறேன்.
அர்ச்சனைக்கு சாமான்கள் வாங்க கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கடைப்பக்கம் சென்றோம்.கையை பிடித்து இழுக்காத குறையாக போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் அழைத்தனர்.ஒருவர் இங்கேயே செருப்பை போட்டுக்கொள்ளுங்கள் என்று கடைக்கு இழுத்தார்.இவ்வளவு பெருந்தன்மையோடு இருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டு அவர் இழுத்து சென்ற இல்லை இல்லை அழைத்து சென்ற கடையில் செருப்பை கழற்றி போட்டேன்.
நான் முன்னைபின்னை அர்ச்சனை செய்து பழக்கமில்லாததால் என் மனைவி என்ன வாங்கவேண்டுமென்று சின்ன பட்டியலொன்று தயார் செய்து கையில் கொடுத்திருந்தார்.அவர்கள் அதற்கு வாய்ப்பெல்லாம் தரவில்லை .கடையில் எல்லாம் தயாராக உள்ளதென்று கையில் தட்டை திணித்தனர்.பெரிய மாலையெல்லாம் வைத்து இருநூறு ரூபா கேட்டனர்.இவ்வளவு பெரிய மாலையெல்லாம் வேண்டாம் சிறிதாக வையுங்கள் ,விலை அதிகமாக உள்ளதென்றேன். சிறிய மாலை வைத்து விட்டு நூற்றைம்பது கேட்டனர்.எனக்கு மயக்கமே வந்து விட்டது .ஒவ்வொன்றும் இன்ன விலை என்று வேகமாய் பட்டியியலிட்டார்.அய்யர் சொல்ற மந்திரம் கூட புரிந்துவிடும் இவர்கள் விலைசொல்லுகிற வேகமும் மொழியும் ஒன்றும் விளங்கவில்லை.அப்பா தான் வேடிக்கையாக சொல்லுவார்.பூ பத்து,புஸ்பம் பத்து சூடம் அஞ்சு கற்பூரம் அஞ்சு என்று கிண்டலாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.பொறுமையாக சொல்லுங்கள் என்று கேட்டேன்.உடனே கடைக்காரர்கள் சட்டென்று கூடுவதுபோல் தெரிந்தது.கல்லாவில் இருந்த பெரியவர் பெருந்தன்மையாக நூற்றுஇருவத்தைந்து கொடுங்களென்று பெருந்தன்மையாக?! கூறினார்.இங்கு இப்படித்தான் வழக்கம் என்றனர் அங்கிருந்தவர்கள்.வேறு வழி இல்லாமல் காசை கொடுத்துவிட்டு அர்ச்சனை சாமான்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினேன்.இங்கே செருப்பு போடும் காசு தான் மிச்சம்போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் அர்ச்சனை சீட்டு வாங்குமிடத்தை தேடும் போது அங்கும் வேகமாக ஓடிவந்து வாங்க வாங்க அர்ச்சனை பண்ண நான் கூட்டி போகிறேன் என்றார்.கீழே கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வரவே நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவர் நானும் கோவில் ஆள் தான் என்று ஒரு நீல நிற வில்லையை கட்டிவிட்டு எங்களை குறுக்கு வழியில் அழைத்து சென்றார்.கர்ப்பகிரகம் இருக்கும் மண்டபத்துக்கு அருகில் செல்லும்போது எங்களது அர்ச்சனை தட்டை பறிக்காத குறையாக வாங்கிக்கொண்டு எங்களை விட்டுவிட்டு கூட்டத்துக்குள் மறைந்து சென்றார்,வரிசையை தாண்டிஎங்களால் செல்ல இயலவில்லை.வரிசையில் நின்றவாரே அவரைதேடும்போது ,வேகமாக வந்து எங்கள் கையில் தட்டை திணித்துவிட்டு ,பையனின் கழுத்தில் பெரிய ரோஜாப்பூ மலையை போட்டார்.
நாம் வாங்கிவந்த மாலை சிறியதாயிற்றே,இது பெரிதாக இருக்கிறதே,என்று நினைக்கையில் ,எல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் தான்,அதுதான் உங்களுக்காக சாமி கழுத்திலிருந்து பெரியமாலையாக வாங்கி வந்தேன்.உள்ளேயே பெரிய அர்ச்சனையாக செய்து பிரசாதம் வாங்கி வைத்துள்ளேன் என்று சொல்லிவிட்டு யாரிடமோ கையசைத்தார்.உடனே லேசாக வழிஉருவாக்கி சட்டென்று உள்ளே அழைத்து சென்று அதேவேகத்தில்வெளியே அழைத்து வந்துவிட்டார்.சாமியை பார்த்த மாதிரியுமிருந்தது.பார்க்காத மாதிரியுமிருந்தது.வெளியே வந்தவுடன் ஐம்பது ரூபாய் கேட்டார். கூட்டத்தை பார்த்தீங்களா,எவ்வளவு சீக்கிரம் தரிசனம் ஏற்பாடு செய்தேன் என்றார். வேறு வழியுமில்லாமல் ஐம்பதை கொடுத்து விட்டு கீழே வந்து சேர்ந்தோம். கீழே வந்து பஞ்சாமிர்தம் வாங்கலாம் என்று பார்த்தால் அதே கதை தான் .ஆளாளுக்கு அழைத்தார்கள் .வீட்டில் சொல்லிவிட்டபடி எது ஒரிஜினல் சித்தநாதன்கடை என்று தேடி ஏதோ வாங்கி வந்தேன்.
மலைக்கு மேலே ஏறி கீழே இறங்கும் வரை கால்நடை தான்.பையனும் கால் வலிக்கிறது என்றான்.சரி குதிரைவண்டியில் திரும்பலாமென முடிவு செய்து ஒரு வண்டியை பிடித்தேன்.வண்டி ஓட்டியவர்,வயதானவர். தலை வாராத முடியும் தாடியும் ஒடிசலுமாய் இருந்தார்.லேசாக கிழிந்த ஆடை... குதிரையோ அவரைவிட தொத்தலாய்இருந்தது. அவரிடம் பஸ் ஸ்டான்ட் போக பேரம் பேச ஆரம்பித்தேன்.அவர் கேட்டார்.இதுவரை எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள்.என்னிடம் போய் பேரம் பேசுகிறீர்களே என்றார்.எனக்கு சுருக்கென்று இருந்தது.பேசாமல் நானும் மகனும் வண்டியில் ஏறினோம் .
பையனை அவர் அருகில் முன்னாள் அமர்த்திக்கொண்டார் .அவனும் உற்சாகமாய் வேடிக்கை பார்த்தபடி வந்தான்.அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தேன்.வந்ததிலுந்து முடியெடுக்க அர்ச்சனை சாமான்கள்,கோவில் என எல்லா இடத்திலும் இப்படி வழிப்பறி செய்வது போல காசு பறிக்கிறார்களே என்று வினவிக்கொண்டே வந்தேன்.
அவர் பொறுமையாய் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வந்தவர் சொன்னார்.
"தப்பாய் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் முருகனைத்தானே வணங்க வந்தீர்கள் .நீங்கள் கொடுத்து சாமிக்கு ஏதும் நிரம்ப போகிறதா என்ன .நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அந்த பணத்திற்கு யாராவது ஏழைக்கு உணவோ அல்லது என்ன தேவையோ அதை வாங்கி கொடுங்கள் ,இல்லை உண்டியலில் போடுங்கள் ,கற்பூரத்தை வாங்கி கொளுத்திவிட்டு சாமியை மனதார வணங்கிவிட்டு போங்கள்,வந்த பிரார்த்தனை நிறைவேறும் ,அதை விட்டுவிட்டு இப்படி செலவு செய்தால் ,ஆளாளுக்கு நம்மை ஏமாற்றினார்களே,என்ற நினைப்பு தான் மிஞ்சும்"
அவர் சொன்ன வார்த்தைகளை கேடஂடபினஂ அவர் கணஂதிறநஂத மகானாக தெரிநஂதாரஂ
No comments:
Post a Comment